IPL 2026: எம்.எஸ். தோனி விரைவில் திரும்புவார் - CSK பயிற்சியாளர் மைக்கல் ஹசி !
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மே 2) நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மகேந்திர சிங் தோனியின் உடல்நிலை குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக்கல் ஹசி முக்கிய தகவலொன்றைப் பகிர்ந்துள்ளார்.
கெண்டைக்கால் தசைப்பிடிப்பு (Calf injury) காரணமாக கடந்த மூன்று வாரங்களாக விளையாடாமல் இருந்த தோனி, தற்போது உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்து அணியுடன் இணைந்துள்ளார். எனினும், அவர் இன்னும் IPL 2026இல் போட்டிகளில் களம் காணவில்லை.
பயிற்சியாளர் ஹசி கூறியவை:
தோனி மிகவும் ஆரோக்கியமாகத் தேறி வருகிறார்; அவர் விரைவில் களம் திரும்புவார் என எதிர்பார்க்கிறோம்.
நாளை நடைபெறும் போட்டியில் அவர் விளையாடுவாரா அல்லது அதற்கு அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
தோனியின் துடுப்பாட்டம் மற்றும் விக்கெட் காப்புத் திறன்கள் மீது எமக்கு முழு நம்பிக்கை உள்ளது; ஆனால், ஓட்டங்களை எடுக்கும்போது அவரது வேகம் மற்றும் தீவிரத்தை பராமரிப்பதே தற்போதைய பிரதான கவலையாக உள்ளது.
குறிப்பாக இன்னிங்ஸின் இறுதிப் பகுதியில் ஒற்றை மற்றும் இரட்டை ஓட்டங்களை வேகமாக எடுப்பதற்கான உடல் வலிமையை உறுதி செய்வது அவசியமாகும்.
"தோனி தனது உடல்நிலை குறித்து எப்போது முழு நம்பிக்கையடைகிறாரோ, அப்போது அவர் விளையாடுவதற்குத் தயாராகிவிடுவார்; அவருக்காக நாங்களும் ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் காத்திருக்கிறோம்" என ஹசி மேலும் தெரிவித்தார்.
மேலும், போட்டியின் போது அணியின் கவனத்தை சிதறடிக்க விரும்பாத காரணத்தால், தோனி இதுவரை மைதானத்திற்கு வருவதைத் தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும், அவர் பயிற்சியின் போதும் அணியின் கலந்துரையாடல்களின் போதும் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்