தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீள் வருகை ! சாதிக்க முடியுமா?

ஓய்வுக்குப் பின்பு லீக் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவது எல்லாம் IPL போன்ற பணம் கொட்டும் போட்டித் தொடர்கள் வந்த பிறகு சகஜமாகிவிட்டன. ஓய்வு பெறும் வயது என்று கருதப்படும் 35 வயது காலகட்டத்துக்கு முன்பாகவே சர்வதேசப் போட்டிகளில் இருந்து, நாட்டுக்காக விளையாடுவதிலிருந்து விலகி உலகம் முழுவதும் சுற்றி லீக் போட்டிகளில் ஆடி வரும் பல வீரர்கள் உள்ளனர்.

ஓய்வு பெற்று மீண்டும் விளையாட வந்த ஷஹிட் அஃப்ரிடி போன்ற வீரர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் முதல் தரப் போட்டிகளை மட்டுமே விளையாடியுள்ள வீரர் ஒருவர், உடல்நிலை உபாதை காரணமாக பத்து ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த பின்னர், தனது 43 வயதுக்கு சில நாட்களே இருக்கும் வேளையில் சர்வதேச அணி ஒன்றுக்காக விளையாட இருக்கிறார் என்றால் அது ஆச்சரியம் தானே?

வீரர், தென் அவுஸ்திரேலிய அணிக்காக முதல்தரப் போட்டிகளில் ஆடிய துடுப்பாட்ட/விக்கெட் காப்பு வீரர் ஷேன் டெய்ட்ஸ்.
அவர் விளையாடப்போகும் நாடு வனாட்டு.

66 முதல் தரப் போட்டிகளில் ஆடிய பிறகு பல உபாதைகளால் ஓய்வு பெற்று, கடந்த நான்கு ஆண்டுகளாக வனாட்டு அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்துள்ள டெய்ட்ஸ், கடந்த வருடம் இடுப்பில் சத்திர சிகிச்சை செய்த பிறகு யாருமே நம்பமுடியாத அளவிற்கு இப்போது தான் உடல் உறுதியோடு இருப்பதாக அறிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற உள்ள ICC நடத்தும் WCL நான்காம் பிரிவு போட்டியில் ஆடவுள்ள வனாட்டு அணிக்கு டெய்ட்ஸின் துடுப்பாட்டமும் விக்கெட் காப்பும் அனுபவமும் பெரிய துணையாக அமையும் என நம்பப்படுகிறது.

கென்யா, அமெரிக்கா போன்ற அணிகளும் விளையாடவுள்ள இந்தத் தொடரில் வெற்றிகளைப் பெறுவதன் மூலமே வனாட்டு படிப்படியான முன்னேற்றங்கள் கண்டு எதிர்காலத்தில் சர்வதேச அந்தஸ்தைப் பெறும் முயற்சியை எடுக்கமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...