கொல்கத்தாவை துவம்சம் செய்த ரஷீத் கான் ! இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ! #IPL2018 #IPLPlayoffs

இன்று (வெள்ளி) கொல்கத்தாவில் நடைபெற்ற Qualifier 2 என்று அழைக்கப்பட்ட இரண்டாவது அரையிறுதியை ஒத்த முக்கியமான போட்டியில் அற்புதமான சகலதுறைத் திறமையை தனித்து நின்று வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தானிய சுழற்பந்து வீச்சு நட்சத்திரம் ரஷீத் கான், கேன் வில்லியம்சன் தலைமை தாங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கொல்கத்தாவில் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ஓட்டங்களால் தோற்று வெளியேறியது.

9 கோடி இந்திய ரூபாய்களுக்கு தன்னை ஏலத்தில் எடுப்பதற்கும் உலகம் முழுவதும் உள்ள T20 லீக் அணிகள் முண்டியடித்துத் தன்னை அழைப்பதற்கும் என்ன காரணம் என்பதை இன்று ரஷீத் கான் ஆதாரபூர்வமாகக் காட்டியிருந்தார்.

தவான் - சஹா ஆகியோரது நல்ல ஆரம்பத்தினோடு (56 ஓட்ட இணைப்பாட்டம்) சராசரி ஓட்ட அளவைப் பெற்றிருந்த சன்ரைசர்ஸ் 18 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் தான் கடைசி இரு ஓவர்களில், நான்கு சிக்ஸர்கள், இரண்டு நான்கு ஓட்டங்கள் அடங்கலாக வெறும் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்று SRH அணியின் ஓட்ட எண்ணிக்கையை சவால்விடக்கூடிய அளவுக்கு 174 ஆக உயர்த்தினார் ரஷீத் கான்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிரடியாக ஆரம்பித்த போதும் சுனில் நரைன் (26), ராணா (22), தொடர்ந்து குறைந்த ஓட்டங்களுக்கு உத்தப்பா, கார்த்திக் என்று விக்கெட்டுக்களை இழக்கப்பட தடுமாற ஆரம்பித்தது. ரஷீத் கானும் ஷகிப் அல் ஹசனும் தங்கள் சுழற்பந்து வீச்சு வலையில் சுழற்றி எடுத்தார்கள்.

அதிரடியாக ஆடி போட்டிகளின் போக்கை மாற்றும் அன்றே ரசலையும் ஆட்டமிழக்கச் செய்தார் ரஷீத் கான்.

இறுதி வரை போராடிய இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட வீரர் ஷுப்மன் கில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

3 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு, களத்தடுப்பிலும் கலக்கிய ரஷீத் போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.

ஞாயிறு நடைபெறும் இறுதிப் போட்டியில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சந்திக்கவுள்ளது சன்ரைசர்ஸ்.
இந்த IPL தொடரில் நான்காவது தடவையாக இவ்விரு அணிகளும் சந்திக்கவுள்ளன.


கருத்துரையிடுக

புதியது பழையவை