Latest Updates

6/recent/ticker-posts

தோனியால் தோற்ற சென்னை ??!! தலைமைத்துவத்தில் அசத்திய அஷ்வின் !!​ #KXIPvCSK #IPL2018

தலைமைத்துவத்தில் மகேந்திரசிங் தோனி செய்த தவறுகளால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது முன்னாள் CSK வீரர் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

ஏலத்தில் எடுக்காமல் தன்னை சிஎஸ்கே அணி கழற்றிவிட்டது தவறு என்பதை தனது தலைமைப் பண்பால் பஞ்சாப் அணி மூலம் அஷ்வின் நேற்றைய போட்டியின் முடிவின் மூலம் பதிலடி கொடுத்தார்.

இக்கட்டான நேரத்தில்தான் "பிரம்மாஸ்திரத்தை" பயன்படுத்தவேண்டும் என்று புராணங்களில் கூறுவதுண்டு. அதைப் போல், கெயில் எனும் "பிரம்மாஸ்திரத்தை" தோனிக்கு எதிராக கச்சிதமாக பயன்படுத்தி சென்னை அணியின் வெற்றிப்பாதைக்கு வேட்டு வைத்துவிட்டார் அஷ்வின். ஆட்டநாயகன் விருதையும் கெயில் பெற்றார்.

இதற்கு முன்னால் சென்னை பெற்ற 2 வெற்றிகளில் ஒன்று பிராவோவுக்குச் சொந்தம் இரண்டாவது ஆட்டம் சாம் பில்லிங்ஸுக்குச் சொந்தம், அதாவது ராயுடு, வாட்சன் அதிரடி தொடக்கத்துக்குப் பிறகு சாம் பில்லிங்ஸுக்குச் சொந்தம். மற்றபடி சென்னை சூப்பர் கிங்சை கேப்டன் கூல், தல தோனியினால் ஒன்று திரட்ட முடியவில்லை என்பதே தெரிகிறது, இதில் கேப்டன்சி தவறுகள், களவியூகத் தவறுகள் என்று தவறு மேல் தவறு செய்து கொண்டே ‘பினிஷர்’ என்றும் ‘சிறந்த கேப்டன்’ என்றும் தப்பும் தவறுமான பெயரில் அவரால் வலம் வர முடிவதற்குக் காரணம் அவருடைய மச்சம்தான்.

கெயிலின் அதிரவைத்த அதிரடி அரைச்சதம், ராகுலின் ஒத்துழைப்பான ஆட்டம், அஸ்வினின் சமயோஜித தலைமைத்துவம் ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.


அதேசமயம், "மிஸ்டர் கூல்" என்று பெயரெடுத்த தலைவர் தோனி இந்த அளவுக்கு தலைமைத்துவத்தில் மோசமாக செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை. பல தவறுகள் செய்து வெற்றியை தாரை வார்த்துக்கொடுத்துவிட்டார். தோனியின் தலைமைத்துவத்தில் செய்யப்பட்ட சோதனை முயற்சிகளும் அஷ்வினுக்கு சாதகமாக அமைந்துவிட்டன.

இதன் மூலம் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றிகள் ஒரு தோல்வியுடன் உள்ளன.

11-வது சீசன் ஐபில் போட்டியில் 12-வதுலீக் ஆட்டம் சண்டிகரில் நேற்று நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணியின் தலைவர் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னையில் சுரேஷ் ரெய்னாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக முரளிவிஜய் சேர்க்கப்பட்டார்.

அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஸ்டோய்னிஸுக்கு பதிலாக கிறிஸ் கெயிலும் , அக்சர் படேலுக்கு பதிலாக பரிந்தர் ஸ்ரனும் சேர்க்கப்பட்டனர்.

கெயில், ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். கெயில் களத்தில் இறங்கியதும் ரசிகர்கள் விசில் சத்தம் காதை கிழித்தது.


கெயில் மீது ரசிகர்களுக்கு இருக்கும் அன்பும், அவரின் அதிரடி ஆட்டத்துக்கு இருக்கும் வரவேற்பும் இன்னும் குறையவில்லை என்பது முதல் போட்டியிலேயே தெரிந்துவிட்டது.

கெயிலை யார் ஏலம் எடுப்பார்கள் என உதாசினப்படுத்தப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. ஆனால், அதற்கு மேல் நான் மதிப்பு மிக்கவன் என்பதை துடுப்பாட்டத்தால் கெயில் நேற்று நிரூபித்துவி்ட்டார். கெயிலின் அதிரடிஆட்டத்துக்கும், மேட்ச்வின்னிங் திறமைக்கும் இந்த போட்டி சிறு உதாரணம்.

. ரசிகர்கள் நம்பிக்கையை கெயில் வீணடிக்காமல் கெயில் கண்களுக்கு விருந்தளித்தார். முதல் விக்கெட்டுக்கு ராகுல், கெயில் ஆகிய இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலுமே ராகுல் சிறப்பாக ஓட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது கவனிக்கக்கூடியது.

ராகுல் அதிரடியான தொடக்கத்தை அளித்தாலும், கெயில் நிதானத்தை கடைபிடித்தார். ஆனால், "சிங்கத்தை சீண்டுவதைப்" போல் ஹர்பஜன் கெயிலை சுழற்பந்தால் சீண்டினார். அவசரப்பட்டு அடிக்காமல் கெயில் ஒரு பவுண்டரியோடு நிறுத்திக்கொண்டார்.

4-வது ஓவரை ஹர்பஜன் மீண்டும் வீசினார். நினைத்ததுபோல் "கெயில் சிங்கம்" ஹர்பஜன் ஓவரை பிய்த்து எறிந்தது. ஒருசிக்ஸர்,பவுன்டரி என விளாச, ராகுலும் தனது பங்கிற்கு 2பவுண்டரிகள் விளாசினார். 19 ரன்கள் அடித்து "பாஜி" ஓவரை பஞ்சராக்கினார்கள்.

சஹர் வீசிய 6-வது ஓவரையும் கெயில் விளாசி தள்ளினார்.  2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து சஹரை திக்குமுக்காடச் செய்தார் கெயில். இம்ரான் தாஹிர் வீசிய 7-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து கெயில் 22 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஐபில் போட்டிகளில் கெயில் பெற்ற 22-வது அரை சதமாகும்.

முதல் விக்கெட்டுக்கு ராகுலும் கெயிலும்  96 ஓட்டங்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

கெயில் களத்தில் நிற்கும்வரை சிஎஸ்கே அணியினருக்கு ரத்த அழுத்தம் எகிறியது மிஸ்டர் கூல் தோனி பந்துவீச்சை மாற்றி வொட்ஸனை அழைத்தார்.

வொட்சன் வீசிய 11வது ஓவரில் இம்ரான் தாஹிரிடம் கேட்ச் கொடுத்து கெயில் ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் கெயில் 63 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள்,7 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் பஞ்சாப் அணி வீரர்களின் ஓட்ட வேகத்தை பிராவோவும், வாட்சனும் கட்டுப்படுத்தினர். இதனால் வேகம் குறையத் தொடங்கியது. மேலும், அடுத்து களமிறங்கிய வீரர்களும் நிலைத்து ஆடாமல், விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.198 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி களமிறங்கியது. துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை செய்ததால் அதிரடியான ஸ்கோர் செய்யும் வாய்ப்பு தோனியால் கெட்டது. இதனால், தொடக்கத்திலேயே சிஎஸ்கே விக்கெட்டுகளை இழந்தது.

கடந்த இரு போட்டிகளிலும் அம்பாட்டி ராயுடு சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார். அவரையும், வொட்ஸனையும் தொடக்க வீரர்களாக தோனி இறக்கி இருக்கலாம். ஆனால், ரெய்னாவுக்குப் பதிலாக அணிக்குள் வந்த முரளி விஜயை களமிறக்கி நன்றாக இருந்த இணைப்பைக் குலைத்தார் தோனி.

கடினமான இலக்கு, அடித்து ஆடவேண்டும் என்ற அழுத்தத்தை தாங்கமுடியாமல் முரளி விஜய், வாட்ஸன் அவசரப்பட்டு ஆட்டமிழந்தனர். 2-வது ஓவரில் வாட்ஸன் 11 ரன்களில் மோகித் சர்மா வேகத்தில் ஆட்டமிழக்க, 5-வது ஓவரில் முரளிவிஜய் 12 ரன்களில் ஆன்ட்ரூ டை வேகத்தில் நடையைக் கட்டினார்.

தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்தது சென்னை அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. கடந்த போட்டியில் சிக்ஸர்களாக படம் காட்டிய பில்லிங்ஸும் 9 ஓட்டங்களோடு படுத்துக்கொண்டார். அஷ்வின் இவரை வீட்டுக்கு அனுப்பினார். இதுமேலும் சிஎஸ்கே தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.  

ராயுடு, தோனியும் 4-வது விக்கெட்டுக்கு நிதானமாக ஓட்டங்களைச் சேர்த்தனர். ராயுடு அவ்வப்போது சில பவுண்டரிகளை அடித்து ஓட்டவேகத்தையும் உயர்த்தினார்.

14-வது ஓவரில் 2-வது பந்தில் ராயுடுவை ரன்அவுட் மூலம் வெளியேற்றினார் அஷ்வின். mid off திசையில் இருந்து அற்புதமாக பந்தை எறிந்திருந்தார் அஷ்வின்.
அரைச்சதம் பெறுவதற்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் ராயுடு ஆட்டமிழந்தார். இதில் 5பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன்பின் ஆட்டத்தின்  திருப்புமுனை  தொடங்கியது. பிராவோ அடுத்து களமிறங்குவார், ஆட்டம் விறுவிறுப்பாகும், அனல் பறக்கும் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், ஜடேஜா களம் கண்டார். நெருக்கடியான காலகட்டத்தில் அடித்து ஆடக்கூடிய அளவுக்கு ஜடேஜா பிராவோ போல அதிரடி ஆட்டக்காரர் கிடையாது என்பதை மறந்து ஏன் ஜடேஜாவை தோனி களமிறக்கினார் என்பது தெரியவில்லை.

அதிலும் வெற்றிக்கு பந்துகள் குறைவாகவும், ரன்கள் இருமடங்காகவும் இருக்கும் போது, பிராவோ போன்ற அதிரடி துடுப்பாட்ட வீரர்களை களமிறக்குவதுதான் நல்ல தலைமைத்துவத்துக்கு அழகு.

 ஆனால், சோதனை முயற்சியாக சென்னையில் நடந்த போட்டியின் போது பிராவோ 7-வது வீரராக களமிறக்கி பெற்ற வெற்றியைப் போல் இதிலும் பெறலாம் என தப்பு கணக்கு போட்டுவிட்டார் தோனி.

நெருக்கடியை சமாளிக்க முடியாத ஜடேஜா ஸ்ரன் வீசிய ஒவரை அடித்து ஆடமுடியால் வீணாக்கினார். அப்போதே தொலைக்காட்சி முன்அமர்ந்திருந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவை கரித்துக்கொட்டி இருப்பார்கள்.

ஜடேஜாவின் ஆட்டத்தைப் பார்த்து பொறுமை இழந்த தோனி அதிரடி ஆட்டத்தை கையாண்டார். டை ஓவரில் 2 பவுண்டரிகளும், மோகித் சர்மா ஓவரில் 2 சிக்ஸர்களும் பவுண்டரியும் அடித்து அரைசதத்தை 34 பந்துகளில் நிறைவு செய்தார்.

டைவீசிய 18-வது ஓவரில் ஜடேஜா 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் தோனி 2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடித்து பரபரப்பை எகிறச் செய்தார்.

கடைசி ஓவரை தோனியும், பிராவோவும் சந்தித்தனர். தேவைப்படும் நேரத்தில் பிராவோ களமிறங்காமல், ஒட்டுமொத்த அழுத்தமும் கடைசி ஓவர் எனும் புள்ளியில் குவியும் போது, பிராவோ களமிறங்கினார். அதனால், எந்த பயனும் விளையவில்லை.

சென்னை அணியில் விளையாடியபோது பெற்ற அனுபவங்களைக் கற்ற மோகித் சர்மாவை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினார் அஸ்வின்.

மோகித் சர்மா நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக பந்துவீசக்கூடிய திறமை பெற்றவர். அதிலும் 16 முதல் 20-வது ஓவர்களில் அருமையாக பந்துவீசுவார். 2015ம் ஆண்டில் இருந்து 16முதல்20 ஓவர்களுக்கு இடையே பந்துவீசி 43 ஐபிஎல் போட்டியில் 25 விக்கெட்டுகளை மோகித்சர்மா வீழ்த்தியுள்ளார்.இதை சரியாக நிரூபித்தார் மோகித் சர்மா.

கடைசி  ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

தோனிக்கும், பிராவோவுக்கும் யோர்கர்களை இறக்கிய மோகித் சர்மா திணறடித்து திக்குமுக்காடச் செய்தார். இரு ஒற்றை ஓட்டங்களும், 4-வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்ஸரும் மட்டுமே தோனியால் அடிக்க முடிந்தது.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களுக்கு 193 ரன்கள் மட்டுமே சென்னை அணி சேர்த்தது. கிங்ஸ் லெவன் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணித் தரப்பில் ஆன்ட்ரூ டை 2விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார். 

- சென்னை G.பிரசாத்

கருத்துரையிடுக

0 கருத்துகள்