Latest Updates

6/recent/ticker-posts

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இலங்கை கிரிக்கெட் அணிக்கு நேரடியாகக் காலிறுதி வாய்ப்பு!

 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இலங்கை கிரிக்கெட் அணிக்கு நேரடியாகக் காலிறுதி வாய்ப்பு!


ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் (Asian Games) ஆடவர் கிரிக்கெட் பிரிவில், இலங்கை உட்பட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு நேரடியாகக் காலிறுதிச் சுற்றில் (Knock-out) போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள போட்டி அட்டவணையின்படி, இந்த நான்கு முதன்மை அணிகளுடன் மேலும் நான்கு அணிகள் பிரத்தியேகத் தகுதிச் சுற்று மூலமாக இணைந்து காலிறுதியில் மோதவுள்ளன.

தகுதிச் சுற்றில் பங்கேற்கும் ஆறு அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் அணியுடன் போட்டியை நடத்தும் ஜப்பான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் 'குழு A' இல் இடம்பெற்றுள்ளன. 'குழு B' இல் மலேசியா, ஓமான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. லீக் சுற்றின் முடிவில் இரு குழுக்களிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

அதேவேளை, மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நேரடியாகக் காலிறுதிச் சுற்றிலிருந்தே ஆரம்பமாகவுள்ளன.

மகளிர் பிரிவு காலிறுதி மோதல்கள்:

  • இலங்கை எதிர் மலேசியா

  • இந்தியா எதிர் ஜப்பான்

  • பாகிஸ்தான் எதிர் தாய்லாந்து

  • பங்களாதேஷ் எதிர் சீனா

கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர், மகளிர் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே இந்திய அணி தங்கம் வென்று நடப்புச் சாம்பியனாகத் திகழ்கின்றது.

இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 17 முதல் 22 வரையிலும், ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24 முதல் ஒக்டோபர் 01 வரையிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்