தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

மாற்றங்களுடன் இங்கிலாந்து, முதற் தடவையாக மாற்றமில்லாத கோலி தலைமை தாங்கும் இந்திய அணி ??

இந்தியாவிற்கு எதிரான இன்றைய நான்காவது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களை இங்கிலாந்து கிரிக்கெட் அணி கொண்டுவந்துள்ளது.

காயம் காரணமாக இப்போட்டியில் விலகிய கிறிஸ் வோக்ஸ்க்கு பதிலாக சாம் குரன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார், அத்துடன் கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்காத துடுப்பாட்ட வீரர் ஒலி போப்புக்குப் பதிலாக மீண்டும் சகலதுறை வீரர் மொயின் அலி உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகி இடைநடுவே விலகிக்கொண்ட விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ மீண்டும் அணிக்குள் தனியே துடுப்பாட்ட வீரராக விளையாடவுள்ளார். இதன்மூலம் கடந்த போட்டியில் தனது கன்னிச் சதத்தைப் பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் ஆறாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக விளையாடவுள்ளார்.

இந்திய அணி கடந்த போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற அதே அணியையே இன்றைய தினம் ஈடுபடுத்தும் என நம்பப்படுகிறது.
இடுப்பு உபாதைக்குள்ளாகியிருந்த அஷ்வினும் பூரண குணமடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே அணி இன்று விளையாடினால் விராட் கோலி தலைமை தாங்கியுள்ள 38 டெஸ்ட் போட்டிகளுக்குப் பின் முதல் தடவையாக மாற்றமில்லாத பதினொருவரை அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்திய சம்பவமாக இது பதிவாகும்.

எனினும் ஆடுகளத் தன்மையை இன்று பரிசீலித்து சிலவேளைகளில் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமிக்கு பதிலாக சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

நடைபெற்று முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி, 2-1 என முன்னிலை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதன், 29 ஆகஸ்ட், 2018

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் - மீண்டும் கிரிக்கெட் சூதாட்டப் பூதம் ?

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் சிலர் பற்றியும் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகள் பற்றியும் சர்ச்சை + சந்தேகப் புயல்களைக் கிளப்பிவிட்ட அல் ஜஸீரா தொலைக்காட்சி இம்முறை அவுஸ்திரேலிய வீரர்களை மட்டும் குறிவைத்து புதிய பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிரிக்கெட் பந்தயக்காரர்கள் , சூதாட்டக்காரர்கள் ஆகியோருடன் அவுஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் பலருக்கு இருந்த ரகசியத் தொடர்புகள் பற்றி அம்பலப்படுத்தப்போவதாக அல் ஜஸீரா மீண்டும் ஒரு புதிய பதற்றத்தைக் கிரிக்கெட் உலகில் ஆரம்பித்துள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அல் ஜஸீரா வெளியிட்டுப் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்த அல் ஜஸீரா வெளியிட்ட முழுமையான ஆவணப்படம் :
Cricket’s Match Fixers - Al Jazeera Investigations - Shocking Video
ஆவணப்படத்திலும் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் குறித்த டெஸ்ட் போட்டியில் வேண்டுமென்றே மந்த கதியில் ஆடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அந்தப் போட்டியில் சதமடித்திருந்த கிளென் மக்ஸ்வெல் இந்த சந்தேக வலையில் பிரதான நபராக மாறியிருந்தார்.
எனினும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா அந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என மறுத்திருந்தது.

இப்போதும் 2011 காலகட்டத்தில் ஆஷஸ், உலகக்கிண்ணம், அதைத் தொடர்ந்த அவுஸ்திரேலியாவின் பங்களாதேஸ்,  இலங்கை,ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணங்கள், அதன் பின் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்தியா மற்றும் நியூ சீலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்கள் எல்லாம் இந்த அல் ஜஸீராவின் சந்தேகத்தில் அடங்கியுள்ளது.

இது பற்றி விசாரிக்கப்படும் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்தாலும் கூட இது பற்றிய உண்மைத்தன்மையை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொள்ளும்வரை நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

முன்னைய குற்றச்சாட்டின்போதும் சர்வதேச கிரிக்கெட் சபை கேட்ட ஆதாரக் காணொளிகளை அல் ஜஸீரா வழங்க மறுத்திருந்தது.

இந்த சர்ச்சை தொடர்பான முன்னைய, தொடர்புப்பட்ட பதிவுகள் :






வியாழன், 23 ஆகஸ்ட், 2018

மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய விராட் கோலி ! புதிய சாதனை படைத்தார்.

ICCயின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் இழந்த முதலாம் இடத்தை மூன்றாம் டெஸ்ட் போட்டியில் பெற்ற 97 & 103 ஓட்டங்களுக்குப் பின்னர் மீண்டும் தனதாக்கியுள்ளார் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி.

937 தரப்படுத்தல் புள்ளிகளைப் பெற்றுள்ள விராட் கோலி தடைக்குள்ளாகியுள்ள அவுஸ்திரேலிய முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தியுள்ளார். மீண்டும் இப்போதைக்கு விளையாடும் வாய்ப்பு அற்றிருக்கும்  ஸ்மித் 929 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

கோலியின் 937 தரப்படுத்தல் புள்ளிகள் அவரது தனிப்பட்ட அதிகூடிய புள்ளிகளாக மட்டுமன்றி இந்திய வீரர் ஒருவர் பெற்ற கூடுதலான புள்ளிகளாகவும் சாதனை படைத்துள்ளன.
இப்போது டெஸ்ட் வரலாற்றில் அதிக தரப்படுத்தல் புள்ளிகளைப் பெற்றுள்ள துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் கோலி 11ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இவருக்கு மேலே இருக்கும் பத்து டெஸ்ட் சாதனை வீரர்களும் டெஸ்ட் வரலாற்றில் தனியிடம் பிடித்தவர்கள்.
The top 10 in the list are Don Bradman (961 points), Steven Smith (947), Len Hutton (945), Jack Hobbs (942), Ricky Ponting (942), Peter May (941), Gary Sobers, Clyde Walcott, Vivian Richards and Sangakkara (all 938 points).

இதில் தற்போதும் விளையாடுகின்ற வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே இருக்கிறார்.

இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்ற நிலையில், கோலி தற்போது இருக்கின்ற சிறப்பான ஓட்டக்குவிப்பு form இல் முதல் பத்து வீரர்களில் ஒருவராக வரலாறு படிக்கக்கூடிய வாய்ப்பும் இல்லாமல் இல்லை.
இந்திய வீரர்களில் கோலிக்கு அடுத்த நிலையில் புஜாரா ஆறாம் இடத்தில் இருக்கிறார்.

பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் பெரியளவு மாற்றங்கள் இல்லாவிடினும் முதலிடத்தில் தொடர்ந்தும் இருந்துவரும் ஜிம்மி அண்டர்சனுக்கு நான்கு புள்ளிகள் குறைந்திருக்கின்றன.
அதேநேரம் அஷ்வின் இரண்டு ஸ்தானங்கள் கீழே சரிந்துள்ளார்.

சகலதுறை வீரர் தரப்படுத்தலிலும் ரவிச்சந்திரன் அஷ்வின் சரிவு கண்டுள்ளார்.

சனி, 18 ஆகஸ்ட், 2018

கென்யா புதிய சாதனை !! - ஆனால் ICC அங்கீகாரம் இல்லை.


T20 போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிக ஓட்ட எண்ணிக்கையை கென்ய கிரிக்கெட் அணி பெற்றும் ஐசிசியின் விதியால், கென்யா அணி T20 கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனை அங்கீகரீக்கப்படாமல் போனது.

வரும் 2020ல் ஆஸ்திரேலியாவில் T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகளில் ஐசிசி.,யின் உறுப்பினர் அணிகள் பங்கேற்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி ஒரு புதிய விதியை அறிவித்தது.

அதன்படி ஐசிசியின் அடிப்படை உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை 18ல் இருந்து 104-ஆக அதிகரித்தது. தவிர, இந்த உறுப்பினர் நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் T20 போட்டிகள்அனைத்தும் சர்வதேச போட்டிகளாக வரும் ஜனவரி 2019 முதல் கருதப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான ‘பி’ பிரிவு T20 உலகக்கிண்ணத் தகுதிச்சுற்று போட்டியில் ருவாண்டா, கென்யா அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பாடிய கென்யா அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 270 ஓட்டங்கள் குவித்து புது உலக சாதனை படைத்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய ருவாண்டா அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு, 147 ஓட்டங்கள் எடுத்து 123 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முன்னதாக கடந்த 2013ல் ஐபிஎல்., தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 263 ஓட்டங்கள் குவித்ததே இதுவரை சர்வதேச மற்றும் உள்ளூர் T20 போட்டிகளில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.

இந்த சாதனையை 2016ல் இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி சர்வதேச அளவில் சமன் (263-3) செய்தது.

இந்த 270 ஓட்டங்கள் தற்போது முதற்தர அங்கீகாரமும் பெறப்படாத சோகம் கென்ய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

2018 – ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்- அடுத்த மாதம் ஆரம்பம் !!


2018ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம், செப்டம்பர் மாதம் அபுதாபி மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இம்முறை 50 ஓவர்கள் கொண்ட தொடராக இடம்பெறவுள்ள இந்தப் போட்டிகளில் ஆசியாவின் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஐந்து அணிகளுடன் தகுதிகாண் போட்டிகள் மூலமாகத் தெரிவுசெய்யப்படும் ஆறாவது அணியும் தெரிவு செய்யப்படவுள்ளது.018 Cricket Matches Schedule Date Time Table,

குழு ‘ஏ’ யில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தெரிவுப் போட்டிகளில் இருந்து தெரிவாகும் ஒரு அணியும், குழு ‘பி’ இல் பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

தகுதிகாண் போட்டிகளில் விளையாடப்போகிற அணிகளில் நேபாளம்  அண்மையில் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. ஐக்கிய அரபு அமீரகம் மீண்டும் ஒருநாள் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
ஏனைய நான்கு அணிகளான ஓமான், ஹொங் கொங்,சிங்கப்பூர், மலேசியா ஆகிய அணிகள் ஒருநாள் சர்வதேச அந்தஸ்து இல்லாதவை.
கடந்த 2016இல் நடைபெற்ற ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் T 20 தொடராக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னைய ஆசியக் கிண்ண சம்பியன்கள் -

போட்டி அட்டவணை:

புதன், 15 ஆகஸ்ட், 2018

இலங்கையின் சுழல் வலையில் சிக்கிய தென் ஆபிரிக்கா - 98 க்கு சுருண்டு தோல்வியடைந்தது

நேற்று கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற தனியொரு T20 சர்வதேசப் போட்டியில், தனஞ்செய டீ சில்வா & தடை தாண்டி வந்த தினேஷ் சந்திமால் சாகசங்களுடன் குறைந்த ஓட்டங்கள் கொண்ட போட்டியில் விறுவிறுப்பான வெற்றியைப் பெற்றது இலங்கை !!

தென் ஆபிரிக்காவின் குறைந்த T20 சர்வதேச ஓட்ட எண்ணிக்கை நேற்றைய நாளில் பதிவானது.
இலங்கையின் சுழல் வலையில் சிக்கிய தென் ஆபிரிக்கா அதிலிருந்து மீள முடியாமல் சுருண்டு போய், 16.4 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தென் ஆபிரிக்கா 100 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததே மிகக்குறைவான ஓட்ட எண்ணிக்கையாக அமைந்திருந்தது.
காசும் ராஜிதவுடன் ஆரம்பப் பந்துவீச்சாளராக ஆரம்பித்த தனஞ்சய டீ சில்வாவின் சுழலில் முதலில் தடுமாறிய தென் ஆபிரிக்கா அதன் பின்னர் அகில தனஞ்செய மற்றும் லக்ஸன் சண்டக்கான் ஆகியோரது சுழல்பந்துவீச்சில் தடுமாறி விக்கெட்டுக்களை இழந்தது.
மூன்று சுழல்பந்து வீச்சாளர்களும் சேர்ந்து 12 ஓவர்களில் 56 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
இதில் சண்டக்கான் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

99 இலகுவான இலக்காகத் தெரிந்தாலும் கூட, தென் ஆபிரிக்காவின் பதிலடிப் பந்துவீச்சில் ஆடிப்போனாலும் சந்திமாலின் நிதானத்தால் 3 விக்கெட் வெற்றியைப் பெற்றது. முதல் இரு விக்கெட்டுக்களை 6 ஓட்டங்களுக்குள் இழந்தாலும் சந்திமாலோடு சேர்ந்து தனஞ்சய டீ சில்வா பெற்ற அரைச்சத இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு நம்பிக்கையை அளித்தது. 

றபாடா, ஷம்சி, டாலா ஆகியோரின் பந்துவீச்சு இடையிடையே விக்கெட்டுக்களை வீழ்த்தினாலும், சந்திமாலின் நிலைப்பும் கடைநிலை துடுப்பாட்ட வீரர்களை வழிநடத்திய விதமும் இலங்கை அணிக்கு 3 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
தனஞ்சய டீ சில்வா 20 பந்துகளில் 31 ஓட்டங்களைப்பெற்றார். சந்திமால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை எடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் - தனஞ்செய டீ சில்வா

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

முதலிடத்தை இழந்த கோலி !! சாதனைப் புள்ளிகளைக் கடந்த ஜிம்மி அன்டர்சன் !! - டெஸ்ட் தரப்படுத்தல்கள்

முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமும் அரைச்சதமும் பெற்று டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் முதலாம் இடத்துக்கு உயர்ந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோலி லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சக இந்திய துடுப்பாட்ட வீரர்களோடு சேர்ந்து கோலியும் தடுமாறியதை அடுத்து அந்த முதலாமிடத்தை மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்திடம் பறிகொடுத்துள்ளார்.

கோலி லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 23 மற்றும் 17 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார்.

இதனால் 15 புள்ளிகள் குறைந்து கோலி மீண்டும் ஸ்மித்துக்கு கீழே சென்றுள்ளார்.


இதேவேளை 93 ஓட்டங்களை இரண்டாம் டெஸ்ட் போட்டியில் பெற்றுக்கொண்ட இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் பெயர்ஸ்டோ 9 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா சார்பாக இந்த டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் கூடிய ஓட்டங்களைப் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் அதன் மூலம் சகலதுறை வீரர் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பங்களாதேஷின் டெஸ்ட் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் தொடர்ந்தும் முதலாமிடத்தில் உள்ளார்.


இதேவேளை லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுக்களை வீழ்த்திய இங்கிலாந்தின் ஜிம்மி அண்டர்சன் தரப்படுத்தல்களில் உச்சக்கட்டப் புள்ளிகளாகக் கருதப்படும் 900 புள்ளிகளைத் தாண்டினார்.

900 புள்ளிகளை மேவிய 7வது இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையுடன் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துப் பந்துவீச்சாளர் ஒருவர் பெற்ற உயர்வான தரப்படுத்தல் புள்ளிகளையும் பெற்றுள்ளார்.

500 விக்கெட்டுக்களைப் பெற்ற முதலாவது இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையைத் தன் வசப்படுத்தியுள்ள அண்டர்சன், இன்னும் 10 விக்கெட்டுக்களை எடுத்தால் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த சாதனையைத் தனது வசம் வைத்துள்ள கிளென் மக்ராவின் சாதனையை எட்டிப்பிடிப்பார்.



திங்கள், 13 ஆகஸ்ட், 2018

இந்தியா இன்னிங்க்சினால் மோசமான தோல்வி !! லோர்ட்ஸ் டெஸ்ட்டில் துவம்சம் செய்த இங்கிலாந்து


முதல் நாள் முழுவதும் மழையினால் கழுவப்பட்ட பிறகும் கூட நேற்று நான்காவது நாளில் இங்கிலாந்து அணி லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியை இன்னிங்சினால் வென்றுள்ளது.
போட்டி முழுவதும் தன்னுடைய முழுமையான ஆதிக்கத்தை செலுத்திய இங்கிலாந்து இரண்டு இன்னிங்சிலும் இந்தியாவின் துடுப்பாட்டத்தை உருட்டித் தள்ளியது.

இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரில் இப்போது 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

முதலாம் இன்னிங்சில் 107 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா, நேற்று இரண்டாம் இன்னிங்சில் 130 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா துடுப்பாடிய மொத்த ஓவர்களே 80.
யாரொருவரும் அரைச்சதம் கூட பெறமுடியவில்லை.
முதலாவது டெஸ்ட் போட்டியில் தனித்து நின்று போராடிய அணியின் தலைவர் விராட் கோலியும் இம்முறை தடுமாறியிருந்தார்.
இரண்டு இன்னிங்சிலும் அதிக பட்சமான ஓட்டங்களை எடுத்தவர் ரவிச்சந்திரன் அஷ்வின்.

எந்தவொரு வீரரும் 35 ஓட்டங்களுக்கு மேல் எடுக்காதளவு மிக மோசமாகத் துடுப்பாடியிருந்தது இந்தியா.

முதலாம் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை எடுத்த ஜிம்மி அண்டர்சன் இரண்டாம் இன்னிங்சிலும் 4 விக்கெட்டுக்களை எடுத்தார்.
இதன்மூலம் ஒரு குறித்த மைதானத்தில் 100 விக்கெட்டுக்களுக்கு மேல் எடுத்த முதலாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

இலங்கையின் முத்தையா முரளிதரன் மட்டுமே தனியொரு மைதானத்தில் நூறுக்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை எடுத்த ஒரே பந்துவீச்சாளர்.
மூன்று மைதானங்களில் இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.

ஸ்டூவர்ட் ப்ரோட்டும் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

துடுப்பாட்டத்தில் அனைவரும் அசந்துபோகும் விதத்தில் அபார சதம் அடித்துக் கலக்கிய கிறிஸ் வோக்ஸ் முதலாவது இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்சிலும் இரண்டு விக்கெட்டுக்களை எடுத்துக்கொண்டார்.

அவரது ஆட்டமிழக்காத சதத்தின் போது தனது 1000 டெஸ்ட் ஓட்டங்களையும் பூர்த்தி செய்துகொண்ட வோக்ஸ் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

இங்கிலாந்து 88 ஓவர்களை சந்தித்து வேகமாக ஓட்டங்களையும் எடுத்திருந்ததும் இந்தியாவின் முழுமையான தடுமாற்றமும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்போடு அணிக்குள் கொண்டுவரப்பட்ட புஜாராவும் குல்தீப் யாதவும் சொதப்பியது ஒரு பக்கம், தொடர்ந்து தடுமாறி வரும் இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மறுபக்கம்- போதாக்குறைக்கு முரளி விஜய் இரண்டு இன்னிங்சிலும் பூஜ்ஜியத்துடன் ஆட்டமிழந்ததும் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அணிக்கு மிகப்பெரிய அவமானங்களாக மாறியுள்ளது.

அத்துடன் இங்கிலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் எந்தவொரு ஓவரும் பந்துவீசாததும், துடுப்பெடுத்தாட வாய்ப்பே கிடைக்காததும் கவனிக்கக்கூடியது.

எனினும் இங்கிலாந்துக்கு ஒரு சுவாரஸ்யமான தெரிவுச் சிக்கல் ஒன்று இப்போது ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைகள் காரணமாக இந்த டெஸ்ட்டில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அடுத்த போட்டிக்குத் திரும்பும் நேரம், யாரை நீக்குவது என்ற குழப்பம். அவருக்குப் பதிலாகவே இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரர் வோக்ஸ் அணிக்குள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.





அகில தனஞ்செய, அஞ்செலோ மத்தியூஸ் கலக்கலுடன் இலங்கைக்கு அபாரமான ஆறுதல் வெற்றி !!

தொடரை இழந்திருந்த நிலையிலும் கூட, தொடரின் இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி மிகப்பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு ஆறுதல் வெற்றியைப் பெற்று நம்பிக்கையுடன் தொடரை நிறைவு செய்துள்ளது.

178 ஓட்டங்களால் இன்று தென் ஆபிரிக்க அணியை வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்துகொண்டது.

இது கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் விளையாடப்பட்ட 100வது பகலிரவு ஒருநாள் சர்வதேசப் போட்டியாகும். 100 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் விளையாடப்பட்ட நான்காவது மைதானம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இன்று நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது.
அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களைப் பெற்றார். 11 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு சிக்ஸரை உள்ளடக்கிய மத்தியூஸின் ஆட்டத்தில் அணிக்கு வேகமாக ஓட்டங்களை சேர்ப்பதில் இருந்த ஆர்வத்தில் தன்னுடைய தனிப்பட்ட சதம் பெறுவதில் கவனம் செலுத்தவில்லை என்பது ரசிகர்களிடம் பெருமதிப்பை ஏற்படுத்தியது.

இதன் மூலம் இலங்கையில் வைத்து தன்னுடைய கன்னி ஒருநாள் சதம் பெறும் வாய்ப்பையும் இழந்தார் மத்தியூஸ்.

இதுவரை கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் துரத்தியடிக்கப்பட்ட மிகப்பெரிய இலக்கு 288. இந்திய அணி 2012இல் இலங்கையை வெற்றிகொண்டிருந்தது.
தென் ஆபிரிக்கா 300 என்ற சாதனை இலக்கை நோக்கி துடுப்பாடிய தென் ஆபிரிக்கா நான்காவது பந்திலேயே அம்லாவை சுரங்க லக்மாலின்  இழந்தது.
அதன் பின்னர் அவரோடு சேர்ந்து புதிய பந்தைப் பகிர்ந்துகொண்ட சுழல்பந்து வீச்சாளர் அகில தனஞ்செயவின் சுழல் வலையில் சிக்கித் தடுமாறியது தென் ஆபிரிக்கா.

அணியின் தலைவர் குயிண்டன் டீ கொக் 54 ஓட்டங்களை எடுக்க மற்ற எல்லோரும் தடுமாறி 25 ஓவர்களுக்குள் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

தனஞ்செய 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள். இது அவரது தனிப்பட்ட சிறந்த பெறுபேறு மட்டுமன்றி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கையின் பந்துவீச்சாளர் பெற்றுள்ள மிகச்சிறந்த பெறுதியாகவும் அமைந்துள்ளது.

இலங்கை அணி பெற்ற இன்றைய 178 ஓட்ட வெற்றி இலங்கை அணி தென் ஆபிரிக்காவுக்கு எதிராகப் பெற்றுள்ள இரண்டாவது பெரிய வெற்றியாகும்.

அகில தனஞ்செய போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
இந்தத் தொடரிலும் அவர் 14 விக்கெட்டுக்களை வீழ்த்திக்கொண்டார்.

தொடர் நாயகனாக தென் ஆபிரிக்காவின் ஜேபி டுமினி தெரிவானார்.
227 ஓட்டங்களை பெற்ற டுமினி, 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் 235 ஓட்டங்களையும்  தென் ஆபிரிக்க அணியின் தலைவரான டீ கொக் 213 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒற்றை T20 போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.



வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

உலகக்கிண்ணம் 2019 !! டிக்கெட் விற்பனை ஆரம்பம் கோலாகலம் !!

உலகக்கிண்ணம் 2019 !! டிக்கெட் விற்பனை ஆரம்பம் கோலாகலம் !!

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனைகள் இணையம் மூலமாக ஆரம்பித்துள்ளன.

இதை முன்னிட்டு முன்னாள் இங்கிலாந்து சகலதுறை வீரர் அன்றூ ஃப்ளின்டொப்பை வைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளது சர்வதேச கிரிக்கெட் சபை.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவும் இந்தப் பாடல் காணொளியில் தோன்றுகிறார்.


வியாழன், 9 ஆகஸ்ட், 2018

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி - மழையையும் மீறி இலங்கை வென்றது !!

பள்ளேக்கலையில் மழையின் குறுக்கீட்டால் பாதிக்கப்பட்ட நேற்றைய 4வது போட்டியில் இலங்கை அணிக்கு 3 ஓட்டங்களால் வெற்றி கிட்டியது.
ஆரம்பிக்க முதலே மழையின் தாமதத்தினால் 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
தென் ஆபிரிக்க அணியின் தலைவராக நேற்று அறிமுகமான குயிண்டன் டீ கொக் நாணய சுழற்சியில் வென்று இலங்கையை முதலில் துடுப்பாடப் பணித்திருந்தார்.
இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மத்தியூஸின் 200வது ஒருநாள் சர்வதேசப் போட்டியாகவும் நேற்றைய போட்டி அமைந்தது.
ஆரம்பம் முதலே பந்துகளை சிக்சர்கள் & பவுண்டரிகளாக சிதறடித்து இலங்கை அணி அதிரடித் துடுப்பாட்டம் ஆடியது.
விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்த ஆரம்ப ஜோடி நேற்று 61 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டது. அந்த வேகத்தை அப்படியே எடுத்துக்கொண்ட குசல் ஜனித் பெரேரா அதிரடி ஆட்டம் ஆடி அரைச்சதம் பெற்றார். 
குசல் ஜனித் பெரேரா 32 பந்துகளில் 51
இந்த ஆட்டத்தின்போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்தார்.
வேகமான அவரது இன்னிங்சின் பின்னர் சத இணைப்பாட்டம் இலங்கையின் இரண்டு அதிரடி சகலதுறை வீரர்களால் பெறப்பட்டது.
திஸர பெரேரா மற்றும் டசுன் ஷானக ஆகிய இருவரும் 68 பந்துகளில் 109 ஓட்டங்களை அதிரடியாக பெற்றனர். தென் ஆபிரிக்காவின் எல்லா பந்துவீச்சாளர்களும் பந்தாடப்பட்டனர்.

39 ஓவர்களாக மாற்றப்பட்ட போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு  306
டசுன் ஷானக 5 சிக்சர்களுடன் 34 பந்துகளில் 65

திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 51.

தென் ஆபிரிக்கா ஆட ஆரம்பித்து இரண்டு ஓவர்களிலேயே மீண்டும் மழை.
23 ஓட்டங்களை எடுத்திருந்த தென் ஆபிரிக்காவுக்கு 21 ஓவர்களில் 191 என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்களை எடுத்திருந்த தென் ஆபிரிக்க அணி அதன் பின்னர் இலங்கை அணியின் பந்துவீச்சில் தடுமாறியது.
மத்தியூஸ் மிக நேர்த்தியாகவும் சாமர்த்தியமாகவும் பந்துவீச்சாளர்களைக் கையாண்டார்.

துல்லியமான பந்துவீச்சு, சிறப்பான களத்தடுப்பில் கலக்கிய இலங்கை, தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடர்ச்சியான 11 தோல்விகளுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தது.
சுரங்க லக்மாலின் இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்தும் ஆடுகளத்தில் டேவிட் மில்லர் இருந்தும், லக்மால் அவரை ஆட்டமிழக்கச் செய்தும் துல்லியமாகப் பந்து வீசியும் இலங்கைக்கு வென்று கொடுத்தார்.
லக்மால் 3 விக்கெட்டுக்களையும், திஸர பெரேரா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரர், சகலதுறை ஆட்டக்காரர் டசுன் ஷானக.




ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

முதலிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி ! ஸ்டீவ் ஸ்மித்தைப் பின் தள்ளினார் !!


முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் துடுப்பாட்டத்தில் அசத்திய இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதற்தடவையாக முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்துவந்த அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பின் தள்ளியுள்ளார்.
2011ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தரப்படுத்தலில் முதலாமிடம் பெற்றதன் பின்னர் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடம் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் 149 மற்றும் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட விராட் கோலி இதுவரை காலமும் டெஸ்ட் தரப்படுத்தலில் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்த இந்திய வீரரான சுனில் கவாஸ்கரின் (911) சாதனையையும் தாண்டியுள்ளார்.

இப்போது விராட் கோலி 934 புள்ளிகளுடன் டெஸ்ட்டில் முதலாமிடத்தில் உள்ளத்துடன், ஒருநாள் தரப்படுத்தலிலும் முதலாமிடத்தில் இருந்து வருகிறார்.

பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக ஒரு வருடத் தடைக்கு ஆளாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

இன்றாவது வெல்லுமா இலங்கை?அதிர்ஷ்டம் தருமா பள்ளேக்கலை?#SLvSA

இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை களத்தடுப்பில் ஈடுபடுகிறது.
இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள்.
தனஞ்செய டீ சில்வா & லஹிரு குமார உள்ளே..
ஷெஹான் ஜயசூரிய & கசுன் ராஜித வெளியே.
தென் ஆபிரிக்கா தொடர்ந்து சோபிக்கத் தவறிய அய்டன் மார்க்கமுக்குப் பதிலாக ரீசா ஹென்றிக்சை அணியில் சேர்த்துள்ளது.
முதலிரு போட்டிகளில் தோல்வி கண்டுள்ள இலங்கை அணிக்கு வென்றேயாகவேண்டிய போட்டி இது.

சனி, 4 ஆகஸ்ட், 2018

கோலியின் தனி நபர் போராட்டம் வீண் ! இங்கிலாந்து அணிக்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி.

இரண்டாவது இன்னிங்க்சிலும் அரைச்சதம் பெற்றும் இந்திய அணித்தலைவர் விராட் கோலியினால்  இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது. 194 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டும் இன்றைய நாளில் 84 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையிலும் ஆரம்பித்த இந்தியாவின் வெற்றி விராட் கோலியிலேயே பெருமளவில் தங்கியிருந்தது.

கோலியின் முதலாம் இன்னிங்ஸ் சதம் ஏற்படுத்திய தாக்கம் இரண்டாம் இன்னிங்சிலும் வெற்றி இலக்கை இந்தியா கடக்க உதவிடும் என்று நம்பப்பட்டது.

அரைச்சதம் பெற்று உறுதியாக நின்று ஆடிக்கொண்டிருந்த கோலியை பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கச் செய்ததுடன் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி இந்தியாவை வீழ்த்தியது. ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் கோலி இரண்டு இன்னிங்சிலும் மொத்தமாக 200 ஓட்டங்களைப் பெற்ற அதே நேரம், ஏனைய பத்து வீரர்களும் சேர்ந்து இரண்டு இன்னிங்சிலும் 214 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டார்கள்.

இந்திய அணியின் பந்துவீச்சு இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக செய்து இங்கிலாந்து அணியை மடக்கியும் கூட, இந்தியாவின் மோசமான துடுப்பாட்டத்தால் அரிய வெற்றி ஒன்றுகைகூடாமல் போனது.

சகலதுறை வீரராக இப்போட்டியில் பிரகாசித்த சாம் கரன் போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

துடுப்பாட்டத்தில் 87 ஓட்டங்கள்.
விக்கெட்டுக்கள் 5.
இங்கிலாந்து சார்பாக போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவாகிய இளவயது வீரர் இவர் தான்.

ஆனாலும் இந்தப் போட்டியில் விராட் கோலியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது என்பது அனைத்து ரசிகரும் ஏற்றுக்கொள்ள  வேண்டிய ஒன்று.


வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

அசத்தல் சதமடித்து நிரூபித்த விராட் கோலி !!

இங்கிலாந்துக்கு எதிராக தற்போது எட்ஜ்பாஸ்டனில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் நேற்று அசத்தலான சதமடித்து தன்னை இங்கிலாந்து மண்ணிலும் வைத்து நிரூபித்துள்ளார் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி.

தன்னைச் சுற்றி விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்திலும் கூட திடமாக நின்று ஆடி இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதலாவது சதத்தைப் பூர்த்தி செய்தார் கோலி.
இது அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுள்ள 22வது சதமாகும்.

கடந்த இங்கிலாந்து சுற்றுலாவின்போது 10 இன்னிங்சில் 134 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த கோலி, நேற்று தன்னுடைய ஒரே இன்னிங்சில் அசத்தலாக 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

In 2014 faced 288 balls, scored 134 runs in 10 innings. In 2018 faced 225 balls, scored 149 runs in one innings!

இந்திய அணியின் தலைவராக தன்னுடைய முதலாவது இன்னிங்சிலேயே இங்கிலாந்து மண்ணில் சதமடித்த இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார்.
1990இல் மொஹமட் அசாருதீன் 121 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இந்திய அணி மொத்தமாக எடுத்த 274 ஓட்டங்களில் பாதிக்கும் மேலே கோலி குவித்த லாவகமும் எல்லா இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களுக்கு மற்ற எல்லா இந்தியத் துடுப்பாட்ட வீரர்களும் தடுமாறிய நேரம் லாவகமாக கோலி ஆடிய விதமும் உலகம் முழுவதும் ஏராளமான பாராட்டுக்களை கோலிக்கு பெற்றுக்கொடுத்துள்ளன.

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

மோசமான களத்தடுப்பின் விளைவு - மீண்டும் ஒரு தோல்வி இலங்கைக்கு

பாடசாலை அணி போல மிக மோசமாகக் களத்தடுப்பில் ஈடுபட்ட எமக்கு இந்தத் தோல்வி உகந்தது தான் - இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் நேற்றைய போட்டியின் பிறகு விரக்தியும் கவலையாக சொன்னவை இவை.

மிக மோசமான முறையில் பிடிகளைத் தவறவிட்ட இலங்கை அணி, பந்துகளைத் தடுப்பதிலும் சறுக்கல்களை வெளிப்படுத்தியது. பெரியளவு ஓட்டங்களைப் பெறாவிட்டாலும் கொஞ்சமாவது போராட்டத் திறனை வெளிப்படுத்தி வென்றிருக்கக்கூடிய போட்டியில் 4 விக்கெட்டுக்களால் தோற்றுப்போனது.

இலங்கை அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற  இரண்டாவது ஒருநாள் போட்டியில்,  தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இதன் மூலம் தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி நிர்ணயித்திருந்த 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 42.5 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
விக்கெட் காப்பாளர் டீ கொக்கின் அதிரடியான 87 ஓட்டங்கள் தென் ஆபிரிக்காவுக்கு கைகொடுத்தது.


பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி உபாதைக்குள்ளாகியுள்ள லஹிரு குமாரவுக்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜிதவையும், லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக அறிமுக சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரியவையும் களமிறக்கியது.

முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் தென்னாபிரிக்க அணி, அதே பதினொருவருடன் நேற்றைய போட்டியில் களமிறங்கியிருந்தது.

முதல் போட்டியில் வேகப் பந்துவீச்சின் மூலமாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்த தென்னாபிரிக்க அணி, நேற்றைய போட்டியிலும் அதே பாணியை கையாண்டது. முதலாவது போட்டியில் றபாடாவிடம் சவாலை எதிர்கொண்ட இலங்கை அணிக்கு, லுங்கி என்கிடி கடுமையான சவாலை முன்வைத்தார்.

விக்கெட்டுக்களை இடையிடையே இழந்த இலங்கை அணிக்கு அணித் தலைவர் அஞ்செலோ மத்தியூசுடன் இணைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நிரோஷன் திக்வெல்ல தனது ஆறாவது ஒருநாள் அரைச்சதத்தை பூர்த்திசெய்தார். இந்த அரைச்சதமானது சுமார் 16 இன்னிங்சுகளுக்கு பின்னர் திக்வெல்ல பெற்ற அரைச்சதமாக பதிவாகியது. தொடர்ந்தும் இருவரும் நிதானமாக ஆட இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை கடந்தது. 

 இறுதிவரை போராடிய அஞ்செலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 111 பந்துகளை எதிர்கொண்டு 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.

மத்தியூஸ் தன்னைச் சுற்றி விக்கெட்டுக்களை இழந்துகொண்டிருந்ததனால் இறுதிவரை வேகம் சற்று மந்தமாகவே ஆடியிருந்தார்.
இந்த ஆட்டத்துடன் 3000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்களை அணித்தலைவராகப் பெற்ற நான்காவது இலங்கைத் தலைவரானார்.
5608 - Arjuna Ranatunga (183 inns) 4377 - Sanath Jayasuriya (118 inns) 3352 - Mahela Jayawardene (117 inns) 3075 - Angelo Mathews (88 inns)*

தம்புள்ளை மைதானத்தை பொறுத்தவரையில் சற்று சவால் மிக்கதான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த முற்பட்ட போதும், இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பின் காரணமாக பிடியெடுப்புகள் தவறவிடப்பட்டதுடன், எதிரணிக்கு மேலதிக ஓட்டங்களும் வாரி வழங்கப்பட்டது.

இதன்படி ஓட்டங்கள் குவிக்கப்பட, தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் அரைச்சதம் கடக்க, டெஸ்ட் தொடரில் மோசமாக துடுப்பெடுத்தாடி வந்த ஹாஷிம் அம்லாவும் குயின்டன் டி கொக்கிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார். எனினும் தொடர்ந்து தனது துடுப்பாட்டத்தை நகர்த்த முடியாத, அம்லா 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய தனஞ்சய  புதிதாக களமிறங்கிய எய்டன் மர்க்ரமையும் 3 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். இதனால் தென்னாபிரிக்க அணி 109 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

எவ்வாறாயினும் மர்க்ரமின் இடத்தை நிரப்புவதற்காக களமிறங்கிய அணியின் தலைவர் ஃபப் டு ப்ளெசிஸ் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க, மறுனையில் குயின்டன் டி கொக்கும் வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். இருவரும் 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, தென்னாபிரிக்க அணி வேகமாக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. இதில் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த குயின்டன் டி கொக், கசுன் ராஜிதவின் பந்தை எல்லைக்கோட்டுக்கு செலுத்த முற்பட்ட வேளை, லக்மாலிடம் பிடிகொடுத்து 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இந்த விக்கெட்டானது கசுன் ராஜிதவின் முதலாவது ஒருநாள் விக்கெட்டாகவும் பதிவானது.
முன்னதாக ராஜிதவின் பந்துவீச்சில் இரண்டு பிடிகள் தவறவிடப்பட்ட்துடன் ராஜிதவும் மிக மோசமாகக் களத்தடுப்பில் ஈடுபட்டார்.

இலங்கை அணியின் டிக்வெல்ல நேற்று துடுப்பாடும்போது உபாதைக்குள்ளானதை அடுத்து குசல் ஜனித் பெரேராவே விக்கெட் காப்பில் ஈடுபட்டிருந்தார்.

விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும், சிறந்த ஓட்டவேகத்துடன் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி வெற்றி இலக்கை நெருங்கியது. இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாப் டு ப்ளெசிஸ், 41 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அடுத்துவந்த டேவிட் மில்லர் 3 ஓட்டங்களுடன் வெளியேறி ஏமாற்றினார். இதற்கிடையில் துடுப்பெடுத்தாடிய ஜே.பி.டுமினி 29 பந்துகளுக்கு 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்கினார்.

இறுதியாக களம் நுழைந்த வியாம் முல்டர் 19 ஓட்டங்களையும், பெஹலுக்வாயோ 7 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து,  தங்களது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியை உறுதிசெய்தனர்.

இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், திசர பெரேரா மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் பகிர்ந்தனர்.
லக்மல் தனது நூறாவது ஒருநாள் சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றியதுடன் திஸர பெரேரா 150வது விக்கெட்டைக் கைப்பற்றிக்கொண்டார்.


இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என தென்னாபிரிக்க அணி முன்னேறியுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.


நெதர்லாந்தின் மீள் வருகை வெற்றி ! நேபாளத்தின் கன்னி ஒருநாள் சர்வதேசப்போட்டி தோல்வி !!


நேற்று தன்னுடைய கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் நேபாள அணி  நெதர்லாந்திடம் 55 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. எனினும் அந்த அணி சிறப்பாக பந்துவீசியதோடு துடுப்பாட்டத்திலும் வெற்றிக்காக போராடியது.

இதேவேளை அடுத்த உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டியில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஒருநாள் சர்வதேச அந்தஸ்தை கடந்த மார்ச் மாதம் பெற்றுக்கொண்ண்ட நெதர்லாந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியிருந்தது.

  இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 27 ஆவது அணியாகவும் நேபாளம் பதிவானது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு நவம்பரில் பப்புவா நியூகினி அணியே தனது கன்னி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.


இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடவே நேபாள அணி நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி அம்ஸ்டல்வீன் நகரில் உள்ள ஏசுயு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஒப்பீட்டளவில் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் மிக்க அணியான நெதர்லாந்தின் முதல் விக்கெட் 5 ஓட்டங்களுக்கு பறிபோனது. இதனைத் தொடர்ந்து முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு நேபாள பந்துவீச்சாளர்களால் முடியுமானது.

மிதவேகம் மற்றும் சுழல்  பந்து வீசக்கூடிய சகலதுறை வீரரான அணித் தலைவர் பரஸ் கத்கா நெதர்லாந்து மத்திய வரிசையை தணறிடித்தார். அவர் முக்கிய நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த நெதர்லாந்து அணியால் ஓட்டங்களை அதிகரிக்க முடியவில்லை.

மத்திய பின்வரிசையில் வந்த மைக்கல் ரிப்போன் 51 ஓட்டங்களை பெற்று நேபாளத்திற்கு சவால் கொடுக்கும் ஓட்டங்களை பெற உதவினார்.

இதன் மூலம் நெதர்லாந்து அணி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. இதன்போது நேபாள அணி சார்பில் ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் சோம்பால் காமி (Sompal Kami) 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எட்ட முடியுமான 190 என்ற ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நேபாள அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கியானன்ந்ரா மல்லா 61 பந்துகளுக்கு 51 ஓட்டங்களை பெற்று நேபாள அணிக்காக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதல் அரைச்சதம் பெற்றவராக வரலாறு படைத்தார்.

ஒருகட்டத்தில் 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்த நேபாள அணியின் மத்திய வரிசையில் வந்த மூன்று வீரர்கள் அடுத்தடுத்த பூஜ்யத்திற்கு ஆட்டமிழந்தனர். பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க அந்த அணி 41.5 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்போது நெதர்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பெற்ற ரிப்போன்  பந்துவீச்சிலும் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த ஒருநாள் தொடரில் நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 


1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான நெதர்லாந்து அணி நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியது. அந்த அணி இதற்கு முன்னர் கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் கனடாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தது.

மறுபுறம் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கிரிக்கெட் அதிக பிரபலமான விளையாட்டாக இருக்கும் நிலையில் நேபாளம் தனது முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடுவதை ஒட்டி அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் போட்டியை பார்வையிட்டனர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.சி.சி. உலகக் கிரிக்கெட் லீக்கின் ஐந்தாவது பிரிவில் ஆடிய நேபாளம் தற்போது ஒருநாள் அந்தஸ்து பெற்ற 16 அணிகளில் ஒன்றாக உயர்வு பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

நெதர்லாந்து – 189 (47.4) – மைக்கல் ரிப்போன் 51, பேஸ் டி லீட் 30, ஸ்டீபன் மைபேர்க் 29, பரஸ் கட்கா 4/26, சோம்பால் காமி 3/34

நேபாளம் – 134 (41.5) – கியானன்ந்ரா மல்லா 51, தீபேந்ரா சிங் அரீ 33, பீட்டர் சீலார் 3/20, மைக்கல் ரிப்போன் 3/23, பிரெட் கிளாசன் 3/30 

முடிவு – நெதர்லாந்து அணி 55 ஓட்டங்களால் வெற்றி


Related Posts Plugin for WordPress, Blogger...