Latest Updates

6/recent/ticker-posts

புதிய அடையாளத்துடன் களம் காணும் கொழும்பு கப்ஸ் - Colombo Kaps ! Lanka Premier League 2026

 புதிய அடையாளத்துடன் களம் காணும் கொழும்பு கப்ஸ் - Colombo Kaps ! 

                             Lanka Premier League 2026 




கடந்த 2024 ஆம் ஆண்டுக்கு பின்னர், கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீண்டும் பிரம்மாண்டமாக களம் காணவுள்ளது லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர். இதன் 06 ஆவது சீசன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொழும்பு  அணி முற்றிலும் புதியதொரு அத்தியாயத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

கொழும்பு அணியின் பெயர் மாற்றங்களின் வரலாறு:

லங்கா பிரீமியர் லீக் வரலாற்றில் ஆரம்பம் முதலே ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற கொழும்பு அணி, பல சீசன்களில் தனது அடையாளங்களை மாற்றிக்கொண்டு வந்துள்ளது.

  • எல்.பி.எல் முதலாவது சீசனில் 'கொழும்பு கிங்ஸ்' (Colombo Kings) என அறிமுகமாகி,

  • பின்னர் 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் 'கொழும்பு ஸ்டார்ஸ்' (Colombo Stars) எனப் பரிணமித்தது.

  • அதன் பின்னர் கடந்த 2023-2024 காலப்பகுதியில் 'கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்' (Colombo Strikers) என விளையாடிய இந்த அணி, தற்போது புதிய உரிமையின் கீழ் 'கொழும்பு கப்ஸ்' (Colombo Kaps) என்ற புத்தம் புதிய கம்பீரமான அடையாளத்துடன் களம் இறங்கவுள்ளது.

புதிய உரிமையாளர்கள் யார்?

சரண்யன் பழனிசாமி மற்றும் கே.சி. ஷியாம் கங்கயன் தலைமையிலான 'விட்னஸ் ஸ்போர்ட்ஸ் அலையன்ஸ்' (Witness Sports Alliance LLC) நிறுவனம், கொழும்பு கப்ஸ் அணியின் உரிமையை அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளது. ஒரு பலம் வாய்ந்த, ரசிகர்களை மையமாகக் கொண்ட அணியை உருவாக்கி எல்.பி.எல் 06 சீசனில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நட்சத்திர வீரர்களின் முன்கூட்டிய ஒப்பந்தம்:

புதிய உரிமையின் கீழ் களமிறங்கும் கொழும்பு கப்ஸ் அணி, இப்போதே தனது உள்ளூர் வீரர்களின் பலத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரையும் முன்கூட்டியே (Pre-signings) ஒப்பந்தம் செய்து, தங்களது பலமான அடித்தளத்தை அணி இப்போதே உறுதி செய்துள்ளது.

நிர்வாகத்தின் தொலைநோக்குப் பார்வை:

நவீன தொழில்நுட்பம் மற்றும் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு முன்மாதிரியான அணியை உருவாக்குவதே தங்களின் முக்கிய நோக்கம் என புதிய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதுடன், எல்.பி.எல் தொடரில் நீண்டகால வெற்றிகளைப் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புதிய உரிமையாளர்களின் வருகையை எல்.பி.எல் தொடரின் பணிப்பாளர் சமந்த டொடன்வல வரவேற்றுள்ளார். அத்துடன், ஐ.பி.ஜி குளோபல் (IPG Global) தலைவர் அனில் மோகன் கூறுகையில், கொழும்பு கெப்ஸ் அணியின் இந்த புதிய வரவு எல்.பி.எல் தொடருக்கு மேலும் விறுவிறுப்பையும் பலத்தையும் சேர்க்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்