ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 19 இந்தத் தேர்தல் இடம்பெறும்.
தற்போதைய ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால மீண்டும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
மிக மோசமான நிர்வாகக் காலகட்டம், படுமோசமான நட்டங்கள் என்றிருந்த நிலை கடந்த வருடத்தில் சற்றே முன்னேற்றம் கண்டிருந்தாலும் அணியின் நிலையில் இன்னும் பெரியளவில் முன்னேற்றம் இல்லாததற்கும் தெரிவாளர்களின் சில முடிவுகளுக்கும் பின்னணியில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலையீடுகளே காரணம் எனக் கருதப்படுகிறது.
இதனாலேயே பயிற்றுவிப்பாளர்கள் வெளியேறியதும் பல வீரர்கள் முறுகியதும் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
தேர்தலில் பல கழகங்களின் வாக்குகளுக்காக சில தெரிவுகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலருக்கும் அதிருப்தி தந்த அசங்க குருசிங்க மீண்டும் அணி முகாமையாளராகத் தெரிவு செய்யப்பட்டார். இப்போது அதைவிடக் கூடுதலான அதிகாரங்கள் கொண்ட பதவி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போதைய பயிற்றுவிப்பாளர், சுயாதீனமாகச் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள சந்திக்க ஹத்துருசிங்கவுடன் இணக்கமாகச் செயற்படவுள்ளதாக குருசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய பயிற்றுவிப்பாளர், சுயாதீனமாகச் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள சந்திக்க ஹத்துருசிங்கவுடன் இணக்கமாகச் செயற்படவுள்ளதாக குருசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்கள் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு பெருமளவில் லாபத்தை ஈட்டித் தந்தது என்று சுமதிபால அறிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, அனுசரணை என்று 1.4 பில்லியன் ரூபாய் வரை இலாபம் ஈட்டப்பட்டிருப்பதுடன், சுதந்திரக் கிண்ணத் தொடரில் மட்டும் 900 மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது.
முன்பிருந்தே SLCயை லாபமாக நடத்திச் செல்வதில் தேர்ந்தவர் என்று பெயரெடுத்த திலங்க சுமதிபால தன்னுடைய நிர்வாகத் திறனை தனக்கான வாய்ப்பாகக் காட்டி மீண்டும் ஒரு ஆட்சிக் காலத்தைக் கோரலாம்.
ஆனால் ஊழலற்ற, விளையாட்டிலும் அணித் தெரிவிலும் அரசியல் செய்யாத ஒரு 'புதிய' நிர்வாகமே இலங்கை கிரிக்கெட்டினை வெற்றிகரமாக முன்னகர்த்த உதவும்.
- அஜாதசத்ரு
- அஜாதசத்ரு
0 கருத்துகள்