தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 31 மே, 2018

சென்னையின் வெற்றிக்கான ரகசியம் - கொதிப்போடு போட்டுடைத்த கௌதம் கம்பீர்

 ஐபிஎல் தொடரில் சென்னை அணி கிண்ணத்தை வெல்வதற்கு காரணம் அணியின் தலைவர் தோனிக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது தான் என டெல்லிக்காக விளையாடிய கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கிண்ணத்தை வென்று தந்த வெற்றித் தலைவராக கெளதம் கம்பீர், டெல்லி அணிக்கு இம்முறை தலைவராகப் பதவியேற்றார். ஆனால் அவரால் தலைவராகவோ, சாதாரண துடுப்பாட்ட வீரராகவோ எந்த விதத்திலும் ஜொலிக்க முடியவில்லை.

தொடர்ந்த அழுத்தத்தின் காரணமாக தன் தலைமைப் பொறுப்பை துறந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைவரானார். அதன் பின்னர் கம்பீர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

IPL போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில்,
கம்பீர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் ஐபிஎல் உரிமையாளர்களை விமர்சித்துள்ளார்.

அதிக பணம் புழங்கும் தொழிலாக ஐபிஎல் மாறியுள்ளது. வீரர்கள், ஊழியர்களை பல கோடிகள் கொடுத்து வாங்கும் அணி உரிமையாளர்கள் தங்களின் தொழிலில் ஜொலித்து வருகின்றனர். தொழிலைப் போலவே ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற நினைக்கின்றனர்.

அதனால் அணி நிர்வாகத்தை தாண்டி மைதானத்தில் பெறும் வெற்றி, தோல்வியில் தலையிடுகின்றனர். வீரர்களால் உரிமையாளர்களை குறை கூற முடியுமா?

தோனியால் சென்னை வெற்றி பெற்றது ஏன்?

சென்னை அணியில் உரிமையாளர்களின் தலையீடு இல்லை. தோனி தான் அவர்களுக்கு எல்லாமே. அணி குறித்து தோனி என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் முடிவு. தோனி முடிவில் உரிமையாளர்கள் தலையிடுவதில்லை. தோனி தான் சென்னை அணிக்கு பாஸ். அவர் கிட்டத்தட்ட கடவுள் மாதிரி. அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம் தான் அந்த அணி வெற்றி ரகசியமாக இருக்கிறது என கம்பீர் தெரிவித்துள்ளார்.

தனக்கு கொல்கத்தாவில் வழங்கப்பட்ட சுதந்திரம் அளவுக்கு டெல்லியில் வழங்கப்படவில்லை என்பதையே மறைமுகமாக கம்பீர் சாடியுள்ளார் என நம்பப்படுகிறது.

#IPL2018 கோடி ரூபாய்களைக் குவித்த IPL அணிகளின் பயிற்றுவிப்பாளர்கள் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோலாகல வெற்றியுடன் இவ்வாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மிக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன.
ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி சம்பியன் பட்டம் வென்றது.

அணிக்கான பரிசுத் தொகை விபரம்: (இந்திய ரூபாய்கள்)

சம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடியும், இறுதிப் போட்டியில் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடியும், 3வது, 4வது இடம் பிடித்த கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கு தலா ரூ. 8.75 கோடியும் வழங்கப்பட்டது.

அதிக ஓட்டங்கள், விக்கெட்டுகள், சிறந்த பிடியெடுப்பு , சிறந்த அணி, வளர்ந்து வரும் சிறந்த வீரர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி அதற்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.


இதில் கிண்ணம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதில் 10 கோடி அணி நிர்வாகத்துக்கும், 10 கோடி வீரர்களுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.

பயிற்சியாளர்களுக்கும் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்த அணி நிர்வாகங்கள்..

வீரர்களுக்கு போட்டிக்கு முன் ஏலத்தில் எடுக்கும் போதே அவர்கள் பெறும் தொகை தெரியவந்துவிடுகிறது. அதே சமயம் ஒவ்வொரு அணிக்கும் தலைமை பயிற்சியாளர், துடுப்பாட்ட, பந்துவீச்சு பயிற்சியாளர், ஆலோசகர் என நியமித்துள்ளனர்.

அதன் படி பயிற்சியாளர்கள் பெறும் தொகையை இங்கு பார்ப்போம்.

மிக அதிக தொகைக்கு பணி அமர்த்தப்பட்டவர்களின் பட்டியலில் பெங்களூரு அணி பயிற்சியாளர், முன்னாள் நியூசீலாந்து அணித் தலைவர் டனியல் வெட்டோரி உள்ளார்.

4 கோடி - டனியல் வெட்டோரி (பெங்களூரு தலைமை பயிற்சியாளர் )

4 கோடி - ஆசிஷ் நெஹரா (பெங்களூரு பந்துவீச்சுப் பயிற்சியாளர் )

3.7 கோடி - ரிக்கி பொண்டிங் (டெல்லி தலைமை பயிற்சியாளர் )

3.2 கோடி - ஸ்டீபன் பிளமிங் (சென்னை தலைமை பயிற்சியாளர் )

3 கோடி - விரேந்திர சேவாக் (பஞ்சாப் அணி ஆலோசகர்)

2.7 கோடி - ஷேன் வோர்ன் (ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் )

2.25 கோடி - ஜக்ஸ் கலிஸ் (கொல்கத்தா அணி தலைமை பயிற்சியாளர் )

2.25 கோடி - மஹேல ஜெயவர்த்தன ( மும்பை அணி தலைமை பயிற்சியாளர் )

2 கோடி - விவிஎஸ் லக்‌ஷ்மன் மற்றூம் டொம் மூடி (ஹைதராபாத் பயிற்சியாளர்கள்)

1.5 கோடி - கரி கேர்ஸ்டன்(பெங்களூரு அணி துடுப்பாட்டப் பயிற்சியாளர் )


1.5 கோடி - லசித் மலிங்க (மும்பை அணி பவுலிங் பயிற்சியாளர் )

சென்னை G.பிரசாத்

புதன், 30 மே, 2018

மோர்கனும் இல்லை !! தலைவராகிறார் அஃப்ரிடி !!


ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல வீரர்களைக் காயம் காரணமாக இழந்துள்ள, மாற்றங்களை செய்துள்ள உலக அணி நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில் அணியின் தலைவரையும் மாற்றவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது.

உலக அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஒயின் மோர்கனுக்கு வலது கை மோதிர விரலில் ஏற்பட்டுள்ள முறிவின் காரணமாக ஒரு வார காலமாவது ஓய்வு எடுக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே மோர்கன் நாளைய போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறார்.

இதையடுத்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷஹிட் அஃப்ரிடி உலக அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மோர்கனின் இடத்துக்கு இங்கிலாந்து அணியின் இளைய விக்கெட் காப்பாளர் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மோர்கன் எதிர்வரும் 10ஆம் திகதி இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முன்னர் குணமடைந்து விடுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடரும் இருக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகளில் கடந்த வருடம் சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் முகமாகவே இந்த T 20 கண்காட்சிப் போட்டி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நாளை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

திரட்டப்படும் நிதி மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஐந்து மைதானங்களைப் புனரமைப்பு செய்யப் பயன்படும்.
x





சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைக் கொண்டாட DJ பிராவோ வெளியிட்ட புதிய பாடல்

IPL இல் மூன்றாவது கிண்ணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற மகிழ்ச்சியை சென்னை ரசிகர்கள் எல்லாரும் கொண்டாடும் நேரத்தில் அந்த வெற்றியின் பங்காளர்களில் ஒருவரான ட்வெயின் பிராவோ சிறப்புப் பாடல் ஒன்றைக் காணொளியொடு வெளியிட்டுக் கொண்டாடியிருக்கிறார்.

We Are The Kings என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள பாடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் புகழ் பாடப்பட்டுள்ளதோடு முன்பே எடுக்கப்பட்ட தோனி மற்றும் இதர சென்னை வீரர்களின் படங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இப்போது வரிகள் மட்டும் கொண்ட lyrical video வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான காணொளியை சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

செவ்வாய், 29 மே, 2018

கன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை விரிக்கும் ஆப்கானிஸ்தான் !

எதிர்வரும் (ஜூன்) மாதம் பெங்களூருவில் இந்திய அணியைத் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் சந்திக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய 16 பேர் கொண்ட குழாமை அறிவித்துள்ளது.
சர்வதேச அனுபவம் வாய்ந்த அஸ்கர் ஸ்டனிக்சாயின் தலைமையில் அனுபவ வீரர்கள் பலரையும் உள்ளடக்கியுள்ள இவ்வணியில் உலகின் தற்போதைய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுடன் மேலும் மூன்று சுழல்பந்து வீச்சாளர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள்.

ரஷீத் கானுடன் IPL இல் விளையாடிய மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான், மற்றும் 19 வயதான சஹீர் கான் (ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் பெயரிடப்பட்டும் உபாதை காரணமாக விளையாட முடியாமல் போனது), உள்ளூர்ப் போட்டிகளில் கூடிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய அமீர் ஹம்சா ஆகியோரே மற்றையவர்கள்.

சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் தவ்லத் சட்ரானை உபாதை காரணமாக இழக்கவுள்ள ஆப்கான் அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்தியாவில் நொய்டாவில் விளையாடவுள்ள 3 T 20 போட்டிகளுக்கு புதியவர்களையும் இளையவர்களையும்  சேர்த்துள்ளது.

இந்த அணிக்கும் அஸ்கர் ஸ்டனிக்சாயே தலைமை தாங்கவுள்ளார்.
வருகின்ற 3ஆம் திகதி முதல் இம்மூன்று போட்டிகளும் இடம்பெறவுள்ளன.




திங்கள், 28 மே, 2018

உலக அணியில் பாண்டியா இல்லை ! ஷமி, ரஷிட் இணைந்தனர்.

எதிர்வரும் 31 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள நிதி திரட்டும் கண்காட்சிப் போட்டிக்கான உலக அணியிலிருந்து இந்திய சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியா விலகியுள்ளார்.

திடீரென ஏற்பட்ட வைரல் காய்ச்சல் காரணமாகவே பாண்டியா விலகுகிறார். இவருக்குப் பதிலாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி உலக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, இங்கிலாந்தின் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் அடில் ரஷிட்டும் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ரஷிட்டுடன் மொத்தமாக நான்கு லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் ஒயின் மோர்கன் தலைமை தாங்கும் உலக அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்தியத் தீவுகளில் கடந்த வருடம் சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் முகமாகவே இந்த T 20 கண்காட்சிப் போட்டி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இடம்பெறவுள்ளது.

திரட்டப்படும் நிதி மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஐந்து மைதானங்களைப் புனரமைப்பு செய்யப் பயன்படும்.

ICC World XI: Eoin Morgan (capt), Shahid Afridi, Tamim Iqbal, Dinesh Karthik, Rashid Khan, Sandeep Lamichhane, Mitchell McClenaghan, Shoaib Malik, Thisara Perera, Luke Ronchi, Adil Rashid, Mohammed Shami



அல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள நிர்ணய சதி - மூவர் பணி நீக்கம் !!

இலங்கையில் காலி மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணப் படமொன்றை அல்- ஜஸீரா தொலைக்காட்சி நேற்று (27) மாலை ஒளிபரப்புச் செய்தது.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக முன்பு விளையாடிய இரண்டு வீரர்கள் பணத்திற்காக ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புபட்டு இருப்பதாக அந்த ஆவணப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி மைதான உதவி முகாமையாளர் தரங்க இந்திக மற்றும் முன்னாள் முதற்தர வீரரும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளரில் ஒருவரான தரங்க மெண்டிஸ் ஆகியோரே அவர்கள்.

இந்நிலையில், அல்– ஜஸீரா தொலைக்காட்சி வெளிப்படுத்திய ஆவணப் படத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆடுகள நிர்ணயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளது. 

அத்துடன் இந்த ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புபட்ட அனைவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது நபரான ஜீவந்த குலதுங்க இலங்கை அணிக்காக சில போட்டிகளை விளையாடியதுடன் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளராக இரு வருடகாலம் கடமையாற்றியவர்.
நான்காவது நபர் சில வருட காலம் இலங்கை அணிக்காக விளையாடிய வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகே. இப்போது அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளார். தில்ஹார லொகுஹெட்டிகே கடந்த 2016ஆம் ஆண்டு முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.

இதேநேரம், ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் எவராக இருந்தாலும், தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டணை வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ”காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளத்தின் தன்மையை மாற்றி பணத்துக்காக ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை தொடர்பில் அல்– ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்களை அறியக்கிடைத்தமை மிகவும் வேதனையளிக்கின்றது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் நேசிக்கின்ற கிரிக்கெட் விளையாட்டில் இதுபோன்ற விடயங்களுக்கு இடமளிக்கக் கூடாது” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே, ஆடுகளத்தை மாற்றி ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பிலான விசாரணைகள் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு அமைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று இரவு அவசரமாகக் கூடியது. 

இதன்போது, ஆட்ட நிர்ண சதி தொடர்பிலான விசாரணைகளை இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவொன்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் மொஹான் டி சில்வா, செயலாளர் எயார் கொமடோர் ரொஷான் பியன்வல மற்றும் பிரசன்ன வீரக்கொடி ஆகியோர் அந்தக் குழுவில் அடங்குகின்றனர். இதன்படி, ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சரினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பணத்திற்காக ஆடுகளத்தின் தன்மையை மாற்றி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் வெளியிட்ட அல்–ஜஸீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுடன் இணைந்து விசாரணைகளில் ஈடுபட உள்ளதாகவும், இதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்ப வழங்க முன்வர வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின், ஊழல் எதிர்ப்பு பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்சல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் காலி மைதானம் சுழற்பந்து வீச்சாளருக்கு எப்போதுமே சாதகமான ஆடுகளமாக இருந்து வருவதனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 1/2 நாட்களில் முடிவடைந்த போட்டி பற்றி யாருக்கும் சந்தேகம் வரத் தேவையில்லை என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்றதிகாரி ஆஷ்லே டீ சில்வா அறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.


2016ஆம் ஆண்டு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவர்கள் காலி மைதானத்தின் தன்மையை மாற்றியமைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அல்–ஜஸீரா தெரிவித்துள்ளது.

அல் ஜஸீரா வெளியிட்ட முழுமையான ஆவணப்படம் :
Cricket’s Match Fixers - Al Jazeera Investigations - Shocking Video

இது இவ்வாறிருக்க, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் உதவி முகாமையாளரும், பராமரிப்பாளருமான தரங்க இந்திக்க மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தரிந்து மெண்டிஸ் ஆகியோர் காலி மைதானத்தின் தன்மையை மாற்றியமைப்பதற்கு மும்பையைச் சேர்ந்த முன்னாள் உள்ளூர் கிரிக்கெட் வீரர் றொபின் மொறிஸ் என்பவரின் உதவியை இதற்காகப் பெற்றுக்கொண்டுள்ளனர்.


இதில், கிரிக்கெட் வீரராகவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புடைய மாவட்ட அணிக்கு பயிற்சியாளராகவும் செயற்பட்டு வருகின்ற தரிந்து மெண்டிஸ், இந்த ஆட்ட நிர்ணயத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவர் 2016/2017 பருவகாலத்தில் மூவர்ஸ் கழகத்துக்காக விளையாடியுள்ளதுடன், 2017இல் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஜீவந்த குலதுங்க மற்றும் தில்ஹார லொகுஹெட்டிகே ஆகியோர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவது போன்று கலந்துரையாடுகின்ற காணொளியையும் அல்–ஜஸீரா வெளியிட்டது.


இதேவேளை, குறித்த ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புபட்ட வீரர்கள் நால்வரும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

R.M.நிரோஷன் 

ஞாயிறு, 27 மே, 2018

ஷேன் 'செஞ்சுரி' வொட்சன் ! சென்னை #IPL2018 சம்பியன் !!


ஷேன் வொட்சனின் அபார சதத்துடன் 178 என்ற பெரிய இலக்கை இரண்டே விக்கெட்டுகளை மட்டும் இழந்து துரத்தி தன்னுடைய மூன்றாவது IPL கிண்ணத்தை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் IPLக்குத் திரும்பிய தோனியின் தலைமையிலான CSK இந்த IPLஇல் நான்காவது தடவையாகவும் சன்ரைசர்ஸ் அணியை வெற்றிகொண்டது.

நாணய சுழற்சியில் வென்று தோனி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைத் துடுப்பாட அனுப்பியிருந்தார்.
வில்லியம்சன் 47, யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 45.

பெரிய இலக்காகத் தென்பட்ட 179, வொட்சன், ரெய்னா ஆகியோரின் சத இணைப்பாட்டத்தினால் இலகுவாக மாறியது.
சுரேஷ் ரெய்னா 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

வொட்சன் இந்த IPLஇல் தன்னுடைய இரண்டாவது சதத்தைப் பெற்றார்.
8 சிக்ஸர்கள், 11 நான்கு ஓட்டங்களுடன் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 117.
போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் ஷேன் வொட்சன் தெரிவானார்.

மஞ்சள் சீருடைகளின் விசில் போடு கொண்டாட்டத்துடன் தோனி மற்றும் குழுவினர் மும்பாயில் IPL வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

நாளை வெற்றிக் கிண்ணத்தை சென்னை ரசிகர்களுக்குக் கையளிக்கச் சென்னைக்குப் புறப்படுகின்றனர்.

டெஸ்ட் போட்டிகளில் Spot Fixing !! - அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் சபைகள் !

2016 மற்றும் 2017இல் இந்தியாவில் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் Spot Fixing என்று சொல்லப்படும் போட்டியின் சிற்சில தருணங்களில் சூதாடிகளால் திட்டமிட்டு செய்யப்படும் நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியை அவுஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் சபைகள் இரண்டுமே நிராகரித்துள்ளன.


ஆதாரங்கள் எவையும் இன்றிய வெறும் சந்தேகங்களாகவே இவை கருதப்படவேண்டியவை என்று அவை தெரிவித்துள்ளன. எனினும் ஆதாரங்களை தாம் தேட ஆரம்பித்துள்ளதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அபாண்டப் பழி என இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

2016இல் டிசெம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இந்திய - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியிலும் 2017 மார்ச் மாதம் ராஞ்சியில் இடம்பெற்ற இந்திய அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டியிலும் சில குறிப்பிட்ட வீரர்கள் பந்தயக்காரர்கள் குறித்துக்கொடுத்த வேகத்திலும், சிற்சில ஓவர்களில் குறிப்பிட்ட ஓட்டங்களைப் பெறவேண்டும் என்று நிர்ணயித்த திட்டத்தின் அடிப்படையிலும் ஓட்டங்கள் பெற்றதாக அல் ஜஸீரா தொலைகாட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியொன்றில் முனவ்வர் என்ற பந்தயக்காரர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் இங்கிலாந்தின் மூன்று வீரர்களையும், அவுஸ்திரேலிய அணியின் நான்கு வீரர்களையும் அவர் குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது.
எனினும் இவர்களின் பெயர்கள் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

கிரிக்கெட் அவுஸ்திரேலியா மற்றும் ECB ஆகியன அல் ஜஸீரா வெறும் பரப்பரப்பையே கிளப்பியுள்ளதாகவும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதையும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளன.
கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்கள் தேவை என்று அவை அல் ஜஸீராவிடம் கேட்டபோதும் தமக்கு அவை வழங்கப்படவில்லை என்று குறிப்பிடுகின்றன.

இந்திய கிரிக்கெட் சபை கிரிக்கெட்டில் மோசடிகள், ஊழல்கள் நடைபெறக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பதாகவும் ICCயுடன் இணைந்து தாம் எச்சர்ந்தப்பதிலும் செயற்ப்பட்டு இப்படியான விடயங்களை வெளிக்கொண்டுவர விரும்புவதாகவும் கூறியுள்ளது.


லோர்ட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சில் சுருண்டு வீழ்ந்தது இங்கிலாந்து !

படம் : http://indianexpress.com


பாகிஸ்தானின் இளைய, அனுபவமற்ற வேகப்பந்துவீச்சில் சுருண்டு லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நான்காவது நாளான இன்று 9 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியது.

மொஹமட் அமீரைத் தவிரப் பெரிதாக அனுபவமில்லாத பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர்கள் இரண்டு இன்னிங்சிலும் தடுமாறியிருந்தார்கள்.

நான்கே நான்கு அரைச்சதங்களை மட்டும் இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர்களால் பெறமுடியாத அதேவேளை, 250 மொத்த ஓட்டங்களை இரண்டு இன்னிங்சிலும் தாண்ட முடியவில்லை.

முதலாம் இன்னிங்சில் 184 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்சில் 242 ஓட்டங்களையும் பெற்றது. ஒன்றரை வருட காலத்தின் பின்னர் டெஸ்ட் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஜொஸ் பட்லர் மற்றும் அறிமுக வீரர் டொம் பெஸ் ஆகிய இருவரும் அரைச்சதங்களையும் பெற்று தமக்கிடையே 126 ஓட்டங்களையும் பகிர்ந்து இரண்டாம் இன்னிங்சில் போராடியிருந்தார்கள்.

எனினும் இவர்களுக்கு முன்னரும் பின்னரும் விக்கெட்டுக்கள் துரித கதியில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களால் சரிக்கப்பட்டு பாகிஸ்தான் வெற்றியிலக்கான 64 ஓட்டங்களை ஒரேயொரு விக்கெட்டை இழந்து அடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவுசெய்யப்பட்ட மொஹமட் அப்பாஸ் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

ஹசன் அலி முதலாம் இன்னிங்சிலும், ஆமீர் இரண்டாம் இன்னிங்சிலும் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

பாகிஸ்தானின் துடுப்பாட்டமும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்திருந்தது.அசார் அலி, அசாத் ஷபீக், பபார் அசாம், ஷடாப் கான் ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றிருந்தார்கள். எனினும் பபார் அசாமில் கை முறிவானது இனி இந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.

இந்தத் தோல்வியானது இங்கிலாந்து அணியிலும் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.

IPL 2018 - இறுதிப்போட்டி !! வெற்றிக்கிண்ணம் யாருக்கு ? அணிகளின் பலம் பலவீனங்கள் #IPLFinal

படம் : http://www.cricbuzz.com

11 வது IPL தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு, மும்பாய் வான்கெடே மைதானத்தில். இந்தத் தொடர் முழுதும் ஆதிக்கம் செலுத்திய இரண்டு அணிகளும் நான்காவது தடவையாக சந்திக்கவுள்ளன.

இதில் மூன்று தடவைகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றியீட்டியிருப்பதும், இறுதியாக இவ்விரு அணிகளும் இதே மைதானத்தில் play off சுற்றின் Qualifier போட்டியில் மோதிய வேளையில் சென்னை அணி பெற்ற வெற்றி இன்னும் சென்னை அணிக்கு அதிக உற்சாகத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

எனினும் நான்கு தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு கொல்கத்தாவை வென்றுள்ள சன்ரைசர்ஸ் அணிக்கு இன்றைய இறுதிப்போட்டி புது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் வழங்கக்கூடியது.

சென்னை அணி இறுதியாக சன்ரைசர்ஸ் அணியை வென்ற அதே அணியையே ஈடுபடுத்தும் என்று நம்பலாம். SRH கடந்த போட்டியில் விளையாடிய அணியிலிருந்து கலீல் அஹ்மத்தை நீக்கி சந்தீப் ஷர்மாவை அணிக்குள் சேர்த்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது. சஹாவுக்குப் பதிலாக இன்று கோசுவாமி அணியில் இடம்பிடிக்கிறார்.

முன்னைய பார்வையில் சொன்னது போல, சென்னை அணியின் பலமான துடுப்பாட்டத்துக்கும் ஹைதராபாத் அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கும் இடையிலான முதலாகவே இன்றைய போட்டி அமையப்போகிறது.

இம்முறை IPL இல் கூடுதலான ஓட்டங்களைக் குவித்தவராக கேன் வில்லியம்சன் செம்மஞ்சள் தொப்பியுடன் முன்னிலை பெற்றிருந்தாலும், அவரை இன்றும் ராயுடுவினால் நெருங்க முடியாது என்ற போதிலும் சென்னை அணியின் அநேக துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான form இல் இருக்கிறார்கள்.

ராயுடு, தோனி, வொட்சன், ரெய்னா ஆகிய நால்வர் 400 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளார்கள். சன்ரைசர்ஸ் அணியிலோ தவான் மட்டுமே (471 ஓட்டங்கள்) வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக சிறப்பான ஓட்டக்குவிப்பில் இருக்கிறார்.

எனினும் ரஷீத் கான் பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரும் துணை. ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதுடன் முக்கிய விக்கெட்டுக்களை சரிக்கக்கூடியவராக விளங்கும் ரஷீத் கான் இதுவரை 21 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அதிவேகமாகப் பந்துவீசும் சித்தார்த் கவுலுக்கும் 21 விக்கெட்டுக்களை.
ஊதா தொப்பியை இப்போது வசப்படுத்தி வைத்துள்ள பஞ்சாப்பின் அவுஸ்திரேலிய வீரர் அன்றூ டை 24 விக்கெட்டுக்கள்.

சென்னையின் சார்பில் கூடுதலான விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள ஷர்தால் தக்கூர் இதுவரை 15 விக்கெட்டுக்களையே வீழ்த்தியுள்ளார். இன்று சென்னை அணி தன்னுடைய பந்துவீச்சாளரிடம் அதிகமாகவே எதிர்பார்க்கும்.

அத்துடன் வழமையாகவே சாதுரியமானதும் துடுப்பாட்டம் மூலமாகவும் தத்தமது அணிகளை முன்நகர்த்தக்கூடிய ஆற்றலும் கொண்ட இரண்டு அணித்தலைவர்களும் இன்று எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுகளுமே மிக முக்கியமானவையாக இருக்கும்.

சென்னைக்கு மூன்றாவதா ? ஹைதராபாத்துக்கு இரண்டாவதா என்பதே இன்றைய சுவாரஸ்யமான போட்டியின் முக்கியமான கேள்வி.


தோனியின் சென்னையா? வில்லியம்சனின் ஹைதராபாத்தா? மும்பாயில் #IPL2018 இறுதிப் பலப்பரீட்சை - இன்றிரவு #IPLFinal

IPL 2018 இறுதிப்போட்டி இன்றிரவு !


Play off சுற்றின் முதற்போட்டியில் வென்று இன்றைய இறுதிப்போட்டிக்குத் தெரிவான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், கடந்த வெள்ளிக்கிழமை இறுதி Play off போட்டியில் கொல்கத்தாவின் சவாலை முறியடித்து தெரிவாகியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதவுள்ளது.

புள்ளிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி, முன்பு தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த டேவிட் வோர்னரின் இன்மை தெரியாமல், கேன் வில்லியம்சனின் நேர்த்தியான தலைமைத்துவம் மற்றும் துடுப்பாட்டத்தினால் திடமான அணியாகத் தெரிகிறது.

இரண்டு வருட காலத் தடைக்கு பின்னர் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலமான அணியாக வெளிவந்துள்ளது.

இந்த சீசனுடன் ஆறாவது இறுதிப்போட்டியில் கால் பதிக்கும் சென்னை அணி, தங்களது மூன்றாவது கிண்ணத்தை குறிவைத்து களமிறங்கவுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் சம்பியன் கிண்ணத்தை சென்னை அணி 2 தடவை கைப்பற்றியுள்ளதுடன், ஹைதராபாத் அணி ஒரு தடவை சுவீகரித்துள்ளது.

இந்த IPL சீசனில் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற மூன்று போட்டிகளின் அடிப்படையில், சென்னை அணி ஆதிக்கத்தை செலுத்துகின்றது.

இம்முறை மூன்று போட்டிகளில் ஹைதராபாத் அணியை எதிர்காண்ட சென்னை அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியை தக்கவைத்துள்ளது.

தோல்வியடைந்து அழுத்தத்திற்குள்ளாகியுள்ள ஹைதராபாத் அணி இன்று சென்னையை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.


இரண்டு அணிகளையும் பொறுத்தவரையில் சென்னை அணிக்கு தங்களது துடுப்பாட்ட வரிசையின் பலமும், ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சு பலமும் அதிகமாகவுள்ளது.

எனினும் இறுதியாக இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னை அணியின் துடுப்பாட்ட வரிசையை சன்ரைசர்ஸ் அணி தடுமாற வைத்திருந்தது. எவ்வாறாயினும் டுபிளசி சென்னை அணியின் வெற்றியை இறுதியில் உறுதிசெய்திருந்தார்.

இதனால் இன்று சென்னை அணி சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பாட்டி ராயுடு, தோனி ஆகியோர் மீது கூடுதல் கவனமிருக்கும்.

ஹைதராபாத் அணிக்கு துடுப்பாட்ட வரிசை சவாலாக உள்ளது.
செம்மஞ்சள் தொப்பியை தன் வசம் வைத்துள்ள கேன் வில்லியம்சன் அசுரர் formஇல் இருக்கிறார். 700 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் 12 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
தவான் மற்றும் வில்லியம்ஸன் மாத்திரம் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, மத்தியவரிசையில் பிராத்வைட் மற்றும் சகிப் அல் ஹசன் சிறிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். எனினும் இன்று அனைவரும் தத்தம் பங்களிப்பை சிறப்பாக நல்குவர் என நம்பப்படுகிறது.

சென்னை அணியின் கடைசி நேரப் பந்துவீச்சு இன்னும் திடப்படவேண்டும். ங்கிடி மற்றும் சஹர் ஆகியோர் மீது தம் நம்பிக்கையை CSK ரசிகர்கள் வைத்துள்ளார்கள். மறுபக்கம் ரஷீத் கான் இந்தப் போட்டியையும் சுழற்றி மாற்றக்கூடியவராகத் தெரிகிறார்.

எவ்வாறாயினும் இன்று இறுதிப்போட்டி, வேறு வாய்ப்புகள் இல்லை. போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே கிண்ணம் என்ற ரீதியில், அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயற்பட வேண்டும். அப்படி இருந்தால் மாத்திரமே அணியாக வெற்றிக்கொள்ள முடியும்.

கிண்ணம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்த சென்னை அணிக்கா? அல்லது வில்லியம்ஸன் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை G பிரசாத்

சனி, 26 மே, 2018

மாட்டிக்கொண்ட பாகிஸ்தானிய வீரர்கள் !! காரணம் Smart !!!

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்களுக்கும் சர்ச்சைக்கும் அப்படியொரு இணைபிரியாப் பொருத்தம் ! அதிலும் இங்கிலாந்துத் தொடர் என்றால் சர்ச்சைகளும் குற்றச்சாட்டுக்களும் விடாமல் துரத்தும்.
முன்னைய தொடர்களில் பந்தை முறைகேடாக சேதப்படுத்தியது, போட்டி நிர்ணயம், பந்தயக்காரர்களுடன் தொடர்பு என்று சர்ச்சைகள் நீண்டுகொண்டே போகும்.

இப்போது லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியிலும் புதிய சர்ச்சையொன்று வெடித்திருக்கிறது.

இரண்டாவது நாளின் ஆட்ட முடிவில் பாகிஸ்தானின் ஆதிக்கமே ஓங்கி இருந்தாலும், முதல் நாளில் கிளம்பிய இந்த சர்ச்சை இப்போது ICC - சர்வதேச கிரிக்கெட் பேரவை பகிரங்க அறிக்கை வெளியிடும் அளவுக்கு பேசப்படும் விடயமாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிக்கும் பிரிவினால் மைதானத்தில் விளையாடும் நேரத்தில் எந்தவொரு வீரரும் ஸ்மார்ட் கடிகாரங்களை அணியமுடியாதென்று அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் நேரத்தில் சூதாட்டத்தில் ஈடுபடலாம் (spot fixing), பந்தயக்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என்ற காரணங்களால் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் மூன்று பாகிஸ்தானிய வீரர்கள் Apple smart watches - கடிகாரங்களை அணிந்து விளையாடியிருந்தனர்.

உடனடியாகவே இதைக் கவனித்த ICC முதல் நாள் ஆட்டமுடிவில் இதுபற்றி பாகிஸ்தானிய கிரிக்கெட் அணிக்கும் முகாமைத்துவத்துக்கும் அறிவித்திருந்தது.

அசாத் ஷபிக், ஹசன் அலி, பபார் அஸாம் ஆகிய வீரர்களே Apple  ஸ்மார்ட் கடிகாரங்களை அணிந்திருந்த வீரர்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். எனினும் தமக்கு இந்த விதிமுறைகள் தெரியவில்லை எனவும் இனி அணிந்து விளையாடப்போவதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதற்கு மேலதிக நடவடிக்கை எதையும் ICC எடுக்காது என்று கருதப்படுகிறது.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 350 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னதாக இங்கிலாந்து 184 ஓட்டங்களை எடுத்தது.



கொல்கத்தாவை துவம்சம் செய்த ரஷீத் கான் ! இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ! #IPL2018 #IPLPlayoffs

இன்று (வெள்ளி) கொல்கத்தாவில் நடைபெற்ற Qualifier 2 என்று அழைக்கப்பட்ட இரண்டாவது அரையிறுதியை ஒத்த முக்கியமான போட்டியில் அற்புதமான சகலதுறைத் திறமையை தனித்து நின்று வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தானிய சுழற்பந்து வீச்சு நட்சத்திரம் ரஷீத் கான், கேன் வில்லியம்சன் தலைமை தாங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கொல்கத்தாவில் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ஓட்டங்களால் தோற்று வெளியேறியது.

9 கோடி இந்திய ரூபாய்களுக்கு தன்னை ஏலத்தில் எடுப்பதற்கும் உலகம் முழுவதும் உள்ள T20 லீக் அணிகள் முண்டியடித்துத் தன்னை அழைப்பதற்கும் என்ன காரணம் என்பதை இன்று ரஷீத் கான் ஆதாரபூர்வமாகக் காட்டியிருந்தார்.

தவான் - சஹா ஆகியோரது நல்ல ஆரம்பத்தினோடு (56 ஓட்ட இணைப்பாட்டம்) சராசரி ஓட்ட அளவைப் பெற்றிருந்த சன்ரைசர்ஸ் 18 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் தான் கடைசி இரு ஓவர்களில், நான்கு சிக்ஸர்கள், இரண்டு நான்கு ஓட்டங்கள் அடங்கலாக வெறும் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்று SRH அணியின் ஓட்ட எண்ணிக்கையை சவால்விடக்கூடிய அளவுக்கு 174 ஆக உயர்த்தினார் ரஷீத் கான்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிரடியாக ஆரம்பித்த போதும் சுனில் நரைன் (26), ராணா (22), தொடர்ந்து குறைந்த ஓட்டங்களுக்கு உத்தப்பா, கார்த்திக் என்று விக்கெட்டுக்களை இழக்கப்பட தடுமாற ஆரம்பித்தது. ரஷீத் கானும் ஷகிப் அல் ஹசனும் தங்கள் சுழற்பந்து வீச்சு வலையில் சுழற்றி எடுத்தார்கள்.

அதிரடியாக ஆடி போட்டிகளின் போக்கை மாற்றும் அன்றே ரசலையும் ஆட்டமிழக்கச் செய்தார் ரஷீத் கான்.

இறுதி வரை போராடிய இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட வீரர் ஷுப்மன் கில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

3 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு, களத்தடுப்பிலும் கலக்கிய ரஷீத் போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.

ஞாயிறு நடைபெறும் இறுதிப் போட்டியில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சந்திக்கவுள்ளது சன்ரைசர்ஸ்.
இந்த IPL தொடரில் நான்காவது தடவையாக இவ்விரு அணிகளும் சந்திக்கவுள்ளன.






வெள்ளி, 25 மே, 2018

IPL இறுதிப்போட்டி ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதா? கசிந்த ரகசியம் !! #IPLFinal

IPL ஆட்டங்களில் சூதாட்டம் இடம்பெறுகிறது.. சில பல போட்டிகள் முடிவுகள் முதலிலேயே தீர்மானிக்கப்பட்டு நடைபெறுகின்றன என்று சில ரசிகர்களும் விமர்சகர்களும் முன்பிருந்தே சந்தேகம் தெரிவித்து வருவது போலவே இன்றைய IPL Play off போட்டியைப் பற்றிய ஒரு பரபரப்புத் தகவல் கசிந்துள்ளது.



Star TVயின் Hot Star அலைவரிசையில் நேற்று ஒலிபரப்பான இறுதிப்போட்டி விளம்பரம் - இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகியவற்றைக் காட்டியுள்ளது.


இன்றைய போட்டிக்கு முன்னதாகவே இந்த விளம்பரம் தற்செயலாக ஒளிபரப்பானதும், இவ்விரு அணிகளும் தத்தமது போட்டிகளை நினைக்க முடியாதளவு பின்னிலையில் இருந்து ஆச்சரியமான முறையில் வென்றதும் சேர்ந்து ரசிகர்கள் மத்தியில் பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிலவேளைகளில் இரு வகையிலான விளம்பரங்களையும் Star TV நிறுவனம் தயார் செய்து வைத்திருந்து அதில் ஒன்று தற்செயலாக கசிந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

எனினும் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் செய்துள்ள மூன்று மாற்றங்களும் இப்போது தவானும் வில்லியம்சனும் விரைவாகவே ஆட்டமிழந்திருப்பதும் இன்னும் சந்தேகத்தை கிளப்பியபடியே உள்ளன.போட்டியின் முடிவு தான் எல்லாவற்றையும் இனி முடிவுகட்டும்.




இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை !


நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே. ரஞ்சன் டி சில்வா (62 வயது) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.



இரத்மலானையில்  நேற்று (வியாழன்) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயத்திற்குள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் உடம்பில் 12 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும், இதற்காக டி-56 ரக துடுப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல் தெரியவில்லை என்றும், இதுதொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, இன்று (25) மேற்கிந்தியத் தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளது. எனினும், தந்தையின் திடீர் உயிரிழப்பை அடுத்து, மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்த தனஞ்சய டி சில்வா குறித்த தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட தனஞ்சய டி சில்வா, குறித்த தொடரில் இலங்கை அணிக்காக அபாரமாக விளையாடி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகப் பிரகாசித்திருந்தார். அதேநேரம், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவதற்கும் அவர் முக்கிய காரணமாகவும் இருந்தார்.


இதனையடுத்து கடந்த வருட இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற டெல்லி டெஸ்ட் போட்டியின் போது சதம் குவித்து இலங்கை அணியை தோல்வியிலிருந்து மீட்ட தனஞ்சய டி சில்வா, இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும் சதமொன்றை பெற்றுக்கொண்டு இலங்கை டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொண்டார்.

இந்நிலையில், தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் இந்த திடீர் மரணத்தை கேள்வியுற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் உடனடியாக நேற்று இரவு வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்ததுடன், பெரும்பாலான வீரர்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிட்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனஞ்ஜயாவுக்கு தொடரிலிருந்து விலகுவதற்கான அனுமதியை வழங்கியதுடன் இதுவரை பிரதியீட்டு வீரர் எவரையும் அறிவிக்கவில்லை.

வியாழன், 24 மே, 2018

காயமுற்றார் விராட் கோலி ! சரே பயணம் ரத்து ! ஒரு மாதம் கட்டாய ஓய்வு !

திட்டமிட்டபடி எதுவும் நடக்காது எம் வாழ்க்கையில்..
இதற்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி மட்டும் விதிவிலக்கா?


IPL போட்டிகளில் றோயல் சல்லெஞ்சர்ஸ் பெங்களூர் எதிர்பார்த்தது போல play off சுற்றை எட்டிப்பிடிக்காமலேயே முதற் சுற்றோடு வெளியேறியது ஒரு பக்கம் இடி என்றால், இறுதியாக விளையாடிய போட்டியில் ஏற்பட்ட கழுத்து உபாதை அவரை ஒரு மாதகால கட்டாய ஓய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

அத்துடன் விராட் கோலியின் முதுகு தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட மருத்துவ சிகிச்சையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பாய் கார் பகுதியில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் பணியாற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர், விராட் கோலிக்கு அளித்த சிகிச்சையின் போது அவருக்கு தண்டுவடப் பிரச்சினை இருப்பதைக் கண்டுபிடித்தார். ஓய்வு இல்லாமல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்று வருவதால், அவரின் முதுகு தண்டுவடத்தில் இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்துவரும் இங்கிலாந்து ஒருநாள் தொடர், சரே பிராந்தியத்துக்காக  கவுண்டி போட்டிகளில் அவர் பங்கேற்காமல் சிகிச்சையும், ஓய்வும் எடுப்பது அவசியம் என கோலியிடம் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

ஒரு வருடத்துக்கும் அதிகமாக ஓய்வில்லாமல் விளையாடி வருவதனாலேயே கோலிக்கு இப்படியான ஓய்வெடுக்கவேண்டிய உபாதை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உடனடியாக கவனிக்காமல் தொடர்ந்து விளையாடினால், நீண்டநாள் செல்லும் போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும்.

இதனால், கோலி இங்கிலாந்து தொடர், கவுண்டி போட்டியில் விளையாடுவதைத் தவிர்த்து, நல்ல ஓய்விலும், சிகிச்சையும் எடுக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து விராட் கோலியின் தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்தும் இல்லை. அதேசமயம், விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து அறிந்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அணியின் மிகப்பிரிய நம்பிக்கை நட்சத்திர வீரருக்கு இதுபோன்ற காயம் ஏற்படுவது வருத்தமளிக்கிறது. அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாத அளவுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்படும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி விளையாடமாட்டார், இந்தக் காயத்தால், சரே பிராந்திய அணியிலும், இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும்'' எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து தொடருக்கு பெரிய அளவில் தயாராவதற்காகவே கோலி, கவுண்டி அணியில் ஒப்பந்தம் செய்துள்ளார். இப்போது சரே  கவுண்டி அணியிலும், இங்கிலாந்து தொடரிலும் விளையாடாமல் கோலி ஓய்வெடுக்க நேர்ந்தால், அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமையும். மேலும், கவுண்டி தொடரில் கோலியின் விளையாட்டைக் காண இருப்பவர்களுக்கு அது பெரும் ஏமாற்றமாக இருக்கும்.


கடந்த முறை இங்கிலாந்து பயணத்தின் போது விராட் கோலி 5 டெஸ்ட் போட்டிகளில் 134 ரன்கள் மட்டுமே சேர்த்து, சராசரியாக 13 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இதுபோன்ற சூழல் இந்தத் தொடரிலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சர்ரே கவுண்டி அணியில் விளையாடி அதன்பின் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க கோலி திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டை விட்ட ராஜஸ்தான் ! விடாமுயற்சியால் வென்ற கொல்கத்தா.. #IPL2018 #PlayOffs

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் தினேஷ் கார்த்திக், அன்றே ரசல் மற்றும் குல்டீப் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய, கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாடியது.

நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பை தெரிவுசெய்த ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்தது.

முதலாவது ஓவரை கௌதம் வீச, நரைன் முதல் பந்தில் பவுண்டரி விளாசி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டார். எனினும் அடுத்த பந்தில் மீண்டும் வேகமான ஓட்டக்குவிப்பில் ஈடுபட முனைந்த நரைன் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

இவ்வாறு நரைன் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களம் நுழைந்த உத்தப்பா மற்றும் ரானா ஆகியோர் தலா 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொடுத்து, பெவிலியன் திரும்ப, நிதானமாக ஆடிய கிரிஸ் லின்னும் ஓரு கட்டத்தில் 18 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணி 8 ஓவர்கள் நிறைவில் 51 ஓட்டங்களை மாத்திரம் இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. எனினும் அடுத்து  ஜோடி சேர்ந்த தலைவர் தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் வீரர் சுப்மான் கில் ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்தனர்.

சுப்மான் கில் 17 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, ஆர்ச்சர் வீசிய 15வது ஓவரில் விக்கட்டை பறிகொடுத்தார்.

எனினும் மறுபக்கம் தனது அதிரடியை தொடர்ந்த கார்த்திக், 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

இதேவேளை தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிய ரசல், மைதானத்தில் வானவேடிக்கை காட்டினார். கடந்த சில போட்டிகளில் அதிரடியை வெளிப்படுத்தாத ரஷல், முக்கியமான போட்டியில் அணிக்கு தனது முழு பங்களிப்பையும் வழங்கினார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரசல் 25 பந்துகளுக்கு முகம் கொடுத்து 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ராஜஸ்தான் அணிசார்பில் ஆர்ச்சர், கௌதம் மற்றும் லாப்லின் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் சற்று கடினமானது என்றாலும், எட்டக்கூடிய ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி மிகச்சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது எனதான் கூற வேண்டும்.

ராஜஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் த்ரிப்பாதி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். 5.1 ஓவர்களில் 47 ஓட்டங்களை கடந்திருந்த போது ராஜஸ்தான் அணி தங்களது முதலாவது விக்கட்டை இழந்தது. த்ரிப்பாதி 13 பந்துகளுக்கு 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு செம்சுன் சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தார். ரஹானே மற்றும் செம்சுன் ஜோடி 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 109 ஓட்டங்களை பெற்றிருந்தது.

குறிப்பிட்ட தருணத்தில் வெற்றி வாய்ப்புகள் அனைத்தும் ராஜஸ்தான் பக்கமிருக்க, கொல்கத்தா அணியின் பந்து வீச்சு மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரஹானே ஓட்ட வேகத்தை அதிகரிக்க முனையாததும், சம்சனால் சிக்ஸர்களை அடிக்க முடியாமல் போனதும் சரிவை ஆரம்பித்து வைத்தது.
 ரஹானேவுக்கு எதிராக குல்டீப் யாதவ் பந்து வீச, ரஹானே 46 ஓட்டங்களுடன் வெளியேறினார். ராஜஸ்தான் அணியின் தோல்வி ஆரம்பமானது.

அடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 38 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த சம்சனை சவ்லா வெளியேற்ற போட்டியின் வெற்றி வாய்ப்பு திசைமாறியது.

தொடர்ந்து களம் நுழைந்த வீரர்களை பந்தை எல்லைக்கோட்டுக்கு அடிக்க விடாமல் பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்த, ராஜஸ்தான் அணி 4 விக்கட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 

முன்னைய போட்டிகளில் அடித்து நொறுக்கி வேகமாக ஓட்டங்களைப் பெற்றிருந்த கிருஷ்ணப்பா கௌதமை அனுப்பாமல் அவருக்கு முன்னே ஸ்டூவர்ட் பின்னியை அனுப்பியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்தது.

விக்கட்டுகள் கைவசம் இருந்தும் துடுப்பாட்டத்தில் விட்ட கவனக்குறைவினால் ராஜஸ்தான் அணி தொடரிலிருந்தும் வெளியேறியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அன்றே ரசல் தெரிவானார். எனினும் கார்த்திக்கின் பங்கும் அற்புதமானதே.

எவ்வாறாயினும் கொல்கத்தா அணி சிறப்பாக செயற்பட்டு இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. நாளை நடைபெறவுள்ள கிட்டத்தட்ட அரையிறுதிப் போட்டியை ஒத்த போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதுவும் கொல்கத்தாவிலேயே இடம்பெறவிருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேலும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABD ஓய்வு !! கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி !!! உண்மையான காரணம் தெரியுமா?



ABD ஓய்வு !! கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி !!! உண்மையான காரணம் தெரியுமா?



நேற்றிலிருந்து இப்போது வரை கிரிக்கெட் உலகத்தையே பெபட வைக்கிற விடயமும் பல ரசிகர்களை ஆழ்ந்த கவலையில் மூழ்கடித்துள்ள விடயமும் இது தான்...

360 என்று அனைத்து ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்படும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் ஏபி டீ வில்லியர்ஸின் ஓய்வுச் செய்தி தான் அது.

அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

34 வயதான டி வில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை ட்விட்டரில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


நான் களைப்படைந்து விட்டேன். அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெற முடிவெடுத்து விட்டேன். இது உடடினயாக நடைமுறைக்கு வருகிறது. 114 டெஸ்ட் போட்டி, 228 ஒருநாள் போட்டி 78 T 20 சர்வதேச போட்டிகளில் விளையாடிவிட்டேன். இதற்குப் பிறகு மற்றவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் களைப்படைந்து விட்டேன். இது மிகவும் கடினமான முடிவுதான். நீண்ட சிந்தனைக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ஒழுக்கமான கிரிக்கெட்டை விளையாடும் போது ஓய்வு பெற விரும்பினேன்.

ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகே இதுதான் ஓய்வு பெற சரியான தருணம் என்று உணர்கிறேன். தென் ஆப்பிரிக்காவுக்காக எப்போது, எங்கு எந்த வடிவத்திலும் விளையாட வேண்டும என்பதை நான் தீர்மானித்து முடிவெடுக்க முடியாது. அது சரியானதல்ல. எனக்கு ஆதரவு அளித்த தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள், பயிற்சியாளர்கள், அவரது உதவியாளர்கள் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் வாழ்நாள் முழுதும் என்னுடன் விளையாடிய வீரர்களுக்கும் நன்றி. இவர்களது ஆதரவின்றி என்னால் பாதி வீரராகக் கூட உருப்பெற்றிருக்க முடியாது.

தொழில் முறை போட்டிகளில் விளையாடி சம்பாதிக்கும் நோக்கத்தினால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை. இது சம்பாதிப்பது பற்றியது அல்ல, என்னை இயக்குவதற்கான ஆற்றல் தீர்ந்து விட்டது என்பது பற்றியதாகும். நகர்ந்து செல்வதற்கு இதுவே சரியான நேரம் என உணர்கிறேன். அனைத்தும் முடிவுக்கு வர வேண்டியதுதான். உலகம் முழுதும் உள்ள ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் என்னிடம் காட்டிய பெருந்தன்மைக்கு நன்றி. அயல்நாடுகளில் விளையாடும் திட்டம் இல்லை. ஆனாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் டைட்டன்ஸ் அணிக்கு தொடர்ந்து ஆடுவேன் என நம்புகிறேன். டுபிளெஸ்ஸிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் மிகப்பெரிய ஆதரவாளராக நான் இருப்பேன். இவ் வாறு டிவில்லியர்ஸ் உருக்கமாக வீடியோவில் பேசியுள்ளார்.

‘மிஸ்டர் 360 டிகிரி’ என கிரிக்கெட் உலகில் புகழப்பட்ட மிகச்சிறந்த அதிரடி வீரரான டி வில்லியர்ஸ் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முழங்கை காயத்தால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் விளையாடவந்த டிவில்லியர்ஸ் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதன் பின்னர் உள்நாட்டில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான ஆட்டத்தை விளையாடினார்.

ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணிக்காக அவர் சிறந்த பங்களிப்பை இந்த சீசனில் வழங்கியிருந்தார். இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றிருப்பது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



சராசரி 50

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலும் சேர்த்து 420 ஆட்டங்களில் விளையாடி உள்ள டி வில்லியர்ஸ் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதில் 47 சதங் கள் அடங்கும். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக் கெட் போட்டி என இரண்டிலும் தற்கால பேட்ஸ்மேன்களில் சராசரி 50-க்கு மேல் வைத்துள்ள ஒருசில பேட்ஸ்மேன்களில் டி வில்லியர்ஸும் ஒருவர்.

சாதனைகள்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 16 பந்துகளில் அரை சதம், 31 பந்துகளில் சதம், 64 பந்துகளில் 150 ரன்கள் என மூன்று விதமான சாதனைகளை படைத்துள்ளார் டி வில்லியர்ஸ். ஐசிசி-யின் சிறந்த வீரருக்கான விருதை அவர், 2010, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் வென்றிருந்தார்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரேம் ஸ்மித் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் டி வில்லியர்ஸ் பொறுப்பேற்றார். இதன் பின்னர் ஹசிம் ஆம்லா டெஸ்ட் கேப்டன் பதவியை துறந்த பின்னர் அந்த வடிவத்துக்கும் கேப்டனாக மாறினார் டி வில்லியர்ஸ். ஆனால் முழங்கை காயம் காரணமாக 2016-ல் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் அதன் பின்னர் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.

பெரிய அளவிலான இழப்பு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைவர் கிறிஸ் நென் ஸானி கூறும்போது, “அனைத்து கால சிறந்த வீரர்களில் டி வில்லியர்ஸும் ஒருவர். தனது திறமையான ஆட்டத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருந்த அவர், நவீன கால பேட்டிங்குக்கு தகுந்தபடி ஆட்டத்தில் புதுமைகளையும் புகுத்தி புதிய நிலைகளுக்கு கிரிக்கெட்டை எடுத்துச் சென்றார்.அவர் செல்வது பெரிய இழப்புதான்” என்றார்.

மிஸ்டர் 360 டிகிரி

பாரம்பரிய மற்றும் மரபுவழியில்லாத ஷாட்களை சரியான கலவையாக கொண்டு விரைவாக ரன் குவிக்கும் திறனாலும், மைதானத்தின் அனைத்து பகுதிக்கும் பந்தை விளாசும் தன்மையை டி வில்லியர்ஸ் கொண்டிருந்ததால் அவரை, கிரிக்கெட் வல்லுநர்கள் ‘மிஸ்டர் 360 டிகிரி’ என அழைத்தனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவிரைவு அரை சதம், அதிவிரைவு சதம், அதிவிரைவு 150 ரன்கள் என மூன்று சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள டி வில்லியர்ஸ் ஐசிசியின் ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக் கான தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்தபடி கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய் துள்ளார்.

டொனால்டு அதிர்ச்சி

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஆலன் டொனால்டு தனது டுவிட்டர் பதிவில், “டி வில்லியர்ஸ் ஓய்வு முடிவை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுதான் வாழ்க்கை. நகர்வதற்கு இது சிறந்த தருணம் என்று உணர்ந்து விட்டார். அபாரமான மேட்ச் வின்னிங் ஆட்டங்கள், திறமை யான கேப்டன்சி, அனைத்திற்கும் மேலான அடக்கம், பணிவு ஆகியவற்றுக்கு நன்றி ஏபிடி” என தெரிவித்துள்ளார்.

சென்னை G பிரசாத் 

செவ்வாய், 8 மே, 2018

கோலி இல்லை; ரஹானே தலைவர் ! ரோஹித் வெளியே...

ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள கன்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு அஜியாங்கே ரஹானே தலைமை தாங்கவுள்ளார்.

இந்திய அணித்தலைவர் விராட் கோலி இங்கிலாந்தின் சரே பிராந்தியத்துக்காக முதற்தர போட்டிகளில் விளையாடவுள்ளதனால் அவரது இடத்துக்கே ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அனுபவம் வாய்ந்த ரோஹித் ஷர்மாவுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.

தனது அறிமுகப் போட்டியில் முச்சதம் பெற்ற பின்னும் அணியில் நிரந்தர இடம் கிடைக்காத கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது இங்கிலாந்தின் யோர்க்ஷயர் பிராந்தியத்துக்காக விளையாடிவரும் செட்டேஸ்வர் புஜாராவும் பெயரிடப்பட்டுள்ளார். அவருடன் சசெக்ஸ் பிராந்தியத்துக்காக ஆடிவரும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் அழைக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டி நடைபெறும் வாரத்தில் இவர்களது அணிகளுக்கான போட்டிகள் எவையும் இங்கிலாந்தில் இடம்பெறாததனாலேயே இவர்கள் இந்தப் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோருக்கு ஒய்வு வழங்கப்பட்டுள்ளது.
குல்தீப் யாதவுக்கும் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ஷர்தால் தாக்கூருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

முழுமையான அணி விபரம் :


எதிர்வரும் ஜூன் மாதம் 14 முதல் 18 ஆம் திகதி வரை பெங்களூருவில் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இதன் மூலம் 12வது டெஸ்ட் அணி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வெள்ளி, 4 மே, 2018

நரைன், கில், கார்த்திக் கலக்கல் ! சென்னையை வீழ்த்திய கொல்கத்தா

முன்னதாக சென்னையிடம் தோற்றதற்கு நேற்று கொல்கத்தாவில் 61000 ரசிகர்களின் முன்னால் வைத்து பழிதீர்த்துக் கொண்டது சென்னை மைந்தன் கார்த்திக்கின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

அத்துடன் நேற்றைய போட்டியில் சென்னை அணியை 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதனூடாக கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதலிடத்திலிருந்த சென்னை அணி இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சென்னை அணிக்கு வழங்கியது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சென்னை அணிக்காக தோனி   43 ஓட்டங்களையும், ஷேன் வொட்சன் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பியுஷ் சவ்லா மற்றும் சுனில் நரைன்  தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர். அதிலும் நரைன் தனது 4 ஓவர்களில் 20 ஓட்டங்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண அணியின் வீரர் ஷுப்மான் கில் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியுடன் உதவியுடன் 17.4 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

கில் 57 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 45 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்ததுடன், சுனில் நரைன் 32 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

ஷுப்மன் கில்லின் முதலாவது IPL அரைச்சதம் இதுவாகும்.

இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக சுனில் நரைன் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சன்ரைசஸ் அணி முன்னேறியுள்ளதுடன், சென்னை அணி 2வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதேவேளை 4வது இடத்திலிருந்த கொல்கத்தா அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்னைக்கு மீண்டும் death overs என்று சொல்லப்படும் இறுதி ஓவர்களில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களின் தடுமாற்றம் பற்றிய சிக்கல் தோன்றியுள்ளது.


இங்கிலாந்து செல்லும் விராட் கோலி !! ஜூனில் இந்தியாவுக்காக விளையாடமாட்டார் !


அடுத்த மாதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதை சரே பிராந்தியமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கான அனுமதியை வழங்கியுள்ள இந்தியக் கிரிக்கெட் சபை - BCCI இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி விளையாடமாட்டார் என்பதையும் ஏற்றுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் இந்தியா இங்கிலாந்துக்கான சுற்றுலா செல்லவுள்ளதால், அதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் முகமாகவே கோலி இங்கிலாந்தில் விளையாட விரும்பியிருந்தார்.

இதே சரே பிராந்தியத்துக்காக கடந்த பருவகாலத்தில் இலங்கையின் குமார் சங்கக்கார மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். 13 இனிங்ஸில் 8 சதங்களுடன் 106.75 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தென் ஆபிரிக்காவின் டீன் எல்கர் இப்போது ஆடிவருகிறார்.

கோலி இதற்கு முன்பு இங்கிலாந்துத் தொடர்களில் மிகத் தடுமாறி வந்திருந்தார். அதை நிவர்த்தி செய்துகொள்ளவே சரே பிராந்தியத்துக்காக ஆடி காலநிலை, கள நிலைகளுக்கு ஏற்றது போல தன்னைத் தயார்ப்படுத்துவதற்கு முனைகிறார் கோலி.

ஏற்கெனவே மூன்று இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்காக ஆடி வருகிறார்கள்.
செட்டேஸ்வர் புஜாரா - யோர்க் ஷயர்
இஷாந்த் ஷர்மா - சசெக்ஸ்
வருண் ஆரோன் - லீஸ்ட்டர்ஷெயார்

இந்தியக் கிரிக்கெட் சபை இங்கிலாந்தில் ஆடிவரும் புஜாராவையும் ஆப்கானிஸ்தான் தொடருக்காக மீள அழைக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.
இங்கிலாந்துத் தொடரையே (5 டெஸ்ட் போட்டிகள்) முக்கியமானதாகக் கருதி அதற்கான தயார்ப்படுத்தலை நோக்காக வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் விளையாடுமாறு எந்தவொரு வீரரையும் வற்புறுத்தப்போவதில்லை எனவும் BCCI முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.


நன்றி : தமிழ்நியூஸ் - ARV லோஷன்

Related Posts Plugin for WordPress, Blogger...