தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 29 செப்டம்பர், 2018

இறுதிப் பந்து வரை நீடித்த இழுபறியில் வென்று ஆசியக் கிண்ணம் ஜெயித்த இந்தியா !


ஆறு நாடுகள் விளையாடிய ஆசியக் கிண்ணத்தின் வெற்றி இறுதிப் பந்திலே தான் தீர்மானிக்கப்படும் என்று யார் நினைத்திருப்பார்?
நேற்று இறுதிப் போட்டியின் இறுதிப்பந்திலே கேதார் ஜாதவ்வின் மூலமாகக் கிடைத்த ஓட்டம் இந்தியாவுக்கு அவர்களது 7வது ஆசியக் கிண்ணத்தை வென்று கொடுத்தது.

டுபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று இடம்பெற்று முடிந்திருக்கும் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

14ஆவது முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வந்த ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், பங்களாதேஷ் அணி வெற்றி இலக்காக நிர்ணயம் செய்த 223 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய துடுப்பாடிய இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து ஆசியக் கிண்ணத் தொடரில் 7ஆவது தடவையாக சம்பியன் நாமம் சூடியது.

முன்னதாக இறுதி சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த பங்களாதேஷ் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இறுதிப்பந்து வரை போராடியிருந்தது. எனினும் பெற்ற அற்புதமான ஆரம்ப இணைப்பாட்டத்தைப் பயன்படுத்தி பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெறமுடியாது போனது பங்களாதேஷ் அணிக்குப் பாதகமாக அமைந்தது.

இந்திய அணிக்கு தமது பந்துவீச்சு மூலம் கடும் சவால் தந்த பங்களாதேஷ் அணி, 2016ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை தோற்று கவலையுடன் நாடு திரும்புகிறது.

நேற்றைய இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பங்களாதேஷ் அணிக்கு வழங்கியிருந்தார்.

பங்களாதேஷ் அணி ஆச்சரியமளிக்கும் விதமாக, தன்னுடைய ஆரம்ப ஜோடியை மாற்றியமைத்து, வழக்கமாக பின்வரிசையில் துடுப்பாடும் மெஹிதி ஹஸன் மிராஸ் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.
இருவரும் பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டுக்காக 120 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன், இந்திய அணிக்குப் பெரும் அழுத்தத்தை வழங்கியது.
லிட்டன் தாஸ் தனது கன்னிச் சதத்தைப் பூர்த்தி செய்தாலும், பங்களாதேஷ் அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்காத நிலையில் அவ்வணிக்கு செளம்ய சர்க்கர் மட்டுமே ஆறுதலாக இருந்தார்.


முடிவில், 48.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பங்களாதேஷ் அணி 222 ஓட்டங்களை குவித்தது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் லிட்டன் தாஸ் 12 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 117 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 121 ஓட்டங்கள் பெற்றிருக்க, செளம்ய சர்க்கர் 33 ஓட்டங்களை சேர்த்திருந்தார்.

இந்திய அணியின் சார்பாக, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 223 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணிக்கு விக்கெட்டுக்கள் சரிந்துகொண்டே இருந்தாலும், அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா 55 பந்துகளை எதிர்கொண்டு  3 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன் பின்னர், தினேஷ் கார்த்திக் மற்றும் மஹேந்திர சிங் டோனி ஆகியோர் இந்திய அணிக்கு பொறுமையான இணைப்பாட்டம் ஒன்றை வழங்கி வெற்றி இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். 54 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டினை அடுத்து முடிவுக்கு வந்தது.
கார்த்திக் 37 ஓட்டங்களையும் தோனி 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

தோனியின் விக்கெட்டை அடுத்து பந்துவீச்சில் திறமை காண்பிக்கத் தொடங்கிய பங்களாதேஷ் அணியினர் போட்டியின் வெற்றி வாய்ப்பு சாதக நிலைமையை தமக்கு சொந்தமாக்கினர்.

தொடர்ந்து வெற்றிக்கு இறுதி ஓவருக்கு ஆறு ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணிக்காக, அந்த வெற்றி ஓட்டங்களை கேதர் ஜாதவ் – குல்தீப் யாதவ் ஜோடி பெற்றுத் தந்தது.
இறுதி பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் ஜாதவ் அந்த ஓட்டத்தை எடுத்து ரசிகர்களைக் கொண்டாட வைத்தார்.


ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக, பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸ் தெரிவு செய்யப்பட்டதோடு  தொடர் நாயகன் விருது, இந்திய அணியின் ஷீக்கர் தவானிற்கு வழங்கப்பட்டிருந்தது.

சனி, 22 செப்டம்பர், 2018

இந்தியாவுக்கு இலகுவான வெற்றி ! மீள் வருகையில் மீண்டும் கலக்கிய ஜடேஜா !!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இரண்டாம் கட்டப் போட்டிகளான "சூப்பர் 4” சுற்றின் முதல் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது இந்தியா.
துடுப்பாட்டத்தின் மூலம் நின்று வழிகாட்டியிருந்தார் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா.
ஆட்டமிழக்காமல் 83.
இந்தியா இந்தத் தொடரில் பெற்ற மூன்றாவது தொடர்ச்சியான வெற்றியாக பங்களாதேஷ் அணியை இந்தியா 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றி ஒன்றைப் பதிவு செய்தது.

டுபாயில் நடைபெற்ற நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷ் அணிக்கு வழங்கியிருந்தார்.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லிடன் தாஸ், நஸ்முல் ஹொசைன் ஆகிய இருவரும் இந்திய அணியின் புவ்னேஸ்வர்குமார், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பத்து ஓட்டங்களைக் கூட தாண்டாது மைதானத்தை விட்டு வெளியேறினர்.

பின்னர் சகீப் அல் ஹஸன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் விக்கெட்டுக்களை இந்திய ஒரு நாள் அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக அணிக்குள் வந்த ரவீந்திர ஜடேஜா தகர்த்தார்.

தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசையும் சரிவினைக் காட்டியது.

இதனை அடுத்து மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்ட பங்களாதேஷ் அணிக்கு மெஹிதி ஹசன் மிராஸ் பெற்றுக்கொடுத்த 42 ஓட்டங்களே ஆறுதலாக இருந்தன. பங்களாதேஷ் அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 173 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பாக ரவீந்திர ஜடேஜா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், புவ்னேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 174 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, 36.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 174 ஓட்டங்களை பெற்றவாறு இலக்கை அடைந்தது.

இந்திய அணியின் வெற்றிக்காக இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 104 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 83 ஓட்டங்களை குவித்திருந்ததுடன், ஷிக்கர் தவான் 40 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் தோனி 33 ஓட்டங்களையும் பெற்று தமது தரப்பின் வெற்றிக்கு உதவியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா தெரிவானார்.

அடுத்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை நாளை எதிர்கொள்ளவுள்ளதுடன், அதேநாளில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான்  அணியையும் எதிர்கொள்கின்றது. 

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பங்களாதேஷைப் பந்தாடி பிறந்தநாளைக் கொண்டாடிய ரஷீத் கான் !

இத்தனை நாட்களும் டீன் ஏஜ் சுழல் புயலாக உலகம் முழுவதும் எதிரணிகளை அச்சுறுத்தி வந்த ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் தன்னுடைய 20வது பிறந்தநாளை மிகச்சிறந்த சகலதுறைப் பெறுபேறுகளுடன் பங்களாதேஷ் அணியை ஆப்கானிஸ்தான் வென்றுகொள்ள முதன்மைக் காரணியாகக் கொண்டாடினார்.

ஆசியக் கிண்ணத் தொடரின் ஆறாவது மோதலாக நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில், பங்களாதேஷ் அணியினை 136 ஓட்டங்களால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் ஆகிய இரண்டு அணிகளும் தங்களது முன்னைய போட்டிகளில் இலங்கை அணியுடன் பெரிய வெற்றிகளைப் பதிவு செய்து ஆசியக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிய நிலையிலேயே தங்களுக்குள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

ஹஷ்மதுல்லாஹ் ஷஹிதி தனது  3 ஆவது ஒரு நாள் அரைச் சதத்துடன் 58 ஓட்டங்களை குவித்திருந்தார்.

ஆப்கானிஸ்தான்  அணி சடுதியாக விக்கெட்டுக்களை இழக்கத் தொடங்கி ஒரு கட்டத்தில் 160 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து பின்னடைவை சந்தித்தது.

எனினும், இத் தருணத்தில் நேற்று தனது 20 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய ரஷீத் கான் மற்றும் குல்படின் நயீப் ஜோடி இணைந்து பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சினை துவம்சம் செய்யத் தொடங்கினர். ஆப்கானிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் எஞ்சியிருந்த 56 பந்துகளையும் எதிர்கொண்ட இரண்டு வீரர்களும் 95 ஓட்டங்களை முறியடிக்கப்படாத இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இவர்களின் இணைப்பாட்ட உதவியோடு ஆப்கானிஸ்தான் அணி  50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்திற்காக உதவிய ரஷீத் கான் 32 பந்துகளுக்கு முகம் கொடுத்து 8 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 57 ஓட்டங்களையும், குல்படின் நயீப் 38 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பாக ஷகிப் அல் ஹஸன் 4 விக்கெட்டுக்களையும், அபு ஹைடர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

256 என்கிற சற்று கடினமான வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டத் தொடங்கியது. அவ்வணியின் ஆரம்ப வீரர்களாக வந்த நஷ்முல் ஹொசைன் சன்டோ, லிடன் ஹொசைன் ஆகிய இருவரும் பத்து ஓட்டங்களை கூட தாண்டியிருக்கவில்லை.


பின்னர் வந்த துடுப்பாட்ட வீரர்களில் ஷகிப் அல் ஹஸன் தவிர ஏனைய பங்களாதேஷ் வீரர்கள் ஆப்கானிஸ்தானின் சுழலுக்கு தடுமாறத் தொடங்கினர்.  யாரும் பங்களாதேஷ் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமல் போக அவ்வணி 42.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படு தோல்வியடைந்தது.

ஷகிப் அல் ஹஸன் 32 ஓட்டங்களைப் பெற்று அவ்வணியின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்காக ஏற்கனவே துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்த ரஷீத் கான், குல்படின் நயீப் மற்றும் இளம் சுழல் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஆப்கானிஸ்தான் அணிக்காக துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் பிரகாசித்த Birthday Boy  ரஷீத் கானிற்கு வழங்கப்பட்டது.

ஆசியக் கிண்ணத்தில் இன்று முதல்  Super  Four  சுற்று ஆரம்பிக்கிறது.

 ஆப்கானிஸ்தான் அணி “சூப்பர் 4” சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியினையும், பங்களாதேஷ் அணி இந்தியாவையும் எதிர்கொள்கின்றது.
ஒரே நேரத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

புதன், 19 செப்டம்பர், 2018

போராட்ட குணத்தை வெளிப்படுத்திய ஹொங் கொங், தடுமாறி வென்ற இந்தியா

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியாக நேற்று  நடைபெற்ற இந்தியா – ஹொங் கொங்  அணிகளுக்கு இடையிலான போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் ஹொங் கொங் அணி காட்டிய மிக ஆக்ரோஷமான போராட்டத்தினால் இந்தியா சற்றே தடுமாறி, பின்னர்
ஹொங்கொங் அணியினை 26 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

ஹொங் கொங் அணியினை தோற்கடித்து ஆசியக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் இந்தியா குழு A சார்பில் பாகிஸ்தான் அணியுடன் சேர்ந்து ஆசியக் கிண்ணத் தொடரின் “சுப்பர் 4” சுற்றுக்கும் முன்னேறுகின்றது.


இதேவேளை இந்தியாவுடன் தோல்வியடைந்த ஹொங்கொங், இலங்கை அணிக்கு அடுத்ததாக ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் இரண்டாவது அணியாக மாறியுள்ளது.


டுபாயில் இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஹொங்கொங் அணியின் தலைவர் அன்ஷுமான் ராத் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்காக வழங்கியிருந்தார்.
ஆசியக் கிண்ணத் தொடரில் வழமையான தலைவர் வீரர் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கிய இந்திய அணி இப்போட்டியில் 20 வயதேயான இடதுகை வேகப்பந்து வீச்சாளர்  கலீல் அஹ்மட்டினை அறிமுகம் செய்திருந்தது.

முதலில் துடுப்பாடிய இந்திய அணிக்கு ஷீக்கார் தவான், அம்பதி ராயுடு ஆகிய வீரர்கள் சிறந்த முறையில் செயற்பட்டு ஓட்டங்கள் குவிக்க உதவினர். இதில் தனது 14 ஆவது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்த தவான் 120 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 15 பெளண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் இந்திய ஒரு நாள் அணியில் இணைந்த அம்பத்தி ராயுடு 60 ஓட்டங்களை பெற்றுத் தந்தார்.

இவர்களின் துடுப்பாட்ட பங்களிப்போடு இந்திய அணி, நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்கள் குவித்தது. ஹொங்கொங் அணியின் பந்துவீச்சு சார்பாக கின்சித் ஷா  3 விக்கெட்டுக்களையும், எஹ்சான் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.


வெற்றி இலக்கான 286 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஹொங்கொங் அணிக்கு, ஆரம்ப வீரர்களாக வந்த நிசகத் கான் மற்றும் அணித்தலைவர் அன்ஷுமான் ராத் ஆகியோர் யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பிரமாண்டமான துவக்கத்தினை வழங்கினர்.

இரண்டு வீரர்களும் முதல் விக்கெட்டுக்காக 174 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன், இந்த இணைப்பாட்டத்தினால், ஹொங்கொங் அணி இந்தியாவின் வெற்றி இலக்கினை நெருங்கும் ஒரு நல்ல நிலையை அடைந்தது.

எனினும் ஹொங்கொங் அணியின் முதல் விக்கெட் குல்தீப் யாதவ்வினால் கைப்பற்றப்பட அவ்வணி பின்னடைவை காட்டத் தொடங்கியது. ஹொங்கொங் அணியின் தலைவர் அன்ஷுமான் ராத் 73 ஓட்டங்களுடன் முதலில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஹொங்கொங் அணிக்கு நம்பிக்கை அளித்திருந்த மற்றுமொரு வீரரான நிசகாத் கானின் விக்கெட்டும் சிறிது நேரத்தில் பறிபோனது. 112 பந்துகளை எதிர்கொண்டிருந்த நிசகாத் கான் ஒரு சிக்ஸர் மற்றும் 12 பெளண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை குவித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சதம் ஒன்றினை பெறத் தவறினார்.
அவர் 90 ஓட்டங்களில் மூன்றாவது தடவையாக ஆட்டமிழந்தார்.


தொடர்ந்து ஹொங்கொங் அணி மிகவும் குறுகிய ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. ஹொங்கொங் அணியின் மத்திய வரிசை மிகவும் பலமான ஒன்றாக அமைந்திருக்காத காரணத்தினால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து அவ்வணி 259 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

26 ஓட்டங்களால்  போட்டியில் தோல்வியடைந்தாலும், ஹொங்கொங் அணியின் ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் இரண்டாவது இன்னிங்ஸ் ஒன்றில் அவர்கள் பெற்ற அதிகூடிய  ஓட்டங்களாக இந்த 259 ஓட்டங்கள் அமைந்திருந்தது.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பாக அறிமுக வீரர் கலீல் அஹ்மட் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பின் வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் சதம் பெற்ற ஷீக்கார் தவானிற்கு வழங்கப்பட்டது.


ஆசியக் கிண்ணத் தொடரின் இன்றைய, மிக மிக எதிர்பார்க்கப்படும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது.

திங்கள், 17 செப்டம்பர், 2018

கலக்கிய பாகிஸ்தானின் இளையோர் - ஹொங் கொங்கை இலகுவாக வீழ்த்தியது அசுர பல பாகிஸ்தான்

இந்த ஆசியக் கிண்ணத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புடைய அணியாகப் பலரும் கருதும் பாகிஸ்தானிய அணி தன்னுடைய முதலாவது போட்டியிலேயே மிக இலகுவாக ஹொங் கொங் அணியை வெற்றிகொண்டுள்ளது.

டுபாய் மைதானத்தில் நேற்றைய (பாகிஸ்தான் – ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி குழு A இன் முதல் லீக் ஆட்டமாகவும் அமைந்திருந்தது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஹொங்கொங் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.
பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சில் ஹொங்கொங் அணி 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது.

பாகிஸ்தான் அணியின் இளைய பந்துவீச்சாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர். உஸ்மான் கான் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சதாப் கான் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கான 117 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 23.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து எவ்வித அழுத்தங்களுமின்றி 120 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை இலகுவாகப்பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இமாம்-உல்-ஹக் அரைச்சதம் ஒன்றுடன் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று பங்களிப்புச் செய்திருந்தார். 69 பந்துகளை எதிர்கொண்டிருந்த இமாம்-உல்-ஹக் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 69 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பபார் அசாம் 33 ஓட்டங்களை பாகிஸ்தான் அணியின் வெற்றிக்காக பெற்றுத் தந்திருந்தார்.
இதேவேளை இந்தப்போட்டியில் 2000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்களை விரைவாகக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார் பாகிஸ்தானிய வீரர் பபார் அசாம்.



போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர் உஸ்மான் கானுக்கு வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணி தமது அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்வரும் புதன்கிழமை (19) எதிர்கொள்கின்றது.


ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

முறிந்த மணிக்கட்டு, ஒற்றைக் கைத் துடுப்பாட்டம், துணிச்சலைக் காட்டிய தமீம் இக்பால் !!

ஆசியக் கிண்ணத் நேற்றைய இலங்கை - பங்களாதேஷ் ஆட்டத்தின் போது பங்களாதேஷ்  வீரர் தமிம் இக்பால் காயமடைந்தார்.சுரங்க லக்மாலின் பந்துவீச்சில் மணிக்கட்டில் பந்து பட்டதால், வலியில் துடித்த அவர் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். பின்னர் மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஆட்டத்தின் இறுதியில் பங்களாதேஷ் விக்கெட்டுக்கள் 9 இழக்கப்பட்ட பின்னர் இக்பால் மீண்டும் களமிறங்கினார். அப்போது அவர் ஒற்றைக் கையால் மட்டுமே தடுத்து ஆடினார். அத்துடன் முஷ்பிகுர் ரஹீம் சதமடித்து பங்களாதேஷ் பெரிய ஓட்ட எண்ணிக்கை பெறுவதற்கும் உதவியிருந்தார்.
இதனால் தமிம் இக்பாலுக்கு முன்னாள் வீரர்கள் பலரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளையில் தமிம் இக்பால் சிறப்பான formஇல் இருக்கும் நேரத்தில் உபாதையடைந்திருப்பது பங்களாதேஷ் அணிக்குப் பெரும் இழப்பாகக்கருதப்படுகிறது.

முஷ்பிகுரின் அற்புத சதம், இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் ! வீணாய்ப்போனது மாலிங்கவின் மீள்வரவு சாகசம்

ஒரு வருடத்துக்குப் பிறகு அணிக்குள் மீண்டும்  தன்னுடைய மீள் வருகையை முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டாட்டகரமாக ஆரம்பித்த லசித் மாலிங்கவின் 4 விக்கெட்டுக்களையும் தாண்டி ஆரம்பத்தில் பொறுமையாகவும் பின்னர் தனித்து நின்று போராட்டகரமாகவும் ஆடிச் சதமடித்த முஷ்பிகுர் ரஹீம் மிகப் பெரிய வெற்றியொன்றை பங்களாதேஷ் அணிக்கு நேற்று பெற்றுக் கொடுத்தார்.

இந்த 137 ஓட்ட வெற்றியானது பங்களாதேஷ் அணி தமது நாட்டுக்கு வெளியே பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாகும்.
அத்துடன் முஷ்பிகுர் ரஹீம் அடித்த 144  ஓட்டங்கள் அவரது தனிப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் அமைகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 14 ஆவது முறையாக நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியை  137 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கும் பங்களாதேஷ் அணி அதிரடியான வெற்றியொன்றுடன் தொடரை ஆரம்பித்துள்ளது.


இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு  நடைபெறும் இம்முறைக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி குழு B இன் முதல் லீக் போட்டியாக அமைந்திருந்தது.

டுபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ராபே மொர்தஸா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இலங்கை அணியில் 16 மாதங்களின் பின்னர் வேகப்புயலான லசித் மாலிங்க திரும்பியிருந்ததோடு சுழல்பந்துவீச்சாளரான டில்ருவான் பெரேராவுக்கும் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கை ஒரு நாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

மறுமுனையில் பங்களாதேஷ் அணியில் உபாதை ஆபத்துகள் இருந்த நிலையில் தமிம் இக்பால், ஷகீப் அல் ஹஸன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

பங்களாதேஷ் தமது துடுப்பாட்டத்தை லிடன் தாஸ் மற்றும் தமிம் இக்பால் ஆகியோருடன் ஆரம்பித்தது. எனினும், போட்டியின் முதல் ஓவரை வீசிய லசித் மாலிங்க முதல் ஓவரின் இறுதி இரண்டு பந்துகளிலும் ஆரம்ப வீரர் லிடன் தாஸ், மூன்றாம் இலக்கத்தில் வந்த ஷகீப் அல் ஹஸன் ஆகியோரின் விக்கெட்டுக்களை கைப்பற்றி அதிரடியான ஆரம்பம் ஒன்றினை இலங்கை அணிக்கு வழங்கி தனது மீள்வருகையின் முக்கியத்துவத்தையும் காட்டினார்.


இதனை அடுத்து, போட்டியின் இரண்டாவது ஓவரில் சுரங்க லக்மாலின் பந்துபட்டு தமிம் இக்பாலுக்கு மணிக்கட்டு உபாதை ஏற்பட அவர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவானது. இப்படியாக தொடர்ச்சியாக முக்கிய வீரர்களின் வெளியேற்றத்தினால் பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பின்னடைவு ஏற்பட்டது. இதனால், புதிய துடுப்பாட்ட வீரர்களாக களத்தில் இருந்த முஷ்பிகுர் ரஹீம், மொஹமட் மிதுன் ஆகியோருக்கு அணியை கட்டமைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு இருந்தது.

தொடர்ந்து, இலங்கை அணி களத்தடுப்பில் பல தவறுகளை விட்டது. இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மிதுன் – ரஹீம் ஜோடி பங்களாதேஷ் அணிக்காக மெதுவான முறையில் இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்ப முயற்சி செய்து, அதில் வெற்றியும் கண்டனர்.
மத்தியூஸ், டில்ருவான் ஆகியோர் பிடிகளையும் தவறவிட்டனர்.

இந்த இணைப்பாட்டத்திற்குள் அனுபவம் குறைந்த மொஹமட் மிதுன் அவரது கன்னி அரைச்சதத்தை பூர்த்தி செய்ததோடு, முஷ்பிகுர் ரஹீமும் அவரது 30 ஆவது ஒரு நாள் அரைச்சதத்தை பதிந்து கொண்டார்.


மிதுன் 68 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இலங்கை அணி விக்கெட்டுக்களை உடைத்துத் தள்ள பங்களாதேஷ் தடுமாறியது.
எனினும், மிகவும் பொறுமையாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் தனது 6 ஆவது ஒரு நாள் சதத்தினை பூர்த்தி செய்தார். முஸ்பிகுர் ரஹீமின் சத உதவியோடு பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை குவித்தது.
அனைத்து விக்கெட்டுக்களை இழந்த நேரத்தில் மணிக்கட்டு முறிந்த வேளையிலும் கூட ஒற்றைக்கையுடன் ஆடுகளம் வந்த தமீம் இக்பால் ரஹீமுக்குத் துணை வழங்கியது பலரது பாராட்டுக்களையும் வழங்கியது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை போராடிய முஷ்பிகுர் ரஹீம், 4 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 150 பந்துகளுக்கு 144 ஓட்டங்களை குவித்து ஒரு நாள் போட்டியொன்றில் தான் பெற்ற தனது சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக லசித் மாலிங்க வெறும் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது சிறந்த பந்துவீச்சு பெறுமதியை பதிவு செய்ததோடு, தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுக்களை கைப்பபற்றியிருந்தார்.

வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 262 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாட ஆரம்பித்த இலங்கை அணியின் துடுப்பாட்டத் தடுமாற்றம் முதலில் இருந்தே தொடர்ந்தது.எந்தவொரு வீரரும் நின்று நிலைத்து ஆடவில்லை. கடைசியில், 35.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இலங்கை அணி 124 ஓட்டங்களுடன் படுதோல்வி அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக டில்ருவான் பெரேரா 29 ஓட்டங்களை குவித்திருந்தார்.
அசத்தலான பந்துவீச்சை வெளிக்காட்டிய பங்களாதேஷ் அணியின் மஷ்ரபே மொர்தஸா, முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹீமுக்கு வழங்கப்பட்டது. இலங்கை அணி ஆசியக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் திங்கட்கிழமை (17) ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கின்றதுடன் குறித்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையிலும் காணப்படுகின்றது.

சனி, 15 செப்டம்பர், 2018

ஸ்டீவ் ஸ்மித்தின் புதிய பரபரப்பு !! நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொண்ட படத்தை வெளியிட்டார்

பந்தை சேதப்படுத்திய மோசடிக்காகத் தடைக்குள்ளாகியுள்ள முனால் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ச்சியாகப் பரபரப்புக்குக் குறைவில்லாதவராகவே இருந்து வருகிறார்.

ஸ்டீவ்  ஸ்மித்  தனது நீண்ட நாள் காதலியை  இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஒரு ஆண்டுக்கு  கிரிக்கெட் விளையாடத்  தடை பெற்றுள்ள  ஸ்டீவ் ஸ்மித் இன்று தனது நீண்ட நாள் காதலியான டேனி வில்லிஸ்-ஐ திருமணம் செய்துள்ளார்.

இதனை ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஏராளமான ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளையும் வழங்கி வருகின்றனர்.

புதன், 12 செப்டம்பர், 2018

10 புள்ளிகளைப் பறிகொடுத்த இந்தியாவும், பத்தாம் இடத்திலேயே விடைபெற்ற குக்கும் !!

இங்கிலாந்தின் 4-1 என்ற அபாரமான டெஸ்ட் தொடர் வெற்றியானது தரப்படுத்தலில் முதலாமிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு முதலாமிடத்தில் இருந்து எந்த ஒரு வீழ்ச்சியையும் தராவிடினும் பத்து தரப்படுத்தல் புள்ளிகளைக் குறைத்துள்ளது.

இதன்மூலம் இரண்டாம் இடத்திலுள்ள தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை விட 9 புள்ளிகள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி இந்தத் தொடர் வெற்றி மூலம் 8 புள்ளிகளை அதிகமாக பெற்றுள்ளது.இதன் மூலம் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

துடுப்பாட்டத்தில் விராட் கோலியும் பந்துவீச்சில் ஜிம்மி அண்டர்சனும் தத்தம் முதலாமிடங்களைத் தக்க வைத்துள்ள போதிலும் இருவருக்குமே சற்று புள்ளிக்குறைவு ஏற்பட்டுள்ளது.

முதலாமிடத்திலுள்ள விராட் கோலிக்கும் இரண்டாமிடத்திலுள்ள (தற்போது தடைக்குள்ளாகியுள்ள) ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையில் தற்போது ஒரேயொரு புள்ளி மட்டுமே வித்தியாசம்.

எனினும் நேற்றைய டெஸ்ட் போட்டியோடு தனது டெஸ்ட் ஓய்வினை அறிவித்திருந்த அலஸ்டயர் குக் அவர் பெற்ற 71 மற்றும் 147 ஓட்டங்களுடன் 11 ஸ்தானங்கள் மேலேறி பத்தாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அண்மைக்காலங்களில் சற்று சராசரிக் குறைவை சந்தித்திருந்த குக் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது, இறுதி இன்னிங்சில் சதம்,தரப்படுத்தல் உயர்வு என்பவற்றோடு விடைபெறுகிறார்.

சகலதுறை வீரர் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் இருக்கிறார்.

முழுமையான தரப்படுத்தல்கள்




செவ்வாய், 11 செப்டம்பர், 2018

ஆரம்பமாகிறது ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் !!

எதிர்வரும் ஓக்டொபர் மாதம் 5 முதல் 21 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஐந்து அணிகளும் அந்த அணிகளுக்காக விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

ஐந்து franchise அணிகள் ஆப்கானிஸ்தானின் பிராந்திய அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கான நட்சத்திர வீரர்களாக பிரபல சர்வதேச T20 வீரர்களான கிறிஸ் கெயில், ஷஹிட் அஃப்ரிடி, அன்றே ரசல், ப்ரெண்டன் மக்கலம், ரஷீத் கான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களைத் தவிர உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் T20 லீக் போட்டிகளில் விளையாடிவரும் பிரபல வீரர்களான இலங்கையின் திஸர பெரேரா, பாகிஸ்தானின் மொஹமட் ஹஃபீஸ், வஹாப் ரியாஸ், சொஹைல் தன்வீர், நியூ சீலாந்தின் லூக் ரொங்கி, கொலின் மன்றோ, இங்கிலாந்தின் ரவி போபரா, தென் ஆபிரிக்காவின் வெயின் பார்னல், கொலின் இங்க்ராம், பங்களாதேஷின் தமீம் இஃபாளா ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

ஒவ்வொரு குழாமிலும் கட்டாயமாக ஆறு வெளிநாட்டு வீரர்கள், அதில் ஒருவர் டெஸ்ட் அந்தஸ்து  இல்லாத associate அணியிலிருந்து இடம்பெறவேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐந்து அணிகளிலும் நேபாள, நெதர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து வீரர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஐந்து அணிகளதும் முழுமையான விபரங்கள் :


ஆசியக் கிண்ணம் - ICCயினால் ஹொங் கொங்கிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்


இந்தமுறை ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் அனைத்து ஒருநாள் போட்டிகளுக்கும் சர்வதேச ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படவுள்ளது என்ற அறிவித்தலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது.

சர்வதேச கிரிக்கட் அந்தஸ்தை பெற்றுள்ள  அணியும் அந்தஸ்து இல்லாத அணியும் விளையாடும் போட்டிகளுக்கு சர்வதேச ஒருநாள் அந்தஸ்தை வழங்குவதில் கடந்த காலங்களில் சிக்கல் இருந்து வந்தது.


எனினும் இனிவரும் காலங்களில் இவ்வாறான கலப்பு போட்டிகள் அனைத்திற்கும் சர்வதேச ஒருநாள் அந்தஸ்தினை வழங்க ICC தீர்மானித்திருக்கிறது.

இந்த கொள்கைமாற்றத்தின் அடிப்படையில் பலன்பெறுகின்ற முதலாவது தொடராக எதிர்வரும் ஆசியக் கிண்ணத் தொடர்  இருக்கும் என்பதோடு ஒருநாள் அந்தஸ்து இல்லாத நிலையிலும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள போட்டிகள் ஹொங் கொங் அணிக்கு சர்வதேசப் போட்டிகளாகத் தரவுகளில் சேர்க்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரம் இந்த தொடரில் பங்கேற்கின்ற ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஏனைய 5 அணிகளும் டெஸ்ட் அந்தஸ்த்து உடைய அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இனி மேலும் நடைபெறும் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளின் போதும் இதே நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.




துடுப்பால் சிக்கலில் மாட்டியுள்ள தோனி !!

இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனிக்கும் சர்ச்சைக்கும் என்ன தான் பொருத்தமோ, அடிக்கடி சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் தோனி இப்போது சிக்கலில் அகப்பட்டிருப்பது துடுப்பினால். அவர் பயன்படுத்தும் துடுப்பால் புதிய சிக்கல் ஒன்று உருவாகி உள்ளது.

பிரபல துடுப்பு தயாரிப்பு நிறுவனமான ஸ்பார்டன் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் துடுப்புகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இவர்களுடன் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் இன்னும் பல பிரபல வீரர்களுடனும் ஒப்பந்தங்களை செய்துள்ளது.

எனினும் அண்மைக்காலமாக ஸ்பார்டன் நிறுவனம் வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஒப்பந்தத் தொகையை உரிய நேரத்தில் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் ஒரு நாள் மற்றும் T 20 போட்டிகள் அணிக்கான தலைவர் ஒயின் மோர்கன், அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்  மிட்செல் ஜோன்சன், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஜோ பேர்ன்ஸ், மேற்கிந்திய அதிரடி நட்சத்திரம் கிறிஸ் கெய்ல் போன்றோர் ஸ்பார்டன் நிறுவன துடுப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சரியான நேரத்தில் தொகை அவர்களுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

இத்தனை வீரர்களுக்கான ஒப்பந்தப் பிரச்சினை தொடரும் நிலையில் தோனி இன்னும் தான் பயன்படுத்தும் துடுப்புகளில் ஸ்பார்டன் நிறுவன ஸ்டிக்கரையே ஒட்டியுள்ளார்.
தற்போது பணப் பிரச்னை எழுந்துள்ள நிலையிலும் தோனி இன்னும் ஸ்டார்பன் நிறுவனத்திற்கு ஆதரவாக அந்த ஸ்டிக்கரை பயன்படுத்துவது அவருக்கு ஒரு சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
தோனிக்கு மட்டும் ஒப்பந்தப் பணம் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இந்தியாவில் ஜலந்தரை சேர்ந்த தொழிலதிபர்  குணால் ஷர்மா.ஆனால் இந்த   ஸ்பார்டன் நிறுவனத்தின்  இணை உரிமையாளர்  தோனி  என்றும் பரவலாகப் பேசப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே தோனி ரகசியமாக வீரர்களை ஒப்பந்தம் செய்யும் முகாமைத்துவ நிறுவனங்களிலும் பங்குதாரராக இருப்பதாக சொல்லப்பட்டு வருவதும் கவனிக்கவேண்டிய விடயமாகும்.

வியாழன், 6 செப்டம்பர், 2018

இந்தியாவின் தோல்விக்கு அஷ்வின் தான் காரணம் - குற்றம் சுமத்தும் ஹர்பஜன் சிங் !!

4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் தான் முக்கிய காரணம் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் வீரர் ஹர்பஜன் சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி  60 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. அத்தோடு தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த மைதானம்   சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால்  இங்கிலாந்து சகலதுறை வீரர்  மொயின் அலி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.  ஆனால் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் 3 விக்கெட்டுக்களை  மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்தின் சுழல்பந்து வீச்சாளருக்கு மைதானம்  ஒத்துழைத்த நிலையில், அஷ்வினின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமைதான் தோல்விக்கு காரணம் என்று ஹர்பஜன் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ''சவுத்தாம்ப்டன் மைதானம்  சுழல் பந்துவீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு கொடுத்தது. குறிப்பிட்ட கரடு முரடான பகுதியில் பந்தை விழச் செய்வதன் மூலம் ஏராளமான விக்கெட்டுக்களை எடுத்திருக்க முடியும். அதை மொயின் அலி சரியாக செய்தார். இந்தியாவின் முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
4-வது டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தற்கு முக்கிய காரணம் அஷ்வினை விட மொயின் அலி சிறப்பாக பந்து வீசியதுதான். முதல் முறையாக இந்திய சுழற்பந்து வீச்சாளரை விட, இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசியதை நான் பார்த்தேன். அஷ்வினால் விக்கெட் வீழ்த்த இயலாததே இந்தியா 3-1 எனத் தொடரை இழக்க முக்கிய காரணம்.
அஷ்வினின் இடுப்பு உபாதை எவ்வளவு கடுமையானது என்று எனக்குத் தெரியாது. அது எவ்வளவு முக்கியமானது என்று அணி நிர்வாகத்திற்கு கட்டாயம் தெரிந்திருக்கும். அவர் பூரண உடற்தகுதியுடன் விளையாடியிராவிட்டால் அது இந்திய அணிக்கு செய்யப்பட பெரிய துரோகமாகும்.
அவர் உடற்தகுதி பெற்றிருந்தால், அவரிடம் எதிர்பார்த்ததை வெளிப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டார்'' என்று கூறினார்.

முன்பும் பல தடவை அஷ்வினைப் பற்றி ஹர்பஜன் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்திருந்தமையும் இருவரது ரசிகர்களும் மட்டுமன்றி இவ்விருவருமே நேரடியாகவும் மறைமுகமாகவும்  சமூக வலைத்தளங்களில் மோதி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புதன், 5 செப்டம்பர், 2018

இந்திய அணியிலே விளையாடத் தகுதியற்ற அந்த மூன்று வீரர்களும் யார் ?


இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி  இழந்துள்ளது.  இந்திய அணியின் மோசமான துடுப்பாட்டத்தால் தான் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது.

இந்தத் தொடரில் விராட் கோலி, புஜாரா, ரஹானே மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகியோரைத் தவிர மற்ற யாரும் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா மூன்றாவது டெஸ்ட் போட்டியை தவிர மற்ற எந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை.

இந்த தோல்விக்கு பிறகு, கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய அணியின் தலைவர் சுனில் கவாஸ்கர், பாண்டியாவை கடுமையாக தாக்கியிருந்தார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சுனில் கவாஸ்கர் கூறியதாவது ' நீங்கள் ஹர்திக் பாண்டியாவை சகலதுறை வீரர் என அழைக்க விரும்புகிறீர்களா? யார் யாரெல்லாம் பாண்டியாவை சகலதுறை வீரர் என அழைக்க விரும்புகிறீர்களோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் தான் அவரை சகலதுறை வீரராக நினைக்கவில்லை என்றும்
தான்  பாண்டியாவை மட்டும் விமர்சிக்கவில்லை. இந்திய அணியில் விளையாடுவதற்கே தகுதியில்லாத சில வீரர்கள் தற்போதைய அணியில் உள்ளனர். அவ்வாறு  மூன்று வீரர்கள்  உள்ளனர். அவர்களை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அணியிலிருந்து என்றால் ஆடும் பதினொருவரில் இருந்து மட்டுமல்ல; வீரர்கள் ஓய்வறையில் கூட உட்கார வைக்கக்கூடாது. மொத்தமாக அணியிலிருந்தே நீக்க வேண்டும். அவர்கள் மீண்டும் கடின உழைப்பின் மூலம் அணியில் இடம்பெற போராட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீரர்கள் யார் யார் என்று கவாஸ்கர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இப்போது தவான், பான்ட், விஜய், கார்த்திக், ராகுல் என்று ரசிகர்களின் ஊகங்கள் பலவிதமாக அமைந்து வருகின்றன.

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

சந்திமால், அகில தனஞ்செய இல்லை ; ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணிக்குப் பின்னடைவு ??

ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது முதல் லசித் மாலிங்கவின் மீள் இணைப்புப் பற்றி மகிழ்ச்சியடைந்திருந்த இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரிடியாக இரண்டு விடயங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

ICC தடைக்குப் பின்னர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள டெஸ்ட் தலைவர் தினேஷ் சந்திமால் விரல் முறிவு காரணமாக ஆசியக் கிண்ணத் தொடர் முழுவதிலுமே விளையாட முடியாத நிலை தோன்றியுள்ளது.
இந்தக் காயம் காரணமாகவே கடந்த ஞாயிறு நடைபெற்ற SLCT20 இறுதிப் போட்டியிலும் கொழும்பு அணிக்குத்  தாங்கியிருக்கவில்லை.
தினேஷ் சந்திமாலுக்கு அண்மையில் நடந்து முடிந்த SLCT20 போட்டிகளின் பொது ஏற்பட்ட விரல் உபாதையின் காரணமாக சிலவேளை தொடரிலிருந்தே விலகவேண்டி வரலாம்.
சந்திமாலினால் பூரண உடற்தகுதியைப் பெறமுடியாது போகும்பட்சத்தில் சந்திமாலுக்குப் பதிலாக நிரோஷன் டிக்வெல்ல அணியில் இடம்பெறுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அத்துடன் அண்மைக்காலத்தில் இலங்கையின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக நம்பிக்கை பெற்றுவரும் அகில தனஞ்செயவின் மனைவியின் முதலாவது குழந்தையின் பிரசவ காலம் என்பதால் முதல் இரு போட்டிகளில் தனஞ்செய விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடும் டில்ருவான் பெரேராவை இந்தக் குழாமில் சேர்த்ததற்கான காரணம் உணர்த்தப்பட்டுள்ளது.
ஆசியக் கிண்ணத்தில், இலங்கை அணிக்கு முதலாவது போட்டி 15ஆம் திகதி பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும், 17ஆம் திகதி இரண்டாவது போட்டி ஆப்கனிஸ்தானுக்கு எதிராகவும் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு அணிக்குமே தலா இரண்டு போட்டிகள் மட்டுமே என்பதால் அடுத்த சுற்றான சூப்பர் 4க்கு அதிக புள்ளிகளோடு சொல்வதாயின் ஒவ்வொரு போட்டிகளையும் வெல்லவேண்டியிருக்கிறது.


ஓய்வு பெற்றார் அலிஸ்டயர் குக் !!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து தடுமாறி வந்திருந்த முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவரும் ஆரம்பத் துடுப்பாட்டவீரருமான அலிஸ்டயர் குக் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியுடன் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்திருக்கும்  குக், டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் ஆறாம் இடத்தில் இருக்கிறார்.
தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை அடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி உருவாக்கிய தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படும் குக், 2006இல் அறிமுகமானது முதல் 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு 2010/11  ஆண்டு காலப்பகுதியில் கிடைத்த பிரபலமான ஆஷஸ் வெற்றி 2012/13 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய சுற்றுப் பயணத்தின் போது கிடைத்த டெஸ்ட் தொடர் வெற்றி ஆகியவற்றுக்கு பிரதான பங்களிப்பை குக் தனது துடுப்பாட்டம் மூலம் வழங்கியிருந்தார். அத்துடன் அவர் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இரட்டைச் சதங்களை விளாசி திறமையை நிருபித்திருந்தார்.

எனினும் அலிஸ்டயர் குக் அண்மைய காலங்களில் துடுப்பாட்டத்தில் அந்தளவு பிரகாசிக்கவில்லை. இதேநேரம், 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் தலைவர் பதவியை துறந்த அவர் அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் 32 எனும் அளவிலேயே  ஓட்ட சராசரியைக் காட்டி இந்த ஆண்டில் ஒரேயொரு அரைச்சதம் மாத்திரமே பெற்றிருக்கின்றார். இந்த ஆண்டின் 9 டெஸ்ட் போட்டிகளில் குக்கின் சராசரி வெறும் 18.72 மட்டுமே.
இவை அனைத்தையும் கருத்திற்கொண்டே அலிஸ்டயர் குக் தனது ஓய்வை அறிவித்திருக்கின்றார் என நம்பப்படுகின்றது.

எனினும் குக் மட்டுமின்றி அவரது சக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜென்னிங்க்ஸும் தடுமாறியே வந்திருக்கிறார்.


“கடந்த சில மாதங்களில் எனக்கு உருவாகிய யோசனைகள், அதன் பிறகு நான் தீர்க்கமாக ஆராய்ந்து எடுத்த முடிவுகள் என்பவற்றின் அடிப்படையில் நான் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை அடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கின்றேன்“ என குக் தெரிவித்திருந்தார்.

“என்ன இருந்தாலும் இது ஒரு சோகமான நாள். என்னிடம் இருந்த அனைத்தையும் மீதம் வைக்காமல் கொடுத்து விட்டேன் என்பதை எனது முகத்தில் ஒரு புன்னகையை காட்டி மட்டுமே தெரிவிக்க கூடியதாக உள்ளது“ என குக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அலிஸ்டயர் குக் இதுவரையில் டெஸ்ட் போட்டிகளில் 32 சதங்கள் அடங்கலாக 12,254 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதேநேரம் குக் ஓவல் மைதானத்தில் விளையாடப் போகும் கடைசி டெஸ்ட் போட்டி அவரது 161ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் குக் வரலாற்றில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரராகவே ஓய்வு பெறவிருக்கின்றார்.


கிட்டத்தட்ட 12 வருட காலம் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த அலஸ்டைர் குக், அதற்கு உதவியாக இருந்த அவரது குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

அலஸ்டைர் குக் சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்தாலும், அவரது தாய்க் கவுன்டி கழகமான எசெக்ஸ் அணிக்கு தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடவிருப்பதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது “எனக்கு 12 வயதில் இருந்து அனைத்து விதத்திலும் உதவியாக இருந்த எசெக்ஸ் கழகத்திற்கு நன்றி. நான் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டின் பருவகாலத்திற்காக ஆட மிகவும் ஆவலுடன் உள்ளேன். இங்கிலாந்து அணி எதிர்காலத்தில் ஒவ்வொரு தடவை சாதிக்கும் போதும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன், நான் அப்படியான சாதனைகள் ஒவ்வொன்றையும் மிகவும் களிப்புடன் பார்த்தவாறு இருப்பேன்“ எனப் பேசியிருந்தார்.

சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிக்கக்கூடிய வாய்ப்புடைய ஒரேயொரு வீரராகக் கருதப்பட்ட குக் இப்போது ஓய்வை அறிவித்துள்ளதால் இன்னும் பல ஆண்டுகள் சச்சினின் டெஸ்ட் துடுப்பாட்ட சாதனைகள் நிலைத்திருக்கும் என இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.


திங்கள், 3 செப்டம்பர், 2018

மீண்டும் வந்த மொயின் அலி இந்தியாவை சுழற்றி எடுத்தார் - இங்கிலாந்துக்கு தொடர் வெற்றி !

நான்கு நாட்களுக்குள்ளேயே நான்காவது டெஸ்ட் போட்டியை முடிவுக்கு நேற்றுக் கொண்டுவந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரையும் தன்வசப்படுத்தியுள்ளது. முதற்தடவையாக இந்தத் தொடரில் அணியில் சேர்க்கப்பட்ட மொயின் அலியின் சுழல்பந்துவீச்சும் அவரும் சாம் கர்ரனும் காட்டிய சகலதுறைத் திறமைகளும் சேர்ந்து இந்தியாவை உருட்டி எடுத்து 60 ஓட்டத் தோல்வியை வழங்கியது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று  தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் இந்தப் போட்டி ஆரம்பித்தது
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த 30 ஆம் திகதி இங்கிலாந்தின் சௌதம்டன் (Southampton) நகரில் ஆரம்பித்து,  இங்கிலாந்து  அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் தொடரை 3-1 என கைப்பற்றியிருக்கிறது.

தொடரை கைப்பற்றும் நோக்கில் இங்கிலாந்து அணியும் தொடரை சமன் செய்யும் எதிர்பார்ப்பில் இந்திய அணியும் இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கிஇருந்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொயின் அலி இணைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 86 ஓட்டங்களுக்கு முதல் ஆறு விக்கெட்டுகளையும் இழந்து இக்கட்டான நிலையில் இருந்த போது மீள் வரவில் சாதித்துக்காட்டத் துடித்த மொயின் அலி மற்றும் கடந்த போட்டியில் அணியில் சேர்க்கப்படாதிருந்த சாம் கரன் ஆகியோரின் இணைப்பாட்டம் அவ்வணிக்கு கைகொடுத்தது. இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


துடுப்பாட்டத்தில்  சாம் கரன் 78 ஓட்டங்களை பெற்றிருந்தார். இது அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. மேலும் மொயின் அலி 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா மூன்று விக்கெட்டுக்களையும் இஷாந்த் ஷர்மா, அஷ்வின் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றிய இஷாந்த் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது 250 ஆவது விக்கெட்டை பதிவு செய்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியாவின் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக மாறிக்கொண்டார்.


இந்திய அணி சார்பாக அணித் தலைவர் விராட் கோலி 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க புஜாரா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 132 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்தை விடக் குறைவாகவே ஓட்டங்களைப் பெறும் எனக் கருதப்பட்ட இந்தியாவை காப்பாற்றியவர் புஜாரா. இறுதியில் இந்திய அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணியை விட 27 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் புரோட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்க்சில் 271 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணிக்கு 245 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஸ் பட்லர் 69 ஓட்டங்களையும் ஜோ ரூட் மற்றும் சாம் கரன் ஆகியோர் முறையே 48 மற்றும் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் மொஹமட் சமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


245 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக்  களமிறங்கிய இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 22 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

ஒப்பீட்டளவில் இலகுவாகக் கருதப்பட்ட இலக்கு எனினும்  நான்காவது இன்னிங்ஸ் என்பதால் இங்கிலாந்து அணிக்கும் வாய்ப்பு இருந்தது.

எனினும் அணித்தலைவர் கோலி மற்றும் ரஹானே ஆகியோரின் இணைப்பாட்டம் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தது. இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 101 ஓட்டங்கள் பெற்றிருந்த போது கோலி 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

கோலியின்  ஆட்டமிழப்பை வாய்ப்பாக வைத்து இங்கிலாந்து விக்கெட்டுக்களை உடைக்க ஆரம்பித்தது.

தொடர்ந்து ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை மட்டுமே பெற்று 60 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
ரஹானேயும் அரைச்சதம் பெற்றிருந்தார்.

இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் மொயின் அலி நான்கு விக்கெட்டுகளையும் அன்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

துடுப்பாட்டத்தில் மொத்தமாக 49 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயின் அலி போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இதே மைதானத்தில் மொயின் அலி நான்கு ஆண்டுகளுக்கும் முன்பும் இந்தியாவுக்கு எதிராக 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
அலியின் ஆறாவது போட்டி சிறப்பாட்டக்காரர் விருது இதுவாகும்.

இரு அணிகளுக்குமிடையிலான ஐந்தாவதும் இறுதியுமன டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...