Latest Updates

6/recent/ticker-posts

விறுவிறுப்பான முதலாவது போட்டி - இரண்டு ஓட்டங்களால் பாகிஸ்தானுக்கு வெற்றி


விறுவிறுப்பாக நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T 20 சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.


தரப்படுத்தலில் உலகின் முதல்தர அணியான பாகிஸ்தான் அணியுடன் மூன்று சர்வதேச T 20 போட்டிகள், மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியுஸிலாந்து அணி அபுதாபியில் நேற்று முதலாவது போட்டியில் மோதியது.

அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற T 20 தொடரை 3-0 என வெற்றி பெற்ற உற்சாகத்தோடு நியுஸிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

இப்போட்டியில் நியுஸிலாந்து அணி சார்பாக சுழல் பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் சர்வதேச T 20 போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பாபர் அசாம் மற்றும் சிப்ஷாடா பர்ஹான் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 10 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த ஆசிப் அலி மற்றும் மொஹமட் ஹஃ பீஸ் ஜோடி சிறப்பாக விளையாடி 67 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளை ஹஃபீஸ் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆசிப் அலி 24 ஓட்டங்களுடனும், அதிரடியாக விளையாடிய அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் 34 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய இமாத் வஷீம் வெறும் 5 பந்துகளில் 14 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் அடம் மில்னே இரண்டு விக்கெட்டுகளையும் ஏனைய மூன்று பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.


பின்னர், 149 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியுஸிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கொலின் மன்றோ மற்றும் க்லென் பிலிப்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டம் நியுஸிலாந்து அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தது.

இவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டுக்காக 6 ஓவர்களில் 50 ஓட்டங்கள் பெற்றிருந்தனர். எனினும், சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி போட்டியின் தன்மையை மாற்றியமைத்தார்.

நியுஸிலாந்து அணியின் முதலாவது விக்கெட்டாக  க்லென் பிலிப்ஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். கொலின் மன்றோ அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இறுதி ஓவரில் 17 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் நியூசீலாந்து அணியினால் 14 ஓட்டங்களை மட்டுமே  பெறமுடிந்தது.

கடைசி வரை வெற்றிக்காக போராடிய அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இறுதியில் நியுஸிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழந்து 146 ஓட்டங்களை பெற்று 2 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில்  ஹசன் அலி மூன்று விக்கெட்டுகளையும் இமாத் வசீம் மற்றும் ஷடாப் கான் ஆகியோர் ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது மொஹமட் ஹஃபீஸுக்கு வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்