தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

அன்றே ரசல், நிதீஷ் ராணா அதிரடி + கொல்கத்தாவின் அபாரமான பந்துவீச்சால் வீழ்ந்தது டெல்லி!!! #KKRvDD #IPL2018

கடந்த IPL பருவகாலம் வரை கொல்கத்தா அணியின் தலைவராக விளங்கிய கௌதம் கம்பீர் டெல்லி அணியின் தலைவராக ஈடன் கார்டன் திரும்பிய நேற்றைய போட்டியில் தோல்வியுடன் திரும்பியுள்ளார்.
மைதானம் முழுவதும் நிறைந்த ரசிகர்கள் கம்பீரின் புதிய அணிக்கெதிரான KKR வெற்றியைக் கொண்டாடியுள்ளார்கள்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் லின் 31 ஓட்டங்களை எடுத்தாலும் எதிர்பார்த்த வேகம் அதில் இருக்கவில்லை. அடுத்து களமிறங்கிய உத்தப்பா 3 சிக்ஸர்களுடன் அதிரடியாக  35 ஓட்டங்கள், அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் 19 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

படம் : cricbuzz.com

அடுத்து வந்த ராணா - ரசல் இணைப்பாட்டம் தான் போட்டியை கொல்கத்தா பக்கம் கொண்டுவந்தது.
அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 35 பந்தில் 59 ஓட்டங்களையும், அன்ரோ ரஸல் 12 பந்தில் 41 ஓட்டங்களும் குவித்தனர்.

இதில் அசுர பலத்துடன் அன்றே ரசல் ஆறு சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை குவித்தது.

டெல்லி அணி சார்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், கிறிஸ் மொரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, 201 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

கொல்கத்தா அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி டெல்லி அணி திணறியது.

முதல் மூன்று விக்கெட்டுக்களும் விரைவாகவே உடைய, ரிஷப் பாண்ட் , அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். பந்த் 26 பந்தில் 43 ஓட்டங்களையும், மெக்ஸ்வேல் 22 பந்தில் 47 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

பாண்ட் - மக்ஸ்வெல் இணைப்பாட்டம் கொஞ்சமாவது கொல்கத்தாவை அச்சுறுத்தியது. எனினும் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழல்பந்துவீச்சு டெல்லியைத் தடுமாற வைத்திருந்தது.
மக்ஸ்வெல் குல்தீப் யாதவுக்கு அடுத்தடுத்து இரு ஆறு ஓட்டங்களைப் பெற்றபிறகு உடனடியாகவே அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
டெல்லி அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

போட்டியின் நாயகனாக ராணா தெரிவானார்.
KKR இப்போது நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளோடு புள்ளிகளின் நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...