Latest Updates

6/recent/ticker-posts

இங்கிலாந்து செல்லும் விராட் கோலி !! ஜூனில் இந்தியாவுக்காக விளையாடமாட்டார் !


அடுத்த மாதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதை சரே பிராந்தியமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கான அனுமதியை வழங்கியுள்ள இந்தியக் கிரிக்கெட் சபை - BCCI இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி விளையாடமாட்டார் என்பதையும் ஏற்றுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் இந்தியா இங்கிலாந்துக்கான சுற்றுலா செல்லவுள்ளதால், அதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் முகமாகவே கோலி இங்கிலாந்தில் விளையாட விரும்பியிருந்தார்.

இதே சரே பிராந்தியத்துக்காக கடந்த பருவகாலத்தில் இலங்கையின் குமார் சங்கக்கார மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். 13 இனிங்ஸில் 8 சதங்களுடன் 106.75 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தென் ஆபிரிக்காவின் டீன் எல்கர் இப்போது ஆடிவருகிறார்.

கோலி இதற்கு முன்பு இங்கிலாந்துத் தொடர்களில் மிகத் தடுமாறி வந்திருந்தார். அதை நிவர்த்தி செய்துகொள்ளவே சரே பிராந்தியத்துக்காக ஆடி காலநிலை, கள நிலைகளுக்கு ஏற்றது போல தன்னைத் தயார்ப்படுத்துவதற்கு முனைகிறார் கோலி.

ஏற்கெனவே மூன்று இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்காக ஆடி வருகிறார்கள்.
செட்டேஸ்வர் புஜாரா - யோர்க் ஷயர்
இஷாந்த் ஷர்மா - சசெக்ஸ்
வருண் ஆரோன் - லீஸ்ட்டர்ஷெயார்

இந்தியக் கிரிக்கெட் சபை இங்கிலாந்தில் ஆடிவரும் புஜாராவையும் ஆப்கானிஸ்தான் தொடருக்காக மீள அழைக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.
இங்கிலாந்துத் தொடரையே (5 டெஸ்ட் போட்டிகள்) முக்கியமானதாகக் கருதி அதற்கான தயார்ப்படுத்தலை நோக்காக வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் விளையாடுமாறு எந்தவொரு வீரரையும் வற்புறுத்தப்போவதில்லை எனவும் BCCI முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.


நன்றி : தமிழ்நியூஸ் - ARV லோஷன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்