தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 5 ஜனவரி, 2022

ஆசிய 19 வயதுக்குட்பட்டோர் கிண்ணத்தில் இந்தியாவின் வெற்றி & உலகக்கிண்ணத்தில் இலங்கை ??

 மத்திய கிழக்கில் எட்டு அணிகள் மோதிய  19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணம் இந்தியாவின் இளையோரின் கைகளில் எட்டாவது தடவையாகப் போய்ச் சேர்ந்துள்ளது.இதுவரை இந்த இளையோர் ஆசியக் கிண்ண ஒருநாள் தொடர் போட்டிகள் நடைபெற்றுள்ள ஒன்பது தடவைகளில் இந்தியா ஒரு தடவை பாகிஸ்தானோடு இணை சாம்பியனாக பகிர்ந்துகொண்டது. 
(அது 2012 ஆம் ஆண்டில்)
2017இல் மலேசியாவில் நடைபெற்ற தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சம்பியன் ஆகியது.
அந்தத் தொடரில் இவ்வாறான ஆசிய இளையோர் கிண்ணத் தொடர்களில் அதிகமான தடவைகள் இறுதிப்போட்டிகளில் சந்தித்த இரண்டு அணிகளான இலங்கையும் இந்தியாவும் அரையிறுதிக்குக் கூட வரவில்லை என்பது சுவையானது.


ஆசிய நாடுகளில் இந்தியாவின் கிரிக்கெட் கட்டமைப்பு எத்தனை வலுவானது என்பதை இவ்வாறான தொடர்களை தொடர்ச்சியாக வெல்வதன் மூலம் இந்தியா காட்டிவருகிறது. 

அண்மையில் நடைபெற்றுமுடிந்த இவ்வாண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றியைப் பெற்றதோடு மேற்கிந்தியத் தீவுகளில் வருகின்ற 14ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டியிலும் favourites ஆக நம்பிக்கையுடன் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த அணியில் ஒரு சில வீரர்களாவது இந்த வருடம் நடைபெறவுள்ள IPL இல் நிச்சயம் இடம்பிடிப்பார்கள் என்பது தான் இந்தியா கிரிக்கெட்டின் வளர்ச்சியின் ரகசியம்.

இலங்கை அணியும் இறுதிப்  போட்டி வரை வந்த உற்சாகத்துடன் மஹேல ஜயவர்தன இப்போது பயிற்றுவிப்பாளராக இணைந்திருப்பதும் சேர்ந்து உற்சாகமாக பயணித்திருக்கிறது.
இந்திய இளையோர் அணிக்கு ராகுல் டிராவிட் கொடுத்த உத்வேகம் போல இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு மஹேல ஒரு வெற்றிகரமான பயணத்தை வழங்குவாரா பார்க்கலாம்.மஹேல வந்த மாற்றமோ இல்லாவிட்டால் அண்மைக்காலமாக இலங்கையில் தொடர்ச்சியாக சுற்றுலா வந்த அணிகளை தொடர்ந்து வென்று வந்த பயிற்சியும் உற்சாகமுமோ இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணி மிகச் சிறப்பாகவே முதற்சுற்று ஆட்டங்களில்  ஆடி அரையிறுதி வரை இலகுவாக முன்னேறியதோடு, நடப்புச் சம்பியன்களான பங்களாதேஷையும் வீழ்த்தி, பின் அரையிறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியிருந்தது.

மழையினால் பாதிக்கப்பட்ட இறுதிப்போட்டியில் இந்திய அணி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வென்றிருந்தது.

அணியின் தலைவர் Dunith Wellalage, துடுப்பாட்ட வீரர்கள் Sadeesha Rajapaksa, Chamindu Wickremasinghe, Pavan Pathiraja மற்றும் பந்துவீச்சாளர்கள் Matheesha Pathirana, Trevin Mathews, Yohan Rodrigo என்று எதிர்காலத்துக்கான நட்சத்திரங்கள் ஜொலிக்கிறார்கள்.

இவர்களில் ஒருவருக்காவது அடுத்த லங்கா பிரீமியர் லீக்கில் ஐந்து அணிகளில் ஒன்றாவது வாய்ப்பை வழங்குமா என்பது சந்தேகமே.

மகேலவின் வழி நடத்தலில் இவர்கள் தம்மை மிகச்சிறப்பான முறையில் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் வெளிப்படுத்தவேண்டும்.

இலங்கை மிகவும் சிக்கலான ஒரு பிரிவில் போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள், பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளோடு இருக்கிறது.

ஆசிய சம்பியன்களான இந்தியா, கடந்த முறை இறுதிப்போட்டியில் தோற்றுப்போய் இருந்தாலும் இம்முறை அதிகம் பலமான அணியாகவும், மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்களுக்கு ஏற்ற சுழற்பந்து வீச்சாளர்களோடும் செல்கிறது.

அத்துடன் ஒப்பீட்டளவில் இலகுவான பிரிவான தென் ஆபிரிக்கா, அயர்லாந்து, உகண்டா அடங்கிய பிரிவில் விளையாடவுள்ளது.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

IPL 2021 - வெற்றிக்கிண்ணம் எந்த அணிக்கு ?

 IPL 2021 - வெற்றிக்கிண்ணம் எந்த அணிக்கு ?


திங்கள், 12 அக்டோபர், 2020

#CSK அணியின் தோல்விகளால் தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ரசிகர் கைது ! #Dhoni #IPL2020

 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே - சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நிறைய ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளதால் ரசிகர்கள் சிலர் தோனியின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

அபுதாபியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. கடந்த சீசன் வரை வெற்றிகரமான அணியாகத் திகழ்ந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பா் கிங்ஸ், இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி 4-ல் தோல்வியடைந்துள்ளது. அந்த அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதே தோல்விக்கு காரணம் என விமா்சனம் எழுந்துள்ளது.


இந்நிலையில் CSK அணி மோசமாக விளையாடி வருவதால் கோபமடைந்துள்ள ரசிகர்கள் சிலர் தோனியின் மகள் ஜிவா-வின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியிலான மிரட்டல்களை விடுத்துள்ளார்கள். அதேபோல தோனியின் மனைவி சாக்‌ஷிக்கும் அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

இவர்களில் ஜிவாவை பாலியல் பலாத்காரம் செய்வதாக கேவலமாக மிரட்டிய 16 வயது இளைஞர் ஒருவரை குஜராத் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகையும் அரசியல்வாதியுமான நக்மா இதுபற்றி ட்விட்டரில் கூறியதாவது:
நம் தேசம் எங்குச் சென்றுகொண்டிருக்கிறது? தோனியின் 5-வது மகளுக்குப் பாலியல் ரீதியிலான மிரட்டல் விடுப்பது கொடுமையாக உள்ளது என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து தோனிக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதி வருகிறார்கள்.#CSK

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

மீண்டும் சொதப்பிய தோனி & சென்னை | விராட் கோலியின் விஸ்வரூபத்தில் வெற்றியீட்டிய RCB #RCBvCSK #IPL2020


 

துபாய் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆரோன் ஃபிஞ்ச் 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துக் களமிறங்கிய விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தார். படிக்கல் 34 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏபி டிவிலியர்ஸ் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். வாஷிங்டன் சுந்தர் (10), ஷிவம் துபே (22) போன்றவர்கள் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.


மறுமுனையில் விராட் கோலி கடைசிவரை களத்தில் இருந்து 52 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்ததால், பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் சேர்த்தது.


170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, துவக்கத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் 14 ரன்களும், ஃபாஃப் டூ பிளஸி 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.


அடுத்துக் களமிறங்கிய அம்பத்தி ராயுடு, ஜெகதீசன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைச் சரிவிலிருந்து மீட்கத் தொடங்கியனர். ஜெகதீசன் 28 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் மகேந்திரசிங் தோனி 10 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், சாம் கரன் டக்-அவுட் ஆனார்.


கடைசி வரைப் போராடிய அம்பத்தி ராயுடு 40 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்களும் சிறப்பாக சோபிக்க தவறியதால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 132 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.பெங்களூர் அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 4 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

சனி, 3 அக்டோபர், 2020

இளம் வீரர்களால் வெற்றியைச் சுவைத்த ஹைதராபாத் ! வயதேறும் வீரர்கள், தடுமாறும் தோனி - மூன்றாவது தோல்வி #CSK க்கு #IPL2020

 நீண்ட நாட்களுக்கு பிறகு மகேந்திரசிங் தோனி பெஸ்ட் பினிஷர் அவதாரம் எடுப்பார் என்று சென்னை ரசிகர்கள் நம்பியிருக்க, அவரும் சென்னையின் துடுப்பாட்ட வீரர்களும்  சில தடுமாற்றங்களை சந்தித்ததால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வெற்றிபெற்றது.நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வோர்னர் போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து திரும்பியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கை ஓங்கியிருந்தது. இருப்பினும், இளைய துடுப்பாட்ட வீரர்கள் பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா சிறப்பாக இணைப்பாட்டம் அமைத்து ரன் மழை பொழிந்தனர்.பிரியம் கார்க் 51* ஓட்டங்களும், அபிஷேக் ஷர்மா 31 ஓட்டங்களும் எடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் எண்ணிக்கையை  164ஆக உயர்த்தினர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரியம் கார்க், தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை கடந்தார். அதேபோல், மற்றொரு இளம் வீரர் அபிஷேக் ஷர்மா இவருடன் இணையை அமைத்து கூட்டாக 77 ரன்களை குவித்தனர்.

கடைசி 4 ஓவர்களில் 53 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். 

தனது சாதனைக்குரிய 194ஆவது போட்டியில் களமிறங்கிய மகேந்திரசிங் தோனி தொடக்கத்தில் மிகவும் தடுமாறி ஓட்டங்களை குவிக்கத் தவறினாலும், இறுதியில் அதிரடியாக விளையாடினார். நேற்றைய போட்டியில் முன்னரைப் போல பெஸ்ட் பினிஷராக மாறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் சந்தித்த சிறு தடுமாற்றத்தால் சென்னை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இறுதியாக மொத்தம், 36 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்றுகொண்டார். மகேந்திரசிங் தோனி.

கடைசி வரிசையில் களமிறங்குகிறார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்றைய போட்டியில் 5ஆவது வீரராகக் களம் கண்டார். ரவிந்திர ஜடேஜாவுடன் இணைந்து 72 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஓட்டங்கள் சேர்த்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.


கடைசி 18 பந்துகளில் 63 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ரவிந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி இணைப்பாட்டம்  ஆனது அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தது. ரவிந்திர ஜடேஜா அதிரடியாக ஆடிசென்னை அணியை வெற்றிக்கு நெருக்கமாக கொண்டு சென்றனர். 

இருப்பினும், அவர் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், மகேந்திரசிங் தோனி அதிரடி காட்டத் தொடங்கினார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 44 ஓட்டங்கள் தேவைப்பட்டது.புவனேஸ்வர் குமார் 19ஆவது ஓவரின் முதல் பந்தை வீசிய நிலையில், காலில் காயம் ஏற்பட்டு, பெவிலியன் திரும்பினார். இதனால், கலீல் அஹமது மாற்றுப் பந்து வீச்சாளராகச் செயல்பட்டார். அந்த ஓவரில் தோனி ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்ததால், கடைசி ஓவருக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இளம் பந்துவீச்சாளர்  அப்துல் சமதை டேவிட் வோர்னர் இறுதி ஓவருக்காகத் தெரிவு செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை வழங்கியது.

அவர்  சாமர்த்தியமாகப் பந்து வீசி சென்னை அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.


மகேந்திரசிங் தோனி முன்கூட்டியே அதிரடி காட்டியிருந்தால், சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்த்திருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தோனியின் வயது முதிர்வும் அவரதும சக முப்பது வயது தாண்டிய சென்னை வீரர்களதும் துடுப்பாட்டத் தடுமாற்றம் தொடர்கிறது.


நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக ப்ரியம் கார்க் தெரிவானார்.

சனி, 26 செப்டம்பர், 2020

ஆப்கான்- நியூஸிலாந்து அணிகளுடனான தொடர்கள் ஒத்திவைப்பு: கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவிப்பு !

 ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர்களை ஒத்திவைப்பதாக, கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரிலும் அவுஸ்ரேலிய அணி விளையாடுவதாக இருந்தது.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்திற்கொண்டு குறித்த போட்டித் தொடர்களை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிரிக்கட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

எனினும், இத்தொடர்களை நடத்துவதற்கான மாற்று திகதி தெரிவு செய்வதற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளின் கிரிக்கெட் சபைகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கிரிக்கட் அவுஸ்ரேலியா குறிப்பிட்டுள்ளது.

டெல்லிக்கு அசத்தலான வெற்றி - சென்னைக்கு தொடர்ச்சியான தோல்வி #CSKvDC #IPL2020

 இளைய வீரர்களின் அதிரடி துடுப்பாட்டம், அசத்தலான பந்து வீச்சினால் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. 

நாணய சுழற்சியில் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். பிரித்வி ஷா அரைசதம் அடித்தார் பிரித்வி ஷா. டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ஓட்டங்கள் அடித்தது.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்தது. பிரித்வி ஷா 64 , தவான் 35. ரிஷப் பண்ட் 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 10 ஓட்டங்கள், வொட்சன் 14 ஓட்டங்கள் என்று ஆட்டமிழந்தனர். டூ பிளசிஸ், கேதார் ஜாதவ் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 50 ஓட்டங்கள் சேர்த்தது.

ஜாதவ் 26 க்கும் டூ பிளசிஸ் 43 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது. டோனி மீண்டும் தடுமாறியிருந்தார். ஓட்டங்களை வேகமாகப் பெறவேண்டிய நேரத்தில் 15 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.


டெல்லியின் அதிவேக தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்கள் றபாடா & நோர்ட்ஜே 

டெல்லி அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி அசத்தியது. பீல்டிங்கும் சிறப்பாக செய்தது. இதனால் சென்னை அணி ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை.

இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் - ப்ரித்வி ஷா 

Related Posts Plugin for WordPress, Blogger...