தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 22 செப்டம்பர், 2018

இந்தியாவுக்கு இலகுவான வெற்றி ! மீள் வருகையில் மீண்டும் கலக்கிய ஜடேஜா !!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இரண்டாம் கட்டப் போட்டிகளான "சூப்பர் 4” சுற்றின் முதல் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது இந்தியா.
துடுப்பாட்டத்தின் மூலம் நின்று வழிகாட்டியிருந்தார் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா.
ஆட்டமிழக்காமல் 83.
இந்தியா இந்தத் தொடரில் பெற்ற மூன்றாவது தொடர்ச்சியான வெற்றியாக பங்களாதேஷ் அணியை இந்தியா 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றி ஒன்றைப் பதிவு செய்தது.

டுபாயில் நடைபெற்ற நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷ் அணிக்கு வழங்கியிருந்தார்.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லிடன் தாஸ், நஸ்முல் ஹொசைன் ஆகிய இருவரும் இந்திய அணியின் புவ்னேஸ்வர்குமார், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பத்து ஓட்டங்களைக் கூட தாண்டாது மைதானத்தை விட்டு வெளியேறினர்.

பின்னர் சகீப் அல் ஹஸன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் விக்கெட்டுக்களை இந்திய ஒரு நாள் அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக அணிக்குள் வந்த ரவீந்திர ஜடேஜா தகர்த்தார்.

தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசையும் சரிவினைக் காட்டியது.

இதனை அடுத்து மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்ட பங்களாதேஷ் அணிக்கு மெஹிதி ஹசன் மிராஸ் பெற்றுக்கொடுத்த 42 ஓட்டங்களே ஆறுதலாக இருந்தன. பங்களாதேஷ் அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 173 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பாக ரவீந்திர ஜடேஜா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், புவ்னேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 174 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, 36.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 174 ஓட்டங்களை பெற்றவாறு இலக்கை அடைந்தது.

இந்திய அணியின் வெற்றிக்காக இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 104 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 83 ஓட்டங்களை குவித்திருந்ததுடன், ஷிக்கர் தவான் 40 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் தோனி 33 ஓட்டங்களையும் பெற்று தமது தரப்பின் வெற்றிக்கு உதவியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா தெரிவானார்.

அடுத்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை நாளை எதிர்கொள்ளவுள்ளதுடன், அதேநாளில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான்  அணியையும் எதிர்கொள்கின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...