நேற்றைய போட்டியும் இறுதிப் பந்தில் தீர்மானிக்கப்பட்ட விறுவிறு போட்டியாக மாறியது.
எதிர்காலத்துக்குரிய இரண்டு இளையவீரர்கள் தத்தம் அணிகளுக்கான வெற்றிக்காக இறுதிப் பந்திலே நடத்திய போராட்டத்தில் 17 வயது மட்டுமே நிரம்பிய ஆப்கனிஸ்தானின் சுழல்பந்து சிறுவன் முஜீப் ரஹ்மான் ஜெயித்திருந்தார்.
போராடி அரைச்சதம் பெற்றிருந்த டெல்லியின் ஷ்ரேயாஸ் அய்யர் மனமுடைந்து போயிருப்பார் என்பது நிச்சயம்.
கடைசிப் பந்து ஐந்து ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஆறு ஓட்டம் ஒன்றை எடுக்க ஷ்ரேயாஸ் ஐயர் முயன்ற வேளையிலேயே ஃபின்ச்சினால் பிடியெடுக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.
குறைவான ஓட்டங்கள் பெறப்பட்ட நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி தன்னுடைய ஐந்தாவது வெற்றியுடன் புள்ளிகளின் பட்டியலில் முதலாமிடத்தைப் பிடித்துக்கொண்டது.
கெய்ல் இல்லாமல் களமிறங்கிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் மிகத் தடுமாறி நேற்று 20 ஓவர்களில் 143/8 எடுத்தது.
மில்லரின் இரு பிடிகள் தவறவிடப்படாமல் எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் குறைவாகவே இந்த ஓட்ட எண்ணிக்கை இருந்திருக்கும்.
கருண் நாயர் அதிகபட்சமாக 34 ஓட்டங்களை எடுத்தார்.
நேற்று தன்னுடைய இந்தப் பருவகாலத்தின் முதல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ப்ளங்கெட் 17 ஓட்டங்களை 3 விக்கெட்டுக்களை
வீழ்த்தினார்.
சொந்த மைதானத்தில் மிக இலகுவாக இந்த இலக்கை டெல்லி டெயார்டெவில்ஸ் அடையும் பார்த்தால் விக்கெட்டுக்களை விரைவாக இழந்துகொண்டே சென்ற வேளையில் தனித்து நின்று போராடிய ஷ்ரேயாஸ் ஐயரின் அரைச்சதம் தோல்வியிலே முடிந்தது.
பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு மாற்றங்களில் பஞ்சாப் அணியின் தலைவர் அஷ்வினின் சாமர்த்தியம் பாராட்டக்கூடியது.
தனது 4 ஓவர்களில் வெறுமனே 19 ஓட்டங்களை மட்டுமே
கொடுத்திருந்தார்.
ராஜ்புட், டை மற்றும் முஜீப் ஆகிய மூவரும் மிகச் சிறப்பாகப் பந்துவீசியிருந்தனர்.
ரஷீத் கானை அனைவரும் அதிகமாகப் புகழ்ந்து வரும் நிலையில் சத்தமில்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் வருகிறார் இளையவர் முஜீப் உர் ரஹ்மான்.
ஆரம்பத்திலே விக்கெட்டுக்களை உடைத்துப்போட்ட ராஜ்புட் போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
0 கருத்துகள்