இலங்கையின் சுழல் வலையில் சிக்கிய தென் ஆபிரிக்கா - 98 க்கு சுருண்டு தோல்வியடைந்தது

நேற்று கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற தனியொரு T20 சர்வதேசப் போட்டியில், தனஞ்செய டீ சில்வா & தடை தாண்டி வந்த தினேஷ் சந்திமால் சாகசங்களுடன் குறைந்த ஓட்டங்கள் கொண்ட போட்டியில் விறுவிறுப்பான வெற்றியைப் பெற்றது இலங்கை !!

தென் ஆபிரிக்காவின் குறைந்த T20 சர்வதேச ஓட்ட எண்ணிக்கை நேற்றைய நாளில் பதிவானது.
இலங்கையின் சுழல் வலையில் சிக்கிய தென் ஆபிரிக்கா அதிலிருந்து மீள முடியாமல் சுருண்டு போய், 16.4 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தென் ஆபிரிக்கா 100 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததே மிகக்குறைவான ஓட்ட எண்ணிக்கையாக அமைந்திருந்தது.
காசும் ராஜிதவுடன் ஆரம்பப் பந்துவீச்சாளராக ஆரம்பித்த தனஞ்சய டீ சில்வாவின் சுழலில் முதலில் தடுமாறிய தென் ஆபிரிக்கா அதன் பின்னர் அகில தனஞ்செய மற்றும் லக்ஸன் சண்டக்கான் ஆகியோரது சுழல்பந்துவீச்சில் தடுமாறி விக்கெட்டுக்களை இழந்தது.
மூன்று சுழல்பந்து வீச்சாளர்களும் சேர்ந்து 12 ஓவர்களில் 56 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
இதில் சண்டக்கான் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

99 இலகுவான இலக்காகத் தெரிந்தாலும் கூட, தென் ஆபிரிக்காவின் பதிலடிப் பந்துவீச்சில் ஆடிப்போனாலும் சந்திமாலின் நிதானத்தால் 3 விக்கெட் வெற்றியைப் பெற்றது. முதல் இரு விக்கெட்டுக்களை 6 ஓட்டங்களுக்குள் இழந்தாலும் சந்திமாலோடு சேர்ந்து தனஞ்சய டீ சில்வா பெற்ற அரைச்சத இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு நம்பிக்கையை அளித்தது. 

றபாடா, ஷம்சி, டாலா ஆகியோரின் பந்துவீச்சு இடையிடையே விக்கெட்டுக்களை வீழ்த்தினாலும், சந்திமாலின் நிலைப்பும் கடைநிலை துடுப்பாட்ட வீரர்களை வழிநடத்திய விதமும் இலங்கை அணிக்கு 3 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
தனஞ்சய டீ சில்வா 20 பந்துகளில் 31 ஓட்டங்களைப்பெற்றார். சந்திமால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை எடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் - தனஞ்செய டீ சில்வா

கருத்துரையிடுக

புதியது பழையவை