இந்தியாவின் அதியுயர் விருதுகள் பெறவிருக்கும் மூன்று ஷர்மாக்களுக்கு BCCI புகழாரம்!

 மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னாஅர்ஜூனா விருதுகள் வழங்கப்படும். சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டுத் துறையின் வாழ்நாள் சாதனையாளர் ‘தயான் சந்த்’ விருது வழங்கப்படுகிறது.


இந்த விருதுகளைப் பெறுவதற்கு மொத்தம் மூன்று கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ புகழாரம் சூட்டியுள்ளது.

பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெறும் நான்காவது கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். ஹிட் மேன்...உங்களால் பிசிசிஐ பெருமையடைகிறது” என்று பதிவிட்டுள்ளது.

தீப்தி ஷர்மாவுக்கும் பிசிசிஐ சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அர்ஜூனா விருது பெறவிருக்கும் தீப்தி ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, இந்திய அணியின் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாக்கு, பிசிசிஐ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அர்ஜூனா விருது பெறவிருக்கும் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து வெற்றி நடைபோடுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

மற்ற விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, ரோஹித் ஷர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பாத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


மூத்த கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா, வீராங்கனை தீப்தி ஷர்மா, தடகள வீராங்கனை டூட்டி சந்த், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மானு பாகேர் ஆகியோர் உட்பட 27 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது.

விருதுகள் அனைத்தும் வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இணைய வழி நிகழ்ச்சி மூலம் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை