மேற்கிந்தியத் தீவுகளை நொறுக்கி அவுஸ்திரேலியா அபார வெற்றி: ஹேசில்வுட், லயனின் மாயாஜாலம்!
பார்படோஸ், ஜூன் 28, 2025 – மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசைக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்து, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது! பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக மாறிய ஆடுகளத்தில் ஜோஷ் ஹேசில்வுட்டின் (Josh Hazlewood) ஐந்து விக்கெட் மாயாஜாலமும், நேதன் லயனின் (Nathan Lyon) துல்லியமான சுழலும் மேற்கிந்தியத் தீவுகளின் எதிர்ப்பை நொறுக்கியது.
ஹேசில்வுட்டின் ஐந்து விக்கெட் வீழ்த்திய பிரம்மாண்டம்!
போட்டியின் முடிவில், நேதன் லயன் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் கடைசி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்ற, மேற்கு இந்தியத் தீவுகள் அணி 141 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
301 ஓட்டங்கள் என்ற எட்ட முடியாத இலக்கை நோக்கித் துரத்திய மேற்கு இந்தியத் தீவுகள், அவுஸ்திரேலிய பந்துவீச்சின் கோரத் தாண்டவத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சரிந்தது. ஜோஷ் ஹேசில்வுட் இரண்டாவது இன்னிங்ஸில் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி (5 for 43), ஆட்டத்தின் கதாநாயகனாக மிளிர்ந்தார்.
தனது 13வது டெஸ்ட் ஐந்த விக்கெட் பெறுதியைப் (13th Test five-wicket haul) பதிவுசெய்த ஹேசில்வுட், "இந்த ஆடுகளத்தில் போதுமான அளவு உதவிகள் இருந்தன, பந்து ஏற்ற இறக்கமாகச் சென்றது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் பந்து வீசி பொறுமையாக இருந்ததே முக்கியம்" என்று தனது ஆட்டத்தைப் பற்றித் தெரிவித்தார்.
ஹேசில்வுட்டின் பந்துவீச்சுக்கு ஜான் கேம்ப்பெல் (ஸ்கூப் ஷாட் ஆட முயன்று விக்கெட் காப்பாளரிடம் பிடிபட்டார்), பிராண்டன் கிங் (முதல் பந்திலேயே கல்லிக்கு பிடியாய் மாறிப்போனது), ரோஸ்டன் சேஸ் (ஷோர்ட் லெக்-இடம் பிடிபட்டார்) மற்றும் கீசி கார்டி (கடுமையான சீம் (seam) நகர்வில் போல்ட் ஆனார்) போன்ற முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் பலியாயினர். ஜோமல் வரிக்கனையும் ஸ்லிப்பில் (slip) பிடிகொள்ள வைத்து தனது 5 விக்கெட்டுகளையும் பூர்த்தி செய்தார். பந்துவீச்சில் கம்மின்ஸ் (Pat Cummins) சாய் ஹோப் விக்கெட்டை வீழ்த்த, மேலதிக வீரர் மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne) நேரடித் தாக்குதலில் அல்சாரி ஜோசப்பை ரன் அவுட் செய்ய, ஆஸ்திரேலியாவின் முழுமையான ஆதிக்கம் வெளிப்பட்டது.
ஷமார் ஜோசப்பின் தனி நபர் போராட்டம்!
மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்ட வரிசையில், ஷமார் ஜோசப் (Shamar Joseph) ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 22 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய அவர், லயனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், அவரது இந்தத் தனிநபர் போராட்டம் மேற்கு இந்தியத் தீவுகளின் தோல்வியைத் தடுக்க போதுமானதாக அமையவில்லை.
அவுஸ்திரேலியாவின் வலுவான துடுப்பாட்ட அஸ்திவாரம்!
முன்னதாக, அவுஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் வியூகத்துடன் துடுப்பெடுத்தாடி, வெற்றிக்குத் தேவையான அடித்தளத்தை அமைத்தது. போ வெப்ஸ்டர் (Beau Webster) 63 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் (Travis Head) 61 ஓட்டங்களும் குவித்து, இந்தப் போட்டியின் ஒரேயொரு சத இணைப்பாட்டத்தை (century partnership) அமைத்தனர்.
ஹெட், வெப்ஸ்டர் ஆகியோருக்குப் பிறகு விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரேயும் அசத்தலாக ஆடி 65 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார். ஷமார் ஜோசப் சளைக்காமல் பந்துவீசி அந்த இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை (5 for 87) கைப்பற்றிய போதிலும், அவுஸ்திரேலியாவின் முன்னிலையைக் குறைக்க முடியவில்லை.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக, பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய ஆடுகளத்தில் துடுப்பாட்ட வீரராக இரு இன்னிங்ஸிலும் அரைச் சதங்கள் பெற்ற டிராவிஸ் ஹெட் தெரிவானார்.
காலை நேரத்தின் எதிர்ப்பு, பின்மாலையின் சரிவு என டெஸ்ட் கிரிக்கெட்டின் கணிக்க முடியாத தன்மையை இந்த ஆட்டம் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியது. அவுஸ்திரேலியா ஏன் இந்த வடிவத்தின் சிறந்த அணியாக உள்ளது என்பதை இந்த வெற்றி மீண்டும் ஒருமுறை பறைசாற்றியது!
0 கருத்துகள்