Latest Updates

6/recent/ticker-posts

ஆசிய 19 வயதுக்குட்பட்டோர் கிண்ணத்தில் இந்தியாவின் வெற்றி & உலகக்கிண்ணத்தில் இலங்கை ??

 மத்திய கிழக்கில் எட்டு அணிகள் மோதிய  19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணம் இந்தியாவின் இளையோரின் கைகளில் எட்டாவது தடவையாகப் போய்ச் சேர்ந்துள்ளது.



இதுவரை இந்த இளையோர் ஆசியக் கிண்ண ஒருநாள் தொடர் போட்டிகள் நடைபெற்றுள்ள ஒன்பது தடவைகளில் இந்தியா ஒரு தடவை பாகிஸ்தானோடு இணை சாம்பியனாக பகிர்ந்துகொண்டது. 
(அது 2012 ஆம் ஆண்டில்)
2017இல் மலேசியாவில் நடைபெற்ற தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சம்பியன் ஆகியது.
அந்தத் தொடரில் இவ்வாறான ஆசிய இளையோர் கிண்ணத் தொடர்களில் அதிகமான தடவைகள் இறுதிப்போட்டிகளில் சந்தித்த இரண்டு அணிகளான இலங்கையும் இந்தியாவும் அரையிறுதிக்குக் கூட வரவில்லை என்பது சுவையானது.


ஆசிய நாடுகளில் இந்தியாவின் கிரிக்கெட் கட்டமைப்பு எத்தனை வலுவானது என்பதை இவ்வாறான தொடர்களை தொடர்ச்சியாக வெல்வதன் மூலம் இந்தியா காட்டிவருகிறது. 

அண்மையில் நடைபெற்றுமுடிந்த இவ்வாண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றியைப் பெற்றதோடு மேற்கிந்தியத் தீவுகளில் வருகின்ற 14ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டியிலும் favourites ஆக நம்பிக்கையுடன் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த அணியில் ஒரு சில வீரர்களாவது இந்த வருடம் நடைபெறவுள்ள IPL இல் நிச்சயம் இடம்பிடிப்பார்கள் என்பது தான் இந்தியா கிரிக்கெட்டின் வளர்ச்சியின் ரகசியம்.

இலங்கை அணியும் இறுதிப்  போட்டி வரை வந்த உற்சாகத்துடன் மஹேல ஜயவர்தன இப்போது பயிற்றுவிப்பாளராக இணைந்திருப்பதும் சேர்ந்து உற்சாகமாக பயணித்திருக்கிறது.
இந்திய இளையோர் அணிக்கு ராகுல் டிராவிட் கொடுத்த உத்வேகம் போல இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு மஹேல ஒரு வெற்றிகரமான பயணத்தை வழங்குவாரா பார்க்கலாம்.



மஹேல வந்த மாற்றமோ இல்லாவிட்டால் அண்மைக்காலமாக இலங்கையில் தொடர்ச்சியாக சுற்றுலா வந்த அணிகளை தொடர்ந்து வென்று வந்த பயிற்சியும் உற்சாகமுமோ இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணி மிகச் சிறப்பாகவே முதற்சுற்று ஆட்டங்களில்  ஆடி அரையிறுதி வரை இலகுவாக முன்னேறியதோடு, நடப்புச் சம்பியன்களான பங்களாதேஷையும் வீழ்த்தி, பின் அரையிறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியிருந்தது.

மழையினால் பாதிக்கப்பட்ட இறுதிப்போட்டியில் இந்திய அணி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வென்றிருந்தது.

அணியின் தலைவர் Dunith Wellalage, துடுப்பாட்ட வீரர்கள் Sadeesha Rajapaksa, Chamindu Wickremasinghe, Pavan Pathiraja மற்றும் பந்துவீச்சாளர்கள் Matheesha Pathirana, Trevin Mathews, Yohan Rodrigo என்று எதிர்காலத்துக்கான நட்சத்திரங்கள் ஜொலிக்கிறார்கள்.

இவர்களில் ஒருவருக்காவது அடுத்த லங்கா பிரீமியர் லீக்கில் ஐந்து அணிகளில் ஒன்றாவது வாய்ப்பை வழங்குமா என்பது சந்தேகமே.

மகேலவின் வழி நடத்தலில் இவர்கள் தம்மை மிகச்சிறப்பான முறையில் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் வெளிப்படுத்தவேண்டும்.

இலங்கை மிகவும் சிக்கலான ஒரு பிரிவில் போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள், பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளோடு இருக்கிறது.

ஆசிய சம்பியன்களான இந்தியா, கடந்த முறை இறுதிப்போட்டியில் தோற்றுப்போய் இருந்தாலும் இம்முறை அதிகம் பலமான அணியாகவும், மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்களுக்கு ஏற்ற சுழற்பந்து வீச்சாளர்களோடும் செல்கிறது.

அத்துடன் ஒப்பீட்டளவில் இலகுவான பிரிவான தென் ஆபிரிக்கா, அயர்லாந்து, உகண்டா அடங்கிய பிரிவில் விளையாடவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்