Latest Updates

6/recent/ticker-posts

ஆஷஸ் தொடரை ஆட்டிப்படைக்கும் 'ஸ்னிக்கோ' சர்ச்சை: அவுஸ்திரேலியா ஏன் இன்னும் இதை பயன்படுத்துகிறது?

 

ஆஷஸ் தொடரை ஆட்டிப்படைக்கும் 'ஸ்னிக்கோ' சர்ச்சை: அவுஸ்திரேலியா ஏன் இன்னும் இதை பயன்படுத்துகிறது?



கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர் பந்தை அடித்தாரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ‘ஸ்னிக்கோமீட்டர்’ (Snicko), தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஸ்னிக்கோ (Snicko) என்றால் என்ன? 

பந்து துடுப்பாட்ட மட்டையில் பட்டதா என்பதை மீளாய்வு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு ஒலி அடிப்படையிலான தொழில்நுட்பமே இதுவாகும். துடுப்பாட்ட வீரர் பந்தை அடிக்கும்போது ஏற்படும் ஒலியை, ஸ்டம்ப் மைக்கில் இருந்து பெற்று அதை வீடியோ காட்சிகளுடன் ஒத்திசைத்து அலைவடிவமாக (Waveform) திரையில் காட்டும்.

ஏன் இந்த சர்ச்சை? 

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி கொடுத்த பிடியெடுப்பு (Catch) முறையீட்டை 'ஸ்னிக்கோ' நிராகரித்தது. ஆனால், தான் பந்தை அடித்ததை கேரி பின்னரே ஒப்புக்கொண்டார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர் ஆட்டமிழக்காமல் தப்பி, சதம் கடந்தார். இதேபோல், இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்ததும் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



UltraEdge-க்கும் Snicko-க்கும் என்ன வித்தியாசம்? 

இங்கிலாந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் 'UltraEdge' எனும் மேம்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது வினாடிக்கு 340 பிரேம்களை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. ஆனால், அவுஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனமான 'ஃபொக்ஸ் ஸ்போர்ட்ஸ்' (Fox Sports), செலவு குறைவு என்பதால் இன்னும் பழைய 'ஸ்னிக்கோ' முறையையே பயன்படுத்தி வருகிறது.

ஏன் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தலையிடுவதில்லை? 

உலகக்கிண்ணத் தொடர்களைத் தவிர மற்ற இருதரப்புத் தொடர்களுக்கான DRS செலவுகளை அந்தந்த நாட்டு ஒளிபரப்பு நிறுவனங்களே ஏற்கின்றன. UltraEdge தொழில்நுட்பத்திற்கான உரிமக் கட்டணம் மிக அதிகம் என்பதால், வரவு செலவுத் திட்டத்தைக் கருத்தில் கொண்டு அவுஸ்திரேலிய நிறுவனங்கள் ஸ்னிக்கோவை தேர்வு செய்கின்றன.

நிபுணர்களின் கருத்து: முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் மைக்கேல் வோன் கூறுகையில், "ஸ்னிக்கோ மீது வீரர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இது ஒரு தரமற்ற தொழில்நுட்பம்" எனச் சாடியுள்ளார். அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்கும், நடுவர்களே இந்தத் தொழில்நுட்பத்தை நம்பத் தயங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

ஹொட் ஸ்பாட் (Hot Spot) என்ன ஆனது? 

வெப்ப உணர் கருவிகள் மூலம் பந்து பட்டதைக் கண்டறியும் 'ஹொட் ஸ்பாட்' தொழில்நுட்பம், நம்பகத்தன்மை குறைவு மற்றும் ஒரு நாளைக்கு 6,000 பவுண்டுகள் வரை செலவாகும் என்பதால் 2013-14 ஆஷஸ் தொடருக்குப் பிறகு கைவிடப்பட்டது.

தற்போது எழுந்துள்ள கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, எதிர்காலத் தொடர்களில் அவுஸ்திரேலியா நவீன தொழில்நுட்பங்களுக்கு மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்