Latest Updates

6/recent/ticker-posts

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அணி தானா? - தமிழரின் பெருமைக்கும் CSKக்கும் என்ன தொடர்பு?

சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் பூனே நகருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அடையாளம் என்ற ரீதியிலும், அந்த அணியில் இரண்டு தமிழக வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறித்து எதிர்வினைகளும் சமூகவலைத்தளங்களில் இடம்பெறுள்ளன.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக பலர் தீவிரமாக சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிடுகின்றனர். விசில்போடு என்ற ஹேஷ்டாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், அந்த அணியில் விளையாடும் வீரர்களையும் தமிழர்களின் அடையாளமாக கருதி பலர் சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிடுகின்றனர்.


இந்நிலையில், 2018 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகிய இருவரும் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் இவர்கள் இருவரும் களத்தில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

சமூக வலைத்தளங்களில் இது குறித்து கேள்விகள் எழுப்பும் பலரும் சென்னை அணியில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆனால், அதே சமயம் சென்னை அணி என்றால் அதில் தமிழக வீரர்கள் மட்டுமே அதில் இடம்பெற்று இருக்க வேண்டும் என்று பொருளில்லை என சில விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளில் தமிழக வீரர்கள் அணித்தலைவர்களாக உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'கேளிக்கை மட்டுமே ஐபிஎல்லின் நோக்கம்'

இது குறித்து எழுத்தாளரும், விளையாட்டு ஆர்வலருமான பத்ரி சேஷாத்ரி பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''ஐபிஎல் தொடரே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து லீக் போட்டிகள்போல நடத்துவதற்காக தொடங்கப்பட்டதுதான் ஐபிஎல்'' என்று கூறிய பத்ரி சேஷாத்ரி, ஐபிஎல் தொடரால் உள்ளூர் பற்று எதுவும் அதிகரிக்காது” என்று தெரிவித்தார்.

''இந்த தொடரில் ஊர்ப் பெருமை முக்கியத்துவம் பெறவில்லை. நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதை இந்தியா சிமெண்ட்ஸ் சூப்பர் கிங்ஸ் அணி என மாற்றினால்கூட கிரிக்கெட் ஆர்வலர்கள் பார்ப்பார்கள் என்று பத்ரி சேஷாத்ரி குறிப்பிட்டார்.


ஐபிஎல் தொடர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவை தமிழகத்தின் பெருமை என்று கூற முடியாது. ரஞ்சி கோப்பை ஆட்டங்களை வேண்டுமானால் அப்படி கூறலாம். அதுதான் உண்மையான தமிழக அணியின் பிரதிபலிப்பு என்று அவர் தெரிவித்தார்.

உள்ளூர் வீரர்களை ஐபிஎல் ஊக்குவிக்கவில்லையா?

''சென்னை அணி எப்படி தமிழரின் பெருமை என்று கூற முடியும்? பிராவோ மற்றும் தோனி ஆகியோர் வேட்டி கட்டிக் கொண்டு வந்தால் அது கோமாளித்தனமாகதான் படுகிறது'' என்றார் பத்ரி சேஷாத்ரி.

''சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தமிழரின் அடையாளம் என்று கூறுவது முழுக்க முழுக்க விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலை நோக்கமாக கொண்டது மட்டுமே. ஆனால், இது வெகு காலம் நீடிக்காது. இந்த அடையாள எல்லை விரைவில் தகர்ந்துவிடும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் உள்ளூர் வீரர்களை ஊக்குவிப்பது இந்த தொடரின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தொடர் மீது எழுந்த விமர்சனங்களுக்காக சொல்லப்பட்ட சமாதானம்தான் அது என்று அவர் கூறினார்.

''உண்மையான கிரிக்கெட் ரசிகன் தமிழரின் பெருமை, கர்நாடகத்தின் பெருமை என எதையும் கருத்தில் கொள்ளாமல் கிரிக்கெட் விளையாட்டை மட்டுமே பார்ப்பான்'' என்று பத்ரி சேஷாத்ரி தெரிவித்தார்.

உள்ளூர் வீரர்கள் எண்ணிக்கை குறைவதற்கு என்ன காரணம்?

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது ஒவ்வோர் அணியிலும் மூன்று அல்லது நான்கு உள்ளூர் வீரர்கள் இடம்பெறுவர் என்று கூறப்பட்டது.

தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது பற்றி மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி கூறுகையில், ''உள்ளூர் திறமைகளை வெளிக்கொணர்வது மற்றும் ஊக்குவிப்பது இந்த தொடரின் நோக்கம் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது'' என்று நினைவுகூர்ந்தார்.

ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது ஏற்கனவே சாதித்த வீரர்கள் மூலம் அணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதே பிரதான நோக்கமாக மாறிவிட்டது என்று அவர் கூறினார்.


விஜய் லோக்பாலி
''சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறும் பிரதான வீரர்களான தோனி, ஜடேஜா போன்றோர் உள்ளூர் வீரர்கள் இல்லை. முரளி விஜய் மற்றும் மற்றொரு தமிழக வீரர் மட்டுமே நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்'' என்று விஜய் லோக்பாலி கூறினார்.

ஐபிஎல் - ஆரம்பத்தில் சொன்னது நடந்ததா?

வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் தமிழக ரஞ்சி அணி மூலம் வளர்ந்தார்கள். ஐபிஎல் புதிதாக எந்த இளம் வீரரையும் உருவாக்கவில்லை. இளம் உள்ளூர் வீரர்களை உருவாக்குவதை ஐபிஎல் நோக்கமாக கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது நடக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரை கேளிக்கையாக மட்டுமே கருதமுடியும், ஐபிஎல் அணிகளுக்கும் ஊர், மொழி மற்றும் நாட்டுப்பற்றுக்கும் எந்த தொடர்புமில்லை என்று விஜய் லோக்பாலி மேலும் கூறினார்.


முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன.

காவிரி பிரச்சனைக்காக போராட்டங்கள் நடந்த சூழ்நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானப் பகுதியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரை உலகப் பிரபலங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று போராட்டங்களை நடத்தின.


கருத்துரையிடுக

0 கருத்துகள்