Latest Updates

6/recent/ticker-posts

இலங்கை கிரிக்கெட் பதினொருவர் vs இந்திய அணி பயிற்சிப் போட்டி: சிராஜ் Hat trick சிக்ஸர்கள் - இந்தியா சுவையான வெற்றி !

 இலங்கை கிரிக்கெட் பதினொருவர் vs இந்திய அணி பயிற்சிப் போட்டி: சிராஜ் Hat trick சிக்ஸர்கள் - இந்தியா சுவையான வெற்றி !



இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் (Sri Lanka Cricket XI) அணிக்குமிடையிலான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நேற்று கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இரண்டு அணிகளுமே பயிற்சி எடுப்பதற்கும் தத்தம் அணிகலை டெஸ்ட் தொடருக்கு தெரிவு செய்வதற்கும் ஒரு களமாகப் பயன்படுத்திய போட்டியில் கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவையாயிருக்க மொஹமட் சிராஜ் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி இந்தியாவுக்கு ஒரு சுவையான வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) தொடருக்கு முன்னோடியாக அமைந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சோனால் தினுஷ தலைமையிலான இலங்கை கிரிக்கெட் XI அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

முதல் இன்னிங்ஸ்:
இலங்கை XI அணி தனது முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 90 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது (Declared). துடுப்பாட்டத்தில் அசத்திய ரவிந்து ரசன்த 71 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 66 ஓட்டங்களையும் பெற, தலைவர் சோனால் தினுஷ 52 ஓட்டங்களைச் சேர்த்தார். இந்திய பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தேவ்தத் படிக்கல் நிதானமாக ஆடி சதமடித்தார். அவர் 142 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய ரவீந்திர ஜடேஜா 63 ஓட்டங்கள் பெற்றிருந்த போது காயமடைந்து (Retired Hurt) வெளியேறினார். இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களைப் பெற்றுத் தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. பந்துவீச்சில் அசங்க மனோஜ் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இரண்டாம் இன்னிங்ஸ்:
6 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை XI அணி 45 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்கள் எடுத்திருந்த போது 2ஆவது இன்னிங்ஸையும் இடைநிறுத்தியது. மீண்டும் அபாரமாக ஆடிய நிஷான் மதுஷ்க 63 ஓட்டங்களையும், நிபுன் தனஞ்சய 46 ஓட்டங்களையும் பெற்றனர். ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியாவின் வெற்றி இலக்கு:
இதன்படி, இந்திய அணிக்கு 207 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 45 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 61 ஓட்டங்களையும், சுப்மான் கில் 44 ஓட்டங்களையும் இறுதியாக சிராஜ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.

ஸ்கோர் விபரம்:

ஶ்ரீலங்கா கிரிக்கெட் XI (1st Innings): 363/8d (90) - ரவிந்து ரசன்த 71, நிஷான் மதுஷ்க 66, சோனால் தினுஷ 52 | மானவ் சுதர் 2/33, ரவீந்திர ஜடேஜா 2/64

இந்தியா (1st Innings): 357/6d (90) - தேவ்தத் படிக்கல் 142*, ரவீந்திர ஜடேஜா 63 | அசங்க மனோஜ் 2/32, ரமேஷ் மெண்டிஸ் 2/77

ஶ்ரீலங்கா கிரிக்கெட் XI (2nd Innings): 200/6d (45) - நிஷான் மதுஷ்க 63, நிபுன் தனஞ்சய 46 | ரவீந்திர ஜடேஜா 2/33

இந்தியா (2nd Innings): 214/4 (45) - யஷஸ்வி ஜெய்ஸ்வால் 61, சுப்மன் கில் 44 | சோனால் தினுஷ 1/21

இந்த இந்திய டெஸ்ட் தொடருக்கான அதிகாரப்பூர்வ இலங்கை டெஸ்ட் குழாம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இந்தப் பயிற்சிப் போட்டியில் விளையாடிய இலங்கை கிரிக்கெட் XI அணியின் சில வீரர்களும் அதில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SLvsIND #SriLankaCricket

கருத்துரையிடுக

0 கருத்துகள்