Latest Updates

6/recent/ticker-posts

இலகுவான வெற்றியை பரிதாபமாகத் தோற்ற பாக். நியூசீலாந்துக்கு மயிரிழையில் மகத்தான வெற்றி !!


இலகுவாக வெல்ல வேண்டிய போட்டிகளை யாருமே நம்பாத விதத்தில் தோற்று தமது ரசிகர்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் உறைய வைப்பது பாகிஸ்தானிய அணிக்கு எப்போதுமே கைவந்த கலையாகும்.
சப்ராஸ் அஹமட்டின் தலைமையில் உருவாகிவரும் 'புதிய' பாகிஸ்தானிய அணியிலாவது ஒரு மாற்றம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பியிருக்க, மீண்டும் அதே வியாதி தொடர்ந்துள்ளது.

அபுதாபியில் நேற்று முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மிக இலகுவாக வெல்ல வேண்டிய நிலையில்ருந்து நான்கு ஓட்டங்களால் தோல்வியடைந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கையில் 7 விக்கெட்டுக்கள் இருக்க 46 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையிலிருந்து இந்தத் தோல்வியானது மிகப்பெரும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. நியுஸிலாந்து அணி சார்பாக அஜாஸ் பட்டேல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார்.

தமது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய நியுஸிலாந்து அணி அணித்தலைவர் கேன் வில்லியம்சன் தவிர்ந்த ஏனைய வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் மற்றும் பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சின் காரணமாக சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 என்ற குறைந்த ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கேன் வில்லியம்சன் அதிக பட்சமாக 63 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்து வீச்சில் யாசிர் ஷா மூன்று விக்கெட்டுகளையும் ஹரிஸ் சொஹைல், மொஹமட் அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர். 

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் பெற்றுக்கொண்ட அரைச்சதம் தவிர ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களையே பதிவு செய்திருந்தனர். இதனால் அவ்வணி நியுஸிலாந்து அணியை விட மேலதிகமாக 74 ஓட்டங்கள் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் 62 ஓட்டங்களையும் அசாத் ஷபீக் 43 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் கிரன்ட்ஹோம் மற்றும் அஜாஸ் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.


74 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியுஸிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஓட்டமெதுவும் இன்றி முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டிருந்தது. தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அவ்வணி 108 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் 5ஆவது விக்கெட்டுக்காக இணைந்த நிக்கோலஸ் மற்றும் வொட்லிங்  ஆகியோர் 112 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது நிக்கோலஸ் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களின் விக்கெட்டுகளையும் தொடராக அடுத்தடுத்து கைப்பற்றிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நியுஸிலாந்து அணி 175 ஓட்டங்கள் முன்னிலை இருக்க 249 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். நியுஸிலாந்து அணி தமது கடைசி 6 விக்கெட்டுகளையும் வெறும் 29 ஓட்டங்களுக்கு இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வணி சார்பாக வொட்லிங் அதிக பட்சமாக 59 ஓட்டங்கள் பெற்றிருந்ததுடன் சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் யாசிர் ஷா மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 5 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் 176 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


வெற்றி பெறுவதற்கு  மேலும் 139 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் நான்காம் நாளில் தமது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களை மட்டுமே பெற்று 4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. நேற்றைய தினம் பாகிஸ்தான் அணி மேலதிகமாக 11 ஓட்டங்கள் பெற்று 48 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும் 4ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அஸார் அலி மற்றும் அசாத் ஷபீக் ஜோடி 82 ஓட்டங்களை பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என எதிர்பார்ககப்பட்டது.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 130 ஆக இருந்த போது 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த அசாத் ஷபீக்கின் விக்கெட்டுடன் மதிய போசனைக்காக போட்டி நிறுத்தப்பட்டது. மதிய போசன இடைவேளையின் பின் நியுஸிலாந்து அணி பந்து வீச்சாளர்களின் மீள்வருகை பாகிஸ்தான் அணியின் வெற்றியை பறித்தது.

பாகிஸ்தான் அணிக்காக இறுதிவரை போராடிய அஸார் அலி வெற்றிக்கு 5 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் அஜாஸ் பட்டேலின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். எனினும், அது டி.ஆர்.எஸ் மூலம் முறையீடு செய்யப்பட்டும் அதனை ஆட்டமிழப்பாக மூன்றாவது நடுவர் உறுதிப்படுத்தியதும் நியுஸிலாந்து அணியினர் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வெற்றியானது நியுஸிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் மிகவும் குறைந்த ஓட்ட வித்தியாசத்தில் பெற்றுக் கொண்ட வெற்றியாகும்.

அத்துடன் பாகிஸ்தானின் மிக நெருக்கமான தோல்வியாகவும் அமைந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் அஸார் அலி 65 ஓட்டங்கள் பெற்று இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

சிறப்பாக பந்து வீசி போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவாகிய அறிமுக வீரர் அஜாஸ் பட்டேல் இரண்டாம் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருந்தார். முதல் இன்னிங்சில் அவர் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்