15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்தில் தனி உடைமாற்றும் அறை! ஐசிசி விதிகளால் விநோத கட்டுப்பாடு
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் அதிரடித் துடுப்பாட்டப் புயல் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடரின் போது சக வீரர்களுடன் அல்லாமல், தனியான உடைமாற்றும் அறையை (Changing Facilities) பயன்படுத்த வேண்டியிருக்கும் என்ற விநோத தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் நாளிதழான 'தி கார்டியன்' (The Guardian) இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பெல்ஃபாஸ்ட்டில் நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகவுள்ள 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி, இந்தியாவின் மிக இளம் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளார். அயர்லாந்து போட்டிக்குப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள் என்ன சொல்கின்றன?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (ECB) சிறுவர் பாதுகாப்பு விதிகளின்படி, 16 வயதுக்குட்பட்ட இளம் வீரர்கள், பெரியவர்களுக்கான (Adults) உடைமாற்றும் அறைகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை. இதன் காரணமாகவே, இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் வைபவ் சூர்யவன்ஷிக்குத் தனி வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளன.
இருப்பினும், இந்தத் தடை உடைகளை மாற்றுவதற்கும், குளிப்பதற்கும் மட்டுமே பொருந்தும். போட்டிகளின் போதோ அல்லது அணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களின் போதோ அவர் வழக்கம் போல் இந்திய அணியின் முதன்மை டிரஸ்ஸிங் ரூமிற்குள் (Dressing Room) இருக்க முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோருடன் பயணிக்கும் இளம் வீரன்:
இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாகக் கையாள்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடனும் (BCCI) மைதான அதிகாரிகளுடனும் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. மேலும், இந்தத் தொடர் முழுவதும் வைபவ்வின் பெற்றோரும் அவருடனேயே தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டியதுடன், இலங்கை ஏ அணிக்கு எதிராக வெறும் 29 பந்துகளில் 94 ஓட்டங்கள் விளாசி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த இளம் திறமையாகக் கொண்டாடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்