Latest Updates

6/recent/ticker-posts

குசல் மெண்டிஸின் அதிரடி ஆட்டம்: தற்காலிகமானதா அல்லது நிரந்தர எழுச்சியா? ஒரு விரிவான அலசல்

 குசல் மெண்டிஸின் அதிரடி ஆட்டம்: தற்காலிகமானதா அல்லது நிரந்தர எழுச்சியா? ஒரு விரிவான அலசல்


பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரில் குசல் மெண்டிஸ் காட்டி வரும் அதிரடி, கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதனைகளைத் தகர்த்து வரும் மெண்டிஸின் இந்த அதிரடி ஆட்டம், ஒரு குறுகிய கால 'form' தானா அல்லது ஒரு முழுமையான ரி20 வீரராக அவர் உருவெடுத்துள்ளாரா என்பது குறித்து இந்த கட்டுரை ஆராய்கிறது.

குசல் மெண்டிஸின் சர்வதேச ரி20 வாழ்க்கையை கவனித்தால், அவர் பல நேரங்களில் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தாமல் ரசிகர்களை ஏமாற்றியே வந்துள்ளார். ஆனால், பி.எஸ்.எல் 2026 அந்த பிம்பத்தை உடைத்து வருகிறது.

சாதனைகளைத் தகர்த்த மெண்டிஸ்

இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் மெண்டிஸ் விளாசியுள்ள ஓட்டங்கள் மற்றும் வேகம் மலைக்க வைக்கிறது.

  • மொத்த ஓட்டங்கள்: 493

  • சராசரி: 62.50

  • ஸ்டிரைக் ரேட்: 170.54

இதற்கு முன் பி.எஸ்.எல் தொடர் ஒன்றில் ஒரு வெளிநாட்டு வீரர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 453 (ரைலீ ரூசோ, 2023) ஆகும். மெண்டிஸ் அதனை முறியடித்துள்ளதோடு, 450 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த எந்தவொரு வீரரையும் விட அதிக சராசரியையும், வேகத்தையும் கொண்டுள்ளார். அவரது 8 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் அடங்கும். முக்கியமாக ஒரு போட்டியில் கூட அவர் 20 ஓட்டங்களுக்குக் குறைவாக ஆட்டமிழக்கவில்லை.

சாதகமான சூழல்கள்

மெண்டிஸின் இந்த மாற்றத்திற்கு சில புறக்காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன:

  1. ஆடுகளங்களின் தன்மை: பாகிஸ்தான் ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு மிகவும் சாதகமானவை. இலங்கையில் இந்த ஆண்டு மெண்டிஸ் விளையாடிய 11 போட்டிகளில் சராசரி ஸ்டிரைக் ரேட் 130 ஆக இருந்த நிலையில், பாகிஸ்தானில் அது 172 ஆக உயர்ந்துள்ளது.

  2. பாபர் அசாமின் ஒத்துழைப்பு: மறுமுனையில் பாபர் அசாம் காட்டி வரும் நிதானம் மெண்டிஸிற்கு மிகுந்த சுதந்திரத்தை அளித்துள்ளது. பெஷாவர் சல்மி அணிக்காக இருவரும் இணைந்து மூன்று முறை 100 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டம் அமைத்துள்ளனர். கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிராக இவர்கள் சேர்த்த 191 ஓட்டங்கள் ஒரு சாதனை மைல்கல்லாகும்.

ஆட்டத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள்

மெண்டிஸின் அதிரடிக்கு பின்னால் அவரது தொழில்நுட்ப ரீதியான சில முன்னேற்றங்களும் உள்ளன:

  • நேர்க்கோட்டு அடிகள் (Straight Drives): மெண்டிஸ் பொதுவாக லெக்-சைட் திசையிலேயே அதிக சிக்ஸர்களை அடிப்பவர். ஆனால் இந்த சீசனில் அவரது 'V' திசையிலான (நேராக ஆடும்) சிக்ஸர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சீசனில் 10% ஆக இருந்த நேர்க்கோட்டு ரன்கள், இப்போது 26% ஆக உயர்ந்துள்ளது.

  • சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளுதல்: முன்னரை விட இப்போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிக முறை க்ரீஸை விட்டு வெளியே வந்து (Step down) ஆடுகிறார். ஒவ்வொரு 12 பந்துகளுக்கும் ஒருமுறை அவர் இவ்வாறு முன்வந்து தாக்குகிறார்.

  • Short ball கையாளுதல்: புல் ஷாட் (Pull shot) ஆடுவதில் ஏற்கனவே வல்லவரான மெண்டிஸ், இப்போது அந்தப் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றுவதில் அதிக வேகம் காட்டுகிறார்.



இது நிரந்தரமா?

2026 ஆம் ஆண்டில் மெண்டிஸின் ஒட்டுமொத்த ரி20 சராசரி 48.76 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 150 ஆகவும் உள்ளது. இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு ஆண்டில் பதிவான மிகச்சிறந்த புள்ளிவிபரமாகும்.

வெறும் அதிர்ஷ்டம் அல்லது ஆடுகளத்தின் சாதகத்தையும் தாண்டி, மெண்டிஸ் தனது ஆட்டத்திறனை (Range) விரிவுபடுத்தியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. எனினும், இதே உத்வேகத்தை அவர் சர்வதேசப் போட்டிகளிலும், பல்வேறு நாடுகளின் ஆடுகளங்களிலும் தொடர்ந்தால் மட்டுமே, அவர் ஒரு முழுமையான ரி20 ஜாம்பவானாகக் கருதப்படுவார்.

தற்காலிகமான எழுச்சியா அல்லது குசல் மெண்டிஸ் எனும் வீரரின் மறுபிறப்பா என்பதை வரும் காலமே தீர்மானிக்கும்.

மூலம் : Wisden ஆங்கிலப் பதிப்பு 

கருத்துரையிடுக

0 கருத்துகள்