படம் : http://indianexpress.com
பாகிஸ்தானின் இளைய, அனுபவமற்ற வேகப்பந்துவீச்சில் சுருண்டு லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நான்காவது நாளான இன்று 9 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியது.
மொஹமட் அமீரைத் தவிரப் பெரிதாக அனுபவமில்லாத பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர்கள் இரண்டு இன்னிங்சிலும் தடுமாறியிருந்தார்கள்.
நான்கே நான்கு அரைச்சதங்களை மட்டும் இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர்களால் பெறமுடியாத அதேவேளை, 250 மொத்த ஓட்டங்களை இரண்டு இன்னிங்சிலும் தாண்ட முடியவில்லை.
முதலாம் இன்னிங்சில் 184 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்சில் 242 ஓட்டங்களையும் பெற்றது. ஒன்றரை வருட காலத்தின் பின்னர் டெஸ்ட் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஜொஸ் பட்லர் மற்றும் அறிமுக வீரர் டொம் பெஸ் ஆகிய இருவரும் அரைச்சதங்களையும் பெற்று தமக்கிடையே 126 ஓட்டங்களையும் பகிர்ந்து இரண்டாம் இன்னிங்சில் போராடியிருந்தார்கள்.
எனினும் இவர்களுக்கு முன்னரும் பின்னரும் விக்கெட்டுக்கள் துரித கதியில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களால் சரிக்கப்பட்டு பாகிஸ்தான் வெற்றியிலக்கான 64 ஓட்டங்களை ஒரேயொரு விக்கெட்டை இழந்து அடைந்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவுசெய்யப்பட்ட மொஹமட் அப்பாஸ் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
ஹசன் அலி முதலாம் இன்னிங்சிலும், ஆமீர் இரண்டாம் இன்னிங்சிலும் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
பாகிஸ்தானின் துடுப்பாட்டமும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்திருந்தது.அசார் அலி, அசாத் ஷபீக், பபார் அசாம், ஷடாப் கான் ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றிருந்தார்கள். எனினும் பபார் அசாமில் கை முறிவானது இனி இந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.
இந்தத் தோல்வியானது இங்கிலாந்து அணியிலும் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.
0 கருத்துகள்