தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 30 ஏப்ரல், 2018

இங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்தான் துடுப்பாட்டம் !

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலாவது பயிற்சிப் போட்டியின் முதல் நாளிலேயே தடுமாறி இங்கிலாந்து ஆடுகளங்களில் தன்னுடைய துடுப்பாட்டத் தடுமாற்றங்களைக் காட்டியுள்ளது.

கென்ட் பிராந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாளில் வெறும் 55.2 ஓவர்கள் மட்டுமே நின்றுபிடித்த பாகிஸ்தானின் துடுப்பாட்டம் 168 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இனாம் உல் ஹக் மாத்திரமே அரைச்சதம் பெற்றுக்கொண்டார்.
சைமன் கிட்மன் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

ஏழு துடுப்பாட்ட வீரர்கள் விளையாடியும் மித வேக, வேகப்பந்து வீச்சுக்கு பாகிஸ்தானின் துடுப்பாட்டம் தடுமாறியிருந்தது.

ஃபவாட் அலாமை அணியில் சேர்க்காதது பற்றி பாகிஸ்தான் தேர்வாளர்கள் பற்றி விமர்சனங்கள் எழுந்த்திருக்கும் நிலையில் இந்த மோசமான துடுப்பாட்டம் மேலும் விமர்சனங்களை எழுப்பும்.


எனினும் தலைமைத் தேர்வாளர் இன்சமாம் உல் ஹக்கின் செல்வாக்கினால் அணிக்குத் தெரிவானதாகப் பேசப்படும் இனாமின் த
அரைச்சதம் கொஞ்சம் ஆறுதலாக அமையக்கூடும்.

கென்ட் அணி 39/1 என்றிருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறவில்லை.

அனுபவி ராஜா அனுபவி !! கிரிக்கெட்டை மறந்து கேரளாவில் கும்மாளமிடும் கிறிஸ் கெயில் !!

யூனிவெர்ஸ் பொஸ் என்று தனக்குத் தானே புகழ் மகுடம் சூட்டிக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி கலக்கல் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் வாழ்க்கையை அனுபவிக்கவென்றே பிறந்தவர். எப்போதுமே ஜாலியாக இருப்பதில் ஆர்வமுடையவர்.

இப்போது கிரிக்கெட் விளையாட்டுக்குச் சிறிய இடைவெளி கொடுத்துள்ள பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி வீரர் கிறிஸ் கெயில், கேரளாவின் இயற்கை அழகைக் குடும்பத்துடன் ரசித்து வருகிறார்.

ஐபிஎல் 2008 இல் தொடங்கப்பட்டதில் இருந்து விளையாடிவரும் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயிலை இந்த ஆண்டு ஏலத்தின் முதல்நாளில் எந்த அணியும் வாங்கவில்லை. ஆனால், 2-ம் நாள் ஏலத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வாங்கியது.


முதல் இரு போட்டிகளிலும் களமிறங்காத கெயில், அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்கி அரை அரைசதம், சதம் என விளாசி அணியின் வெற்றிகளுக்கு முக்கியக்காரணமாக அமைந்தார். கிங்ஸ் லெவன் அணியும் தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கெயில், இயல்பாகவே உல்லாசம், கேளிக்கை ஆகியவற்றில் அதிகமான ஈடுபாடு உடையவர். இந்தச்சூழலில் கோடைக்காலத்தின் வெப்பத்தைத் தணிக்கவும், உற்சாகமாக பொழுதைப்போக்கவும் கேரள மாநிலத்துக்கு கெயில் குடும்பத்துடன் வந்துள்ளார்.

கெயில் அவரின் மனைவி, குழந்தைகள், தாய், அவரின் மாமியார் என பெரிய கூட்டத்துடன் கேரளாவில் தங்கி கலக்கி வருகின்றனர்.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருக்கும் கெயிலும் அவரின் குடும்பத்தினரும் படகு வீடுகளில் சவாரி செய்வதும், குளிப்பதும், மீன்பிடிப்பதும், ஆயுர்வேத மசாஜ் என விடுமுறை நாட்களை அனுபவித்து வருகின்றனர்.

இது குறித்து நட்சத்திர ஹோட்டலிலின் முக்கிய நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் குடும்பத்துடன் எங்கள் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவரின் மனைவி, குழந்தைகள், தாய், மாமியார் என அதிகமானோர் விருந்தினர்களாக வந்துள்ளனர்.

இன்னும் சில நாட்கள் இங்குத் தங்கி இருப்பார்கள். கேரளாவின் பாரம்பரிய ஆயுர்வேத மசாஜ் செய்கிறார்கள், படகு வீடுகளில் சவாரி செய்கிறார்கள், மீன்பிடித்து மகிழ்கிறார்கள், கேரளாவின் பாரம்பரிய உணவுகள், மீன் உணவுகள் என மிகுந்த மகிழ்ச்சியாக பொழுதைப் போக்குகிறார்கள். மாலை நேரங்களில் முக்கிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு மகிழ்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

வரும் மே3-ம் தேதி இந்தூரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதுகிறது. அந்தப் போட்டிக்கு முன்பாக கெயில் அணியில் சென்று இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை G.பிரசாத்

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீள் வருகை ! சாதிக்க முடியுமா?

ஓய்வுக்குப் பின்பு லீக் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவது எல்லாம் IPL போன்ற பணம் கொட்டும் போட்டித் தொடர்கள் வந்த பிறகு சகஜமாகிவிட்டன. ஓய்வு பெறும் வயது என்று கருதப்படும் 35 வயது காலகட்டத்துக்கு முன்பாகவே சர்வதேசப் போட்டிகளில் இருந்து, நாட்டுக்காக விளையாடுவதிலிருந்து விலகி உலகம் முழுவதும் சுற்றி லீக் போட்டிகளில் ஆடி வரும் பல வீரர்கள் உள்ளனர்.

ஓய்வு பெற்று மீண்டும் விளையாட வந்த ஷஹிட் அஃப்ரிடி போன்ற வீரர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் முதல் தரப் போட்டிகளை மட்டுமே விளையாடியுள்ள வீரர் ஒருவர், உடல்நிலை உபாதை காரணமாக பத்து ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த பின்னர், தனது 43 வயதுக்கு சில நாட்களே இருக்கும் வேளையில் சர்வதேச அணி ஒன்றுக்காக விளையாட இருக்கிறார் என்றால் அது ஆச்சரியம் தானே?

வீரர், தென் அவுஸ்திரேலிய அணிக்காக முதல்தரப் போட்டிகளில் ஆடிய துடுப்பாட்ட/விக்கெட் காப்பு வீரர் ஷேன் டெய்ட்ஸ்.
அவர் விளையாடப்போகும் நாடு வனாட்டு.

66 முதல் தரப் போட்டிகளில் ஆடிய பிறகு பல உபாதைகளால் ஓய்வு பெற்று, கடந்த நான்கு ஆண்டுகளாக வனாட்டு அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்துள்ள டெய்ட்ஸ், கடந்த வருடம் இடுப்பில் சத்திர சிகிச்சை செய்த பிறகு யாருமே நம்பமுடியாத அளவிற்கு இப்போது தான் உடல் உறுதியோடு இருப்பதாக அறிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற உள்ள ICC நடத்தும் WCL நான்காம் பிரிவு போட்டியில் ஆடவுள்ள வனாட்டு அணிக்கு டெய்ட்ஸின் துடுப்பாட்டமும் விக்கெட் காப்பும் அனுபவமும் பெரிய துணையாக அமையும் என நம்பப்படுகிறது.

கென்யா, அமெரிக்கா போன்ற அணிகளும் விளையாடவுள்ள இந்தத் தொடரில் வெற்றிகளைப் பெறுவதன் மூலமே வனாட்டு படிப்படியான முன்னேற்றங்கள் கண்டு எதிர்காலத்தில் சர்வதேச அந்தஸ்தைப் பெறும் முயற்சியை எடுக்கமுடியும்.

சென்னையை வீழ்த்திய மும்பாய் ! தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் ஷர்மா

ஒரேயொரு வெற்றி, ஐந்து தோல்விகளுடன் தடுமாறி கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வந்த மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு சென்னைக்கு எதிராக பூனேயில் வைத்து அபாரமான வெற்றி ஒன்றைப் பெற்றுக்கொடுத்து உற்சாகத்தை ஊட்டியுள்ளார் தலைவர் ரோஹித் ஷர்மா.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னொரு இறுதி ஓவர் தோல்வி.
புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 8 விக்கெட் வெற்றி, அதிலும் ரோஹித் ஆட்டமிழக்காமல் அரைச் சதத்துடன் வெற்றியைப் பெற்ற விதம் ஆகியன இன்னும் இந்த வெற்றியை சிறப்பித்திருந்தன.

சென்னையின் ரசிகர்கள் பெருமளவில் குவிந்திருந்த பூனே மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் தலைவர் தோனி எடுத்த பல முடிவுகள் தவறாக அமைந்தன. தானும் பிராவோவும் வழக்கத்தை விட முன்னரே துடுப்பாட வந்தது, ஜடேஜாவுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்காதது, கடைசி ஓவரை பிராவோவுக்கு வழங்காமல், தாஹிருக்கு வழங்கியது என்று அனைத்துமே தவறாகிப்போனது.

எனினும் ரோஹித் ஷர்மா எடுத்த எல்லா முடிவுகளுமே சரியாக அமைந்தன. தொடர்ந்து சறுக்கிய கிரோன் பொலார்ட் மற்றும் முஸ்தபிசூர் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். டுமினி, பென் கட்டிங் ஆகியோர் இன்று விளையாடினர்.

சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் பெற்ற 75 ஓட்டங்களுடன் சென்னை பெற்ற 169 ஓட்டங்களை ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய மும்பாய் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அடைந்தது.

ரெய்னா 47 பந்துகளில் 75, தொடர்ந்து சிறப்பாக ஆடி, செம்மஞ்சள் தொப்பியைத் தன் வசம் வைத்துள்ள அம்பாத்தி ராயுடு 35 பந்துகளில் 46.

மும்பாய் அணியின் ஆரம்ப வீரர் சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஒரு அதிரடி ஆரம்பத்தை வழங்கினார். 34 பந்துகளில் 44.
மேற்கிந்தியத் தீவுகளின் ஈவின் லீவிஸ் கொஞ்சம் மந்தமாக 43 பந்துகளில் 47 ஓட்டங்கள்.

எனினும் இந்த உறுதியான அடித்தளத்தில் நின்று ஆடிய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உரித்தாக்கினார்.

இந்த வெற்றியுடன் மும்பாய் இந்தியன்ஸ் 8ஆம் இடத்திலிருந்து ஆறாம் இடத்துக்கு எழுந்துள்ளது.

சென்னை G.பிரசாத்

சனி, 28 ஏப்ரல், 2018

ஐபிஎல் கிரிக்கெட் - நட்பின் பாலம் - சென்னை, மும்பாய் பூனேயில் சங்கமம்

பூனேயில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பாய் இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரரும் மைதானத்தில் பயிற்சிகளுக்காகக் கூடியபோது பல நெகிழ்வான காட்சிகள் பதிவாகின.


கிரிக்கெட்டில் போட்டி தான் உள்ளதே தவிர குரோதமோ, கோபமோ மோதலோ இல்லை என்பதை CSK மற்றும் மும்பாய் வீரர்கள் வெளிப்படுத்தி ஆரத்தழுவியும் அன்பாய்ப்பேசியும் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.

சென்னைத் தலைவர் தோனியும் மும்பாய் இந்தியன்ஸ் பயிற்றுவிப்பாளர், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் அளவளாவியதும், தோனியிடம் மும்பாயின் இளம் வீரர்கள் வந்து ஆலோசனைகள் பெற்றதும் மகிழ்வான காட்சிகள்.




மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் பிராவோவும் பொல்லார்டும் சில கலகலப்பு நிமிடங்களை வழங்கினர்.




வெள்ளி, 27 ஏப்ரல், 2018

விதிமுறையை மீறிய கெயில் ! செய்த குற்றம் என்ன தெரியுமா? #IPL2018

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் அணி 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் விக்கட் காப்பளர் கே.எல்.ராஹுலின் கிளவுஸை அணிந்து பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் விக்கட் காப்பாளர் போன்று பாவனை செய்துக்கொண்டிருந்தார்.

இந்த காணொளியும் புகைப்படமும் சமுகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

தற்போது கிறிஸ் கெயில் கிளவுஸை அணிந்தமை ஐசிசி விதிமுறையை மீறிய குற்றம் என தெரியவந்துள்ளது. அதாவது ஐசிசியின் 27.1வது விதிமுறைப்படி விக்கட் காப்பாளரின் கிளவுஸை அணியின் வீரர்கள் அணிந்தால் குற்றமாகும். இதற்கு தண்டனையாக எதிரணிக்கு 5 ஓட்டங்கள் மேலதிகமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் நேற்றைய போட்டியில் குறித்த தண்டனை வழங்கப்படாமை குறித்து தற்போது கேள்வி எழுந்து வருகின்றது.


இதே குற்றத்திற்காக அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணியான குயின்ஸ்லாந்து அணியின் வீரர் மட் ரென்ஷா விக்கட் காப்பாளரின் கிளவுஸை அணிந்ததால் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் மேலதிகமாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சென்னை G.பிரசாத்

வியாழன், 26 ஏப்ரல், 2018

Finisher தோனி ! சிக்ஸர் மழை போட்டியில் துரத்தியடித்த சென்னை !! #RCBvCSK #IPL2018

33 சிக்ஸர்கள் மழையாகப் பொழிந்த நேற்றிரவில் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் தோனி எடுக்கும் finisher எடுத்து அசத்தலான சிக்ஸர் ஒன்றோடு போட்டியை வென்று கொடுத்திருந்தார்.

சென்னை அணிக்கு ஐந்தாவது வெற்றி.  மீண்டும் ஒரு இறுதி ஓவரில் வெற்றி. 200 ஓட்டங்களுக்கு மேல் பெற்றாலும் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் துரத்தியடிக்கலாம் என்பதும்  நிரூபணம் ஆகியுள்ளது.

South Indian Derby என்று வர்ணிக்கப்பட்ட சென்னை - பெங்களூரு போட்டிக்கு முன்னதாக இந்தியாவின் முன்னாள் தலைவர் தோனியும் இந்நாள் தலைவர் விராட் கோலியும் கட்டித் தழுவிக்கொள்ளும் காட்சி அனைவரையும் நெகிழவைத்த ஒன்று.



ஹர்பஜன் சிங், தாஹிர்  அனுபவமிக்க சுழல்பந்து வீச்சாளர்களை மீண்டும் சென்னை அணிக்குள் கொண்டுவந்தது.

றோயல் சல்லெஞ்சர்ஸ் தென் ஆபிரிக்க ஜோடி டீ கொக் - டீ வில்லியர்ஸின் அபார, அதிரடி சத இணைப்பாட்டம் மூலமும் பின்னர் மந்தீப் சிங்கின் விரைவான ஒட்டக குவிப்பு மூலமாகவும் 205 ஓட்டங்களைப் பெற்றது.
கடைசி நேரத்தில் சென்னையின் களத்தடுப்பும் யுக்தியான பந்துவீச்சும் இன்னும் 15 ஓட்டங்களையாவது கட்டுப்படுத்தியது.

ஏபி டீ வில்லியர்ஸ் - 8 சிக்ஸர்களுடன் 30 பந்துகளில் 68.
டீ கொக் - 4 சிக்ஸர்களுடன் 37 பந்துகளில் 53
மந்தீப் சிங் - 3 சிக்ஸர்களுடன் 17 பந்துகளில் 32.

205 ஓட்டங்களை வைத்துக்கொண்டு அதனைக் காப்பாற்ற முடியாமல் தடுமாறியது பெங்களூரின் பந்துவீச்சு. இந்தப் பருவ காலத்தில் நல்ல பந்துவீச்சாளர்கள் இருந்தும் இந்நிலை தொடர்கிறது.

வொட்சன், ரெய்னா, பில்லிங்ஸ் மற்றும் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக தோனிக்கு முன்னதாக களம் அனுப்பப்பட்ட ஜடேஜா என்று விக்கெட்டுக்களை விரைவாக CSK இழந்தபோதும், மறுபக்கத்தில் அம்பாத்தி ராயுடு நங்கூரம் இட்டுக்கொண்டார்.

ராயுடு இந்த IPL பருவகாலத்தில் மிகச்சிறப்பான துடுப்பாட்ட form இல் இருக்கிறார். எந்த இலக்கத்தில் துடுப்பாட அனுப்பப்பட்டாலும் தடுமாற்றமில்லாமல் அடித்து நொறுக்கிவருகிறார்.
நேற்றைய அரைச்சதம் அவருக்கு போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை பெற்றுத்தராவிட்டாலும் செம்மஞ்சள் தொப்பியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

தலைவர் தோனியோடு சேர்ந்து 101 ஓட்ட இணைப்பாட்டங்கள்.

7 சிக்ஸர்களுடன் தோனி 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70.
செம்மஞ்சள் தொப்பியை வசப்படுத்திய அம்பத்தி ராயுடு 8 சிக்ஸர்களுடன் 53 பந்துகளில் 82.


RCB உடனான நேற்றைய போட்டி தோனி ஆட்டமிழக்காமல் இருந்த 101 ஆவது T20 போட்டியாகும்.

15 பந்துகளில் 40 தேவை என்ற நிலையிருந்தபோதும் கூட ரசிகர்களிடம் இருந்த பதற்றம் தோனியிடம் இருந்திருக்கவில்லை என்று தெரிந்தது.
மிகக்கூலாக ஆனால் சிக்ஸர் சிக்ஸராக அடித்து 2 பந்துகள் மீதமிருக்க  சிக்சரோடே போட்டியை முடித்து வைத்தார் finisher.

தோனி ஒரு தனி இன்னிங்சில் பெற்ற கூடிய சிக்ஸர்களும் இவையே.

போட்டியின் சிறப்பாட்டக்காரரும் தோனியே.

இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக நேற்றிரவு நடந்த போட்டியில் பெங்களூர் றோயல் சல்லெஞ்சர்ஸ் அணி பந்துவீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதை அடுத்து அணியின் தலைவர் விராட் கோலிக்கு 12 லட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

IPL விதிகளின் பிரகாரம் 200 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களை வீசி முடிக்காவிடில் அபராதம், தண்டனை ஆகியன விதிக்கப்படவேண்டும். எனினும் கோலியின் அணி RCB இவ்வாறு நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தினாலேயே இவ்வளவு குறைந்த தொகையுடன் இந்தத் தண்டனை முடிந்திருப்பதாக IPL நிர்வாகம் அறிவித்துள்ளது.

12 லட்சம் ரூபாய் என்பது IPLஇல் புழங்கும் கோடிக் கணக்கான ரூபாய்களோடு ஒப்பிடும்போது சிறுதொகை தான். ஆனால் அடுத்தமுறை இப்படியான தவறு நிகழும்போது அது இன்னும் பெரிய அபராதம் மற்றும் போட்டித் தடை ஆகியன விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

புதன், 25 ஏப்ரல், 2018

உலகக்கிண்ணப் போட்டி அட்டவணை வெளியாகியது !

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு இன்னும் 400 நாட்கள் இருக்கும் நிலையில், போட்டிக்கான முழுமையான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை - ICC வெளியிட்டுள்ளது.

10 அணிகள் மோதும் இந்தத் தொடரில் எல்லா அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடும் விதமாகவே போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது 1992ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடர் நடைபெற்ற அதே முறையாகும்.
அதற்குப் பின் நடைபெற்ற அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகளும் பிரிவு ரீதியான போட்டிகளைக் கொண்டிருந்தன.

அதிக புள்ளிகளைப் பெறும் நான்கு அணிகளும் அரையிறுதிகளுக்குத் தெரிவாகும்.

மே மாதம் 30ஆம் திகதி முதலாவது போட்டியில் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து ஆடும்.

இதேவேளை கிரிக்கெட் ரசிகர்கள் அனேகர் எதிர்பார்க்கும் இந்திய - பாகிஸ்தான் போட்டி ஓல்ட் ட்ரஃபர்ட் - Old Trafford மைதானத்தில் ஜூன் 16 அன்று நடைபெறும்.

இங்கிலாந்தின் 11 மைதானங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
முழுமையான அட்டவணை.



IPL 2018இன் முதல் பலி ! கம்பீர் பதவி விலகினார்.

தொடர்ச்சியான தோல்விகள் தந்த அழுத்தமும் மோசமான துடுப்பாட்ட formஉம் சேர்ந்து டெல்லி டெயார்டெவில்ஸ் அணித் தலைவர் பதவியைத் துறப்பதாக கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார்.

டெல்லி அணி விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

கம்பீரின் துடுப்பாட்டமும் மிக மோசமான நிலையைக் காட்டியுள்ளது. 5 இன்னிங்க்சில் 85 ஓட்டங்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக இரு தடவை IPL கிண்ணங்கள் வென்ற கம்பீர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த ஊர் திரும்பியிருந்தார். அதுவும் தலைவராக. ரசிகர்களும் டெல்லி அணி உரிமையாளர்களும் மிகவும் எதிர்பார்த்திருந்தனர்.

ரிக்கி பொன்டிங் பயிற்றுவிப்பாளர், மக்ஸ்வெல், போல்ட், மொறிஸ், கிறிஸ்டியன் போன்ற சர்வதேச வீரர்கள், ஆற்றல் கொண்ட இளம் வீரர்கள் என்று பலமான அணியாகவே டெல்லி இருக்கிறது.

எனினும் ஒரேயொரு வெற்றி தான்.
தனி நபர்களாக பலர் சிறப்பாக விளையாடினாலும் அணியாக வெற்றிகளைப் பெற முடியவில்லை.
கம்பீரும் கடந்த போட்டியில் மிக மனம் சோர்ந்தவராகவே காணப்பட்டார்.

இப்போது 23 வயதான இளம் டெல்லி விரர் ஷ்ரெயாஸ் ஐயர் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். பயிற்றுவிப்பாளர் பொன்டிங் தன்னுடைய முழு ஆதரவை வழங்கியுள்ளார்.

பார்க்கலாம், டெல்லியின் அதிர்ஷ்டம் மாறுகிறதா என்று..

மீண்டும் ஒரு தோல்வி ! மும்பாய் அவ்வளவு தானா? - #MIvSRH #IPL2018

மும்பாய் மைந்தன் சச்சினின் பிறந்தநாள்  பரிசாக மும்பாய் ரசிகர்கள் முன்னால் ஒரு அற்புதமான வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பை அப்படியே கைவிட்டுப் பரிதாபகரமாக நேற்று 31 ஓட்டங்களால் தோற்றுப்போனது.


இந்த வருட IPLஇல் கடைசி ஓவர்களில் மூன்று போட்டிகளை மயிரிழையில் தோற்றுப்போன மும்பாய்க்கு நேற்று இலகுவாக வென்றிருக்கவேண்டிய போட்டி. 

118 ஓட்டங்களுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மடக்கியும் அந்த இலகுவான இலக்கை அடைய முடியாமல் போனது மிக மோசமான ஒரு பெறுபேறாகும்.

87 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது மும்பாய். 
பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசி பெற்றுக்கொடுக்க இருந்த ஒரு வெற்றி மும்பாயின் துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தினால் வீணாகப் போனது.

ஆறு போட்டிகளில் ஐந்தாவது தோல்வி.

தலைவர் ரோஹித் ஷர்மா, பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன மீது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக சோபிக்கத் தவறிவரும் ஹர்டிக் பாண்டியா, கிரோன் பொலார்ட் ஆகியோர் மீதும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

எனினும் சென்ற வருடமும் மும்பாய் இந்தியன்ஸ் இவ்வாறே முதல் போட்டிகளில் தோற்று, அதன் பின்னர் சம்பியன் ஆனது என்று மும்பாய் ரசிகர்கள் தேற்றிக்கொண்டாலும் நேற்றைய 87 மும்பாயின் மிகக்குறைவான மொத்த ஓட்ட என்ணிக்கை என்பதும் ஒப்பீட்டளவில் மற்ற அணிகளின் பலமும் மிகப்பெரிய கவலையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட்டுக்களை மக்லெனகன், பாண்டியா, மார்கண்டே ஆகியோர் தலா 2 வீதம் பறித்த பிறகு, மும்பாயின் துடுப்பாட்டம் சறுக்கி விழுந்தது.
சூர்யகுமார் யாதவ் - 34, க்ருனால் பாண்டியா - 24 தவிர யாருமே 10 ஓட்டங்களைத் தாண்டவில்லை.

சன்ரைசர்ஸ் அணியின் கேன் வில்லியம்சன் மிக சாமர்த்தியமாகத் தனது பந்துவீச்சாளர்களைக் கையாண்டார்.
SRH இன் முக்கியமான பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் இல்லாமலேயே நேற்று இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது.

குறிப்பாக சித்த்தார்த் கவுல் 3 விக்கெட்டுக்கள், பசில் தம்பி - 2 என்று கலக்கியிருக்க, கடந்த இரண்டு போட்டிகளில் பெரிதாக சோபிக்காத ரஷீத் கான் ஒரு ஓட்டமற்ற ஓவரோடு 11 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

அவரே போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.
இப்போது நான்கு வெற்றிகளைப் பெற்றுள்ளது.

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

சதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் தானா? - ஒரு விரிவான ஆய்வு

கிரிக்கெட் கடவுள் என்று இந்திய ரசிகர்களாலும் சச்சின் பக்தர்களாலும் கொண்டாடப்படும் சச்சின் டென்டுல்கரின் 45வது பிறந்தநாள் இன்று.

அதனைக் கொண்டாடும் முகமாக இந்த ஆய்வுப் பதிவு.



1987ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையோடு சுனில் கவாஸ்கர் தனது கிரிக்கெட் உலகுக்கு முழுக்குப் போட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக பத்தாயிரம் ரன்களை கடந்தவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்திருந்தவர் என்ற டான் பிராட்மேனின் சாதனையை (29) முறியடித்து 34 சதங்களை குவித்தவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராய் விளங்கியவர் கவாஸ்கர்.

1987 ஆம் ஆண்டின் காலகட்டத்தின்படி மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட்டர்களில் மிக முக்கியமானவராக கருதப்பட்டவர் சுனில் கவாஸ்கர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியோடு நவம்பர் 5, 1987-ல் சுனில் ஓய்வு பெற்றபோது சர்வதேச அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்க்கப்போகும் அடுத்த இந்திய வீரர் யார் என்ற கேள்வி எழுந்தது.

சரியாக ஒரு வருடம் கழித்து 1988ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் நாள் அன்று குஜராத்துக்கு எதிரான முதல் தர கிரிக்கெட் போட்டியொன்றில் களமிறங்கிய 15 வருடம் 232 நாட்கள் வயதான பதின்பருவ சிறுவன் அந்தப் போட்டியில் சதமடித்து அசத்தினான். முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த இந்தியர்களில் மிகவும் இளையவர் என்ற சாதனை அந்தச் சிறுவனுடையது.

சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் என்ற மலைக்க வைக்கும் சாதனை படைத்த ஒரே கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர்தான் அறிமுக முதல்தர போட்டியில் சதமடித்த வீரர். சாதனைகளின் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்வு குறித்த 30 சுவாரஸ்யத் தகவல்களை வழங்குகிறோம்.


1. சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்திய மண்ணை விட அயல்மண்ணில் அதிக சராசரியை வைத்திருக்கிறார். அயல் மண்ணில் அவரது சராசரி 54.74.

போட்டிகள் ரன்கள் அதிகபட்சம் சராசரி சதங்கள்
இந்தியா 94 7216 217 52.67 22
அயல் மண் 106 8705 248* 54.74 29

2. இடது கையால் எழுதும் பழக்கமுள்ள சச்சின் வலது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை பந்துவீச்சாளராகவும், ஃபீல்டிங்கின் போதும் வலது கையால் பந்தை எறிபவராகவும் விளங்கினார்.

3. சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 201 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 154 விக்கெட்டும், டி20 போட்டிகளில் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.


4. ஒருதின போட்டிகளைப் பொறுத்தவரையில் இந்திய வீரர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 12- வது இடத்தில் இருக்கிறார் சச்சின். இவருக்கு முந்தைய இடங்களில் ஜடேஜா, நெஹ்ரா, மனோஜ் பிரபாகர், இர்பான் பதான், வெங்கடேஷ் பிரசாத், கபில்தேவ், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், அஜித் அகர்கர், ஜவகல் ஸ்ரீநாத், அணில் கும்ப்ளே ஆகியோர் உள்ளனர். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக பந்துகள் வீசியவர்கள் பட்டியலில் சச்சினுக்கு எட்டாமிடம்.

5. சச்சின் டெண்டுல்கர் சதமடித்த 100 போட்டிகளில் இந்தியா 53 போட்டிகளை வென்றுள்ளது. 25 போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது. 20 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. ஒரு போட்டி 'டை'யில் முடிவடைந்தது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

6. ஒட்டுமொத்தமாக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி நூறு சதங்களை விளாசியுள்ளார் சச்சின். இவருக்கு அடுத்தபடியாக 560 போட்டிகளில் விளையாடி 71 சர்வதேச சதங்களை எடுத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்.

7. சச்சினின் கடைசி ஐந்து சதங்களில் இந்தியாவுக்கு ஒரு போட்டியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. அவர் நூறாவது சதம் விளாசிய போட்டியில் வங்கதேசத்திடம் இந்தியா வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

8. சச்சின் டெண்டுல்கர் தனது 35 வயதுக்கு பிறகான கிரிக்கெட் வாழ்வில் அபாரமாக விளையாடியுள்ளார். 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரையிலான காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 65.21 ஆகவும் ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி 52.41 ஆகவும் இருந்துள்ளது. இந்த காலகட்டங்களில் 104 இன்னிங்ஸ்களில் 21 சதங்களை சச்சின் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் 147 போட்டிகளில் 11 சதமும், காலிஸ் 113 போட்டிகளில் 13 சதமும் எடுத்துள்ளனர் என ’கிரிக் இன்ஃபோ’ இணையதளம் தெரிவித்துள்ளது.


9. டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டு வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கர் விளாசிய 100 சதங்களில் 20 சதங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வந்தவை. டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 சதமும் ஒருநாள் போட்டிகளில் 9 சதமும் எடுத்துள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின்.

10. உலகக் கோப்பை கிரிக்கட்டில் அதிக சதங்கள் விளாசியவர் மற்றும் 2000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை சச்சினுக்குச் சேரும். 1996ஆம் ஆண்டு மற்றும் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக ரன்கள் விளாசியவர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.

11. ரஞ்சி, துலீப், இரானி கோப்பைகளில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்தவர் சச்சின் டெண்டுல்கர்.

12. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஐந்து சதங்களை விளாசியுள்ளார்.

13. விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை 1994-ம் ஆண்டு பெற்றார். 1997-98 காலகட்டங்களில் ராஜிவ் கேல் ரத்னா, 1999-ல் பத்ம ஸ்ரீ, 2008-ல் பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது.


14. ஐந்து கண்டங்களில் சதமடித்தவர் என்ற பெருமைக்குச் சச்சின் சொந்தக்காரர் ஆவார். ஆசிய மண்ணில் 71 சதங்கள், ஆஸ்திரேலியாவில் 10 சதங்கள், ஆஃப்ரிக்க மண்ணில் 11 சதங்கள், ஐரோப்பாவில் 7 சதங்கள், அமெரிக்க கண்டங்களில் 1 சதம் விளாசியுள்ளார்.

15. சச்சின் தனது கேரியரில் ஒரே ஆண்டில் அதிக ரன்களை குவித்தது 1998-ம் ஆண்டாகும். மொத்தம் 39 சர்வதேச போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 68.67 என்ற சராசரியுடன் 2541 ரன்களை குவித்துள்ளார் என்கிறது ’கிரிக் இன்ஃபோ’ இணையதளம். எனினும் 2010-ம் ஆண்டு அவருக்கு சிறப்பு வாய்ந்தது. 2010-ல் 16 போட்டிகளில் 8 சதங்களுடன் 84.09 எனும் சராசரியுடன் 1766 ரன்களை குவித்துள்ளார் சச்சின்.

16. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சச்சின் டெண்டுல்கர் ஒரு சதம் மட்டுமே விளாசியுள்ளார். கரீபியன் தீவுகளில் அவர் 19 போட்டிகளில் 902 ரன்களை குவித்துள்ளார்.அதே வேளையில் இந்திய மண்ணுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் 3300 சர்வதேச ரன்களை எடுத்துள்ளார் சச்சின்.

17. ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம், கென்யா ஆகிய நாடுகளுக்கு எதிராக குறைந்தபட்சம் 10 ஒருநாள் போட்டிகளிலாவது விளையாடியுள்ளார் சச்சின். இதில் தென் ஆஃப்ரிக்க அணிக்கு எதிராக குறைந்த சராசரி (35.73) வைத்துள்ளார். கென்யாவுக்கு எதிராக அதிக சராசரி (107.83) வைத்துள்ளார்.

18. இந்திய அணிக்கு 25 டெஸ்ட் போட்டிகளிலும் 73 ஒருநாள் போட்டிகளிலும் சச்சின் தலைமை தாங்கியுள்ளார். அவர் தலைமையில் இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 23 ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றில் வென்றுள்ளது.


19. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு இரட்டைச் சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இரட்டைச் சதமும் விளாசியுள்ளார் சச்சின். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனது 36-வது வயதில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் இந்தச் சாதனையை படைத்தார்.

20. சர்வதேச அரங்கில் அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடியவர் என்ற பெருமை (200 டெஸ்ட்) சச்சினைச் சேரும். இதில் 14 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர் காலிஸ் (23). அவரைத் தொடர்ந்து முரளிதரன் (19) , வாசிம் அக்ரம் மற்றும் ஷேன் வார்னே (17), ரிக்கி பாண்டிங் (16) ஆகியோர் உள்ளனர்.

21. சர்வதேச அரங்கில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் சச்சின். இதில் 62 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்று அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஜெயசூர்யா (48). காலிஸ் (32) உள்ளனர்.

22. இதுவரை 109 ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ள சச்சின் 15 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். அதிக தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலிலும் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஜெயசூர்யா (11), ஷான் பொல்லாக் (9) உள்ளனர்.

23. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டு பார்மேட்டிலும் சேர்த்து அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகன் (76) தொடர் நாயகன் (20) வென்று முதலிடத்தில் உள்ளார்.


24. ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஐந்து வருடங்களுக்கு பிறகே சச்சின் முதல் சதத்தை பதிவு செய்தார். அதாவது 1994-ம் ஆண்டு தனது 79-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கன்னி சதம் எடுத்தார்.

25. சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக 1990-ம் ஆண்டு எடுத்தார். அவரது முதல் நான்கு சதங்கள் அயல் மண்ணில் எடுக்கப்பட்டவை. இந்திய மண்ணில் முதல் சதத்தை 1993-ம் ஆண்டில் பதிவு செய்தார். சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 165 ரன்களை குவித்தார். சச்சின் சதமடித்து இந்தியா வென்ற முதல் போட்டி அதுவே.

26. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அக்டோபர் 2010-ல் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் 214 ரன்கள் குவித்தார். அப்போட்டியில் இந்தியா வென்றது. அதன் பின்னர் அவர் நவம்பர் 2013-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வரை சச்சின் சதமெடுத்த 5 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதே இல்லை.

27. சச்சின் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். 2010-ம் ஆண்டு அவரது தலைமையில் இறுதிப் போட்டி வரை மும்பை வந்தது. ஐபிஎல் மூன்றாவது சீசனில் தொடரின் அதிக ரன்கள் அடித்தவருக்கான விருதை சச்சின் வென்றுள்ளார்.

28. ஆறு சீசன்கள் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சச்சின் 78 போட்டிகளில் 13 அரைசதம் ஒரு சதம் உதவியுடன் 34.83 என்ற சராசரியுடன் 2334 ரன்களை குவித்துள்ளார்.

29. ஒருநாள் போட்டிகளில் சச்சின் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். இந்திய அணியில் நான்கு வருடங்களுக்கு பிறகே சச்சினுக்கு முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 1994-ம் வருடம் ஆக்லாந்து மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் 49 பந்துகளில் 15 பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி 82 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.


30. சாம்பியன்ஸ் கோப்பை, உலக கோப்பை, ஐபிஎல் கோப்பை ஆகியயவற்றை வென்ற அணியில் சச்சின் டெண்டுல்கர் இருந்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்கள் சச்சினை அன்போடு அழைப்பது குறித்து பிபிசி நேர்காணல் ஒன்றில் சச்சின் பதிலளிக்கையில் '' நான் கிரிக்கெட் கடவுள் இல்லை. நான் களத்தில் பல்வேறு தவறுகள் செய்துள்ளேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறேன் ஆனால் நான் சாதாரண சச்சின் அவ்வளவே !'' எனக் கூறியுள்ளார்.

சுமார் 24 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த சச்சின் மொத்தமாக 34,357 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 48.52 ரன்கள் என்ற வீதத்தில் பேட்டிங் செய்துள்ள சச்சின் நூறு சதம் மற்றும் 164 அரைசதம் ஆகியவற்றை குவித்துள்ளார்.

சச்சின் தனது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் 27 முறை தொண்ணூறு - நூறு ரன்களுக்கு இடையில் விக்கெட்டை பறிகொடுத்துளார். உலகில் வேறு எந்த வீரர் சச்சின் அளவுக்கு சதங்கள் விளாசியதில்லை மேலும் அவர் அளவுக்கு 90-100 ரன்களுக்கு இடையில் அவுட் ஆனதில்லை.

நன்றி - விவேக் ஆனந்த் - பிபிசி தமிழ்


இறுதிப் பந்தில் ஜெயித்த பஞ்சாப் ! ஐயரை மடக்கிய ஆப்கன் முஜீப் ! #DDvKXIP #IPL2018

நேற்றைய போட்டியும் இறுதிப் பந்தில் தீர்மானிக்கப்பட்ட விறுவிறு போட்டியாக மாறியது.

எதிர்காலத்துக்குரிய இரண்டு இளையவீரர்கள் தத்தம் அணிகளுக்கான வெற்றிக்காக இறுதிப் பந்திலே நடத்திய போராட்டத்தில் 17 வயது மட்டுமே நிரம்பிய ஆப்கனிஸ்தானின் சுழல்பந்து சிறுவன் முஜீப் ரஹ்மான் ஜெயித்திருந்தார்.
போராடி அரைச்சதம் பெற்றிருந்த டெல்லியின் ஷ்ரேயாஸ் அய்யர் மனமுடைந்து போயிருப்பார் என்பது நிச்சயம்.

கடைசிப் பந்து ஐந்து ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஆறு ஓட்டம் ஒன்றை எடுக்க ஷ்ரேயாஸ் ஐயர் முயன்ற வேளையிலேயே ஃபின்ச்சினால் பிடியெடுக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.

குறைவான ஓட்டங்கள் பெறப்பட்ட நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி தன்னுடைய ஐந்தாவது வெற்றியுடன் புள்ளிகளின் பட்டியலில் முதலாமிடத்தைப் பிடித்துக்கொண்டது.

கெய்ல் இல்லாமல் களமிறங்கிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் மிகத் தடுமாறி நேற்று 20 ஓவர்களில் 143/8 எடுத்தது.
 மில்லரின் இரு பிடிகள் தவறவிடப்படாமல் எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் குறைவாகவே இந்த ஓட்ட எண்ணிக்கை இருந்திருக்கும்.

கருண் நாயர் அதிகபட்சமாக 34  ஓட்டங்களை எடுத்தார்.
நேற்று தன்னுடைய இந்தப் பருவகாலத்தின் முதல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ப்ளங்கெட் 17 ஓட்டங்களை  3 விக்கெட்டுக்களை 
வீழ்த்தினார்.

சொந்த மைதானத்தில் மிக இலகுவாக இந்த இலக்கை டெல்லி டெயார்டெவில்ஸ் அடையும்  பார்த்தால் விக்கெட்டுக்களை விரைவாக இழந்துகொண்டே சென்ற வேளையில் தனித்து நின்று போராடிய ஷ்ரேயாஸ் ஐயரின் அரைச்சதம் தோல்வியிலே முடிந்தது.

பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு மாற்றங்களில் பஞ்சாப் அணியின் தலைவர் அஷ்வினின் சாமர்த்தியம் பாராட்டக்கூடியது.
தனது 4 ஓவர்களில் வெறுமனே 19 ஓட்டங்களை மட்டுமே 
கொடுத்திருந்தார்.
ராஜ்புட், டை மற்றும் முஜீப் ஆகிய மூவரும் மிகச் சிறப்பாகப் பந்துவீசியிருந்தனர்.

ரஷீத் கானை அனைவரும் அதிகமாகப் புகழ்ந்து வரும் நிலையில் சத்தமில்லாமல் ஒவ்வொரு போட்டியிலும்  வருகிறார் இளையவர் முஜீப் உர் ரஹ்மான்.

ஆரம்பத்திலே விக்கெட்டுக்களை உடைத்துப்போட்ட ராஜ்புட் போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

திங்கள், 23 ஏப்ரல், 2018

IPL 2018 - சூடு பிடிக்கும் போட்டி - மீண்டும் சஞ்சு சம்சன், சுனில் நரைன் முன்னணியில்

21 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் இலெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா நான்கு வெற்றிகளுடன் முன்னிலையில் இருந்தாலும் இன்னும் பல போட்டிகள் நடைபெறவிருப்பதால் எதுவேண்டுமானாலும் மாறலாம் என்ற சூழ்நிலை.

அதி கூடிய ஓட்டங்கள், கூடுதலான விக்கெட்டுக்களை எடுப்போர் போட்டியும் அவ்வாறே சூடு பிடித்துள்ளது.
இரு நிறத் தொப்பிகளுமே அடிக்கடி தலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

கடந்த வாரம் (17ஆம் திகதி) போலவே அதே இருவரே சம்சன் & நரைன் இன்றும் முன்னணியில் இருப்பது ஒரு விசேடம்.

13 போட்டிகளின் பின்னர் இருந்த நிலை : சஞ்சு சம்சன் & சுனில் நரைன் முன்னிலையில் ! முந்தப்போவது யார்? #IPL2018

பந்துவீச்சாளர்கள் நால்வர் தலா 8 விக்கெட்டுக்களை எடுத்து விட்டுக்கொடுக்கா போட்டியுடன் ஒரு பக்கம், 40 ஓட்டங்கள் வித்தியாசத்துக்குள் 8 முதல் துடுப்பாட்ட  மறுபக்கம்  ஒவ்வொரு போட்டியிலுமே நிலைகள் மாறக்கூடியளவுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

இப்போதைக்கு அதிக ஓட்டங்கள் குவித்துள்ள சஞ்சு சாம்சன் செம்மஞ்சள் தொப்பியை அணிந்திருந்தாலும் இன்றே அவரை பஞ்சாப்பின் கிறிஸ் கெய்ல் அல்லது டெல்லியின் ரிஷாப் பான்ட் இவரை முந்தக்கூடும்.

தனியே சராசரியை மட்டும் வைத்து ஊதா தொப்பியைத் தனது வசம் வைத்துள்ள சுனில் நரைனை டெல்லியின் ட்ரென்ட் போல்ட் முந்திக்கொள்ள வாய்ப்புள்ளது.

கூடுதலான ஓட்டங்கள்



 கூடுதலான விக்கெட்டுக்கள்

முழுமையான முன்னிலை விபரங்கள்..

உலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்திரங்கள் !!!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ICC உலக அணி விளையாடவுள்ள நிதி திரட்டும் கண்காட்சிப் போட்டியில் உலக அணிக்காக விளையாடவுள்ள மேலும் மூன்று நட்சத்திரங்கள் தமது வரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த வருடம் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகளின் சில இடங்களைப் புனரமைக்க நிதி திரட்டும் முகமாக எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி T20 போட்டிக்கு சர்வதேச அந்தஸ்தும் சர்வதேச  சபையினால் (ICC) வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒயின் மோர்கன் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் பாகிஸ்தானின் ஷஹீத் அப்ரிடி, ஷொயிப் மாலிக், இலங்கையின்  சகலதுறை வீரர் திஸர பெரேரா ஆகியோர் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர்.

இப்போது உலகின் முதல் நிலை T20 சர்வதேசப் பந்துவீச்சாளராக விளங்கும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், பங்களாதேஷின் முன்னணி நட்சத்திரங்கள் ஷகிப் அல் ஹசன் மற்றும் தமீம் இக்பால் ஆகியோரும் தமது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒரு நற்காரியத்துக்கு நிதி திரட்டும் இந்தப் போட்டிகளுக்கு  ICC மிகவும் திருப்தி தெரிவித்துள்ளது.

கார்லோஸ் ப்ரத்வெயிட்டின் தலைமையில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிரபல நட்சத்திரங்கள் கிறிஸ் ஜெயில், மார்லன் சாமுவேல்ஸ், சாமுவேல் பத்ரி, அன்றே ரசல் போன்றோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.




கடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டிகள் - திக்திக் த்ரில் முடிவுகள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை.. அதிகமானோர் IPL கிரிக்கெட் போட்டிகளோடு ஊறிக் கிடப்பார்கள் என்பதாலோ என்னவோ நேற்றைய இரு போட்டிகளிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
எதிர்பார்ப்பைப் போலவே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு போட்டிகளுமே இறுதி ஓவரில் முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட போட்டிகளாக அமைந்திருந்தன.

அதிலும் எல்லாப் போட்டிகளுமே இறுதி ஓவர்களில் வெற்றிகள் அல்லது தோல்விகள் தீர்மானிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பாய் இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளது போட்டிகளும் நேற்று  விறுவிறுப்பான கடைசி ஓவர் முடிவுகளாக அமைந்தன.

இதில் ஹைதராபாத் போட்டியில் சென்னை 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் இரவு நடைபெற்ற போட்டியில் தோல்வி நிச்சயம் என்னும் நிலையிலிருந்து ராஜஸ்தான் பெற்ற அபார வெற்றியும் கடைசி ஓவர் மாயாஜாலம் தான்.

IPL 2018 இன் 20வது போட்டியான சன்ரைசர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் அம்பாத்தி ராயுடுவின் அனாயாசமான அதிரடி துடுப்பாட்டம், கூடவே சுரேஷ் ரெய்னாவின் அரைச்சதமும் சென்னைக்குக் கைகொடுத்தது.

ரெய்னாவின் அரைச்சதம் கொஞ்சம்  இருந்தாலும் ராயுடு சிக்ஸர் பவுண்டரிகளாக  விளாசித் தள்ளியிருந்தார். 4 சிக்ஸர்கள் & 9 நான்கு ஓட்டங்கள்.
மீண்டும் ஒரு தடவை ரஷீத் கானின் பந்துவீச்சுக்கு சரமாரியான அடி விழுந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தமது இலக்காக 183ஐத் துரத்தியவேளையில் முதல் மூன்று விக்கெட்டுக்களும் குறைவான ஓட்டங்களுக்குள் இழக்கப்பட்டாலும் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் அற்புதமான ஆடடம் ஆடியிருந்தார். அவரோடு யூசுப் பதானும் சேர்ந்து சென்னை அணிக்கு அச்சுறுத்தலைக் கொடுத்திருந்தனர்.

நோ போல் வழங்கியிருக்கவேண்டிய ஒரு full toss பந்துக்கு வில்லியம்சன் ஆட்டமிழந்தார். 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 நான்கு ஓட்டங்களுடன் 84 ஓட்டங்கள்.
பதான் நான்கு சிக்ஸர்களுடன் 27 பந்துகளில் 45 ஓட்டங்கள்.

கடைசி நேரத்தில் ரஷீத் கான்  விளங்கினாலும் 19 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்த பிராவோவின் இறுதி ஓவரில் 14 ஓட்டங்களையே பெறக்கூடியதாக இருந்தது.

சென்னை ரசிகர்களுக்கு இருதயத் துடிப்பை எகிறச்செய்து 4 ஓட்டங்களால் நான்காவது வெற்றி
கிட்டியது.
போட்டியின் சிறப்பாட்டக்காரர் - ராயுடு.

-----------------

ஒரேயொரு வெற்றியுடன் மட்டும் அல்லாடும் மும்பாய் இந்தியன்ஸ் 168 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்தும், முக்கியமான விக்கெட்டுக்களை உடைத்தும் கூட எதிர்பாராத ஒரு வீரரின் துடுப்பினால் வெற்றிக்கு அசாத்தியமாக இருந்த ஓட்டங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

சூரியகுமார் யாதவ் - 72 ஓட்டங்கள், இஷான் கிஷான் - 58.
இத்தனை ஓட்டங்கள் மத்தியிலும் நேற்று தனது முதலாவது ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகளின்  வீரர் ஜொஃப்ரா ஆர்ச்சர் தன்னுடைய துல்லியமான வேகப்பந்துவீச்சில் கலக்கியிருந்தார். 3 விக்கெட்டுக்களை வெறும் 22 ஓட்டங்களைக் கொடுத்து எடுத்திருந்தார்.

ராஜஸ்தானின் துரத்தலில் இந்த IPL இல்  formஇல் இருக்கும் சஞ்சு சம்சனோடு சேர்ந்து கொண்டவர் அதிக விலைக்கு ஏலத்தில் பெறப்பட்ட பென் ஸ்டோக்ஸ். முதற்தடவையாகத் தன்னுடைய துடுப்பாட்டப் பங்களிப்பை ஓரளவுக்கு வழங்கியிருந்தார் ஸ்டோக்ஸ் - 40 ஓட்டங்கள்.

நேற்றைய அரைச்சதத்தோடு மீண்டும் செம்மஞ்சள் தொப்பியைத் தனதாக்கிக்கொண்டார் சஞ்சு சம்சன்.

எனினும் இவ்விருவரது ஆட்டமிழப்புகளுக்குப் பிறகு 17 பந்துகளில் 43 ஓட்டங்கள் என்ற சிக்கலான நிலை தோன்றிய நேரம், யாரும் எதிர்பாராத வகையில் புதிய கதாநாயகனாக உதயமானார் கிருஷ்ணப்பா கௌதம்.

11 பந்துகளில் 33 ஓட்டங்கள்.
2 சிக்ஸர்கள், நான்கு நான்கு ஓட்டங்கள். அதுவும் பும்ரா மற்றும் முஸ்தபிசுர் ஆகியோரின் பந்துகளை வெளுத்து வாங்கி.

எனினும் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது ஆர்ச்சருக்கே
வழங்கப்பட்டது.
மும்பாய்க்கு துரதிர்ஷ்டம் துரத்துகிறது.

சென்னை G.பிரசாத்

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் - இனியாவது உருப்படுமா?

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 19 இந்தத் தேர்தல் இடம்பெறும்.
தற்போதைய ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால மீண்டும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

மிக மோசமான நிர்வாகக் காலகட்டம், படுமோசமான நட்டங்கள் என்றிருந்த நிலை கடந்த வருடத்தில் சற்றே முன்னேற்றம் கண்டிருந்தாலும் அணியின் நிலையில் இன்னும் பெரியளவில் முன்னேற்றம் இல்லாததற்கும் தெரிவாளர்களின் சில முடிவுகளுக்கும் பின்னணியில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலையீடுகளே காரணம் எனக் கருதப்படுகிறது.

இதனாலேயே பயிற்றுவிப்பாளர்கள் வெளியேறியதும் பல வீரர்கள் முறுகியதும் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
தேர்தலில் பல கழகங்களின் வாக்குகளுக்காக சில தெரிவுகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலருக்கும் அதிருப்தி தந்த அசங்க குருசிங்க மீண்டும் அணி முகாமையாளராகத் தெரிவு செய்யப்பட்டார். இப்போது அதைவிடக் கூடுதலான அதிகாரங்கள் கொண்ட பதவி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போதைய பயிற்றுவிப்பாளர், சுயாதீனமாகச் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள சந்திக்க ஹத்துருசிங்கவுடன் இணக்கமாகச் செயற்படவுள்ளதாக குருசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்கள் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு பெருமளவில் லாபத்தை ஈட்டித் தந்தது என்று சுமதிபால அறிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, அனுசரணை என்று 1.4 பில்லியன் ரூபாய் வரை இலாபம் ஈட்டப்பட்டிருப்பதுடன், சுதந்திரக் கிண்ணத் தொடரில் மட்டும் 900 மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது.

முன்பிருந்தே SLCயை லாபமாக நடத்திச் செல்வதில் தேர்ந்தவர் என்று பெயரெடுத்த திலங்க சுமதிபால தன்னுடைய நிர்வாகத் திறனை தனக்கான வாய்ப்பாகக் காட்டி மீண்டும் ஒரு ஆட்சிக் காலத்தைக் கோரலாம்.
ஆனால் ஊழலற்ற, விளையாட்டிலும் அணித் தெரிவிலும் அரசியல் செய்யாத ஒரு 'புதிய' நிர்வாகமே இலங்கை கிரிக்கெட்டினை வெற்றிகரமாக முன்னகர்த்த உதவும்.


- அஜாதசத்ரு 

சனி, 21 ஏப்ரல், 2018

ஷேன் வொட்சனின் சதத்துடன் சென்னை அபார வெற்றி ! #CSKvRR #IPL2018

இந்த IPL தொடரின் முதலாவது சதத்தை கிறிஸ் கெயில் பெற்ற அடுத்த நாளான நேற்றே கடந்த வருடம் அவரோடு சேர்ந்து பெங்களூர் றோயல் சல்லெஞ்சர்ஸ் அணிக்காக ஆடிய சகா ஷேன் வொட்சன் சதமொன்றைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன் கெய்ல் பெற்ற 104 ஓட்டங்களை முந்தி தன்னுடைய 106 ஓட்டங்களை இந்த IPL 2018 இன் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகப் பதிவு செய்துகொண்டார்.

பூனேயை தமது தற்காலிக சொந்த மைதானமாகக் கொண்டு சென்னை ஆடிய முதல் போட்டியிலேயே நேற்று ஆடிய போட்டியிலேயே 64 ஓட்டங்களால் பெரிய வெற்றியொன்றைப் பெற்றது.

உபாதை காரணமாக ஓய்வு எடுப்பார்கள் எனக் கருதப்பட்ட தோனி, ரெய்னா இருவருமே நேற்று விளையாடியிருந்தனர்.
சென்னையிலிருந்து விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்திருந்த ஏராளமான ரசிகர்களின் உற்சாக ஆதரவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாடி 5 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்களைக் குவித்தது.

வொட்சன் 6 சிக்ஸர், 9 நான்கு ஓட்டங்களுடன் 57 பந்துகளில் 106.

ரெய்னா தன்னுடைய மீள் வருகையில் 29 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றார்.
இத்தகைய அதிரடியிலும் சுழல்பந்து வீச்சாளர் ஷ்ரெயாஸ் கோபால் 20 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
ராஜஸ்தான் றோயல்ஸ் ஆரம்பம் முதலே தடுமாறி இறுதியில் 140 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பென் ஸ்டோக்ஸ் 45 ஓட்டங்களைப் பெற்றார்.
வொட்சன் ஒரு விக்கெட்டைப் பெற்றார்.
சஹார், தக்கூர், பிராவோ, கர்ன் ஷர்மா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகள்.

போட்டியின் நாயகனாக ஷேன் வொட்சன் தெரிவானார்.

இந்த வெற்றியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாவது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் நிலையைப் பெற்றுள்ளது.


சென்னை G.பிரசாத்

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

தொடர் தோல்விகள்.. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி முடிவு

அண்மைக்காலத் தொடர்ச்சியான தோல்விகளையடுத்து  வீரர்களின் ஒப்பந்தத்தை மாற்றியமைத்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, 6 வீரர்களை அதிரடியாக ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியுள்ளது.


தனியே பத்து வீரர்களை மட்டுமே ஒப்பந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது.
வீரர்கள் போட்டியில் சோபிக்க தவறியதாலேயே அவர்களை நீக்கியுள்ளதாக விளக்கம் அளித்துள்ள கிரிக்கெட் சபை, ஒப்பந்தத்தில் விடுபட்ட வீரர்களின் கதவு முழுவதுமாக அடைக்கப்படவில்லை என கூறியுள்ளது.
சௌமிய சர்க்கர், இம்ருல் கெய்ஸ், மொசாடெக் ஹொசைன், சபீர் ரஹ்மான், தஸ்கின் அஹமட், கம்ருல் இஸ்லாம் ஆகிய ஆறு வீரர்களையே பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, புதிய ஒப்பந்தத்தில் புறக்கணித்துள்ளது.
எனினும் அவர்கள் உள்ளூர் மட்ட போட்டிகளிலும், T20 லீக் போட்டிகளிலும் விளையாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஷ்ரபே மோர்டாசா, தமிம் இக்பால், மஹ்முதுல்லா ரியாத், மொமினுல் ஹக், ருபல் ஹொசைன், முஸ்டபிசுர் ரஹ்மான், தைஜூல் இஸ்லாம், மெஹதி ஹசன் ஆகியோர் மட்டுமே புதிய ஓப்பந்தத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

100 பந்து துரித கிரிக்கெட் ! இங்கிலாந்தின் கிரிக்கெட் புரட்சி வெற்றியளிக்குமா?

கிரிக்கெட்டின் பிறப்பிடம் இங்கிலாந்து மிக நீண்டகாலமாக பாரம்பரிய கிரிக்கெட்டோடு ஊறி வளர்ந்த ஒரு நாடு. கிரிக்கெட்டில் மாற்றங்கள் ஏற்படுத்திடுவதை பெரிதாக விரும்பாத இறுக்கமான ஒரு சமூகமாகவே தன்னைக் காட்டிவந்தாலும் 50 ஓவர்கள் கொண்ட உலகக்கிண்ணப் போட்டிகள் முதல் அண்மைய Twenty 20 போட்டிகள் வரை இங்கிலாந்தில் தான் உருவானது என்பது வரலாறு.

இப்போது மாறிவரும் ரசனைகளின் அடிப்படையில் புதிய, இளம் கிரிக்கெட் ரசிகரை இன்னும் அதிகமாக ஈர்க்கும் எண்ணத்துடன் புதிதாக 100 பந்து துரித கிரிக்கெட் என்ற ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்தவுள்ளார்கள்.

2020இல் அறிமுகப்படுத்த எண்ணியுள்ள 8 அணிகள் விளையாடவுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புதிய கிரிக்கெட் தொடரை அணிக்கு 100 பந்துகளைக் கொண்டதாக நடத்தலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை - ECB தீர்மானித்துள்ளது.

வழமையானது போல 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் அதைத் தொடர்ந்து 10 பந்துகள் கொண்ட விசேட ஓவருமாக இந்தப் போட்டி நடைபெறும்.
இதன் மூலம் 3  மணி நேரத்துக்குள் ஒரு போட்டியை நடத்தி முடிக்கலாம்.

2003 இல் ECB யால் அறிமுகப்படுத்தப்பட்ட Twenty 20க்கு பிறகு இதுவே பெரிய புரட்சியாக அமையவுள்ளது.
இப்போதைக்கு அநேக பிராந்திய கிரிக்கெட் சபைகளின் ஆதரவு கிட்டியிருந்தாலும், கிரிக்கெட் விதிகளை அங்கீகரிக்கும் MCC என்ன சொல்லும் என்பதை அறிந்துகொள்ளக் காத்திருக்கின்றனர்.

இதேவேளை ரசிகர்கள் ஏற்கெனவே 20 ஓவர்கள் கொண்ட Twenty 20 போட்டிகளே 120 பந்துகள் என்றளவில் குறைவாகத் தானே இருக்கு? அது இருக்க மேலும் 20 பந்துகளைக் குறைத்து இன்னொரு வகைப்போட்டி எதற்கு என்றும் குழப்பத்துடன் இருக்கிறார்கள்.


உத்தப்பா தான் எங்கள் அதிரடி ஆயுதம் - KKR தலைவர் தினேஷ் கார்த்திக்

எத்தனை சர்வதேச நட்சத்திரங்கள் இருந்தாலும், ரொபின் உத்தப்பா தான் எங்கள் அணியின் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பின் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவிக்கையில்,

இரு தோல்விகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்றதை சிறப்பாக உணர்கிறேன். எங்களது பந்துவீச்சு மிகவும் நன்றாக இருந்தது. ரொபின் உத்தப்பாவின் துடுப்பாட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் எங்கள் அணியின் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் ஆவார். இதே போல ராணாவும் நன்றாக விளையாடினர்.

ஐ.பி.எல். நீண்ட போட்டித் தொடர். இதனால் வீரர்கள் நிலைத்து துடுப்பெடுத்தாடுவது அவசியமானதாகும். எஞ்சிய போட்டிகளிலும் வீரர்கள் இதே திறமையுடன் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்’ என கூறினார்.

இப்போட்டியில், 36 பந்துகளை எதிர்கொண்ட உத்தப்பா, 2 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்களாக 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.


சென்னை G.பிரசாத்

சிக்ஸர் சாதனையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரோஹித் ஷர்மா

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை, மும்பாய் இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.


நேற்று நடைபெற்ற பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், முதல் சிக்சரை அடித்த ரோஹித், IPL 2018 பருவகாலத்தில்  200வது சிக்சரை பதிவுசெய்தார்.
இதைத் தவிர, ஐ.பி.எல். போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். ரோஹித் சர்மா, 163வது போட்டியில் விளையாடி 179 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலையே சாரும். அவர் 102 போட்டிகளில் 269 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சுரேஸ் ரெய்னா உள்ளார். அவர் 163 போட்டிகளில் 174 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இப்போட்டியில், 52 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்களாக 94 ஓட்டங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை G.பிரசாத்

தாரை தப்பட்டையோட பட்டை கிளப்பும் தமிழன் ஹர்பஜன் !! ட்விட்டரில் தெறிக்கவிடும் CSK பஜ்ஜி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அடிக்கடி தமிழில் ட்வீட் போட்டு அசத்திவருகிறார்.

சென்னை அணிக்கு ஏலத்தில் தெரிவு செய்யப்படுமுன்னரே இந்த தமிழ் ட்வீட்டுக்களை ஆரம்பித்து வைத்து அனைவரையும் யோசிக்க வைத்திருந்தார் பஜ்ஜி.

பூனேயில் இன்று இரவு  நடைபெறும் போட்டியைப்  பார்க்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்கள், "விசில்போடு” எக்ஸ்பிரஸ் - 

Whistle Podu Express என்ற சிறப்பு இரயிலில், நேற்றுக் காலை சென்னையிலிருந்து பூனே புறப்பட்டு சென்றனர்.

இதை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமே ஏற்பாடு செய்திருந்தது பற்றி நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், இதனை வாழ்த்தியே ஹர்பஜன் சிங், தமிழில் டுவீட் போட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை. அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்!

உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ் யா @ChennaiIPL @CSKFansOfficial அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் #pune get ready

என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

தேரேறும் என்பதை எழுத்துப் பிழையோடு பதிவிட்டிருந்தாலும் அவரது ரசிகர்களைக் கவரும் தமிழ் ஆர்வத்துக்காக வாழ்த்துவோம்.

தமிழக வீரர் அஷ்வினை சென்னை எடுக்காமல் விட்ட இழப்பை 'தாமிழராக மாறிவரும் ஹர்பஜன் இப்போது ஈடு செய்ய முனைந்துவருகிறார் போலும்...


வ.சோழன் - யாழ்.நல்லூர் 

கெயில் அசுர சதம் ! பஞ்சாப் அணிக்கு அபார வெற்றி ! சன்ரைசர்ஸ் அணிக்கு முதலாவது தோல்வி - #KXIPvSRH #IPL2018

கிறிஸ் கெயில் அடித்த அசுர சதத்தின் உதவியுடன் சண்டிகாரில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முதலாவது தோல்வியை வழங்கியது கிங்ஸ் இலெவன் பஞ்சாப் அணி.

இதற்கு முதல் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த சன்ரைசர்ஸ் அணிக்கு இது முதலாவது தோல்வி.

இந்த IPL தொடரின் முதலாவது சதத்தை இன்று நாலா திசைகளிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 59 பந்துகளில் கடந்தார் கெயில்.
63 பந்துகளில் 11 சிக்ஸர்களுடன் 104 ஓட்டங்கள்.

இதில் உலகின் தற்போதைய முன்னணி சுழல் பந்துவீச்சு நாயகன் ரஷீத் கானின் ஒரு ஓவரில் நான்கு சிக்ஸர்களுடன் கெயில் 27 ஓட்டங்களைப் பெற்றார்.
பஞ்சாப் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193.

பதிலளித்த சன்ரைசர்ஸ் அணிக்கு தவான் முதல் பந்திலேயே காயமுற்று வெளியேறியது மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. ஆரம்பம் முதல் வேகமின்றிய துடுப்பாட்டம் இறுதியாக 15 ஓட்டங்களால் தோல்வி கிட்டியது.

அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் அரைச் சதங்களைப் பெற்றுக்கொண்டனர். எனினும் மந்த நிலையிலேயே இவர்களது ஆட்டங்கள் அமைந்தன.

அஷ்வினும் மோஹித் ஷர்மாவும் தம் நான்கு ஓவர்களில் ஐம்பது ஓட்டங்களைக் கொடுத்தாலும், பரிந்தர் ஸ்ரான், அன்றூ டை, முஜீப் ரஹ்மான் ஆகியோர் கட்டுப்பாடாகப் பந்துவீசி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மடக்கினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக கிறிஸ் கெயில் தெரிவானார்.

வியாழன், 19 ஏப்ரல், 2018

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ராஜாங்கத்தை உடைத்தெறிந்த ராணாவின் கொல்கத்தா !! - #RRvKKR #IPL2018

நேற்று இரவு நடைபெற்ற இவ்வாண்டு ஐ.பி.எல். தொடரின் 15வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் ஜெய்ப்பூரில் தொடர்ந்து 7 வெற்றிகளைப் பெற்றிருந்த தொடர்ச்சியை தினேஷ் கார்த்திக்கின் அணி முறியடித்துள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானிக்க, ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியது.
இதன்படி ஆடிய ராஜஸ்தான் அணி அணித்தலைவர் ரஹானே மற்றும் ஷோர்ட்டின் சிறப்பான ஆரம்பத்தின் உதவியுடன் 8 விக்கட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஷோர்ட் 44 ஓட்டங்களையும், ரஹானே 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பட்லர் அதிரடியாக 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் ஆகியோர் மிக சிக்கனமாக பந்துவீச ,
நிதிஷ் ரானா மற்றும் டொம் கரன் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, வெறும் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 18.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுனில் நரைன் 35 ஓட்டங்களையும், ரொபின் உத்தப்பா அதிரடியாக 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் ஆடிய ரானா 35 ஓட்டங்களையும், தினேஸ் கார்த்திக் வெறும் 22 பந்துகளில் 42 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இந்த வெற்றியுடன் 5 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக சகலதுறையிலும் பிரகாசித்த நித்தீஷ் ராணா தெரிவானார்.

பூனேயை சென்னையாக மஞ்சள் அடித்து விசில் போடப்போகும் சென்னை ரசிகர்கள் - Whistle Podu Express Exclusive Pics

சென்னையில் நடைபெறவிருந்த அத்தனை IPL போட்டிகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பூனேக்கு மாற்றியதனால் சென்னை ரசிகர்கள் மட்டுமன்றி வீரர்களும் கொஞ்சம் மனமுடைந்து சோர்ந்தும் போயுள்ளனர்.

எனினும் நாளை ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிராக பூனேயில் தங்கள் முதல் போட்டியை ஆரம்பிக்கஉள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு உற்சாகமான செய்தியை தமிழ்நாட்டில் உள்ள சென்னை அணி ரசிகர்கள் தந்திருக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்காக CSK முகாமைத்துவம் ஒழுங்கு செய்த இலவச Whistle Podu Express - விசில் போடு எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் பூனேக்கு புறப்படுள்ளது.

சென்னையிலுள்ள ரசிகர்கள் தமது அணி விளையாடும் போட்டியை காண ரயிலில் பூனே நோக்கி புறப்பட்டுள்ளனர். மைதானத்தில் இருப்பது போன்றே ஆரவாரத்துடன் ரயிலில் செல்லும் காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.


மைதானம் முழுவதையுமே மஞ்சளாக மாற்றிக்காட்டுவோம் என்று பூனே செல்லும் சகல ரயில்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

CSK ரசிகர்களுக்கு இலவச ரயில் பயணம் மட்டுமன்றி, பூனேயில் தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயங்கள் காரணமாக அணியின் தலைவர் தோனி, முக்கிய துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோரை நாளைய போட்டியில் இழந்துள்ள சென்னை அணிக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

சென்னை G.பிரசாத் 
Related Posts Plugin for WordPress, Blogger...