Latest Updates

6/recent/ticker-posts

மீண்டும் ஒருமுறை வெற்றி வாகைசூடுமா? கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- Kolkata Knight Riders #IPL2018


ஐபிஎல் 11ஆவது சீசன் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. 
அந்தவகையில் இம்முறை களமிறங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எப்படி?

இம்முறை களமிறங்கவுள்ள கொல்கத்தா அணி கடந்த சீசன்களில் தொடர்ந்து ஆடிய பல அனுபவம் நிறைந்த வீரர்களை கழற்றி விட்டுள்ளது. குறிப்பாக கொல்கத்தாவின் அணித்தலைவராக செயற்பட்ட கெளதம் கம்பீர் இவருடன் கூட யூசுப் பதான், மனிஷ் பாண்டே, உமேஷ் யாதவ், சூரியகுமார் யாதவ், ஷகிப் அல்ஹசன், கிறிஸ் மொறிஸ்,  என பட்டியல் நீண்டு செல்கின்றது. இது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவை இத்தொடரில் ஏற்படுத்தலாம். 

இம்முறை கொல்கத்தா அணியின் புதிய தலைவராக சுதந்திரக் கிண்ண இறுதிப்போட்டியில் 8 பந்துக்களில் 29 ஒட்டங்களை அதிரடியாக பெற்று தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெருக்கிய தமிழகவீரர் தினேஷ் கார்த்திக் செயற்படவுள்ளார். அந்தவகையில் புதிய தலைவர் தினேஷ் கார்த்திக் தலைமையில் களமிறங்கவிருக்கும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு போன்றன எப்படி? ஓர் விரிவான அலசல்



இம்முறை உபாதைகள், காயங்கள் காரணமாக அதிகமான வீரர்கள் பாதிப்புக்குள்ளான ஒரு அணியாக கொல்கத்தா அணியே காணப்படுகிறது.
இதையும் கொஞ்சம் வாசியுங்கள்..

காயங்கள், உபாதைகளால் அல்லலுறும் ஐபிஎல் பிரபல வீரர்கள் - #IPL2018


கொல்கத்தா அணியின் துடுப்பாட்டவரிசையை முதலில் பார்த்தால் றொபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், ரிங்கு சிங், நிதிஷ்  றாணா, இவ்வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலக கிண்ணப் போட்டியில் தொடராட்ட நாயகன் விருதை வென்ற சுப்மன் கில் மற்றும் அவுஸ்ரேலியாவின் கிறிஸ் லின் , மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறைவீரர் அன்ரே ரசல், தென் ஆபிரிக்க சகலதுறை வீரர் கமெரோன் டெல்போர்ட் ஆகியோர் காணப்படுகின்றனர். இது கடந்த சீசன்களில் ஆடிய கொல்கத்தா அணியின் துடுப்பாட்டவரிசையினை விட பலவீனமானதாக தான் தென்படுகின்றது. ஏனெனில் இவ்வணியில் IPLலில் குறைந்த போட்டிகளில் ஆடிய இளம்வீரர்களை அதிகம் கொண்டு காணப்படுகின்றது. இதில் மேலும் கொல்கத்தா அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவுஸ்ரேலியாவின் கிறிஸ் லின், மேற்கிந்திய தீவுகளின் அன்ரே ரசல் ஆகியோர் காயத்திற்கு உட்பட்டிருப்பதால் இம்முறை ஐபிஎல் போட்டிகளில் இவர்கள் இருவரும் விளையாடுவது கேள்விக்குறியே. இது மேலும் கொல்கத்தா அணியின் துடுப்பாட்டவரிசையினை பலவீனமாக்குகின்றது.

கொல்கத்தா அணியில் இம்முறை சகலதுறைவீரர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். ஏனெனில் கொல்கத்தாவில் வழமையாக ஆடிய சகலதுறைவீரர்கள் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ், நீயூசீலாந்தின் கிரான்ஹோம், இந்திய சகலதுறைவீரர் யூசுப் பதான் ஆகியோரைக் கழற்றி விட்டு மட்டுமல்லாது இம்முறை இடம்பெற்ற ஜபிஎல் ஏலத்தில் புதிய சகலதுறைவீரர்களையும் அணியில் உள்வாங்கவில்லை.
இந்த சீசனில் விளையாடவுள்ள இவ்வணியில் சகலதுறைவீரர்களாக மேற்கிந்தியதீவுகளின் சகலதுறைவீரர் அன்ரே ரசல், மற்றும் 19 வயதுக்குட்பட்ட உலக கிண்ணப்போட்டியில் இந்திய அணியில் ஆடிய கமலேஷ் நாகர்கோட்டியும் தென் ஆபிரிக்காவின் டெல்போர்ட்டும் தான் உள்ளனர். அதிலும் ரசல் காயத்திற்கு உட்பட்டுள்ளமை கொல்கத்தாவிற்கு பெரும் பின்னடைவு தான்.

கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சை அடுத்து பார்த்தால் ஒப்பீட்டளவில் வேகப்பந்துவரிசை பலமாக உள்ளது. அவுஸ்ரேலியாவின் மிட்சல் ஸ்ராக், மிட்சல் ஜோன்சன் ஆகியோர் இம்முறை இவ்வணிக்காக விளையாடுகின்றனர் என்பது பெரும்பலமாக இதுவரை தெரிந்தாலும், ஜோன்சனின் உபாதை பற்றிய சந்தேகம் இன்னும் இருக்கும் நிலையில், இன்று வெளியான தகவல் கொல்கத்தா ரசிகர்களை இன்னும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. மிட்செல் ஸ்டார்க் உபாதை காரணமாக இந்த IPL முழுவதுமே விளையாடமாட்டார் என்ற செய்தியே அது. மேலும் அனுபவம் வாய்ந்த வினய்குமார்,  19 வயதுக்குட்பட்ட உலக கிண்ணப்போட்டியில் இந்திய அணிக்கு ஆடிய கமலேஷ் நாகர்கோட்டி , மாவை ஷிவம் ஆகியோரும் இவ்வணிக்கே விளையாடவுள்ளனர். எனவே கொல்கத்தா அணிக்கு வேகப்பந்துவரிசை பலம் தான். இருப்பினும் ஏன் கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ் ஆகியோரை ஏன் கழற்றிவிட்டார்கள் என்று தான் தெரியவில்லை.

கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சை பார்த்தால் மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன், இந்திய சுழல் பந்துவீச்சாளர்களான பியூஷ்  சாவ்லா, குல்தீப் யாதவ், மற்றும் சகலதுறைவீரர் சிவம் மகியும் உள்ளார்கள். எனவே கொல்கத்தா அணிக்கு சுழற்பந்துவீச்சு பலமாகவே உள்ளது. ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் சுனில் நரைன் விளையாடுவது கேள்விக்குறியே. ஏனெனில் அவர் உபாதைக்கு உட்பட்டுள்ளார். அதே போல மீண்டும் அவரது பந்துவீச்சுப் பாணி முறையற்றது என முறையிடப்பட்டுள்ளது. இது கொல்கத்தா அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும்.
எனினும் சாவ்லா, யாதவ் ஆகிய இருவரும் ஏற்கெனவே முன்னைய ஐபிஎல் போட்டிகளில் சாதித்துக் காட்டியவர்கள். வெவ்வேறு பாணிகளில் வீசக்கூடியவர்கள் சாதகமான ஆடுகளங்களில் எதிரணிக்கு சவாலாகவே விளங்குவார்கள்.

எனவே மொத்தமாக பார்க்கும்போது ஒப்பிட்டளவில் கடந்த சீசன்களில் ஆடிய கொல்கத்தா அணியை பார்க்க இம்முறை களமிறங்கவுள்ள கொல்கத்தா அணி சற்று பலவீனமாகவே காணப்படுகின்றது.
எனினும் கார்த்திக்கின் தலைமைத்துவத்துக்கு ஒரு சவால் என்பதோடு இளமையின் துடிப்பு நிறைந்துள்ளது.

இரு தடவை IPL சாம்பியனாக வந்துள்ள KKR கடந்த இரு பருவகாலங்களில் தொடர்ச்சியாக Play Off சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

இது எவ்வாறோ ஐபிஎல் 11ஆவது சீசன் ஆரம்பித்த பின் தான் இந்த அணி எப்படியான பெறுபேற்றை வெளிப்படுத்தும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

கருத்துரையிடுக

0 கருத்துகள்