தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Tuesday, May 8, 2018

கோலி இல்லை; ரஹானே தலைவர் ! ரோஹித் வெளியே...

ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள கன்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு அஜியாங்கே ரஹானே தலைமை தாங்கவுள்ளார்.

இந்திய அணித்தலைவர் விராட் கோலி இங்கிலாந்தின் சரே பிராந்தியத்துக்காக முதற்தர போட்டிகளில் விளையாடவுள்ளதனால் அவரது இடத்துக்கே ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அனுபவம் வாய்ந்த ரோஹித் ஷர்மாவுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.

தனது அறிமுகப் போட்டியில் முச்சதம் பெற்ற பின்னும் அணியில் நிரந்தர இடம் கிடைக்காத கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது இங்கிலாந்தின் யோர்க்ஷயர் பிராந்தியத்துக்காக விளையாடிவரும் செட்டேஸ்வர் புஜாராவும் பெயரிடப்பட்டுள்ளார். அவருடன் சசெக்ஸ் பிராந்தியத்துக்காக ஆடிவரும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் அழைக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டி நடைபெறும் வாரத்தில் இவர்களது அணிகளுக்கான போட்டிகள் எவையும் இங்கிலாந்தில் இடம்பெறாததனாலேயே இவர்கள் இந்தப் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோருக்கு ஒய்வு வழங்கப்பட்டுள்ளது.
குல்தீப் யாதவுக்கும் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ஷர்தால் தாக்கூருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

முழுமையான அணி விபரம் :


எதிர்வரும் ஜூன் மாதம் 14 முதல் 18 ஆம் திகதி வரை பெங்களூருவில் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இதன் மூலம் 12வது டெஸ்ட் அணி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Friday, May 4, 2018

நரைன், கில், கார்த்திக் கலக்கல் ! சென்னையை வீழ்த்திய கொல்கத்தா

முன்னதாக சென்னையிடம் தோற்றதற்கு நேற்று கொல்கத்தாவில் 61000 ரசிகர்களின் முன்னால் வைத்து பழிதீர்த்துக் கொண்டது சென்னை மைந்தன் கார்த்திக்கின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

அத்துடன் நேற்றைய போட்டியில் சென்னை அணியை 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதனூடாக கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதலிடத்திலிருந்த சென்னை அணி இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சென்னை அணிக்கு வழங்கியது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சென்னை அணிக்காக தோனி   43 ஓட்டங்களையும், ஷேன் வொட்சன் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பியுஷ் சவ்லா மற்றும் சுனில் நரைன்  தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர். அதிலும் நரைன் தனது 4 ஓவர்களில் 20 ஓட்டங்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண அணியின் வீரர் ஷுப்மான் கில் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியுடன் உதவியுடன் 17.4 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

கில் 57 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 45 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்ததுடன், சுனில் நரைன் 32 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

ஷுப்மன் கில்லின் முதலாவது IPL அரைச்சதம் இதுவாகும்.

இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக சுனில் நரைன் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சன்ரைசஸ் அணி முன்னேறியுள்ளதுடன், சென்னை அணி 2வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதேவேளை 4வது இடத்திலிருந்த கொல்கத்தா அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்னைக்கு மீண்டும் death overs என்று சொல்லப்படும் இறுதி ஓவர்களில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களின் தடுமாற்றம் பற்றிய சிக்கல் தோன்றியுள்ளது.


இங்கிலாந்து செல்லும் விராட் கோலி !! ஜூனில் இந்தியாவுக்காக விளையாடமாட்டார் !


அடுத்த மாதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதை சரே பிராந்தியமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கான அனுமதியை வழங்கியுள்ள இந்தியக் கிரிக்கெட் சபை - BCCI இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி விளையாடமாட்டார் என்பதையும் ஏற்றுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் இந்தியா இங்கிலாந்துக்கான சுற்றுலா செல்லவுள்ளதால், அதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் முகமாகவே கோலி இங்கிலாந்தில் விளையாட விரும்பியிருந்தார்.

இதே சரே பிராந்தியத்துக்காக கடந்த பருவகாலத்தில் இலங்கையின் குமார் சங்கக்கார மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். 13 இனிங்ஸில் 8 சதங்களுடன் 106.75 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தென் ஆபிரிக்காவின் டீன் எல்கர் இப்போது ஆடிவருகிறார்.

கோலி இதற்கு முன்பு இங்கிலாந்துத் தொடர்களில் மிகத் தடுமாறி வந்திருந்தார். அதை நிவர்த்தி செய்துகொள்ளவே சரே பிராந்தியத்துக்காக ஆடி காலநிலை, கள நிலைகளுக்கு ஏற்றது போல தன்னைத் தயார்ப்படுத்துவதற்கு முனைகிறார் கோலி.

ஏற்கெனவே மூன்று இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்காக ஆடி வருகிறார்கள்.
செட்டேஸ்வர் புஜாரா - யோர்க் ஷயர்
இஷாந்த் ஷர்மா - சசெக்ஸ்
வருண் ஆரோன் - லீஸ்ட்டர்ஷெயார்

இந்தியக் கிரிக்கெட் சபை இங்கிலாந்தில் ஆடிவரும் புஜாராவையும் ஆப்கானிஸ்தான் தொடருக்காக மீள அழைக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.
இங்கிலாந்துத் தொடரையே (5 டெஸ்ட் போட்டிகள்) முக்கியமானதாகக் கருதி அதற்கான தயார்ப்படுத்தலை நோக்காக வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் விளையாடுமாறு எந்தவொரு வீரரையும் வற்புறுத்தப்போவதில்லை எனவும் BCCI முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.


நன்றி : தமிழ்நியூஸ் - ARV லோஷன்

Thursday, May 3, 2018

தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து கொண்டனர்.. களை கட்டப்போகும் லோர்ட்ஸ்

இம்மாதம் 31 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் கண்காட்சிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள உலக அணியில் இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்.இங்கிலாந்தின் ஒயின் மோர்கனின் தலைமையில் விளையாடுவதற்கு ஏற்கெனவே ஆறு சர்வதேச நட்சத்திரங்கள் தமது பங்கேற்பை உறுதிப்படுத்தியிருந்தனர்.

உலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்திரங்கள் !!!

ICC உலக அணிக்குத் தலைவராகும் இங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோர்கன்

இன்னும் மூன்று சர்வதேச நட்சத்திரங்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரீபியன் தீவுகளில் இர்மா, மரியா ஆகிய புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டவே இந்த T20 போட்டி நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டிக்கு ICC உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வ.சோழன் - நல்லூர், யாழ்ப்பாணம் 

முன்னாள் வீரர் பயிற்றுவிப்பாளர் ஆனார் ! அவுஸ்திரேலியா அறிவிப்பு.

அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜஸ்டின் லங்கர் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இன்று  உத்தியோகபூர்வமாக அறிவத்துள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கு அவுஸ்திரேலிய அணி முகங்கொடுத்ததைைத் தொடர்ந்து, அணியின் தலைமைைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டரன் லீமன் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

பின்னர் அணிக்கான புதிய பயிற்றுவிப்பாளரை நியமிப்பதில் கவனம் செலுத்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, உள்ளூர் அணிகளான மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் பெர்த் ஸ்கோர்ச்சஸ் அணிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் ஜஸ்டின் லங்கரை நியமித்துள்ளது.

ஜஸ்டின் லங்கர் நான்கு வருட ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலிய அணியுடன் இணைந்துள்ளார்.

லசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு !! IPLஆ? இலங்கையா? தெரிவு அவரது கையில்


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுட வேண்டுமானல் நேற்று ஆரம்பமாகியுள்ள SLC Super Four ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என SLC - ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கான லசித் மாலிங்க, தேசிய அணியில் கடந்தாண்டு செப்டம்பர் முதல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

இதனால் தனது பந்து வீச்சை நிரூபிப்பதாகவும், நடைபெறவுள்ள தென்னாபிரிக்க தொடரில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பகிரங்கமாகவும் மாலிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  ஆரம்பமாகியுள்ள உள்ளூர் ஒருநாள் தொடரில் மாலிங்க அவரது திறமையை நிரூபிப்பதன் மூலமே அவர் அணியில் இணைய முடியும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்  தெரிவித்துள்ளது.
எனினும் மாலிங்க ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் மும்பாய்  இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார். ஐ.பி.எல். போட்டிகள் இம்மாத இறுதியிலேயே முடிவடைகின்றன.

இதனால் மாலிங்க இலங்கை வருவதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலிங்க தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால,

“தேர்வுக்குழுவினர் மாலிங்க இலங்கை வந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என விரும்புகின்றனர். நாம் இங்கு ஒருநாள் மற்றும் T -20 தொடர்களை ஏற்பாடு செய்துள்ளோம். அடுத்து நடைபெறவுள்ள தென்னாபிரிக்க தொடர் மற்றும் ஆசிய கிண்ணம் என்பவற்றுக்கான அணி வீரர்கள் தேர்வுகள் இடம்பெறவுள்ளன. உள்ளூர் தொடரில் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வழங்கப்படும். லசித் மாலிங்க உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டால் தேர்வுக்குழு மாலிங்கவை அணியில் இணைக்கும்” என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மாலிங்க தற்போது மும்பாய் இந்தியன்ஸ் அணியுடன் இருப்பதாகவும் இடைநடுவே அதை விட்டுவிட்டு இலங்கை திரும்ப முடியாதென்றும் நேற்று தெரிவித்துள்ளார். தான் ஜனவரி - பெப்ரவரி மாதங்களில் நடந்த உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் லசித் மாலிங்க 17 விக்கெட்டுக்களை எடுத்தும் சுதந்திரக் கிண்ணப் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கவேண்டியது.

இப்போது பந்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மாலிங்கவிடம் கொடுத்துள்ளது. IPL, மும்பாய் இந்தியன்ஸ் ஆகியவற்றைக் கைவிட்டு மாலிங்க இலங்கை வருவாரா என்பதும் அவ்வாறு விளையாட வந்தாலும் இங்கே சோபிப்பாரா என்பதும் அவ்வாறே அவர் சிறப்பாக விளையாடினாலும் இலங்கைத் தேர்வாளர்கள் அணியில் சேர்ப்பார்களா என்பதும் கேள்விக்குரியவையே...


மழையும் சிக்ஸர் மழையும் !! 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி ! #DDvRR #IPL2018


2018 ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற, டெல்லிக்கு மிக முக்கியமான போட்டியில் டெல்லி டெயார்டெவில்ஸ் அணி திரில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்நோக்கி, டெல்லி அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி, துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை டெல்லி அணிக்கு வழங்கியது.

எனினும் நாணய சுழற்சியின் பின்னர் மழை குறுக்கிட்டதால், அணிக்கு 18 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கொலின் மன்ரோ ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்க, அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரிதிவ் ஷாவ் அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தனர்.

பிரிதிவ் ஷாவ் 47 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ரிஷப் பாண்ட் 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக 29 பந்துகளில் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஐயரும் பாண்டும் சேர்ந்து மிக வேகமாக 92 ஓட்டங்களை 7.1 ஓவர்களில் பெற்றிருந்தார்கள்.

இதன்படி 17.1 ஓவர்களில் மீண்டும் மழை குறுக்கிட, டெல்லி அணி 6 விக்கட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்து வீச்சில் ஜெயதேவ் உனட்கட் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

மழை ஓய்ந்த பின்னர் டக்வர்த் லூயிஸ் முறைப்படி ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களுக்கு 151 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பட்லரும் ஷோர்ட்டும் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய போதும், ராஜஸ்தான் அணி 12 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 26 பந்துகளுக்கு 67 ஓட்டங்களையும், ஷோர்ட் 25 பந்துகளுக்கு 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
இந்த இருவரது அதிரடி இணைப்பாட்டம் 6.4 ஓவர்களில் 82 ஓட்டங்களை எடுத்து நல்ல அடித்தளம் ஒன்றை இட்டிருந்தாலும் பின் வந்த துடுப்பாட்ட வீரர்கள் சறுக்கியிருந்தார்கள்.
அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் மீண்டும் துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை.

டெல்லி அணியின் பந்து வீச்சை பொறுத்தவரையில் ட்ரென்ட் போல்ட் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியின் நிறைவில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், ராஜஸ்தான் அணி 7வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

மழையின் குறுக்கீட்டுகளின் இடையில் நடந்த  நேற்றைய போட்டியில் மொத்தமாக 25 சிக்ஸர்களும் விளாசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரிஷாப் பாண்ட் தெரிவானார். நேற்றைய அதிரடி ஆட்டத்தோடு சென்னையின் ராயுடுவிடமிருந்த செம்மஞ்சள் தொப்பியையும் தன்வசப்படுத்திக்கொண்டார்.

Related Posts Plugin for WordPress, Blogger...