இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு: நியமனக் கடிதங்களைப் பெற்றனர் குழு உறுப்பினர்கள்
இலங்கை கிரிக்கெட் (SLC) நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள 'கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின்' நான்கு உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் இன்று அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டன. அரசாங்கம் கிரிக்கெட் துறையில் முன்னெடுத்து வரும் மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
இன்று நியமனக் கடிதம் பெற்றவர்கள்:
சிதத் வெத்திமுனி
துஷிர ரதெல்ல
பிரகாஷ் ஷாஃப்டர்
அவந்தி கொலம்பகே
இரான் விக்கிரமரத்ன தலைமையில் இயங்கும் இந்தக் குழுவில் மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். ரொஷான் மகாநாம, குமார் சங்கக்கார, உபுல் குமாரப்பெரும மற்றும் தினால பிலிப்ஸ் ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
இவர்களில் சில உறுப்பினர்கள் ஏற்கனவே தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அதேவேளை, ரொஷான் மகாநாம மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ளதால், அவர்கள் நாடு திரும்பியதும் கடிதங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
குழுவின் பணிகள்: 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்தக் குழு செயற்படும். இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும், கட்டமைப்பில் தேவையான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதும் இக்குழுவின் பிரதான பொறுப்பாகும்.

0 கருத்துகள்