தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வெள்ளி, 1 ஜூன், 2018

உலக அணியை அடித்து நொறுக்கிய உலக T 20 சம்பியன்கள்

மீண்டும் ஒரு தடவை தாங்கள் நடப்பு உலக சம்பியன்கள் என்பதை மேற்கிந்தியத் தீவுகள் அணி நிரூபித்துக் காட்டியது.
நேற்று லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிதி சேர்ப்பு T 20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 72 ஓட்டங்களால் ஷஹிட் அஃப்ரிடி தலைமை தாங்கிய உலக அணியை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது.

15 சிக்ஸர்களை மேற்கிந்தியத் தீவுகள் அணி விளாசித் தள்ள உலக அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தனித்து நின்று அடித்து ஆடியவர் இலங்கையின் திஸர பெரேரா மட்டும் தான்.

உலகின் மிகச் சிறந்த சுழல்பந்து வீச்சாளர் என்று இப்போது கருதப்படும் ரஷீத் கானின் பந்துவீச்சைக் கூட விட்டுவைக்காமல் அடித்து நொறுக்கியிருந்தார்கள் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள்.

அடிக்கடி ஓய்வுபெறுவதும் மீண்டும் வருவதுமாக இருக்கும் ஷஹிட் அஃப்ரிடியின் பிரியாவிடைப் போட்டியாக நேற்றைய போட்டி அமைந்தது.
நாணய சுழற்சியில் வென்று மேற்கிந்தியத் தீவுகளைத் துடுப்பாட்ட அனுப்பியிருந்தார் அஃப்ரிடி.


ஈவின் லூயிஸ் 26 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள், ஐந்து நான்கு ஓட்டங்களோடு 58 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரது அதிரடியைத் தொடர்ந்து சாமுவேல்ஸ் (22 பந்துகளில் 43 - 4 சிக்ஸர்கள், 2 நான்கு ஓட்டங்கள்), ராம்டின் (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 - 3 சிக்ஸர்கள், 3 நான்கு ஓட்டங்கள்), IPL இன் அதிரடி form ஐத் தொடர்ந்த அன்றே ரசல் (10 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 21) என்று ஓட்டங்களை மழையாகக் குவித்து 199 ஓட்டங்களைப் பெற்றனர்.

ரஷீத் கான் தனது நான்கு ஓவர்களில் ஐந்து சிக்ஸர்களையும் 48 ஓட்டங்களை கொடுத்தார்; இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

மிக எதிர்பார்ப்போடு நேற்றைய போட்டியில் சர்வதேச அறிமுகத்தைப் பெற்ற நேபாள அணியின் லாமிச்சனே ஒரேயொரு ஓவர் பந்துவீசியிருந்தார். அதில் 12 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார்.

உலக அணியில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களை உருட்டி எடுத்தனர் மேற்கிந்தியத் தீவுகளின் பத்ரியும் ரசலும்.
ஒற்றைப்படை ஓட்டங்களுக்கு உருண்டை உலக அணியில் ஷோயிப் மலிக் 12, அஃப்ரிடி 10 என்று ஓட்டங்கள் பெற மறுமுனையில் இலங்கையின் சகலதுறை வீரர் திஸர பெரேரா அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார். 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 நான்கு ஓட்டங்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார்.


எனினும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை உலக அணி இழந்தது.

வில்லியம்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ரசல் மற்றும் பத்ரி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக லூயிஸ் தெரிவானார்.

போட்டியில் திரட்டப்பட்ட நிதி மேற்கிந்தியத் தீவுகளில் ஐந்து மைதானங்களைப் புனரமைக்கப் பயன்படுத்தப்படவுள்ளது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...