சிங்கத்தின் மீள்வருகை! சதம் விளாசி முந்தைய 'டக் அவுட்' கவலையை உடைத்த விராட் கோலி
IPL 2026 தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, மீண்டும் தனது விஸ்வரூபத்தை காட்டியுள்ளார். புதன்கிழமை இரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியில், சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டதுடன், முந்தைய போட்டிகளில் சந்தித்த தோல்விகள் குறித்தும் மனம் திறந்து பேசினார்.
இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி, IPL புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
டக் அவுட் கவலைகள்:
37 வயதான விராட் கோலி, கடந்த இரு போட்டிகளில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகி வெளியேறினார். இது குறித்து ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய கோலி, அந்தத் தோல்விகள் தன்னை மிகவும் பாதித்ததாக ஒப்புக்கொண்டார்.
"கடந்த இரு ஆட்டங்களில் நான் ஓட்டம் எடுக்காதது, ஒரு விதத்தில் என்னை அரித்துக் கொண்டிருந்தது. நான் நன்றாக ஆட முடியும் என்பதும், பந்தை நன்றாக எதிர்கொள்கிறேன் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், நாம் ஆட்டத்தை முழுமையாகக் கொண்டு செல்லாமல் போகும்போது, அணிக்குத் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தோன்றும். அது என்னை மிகவும் பாதித்தது. இத்தனை ஆண்டுகளாக அதுதான் எனது குறிக்கோளாக இருந்து வருகிறது," என்று கோலி கூறினார்.
பெறுபேறு (performance) அழுத்தம் காரணமாக ஏற்படும் பதற்றத்திற்கு தானும் விதிவிலக்கல்ல என்று கூறிய அவர், முந்தைய இரு டக் அவுட்களுக்குப் பிறகு சற்றே பதற்றமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். இருப்பினும், இதுபோன்ற தோல்விகள் ஒரு வீரரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாதனைச் சதம்:
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கோலி 60 பந்துகளில் 105 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் அவரது இயல்பான ஆட்டம் வெளிப்பட்டது. சரியான லென்த் பந்துகளைத் தேர்வு செய்து, தொடர்ந்து இடைவெளிகளில் (gaps) பந்தை அடித்து ஓட்டங்கள் குவித்தார்.
இது ஐபிஎல் தொடரில் கோலியின் 9-வது சதமாகும், இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற தனது சாதனையை அவர் மேலும் வலுப்படுத்தியுள்ளார். மேலும், மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மாவை முந்தி, ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் (279) விளையாடிய வீரர் என்ற பெருமையையும் நேற்று கோலி பெற்றார். 2024 சீசனுக்குப் பிறகு கோலி அடிக்கும் முதல் IPL சதம் இதுவாகும்.
அழுத்தம் ஒரு பாக்கியம்:
சதத்தை பெரிய அளவில் கொண்டாடாதது குறித்துப் பேசிய கோலி, "புள்ளிகளின் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரியும். அணிக்கு அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உள்ளது. அழுத்தம் ஒரு பாக்கியம் (pressure is a privilege) என்று கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது - அது உங்களை அடக்கமாக வைத்திருக்க உதவுகிறது. சில ஆட்டங்கள் நீங்கள் விரும்பியபடி செல்லாதபோது, பதற்றம் உண்டாகும், அது உங்கள் ஆட்டத்தை மேம்படுத்த உதவுகிறது," என்று விளக்கினார்.
கிரிக்கெட் மீதான தனது காதலை மீண்டும் உறுதிப்படுத்திய கோலி, "நான் துடுப்பாடுவதை விரும்புகிறேன். இன்னும் மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக இந்த மட்டத்தில் போட்டியிடுவது ஒரு கௌரவம். இது என்றோ ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதால், இப்போதே என் இதயம் மற்றும் ஆன்மாவைக் கொடுத்து விளையாட விரும்புகிறேன்," என்றார்.
கோலியின் சதம் + RCB வெற்றி குறித்து விவரிக்கும் காணொளி :
கோலி தாண்டவம் - RCB கோலாகல வெற்றி !

0 கருத்துகள்