ரஞ்சி சாதனையாளர்கள் முதல் ஐபிஎல் நட்சத்திரங்கள் வரை: ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த 4 இளம் வீரர்கள்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத (Uncapped) நான்கு இளம் வீரர்களுக்கு முதன்முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தங்களது அபார திறமையால் இந்திய அணியின் கதவுகளைத் தட்டிய அந்த 4 வீரர்கள் யார், அவர்களின் பின்னணி மற்றும் புள்ளிவிவரங்கள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்:
1. குர்நூர் ப்ரார் (Gurnoor Brar) - டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி
6 அடி 5 அங்குல உயரத்தைக் கொண்ட இந்த வலதுகை வேகப்பந்து வீச்சாளரை, தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் தான் தனது அண்டர்-19 காலப்பகுதியில் அடையாளங்கண்டார். கில்லின் உதவியால் மொஹாலி மாவட்ட அணியில் நுழைந்த இவர், பின்னர் பஞ்சாப் அண்டர்-23 அணியில் இடம்பிடித்தார். காயத்தினால் ஒரு சீசனை இழந்த போதிலும், மீண்டு வந்து ரஞ்சி கிண்ணத் தொடரிலும், இந்தியா ஏ அணி போட்டிகளிலும் பந்துவீச்சில் மிரட்டினார். இவரது அசாத்திய உயரமும் பந்துவீச்சு வேகமும் தான் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரை கவர்ந்து, இவருக்கு இந்திய அணியில் இடத்தை பெற்றுத் தந்துள்ளது.
முக்கிய புள்ளிவிவரங்கள்:
2024/25 ரஞ்சி கிண்ணத் தொடர்: 7 போட்டிகளில் 20.30 சராசரியுடன் 26 விக்கெட்டுகள்.
இந்தியா ஏ (2025): ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 'டெஸ்ட்' போட்டிகளில் 3 இன்னிங்ஸ்களில் 8 விக்கெட்டுகள்.
முதல்தர அறிமுக போட்டி: ரயில்வேஸ் அணிக்கு எதிராக 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் (4-16).
2. ஹர்ஷ் துபே (Harsh Dubey) - டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், விதர்பா அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஹர்ஷ் துபேவுக்கு இந்த நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு ரஞ்சி கிண்ண சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையை தன்வசம் வைத்துள்ள இவர், ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் முக்கிய வீரராகத் திகழ்கிறார்.
முக்கிய புள்ளிவிவரங்கள்:
ரஞ்சி கிண்ண சாதனை (2024/25): ஒரே சீசனில் 16.98 சராசரியுடன் 69 விக்கெட்டுகள் (7 முறை ஐந்து விக்கெட்டுகள்).
முதல்தர போட்டிகள் (First Class): 27 போட்டிகளில் 23.26 சராசரியுடன் 133 விக்கெட்டுகள்.
லிஸ்ட் ஏ போட்டிகள் (List A): 30 போட்டிகளில் 31 விக்கெட்டுகள்.
டி20 போட்டிகள் (T20s): 38 போட்டிகளில் 7.57 எகானமியுடன் 34 விக்கெட்டுகள்.
3. மானவ் சுதார் (Manav Suthar) - டெஸ்ட் அணி
ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதார், நீண்ட நாட்களாகவே இந்திய அணியின் கதவைத் தட்டிக் கொண்டிருந்த ஒரு திறமையாளர் ஆவார். ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் அணியில் இருந்ததால் இவருக்கு வாய்ப்பு தாமதமானது. இந்தியா ஏ அணிக்காக இங்கிலாந்து லயன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கியதன் மூலம் தற்போது டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
முக்கிய புள்ளிவிவரங்கள்:
முதல்தர போட்டிகள்: 29 போட்டிகளில் 25.76 சராசரியுடன் 129 விக்கெட்டுகள் (6 முறை ஐந்து விக்கெட்டுகள், 3 முறை 10 விக்கெட்டுகள்).
2022/23 ரஞ்சி கிண்ண சீசன்: 6 போட்டிகளில் 20.33 சராசரியுடன் 39 விக்கெட்டுகள்.
4. பிரின்ஸ் யாதவ் (Prince Yadav) - ஒருநாள் அணி
2025 ஐபிஎல் ஏலத்தில் 30 இலட்சம் ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியால் வாங்கப்பட்ட 24 வயதான பிரின்ஸ் யாதவ், நடப்பு 2026 ஐபிஎல் சீசனின் மிகப்பெரிய 'பிரேகவுட்' நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். புதிய மற்றும் பழைய பந்து என இரண்டிலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் இவரின் திறமை இந்திய ஒருநாள் அணியில் இவருக்கு இடத்தை பெற்றுத் தந்துள்ளது. டெல்லி பிரீமியர் லீக் மூலம் வெளிச்சத்திற்கு வந்த இவர், நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திப் பலரதும் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய புள்ளிவிவரங்கள்:
ஐபிஎல் 2026 (நடப்பு சீசன்): 13 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் (லக்னோ அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர்).
லிஸ்ட் ஏ போட்டிகள்: 14 போட்டிகளில் 20.31 சராசரியுடன் 29 விக்கெட்டுகள்.
- M.அக்பர்சையத் முஷ்டாக் அலி கிண்ணத் தொடர் (2024/25): 7.54 எகானமியுடன் 11 விக்கெட்டுகள் (டெல்லி அணியில் அதிக விக்கெட்டுகள்).

0 கருத்துகள்