காயமுற்றார் விராட் கோலி ! சரே பயணம் ரத்து ! ஒரு மாதம் கட்டாய ஓய்வு !

திட்டமிட்டபடி எதுவும் நடக்காது எம் வாழ்க்கையில்..
இதற்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி மட்டும் விதிவிலக்கா?


IPL போட்டிகளில் றோயல் சல்லெஞ்சர்ஸ் பெங்களூர் எதிர்பார்த்தது போல play off சுற்றை எட்டிப்பிடிக்காமலேயே முதற் சுற்றோடு வெளியேறியது ஒரு பக்கம் இடி என்றால், இறுதியாக விளையாடிய போட்டியில் ஏற்பட்ட கழுத்து உபாதை அவரை ஒரு மாதகால கட்டாய ஓய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

அத்துடன் விராட் கோலியின் முதுகு தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட மருத்துவ சிகிச்சையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பாய் கார் பகுதியில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் பணியாற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர், விராட் கோலிக்கு அளித்த சிகிச்சையின் போது அவருக்கு தண்டுவடப் பிரச்சினை இருப்பதைக் கண்டுபிடித்தார். ஓய்வு இல்லாமல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்று வருவதால், அவரின் முதுகு தண்டுவடத்தில் இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்துவரும் இங்கிலாந்து ஒருநாள் தொடர், சரே பிராந்தியத்துக்காக  கவுண்டி போட்டிகளில் அவர் பங்கேற்காமல் சிகிச்சையும், ஓய்வும் எடுப்பது அவசியம் என கோலியிடம் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

ஒரு வருடத்துக்கும் அதிகமாக ஓய்வில்லாமல் விளையாடி வருவதனாலேயே கோலிக்கு இப்படியான ஓய்வெடுக்கவேண்டிய உபாதை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உடனடியாக கவனிக்காமல் தொடர்ந்து விளையாடினால், நீண்டநாள் செல்லும் போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும்.

இதனால், கோலி இங்கிலாந்து தொடர், கவுண்டி போட்டியில் விளையாடுவதைத் தவிர்த்து, நல்ல ஓய்விலும், சிகிச்சையும் எடுக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து விராட் கோலியின் தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்தும் இல்லை. அதேசமயம், விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து அறிந்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அணியின் மிகப்பிரிய நம்பிக்கை நட்சத்திர வீரருக்கு இதுபோன்ற காயம் ஏற்படுவது வருத்தமளிக்கிறது. அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாத அளவுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்படும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி விளையாடமாட்டார், இந்தக் காயத்தால், சரே பிராந்திய அணியிலும், இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும்'' எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து தொடருக்கு பெரிய அளவில் தயாராவதற்காகவே கோலி, கவுண்டி அணியில் ஒப்பந்தம் செய்துள்ளார். இப்போது சரே  கவுண்டி அணியிலும், இங்கிலாந்து தொடரிலும் விளையாடாமல் கோலி ஓய்வெடுக்க நேர்ந்தால், அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமையும். மேலும், கவுண்டி தொடரில் கோலியின் விளையாட்டைக் காண இருப்பவர்களுக்கு அது பெரும் ஏமாற்றமாக இருக்கும்.


கடந்த முறை இங்கிலாந்து பயணத்தின் போது விராட் கோலி 5 டெஸ்ட் போட்டிகளில் 134 ரன்கள் மட்டுமே சேர்த்து, சராசரியாக 13 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இதுபோன்ற சூழல் இந்தத் தொடரிலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சர்ரே கவுண்டி அணியில் விளையாடி அதன்பின் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க கோலி திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

புதியது பழையவை