தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 30 ஜூன், 2018

இந்தியாவின் சுழலில் மீண்டும் சுருண்டது அயர்லாந்து ! அபாரமான தொடர் வெற்றி.

இந்தியா அயர்லாந்து அணிகள் மோதிய 2 -வது டT20 போட்டியில் அயர்லாந்து அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.


இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள், மூன்று டி20, மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

அதற்கு முன்னதாக, அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரில், இந்திய அணி விளையாடியது. முதல் T20 போட்டியில், 208 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி, 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.

இந்நிலையில், இரண்டாவது T20 போட்டி நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து தலைவர் கரி வில்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

நேற்றைய போட்டியில் தோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் லோகேஷ் ராகுல் மற்றும் இந்தியத் தலைவர் வீராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இதில் வீராட் கோலி 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியால் ரன்ரேட் வேகமாக அதிகரித்தது. அப்போது லோகேஷ் ராகுல் 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர், ரெய்னாவும் 69 ரன்களில் அவுட்டானார். அடுத்துக் களமிறங்கிய ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் களமிறங்கிய மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இறுதியில் ஹர்திக் பாண்டியா 32 ரன்களும், மணிஷ் பாண்டே 21 ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு 214 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், சித்தார்த் கெளல், பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 இறுதியில் அயர்லாந்து அணி 12.3 ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 

இதன் மூலம் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த வெற்றியானது T20 போட்டிகளில் இந்தியா பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றியாகவும், உலகளாவிய ரீதியில் இரண்டாவது பெரிய வெற்றியாகவும் அமைந்துள்ளது.

அத்துடன் இந்திய அணிக்கு எதிராக ஒரு அணி பெற்ற குறைவான ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.

தொடரில் 7 விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் கைப்பற்றியிருந்தாலும், 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சஹால் தொடர் நாயகனாகத் தெரிவானார்.

GT20 Canada - கனடாவில் கிரிக்கெட் கொண்டாட்டம் ஆரம்பம் #GT20Canada

Global T20 Canada Cricket League என்ற பெயரில் ஆரம்பமாகியுள்ளது கனடாவின் முதலாவது IPL பாணியிலான T20 கிரிக்கெட் தொடர்.

6 அணிகள் விளையாடுகின்ற இந்தக் கிரிக்கெட் தொடர் கனடாவில் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய நிறுவனமொன்றின் முதலீட்டுடன் கனேடிய கிரிக்கெட் சபையின் ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அனுமதியுடன் நடத்தப்படும் இந்தத் தொடர் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நாடுகளின் முக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்களின் பங்குபற்றலோடு 6 அணிகளாக இந்தத் தொடர் நேற்று முந்தினம் முதல் ஆரம்பித்துள்ளது.
பெரும்பான்மையாக மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் விளையாடவுள்ள இந்தத் தொடரில் ஆறு அணிகளில் 4 அணிகளுக்கு மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களே தலைமை தாங்குகின்றனர். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தனது அனுபவத்தையும் தம்மால் இயன்ற சகல ஒத்துழைப்புக்களையும் இந்தத் தொடருக்கு வழங்குவதாக சம்மதித்துள்ளது.

அத்துடன் ஆறாவது அணியாக மேற்கிந்தியத் தீவுகளின் B அணியையும் அனுப்பியுள்ளது.

விளையாடுகின்ற 6 அணிகளும் ..










இந்தத் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தானிய வீரர்களும் பலர் விளையாடினாலும் வழமை போல இந்தியக் கிரிக்கெட் சபை தனது வீரர்கள் IPL தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு கிரிக்கெட் சபைகள் நடத்தும் லீக் தொடர்களில் விளையாட அனுமதி வழங்கவில்லை.

இவர்களோடு அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து அணியின் வீரர்களும் விளையாடினாலும் அநேக ரசிகர்களின் கவனம் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு இலக்காகி ஒரு வருடத் தடைக்கு உள்ளாகியுள்ள அவுஸ்திரேலிய பெருந்தலைகள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோர் மீள்வருகை புரியும் முதல் தொடராக இது அமைவது தான்.

டரன் சமியின் தலைமையிலான Toronto அணிக்காக முதல் போட்டியிலேயே அரைச்சதத்துடன் கலக்கலாக ஸ்மித் களமிறங்கியுள்ளார்.
எனினும் வோர்னர் நேற்றைய போட்டியில் அவர் விளையாடிய ட்வெயின் ப்ராவோவின் வின்னிபெக் அணி வென்றாலும் ஒரே ஒரு ஓட்டத்துடன் எதிரணியான மொன்ரியல் அணியின் தலைவரான இலங்கையின் லசித் மாலிங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தற்போதைய சர்வதேச அரங்கின் முன்னணி வீரர்களான கெயில், மாலிங்க, பிராவோ, ஸ்மித், அஃப்ரிடி, வோர்னர், திஸர பெரேரா, பொலார்ட், சமி, சுனில் நரைன், லூக் ரொங்கி, டேவிட் மில்லர் போன்றோரின் பங்குபற்றல் மட்டுமன்றி வக்கார் யூனுஸ், பில் சிமன்ஸ், டொம் மூடி, மொஹமட் அக்ரம், ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் ஆகியோரை பயிற்றுவிப்பாளர்களாக அழைக்கும் அளவுக்கு செல்வாக்குச் செலுத்தியுள்ளது இந்த கனடா  தொடர்.

கனடாவின் பிரபலமான கிங்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த விறுவிறுப்பான கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டிகள் மற்றும் செய்திகளை கிரிக்கெட் தமிழ் மூலமாக அறிந்துகொள்வதோடு எமது Facebook பக்கம் மூலம் உடனடி விபரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இதோ  யின் முழுமையான போட்டி அட்டவணை..



புதன், 27 ஜூன், 2018

சமிந்த வாஸின் சாதனையை முறியடித்த லஹிரு குமார !!



இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் பிரிட்ஜ்டவுன் பகலிரவு டெஸ்ட் போட்டியில்  இலங்கை அணியின் சரித்திரபூர்வ வெற்றியின் முக்கிய காரணகர்த்தாக்களான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லஹிரு குமார புதிய சாதனை ஒன்றினை நிலைநாட்டியிருக்கின்றார்.

இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கும் லஹிரு குமார, அதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மொத்தமாக 17 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். லஹிரு குமார இந்த டெஸ்ட் தொடரில் கைப்பற்றிய மொத்த விக்கெட்டுக்கள், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரினால் வெளிநாடு ஒன்றில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய விக்கெட்டுக்களாக பதிவாகியுள்ளன.

இதற்கு முன்னர், 1995 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் மொத்தமாக கைப்பற்றிய 16 விக்கெட்டுக்களே இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் கைப்பற்றிய அதிக விக்கெட்டுக்களாக இருந்து வந்தன.

தற்போது சமிந்த வாஸின் சாதனையை முறியடித்திருக்கும் 21 வயதேயான லஹிரு குமார, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுக்களையும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்ததோடு, கடந்த சனிக்கிழமை  ஆரம்பான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருக்கின்றார்.

மணிக்கு 145 கிலோ மீட்டருக்கு மேலான வேகத்தில் பந்துவீசும் ஆற்றலைக் கொண்டிருக்கும் லஹிரு குமார 2016 ஆம் ஆண்டு சிம்பாப்வே அணியுடனான சுற்றுப் பயணம் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அறிமுகமாகியிருந்தார்.

இதன் பின்னர் லஹிரு குமார 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரிலும் சிறப்பான பெறுபேறுகளைக் காட்டியிருந்தார். எனினும், குமார கடந்த ஆண்டு பங்களாதேஷ், இந்திய அணிகளுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடர்களில் நல்ல முறையில் செயற்படாத காரணத்தினால் தேசிய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து, இந்த ஆண்டு பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணியில் மீண்டும் உள்வாங்கப்பட்ட லஹிரு குமார இரண்டு போட்டிகள் கொண்ட அந்த தொடரில் குறிப்பிடும்படியான ஆட்டத்தினை வெளிக்காட்ட தவறியிருப்பினும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாறி, இலங்கை அணி சார்பாக இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் வலம் வருகின்றார்.

பவுன்ஸ் மற்றும் ஸ்விங் உள்ள ஆடுகளங்களில் அந்த சாதகத் தன்மைகளை உள்வாங்கக்கூடிய ஒரு சிறப்பான பந்துவீச்சாளராக லஹிரு குமார இலங்கை அணியின் எதிர்காலத்துக்கு நம்பிக்கையளிக்கிறார்.


இலங்கை அணிக்கு சரித்திரபூர்வ வெற்றி ! சமநிலையில் முடிந்த தொடர் !! #WIvSL

பார்படோஸில் நேற்று நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.

குறைவான ஓட்டங்கள் பெறப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி இடையிடையே பெய்த மழை காரணமாகத் தடைப்பட்டவாறே இருந்தது.

144 என்ற இலக்கை நேற்று இலங்கை அடைவதற்கு இடையில் 81 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்த வேளையில் வைத்தியசாலையில் இருந்து திரும்பிய குசல் ஜனித் மற்றும் துடுப்பாடக் கூடிய சுழற்பந்து வீச்சாளர் டிமுத் ஆகிய இரு பெரேராக்கள் மூலமாக இந்த வெற்றி இலக்கு அடையப்பட்டது.

பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளின் பார்படோஸ் நகரில் (பிரிட்ஜ்டவுன்) நடைபெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாகவும் வரலாறு படைத்திருக்கின்றது.

இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மேற்கிந்திய தீவுகளை இரண்டாம் இன்னிங்ஸில்  நிர்மூலம் செய்திருந்த காரணத்தினால் அவர்கள் 93 ஓட்டங்களுடன் கட்டுப்படுத்தப்பட்டு, ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு அணிகளினதும் முதல் இன்னிங்சுகளின் அடிப்படையில் போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு 144 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என முன்னிலை வகித்த காரணத்தினால், மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை சமநிலைப்படுத்தும் நோக்கோடு தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி ஆட்டத்தின் மூன்றாம் நாள் நிறைவில் 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இலக்கு தொடும் தமது பயணத்தில் சற்று பின்னடைவான நிலையில் காணப்பட்டிருந்தது. ஆடுகளத்தில் குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடனும், டில்ருவான் பெரேரா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

ஆட்டத்தின் நான்காம் நாளில் 63 ஓட்டங்கள் தேவையாக இருக்க 5 விக்கெட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு இலங்கை அணி வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடத் தொடங்கியது. எனினும், நான்காம் நாளின் முதல் ஓவரை வீசிய மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டர் இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய வீரரான குசல் மெண்டிஸின் விக்கெட்டை LBW முறையில் கைப்பற்றினார். இந்த விக்கெட்டுக்காக குசல் மெண்டிஸ் மூன்றாம் நடுவரின் பரிசீலனையை நாடியிருந்த போதும் அது கைகொடுக்காமல் போக 25 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

நான்காம் நாளின் ஆரம்பத்தில் பறிபோன மெண்டிஸின் விக்கெட் இலங்கை அணிக்கு அதிர்ச்சியாகவும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மகிழ்ச்சியாகவும் மாறியிருந்தது. இதனையடுத்து, போட்டியின் மூன்றாம் நாளில் சிக்ஸர் ஒன்றை தடுக்க முயன்ற போது காயத்துக்குள்ளாகி, வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட  ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித்  பெரேரா, மருத்துவர்கள் துடுப்பாட முடியும் என்று ஆலோசனை வழங்கியதனால் 8 ஆம் இலக்க வீரராக களம் நுழைந்தார்.


களத்தில் இருந்த தில்ருவான் பெரேராவுடன் 7 ஆம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் பெரேரா தமது அணியில் ஏனைய சிறப்பு துடுப்பாட்ட வீரர்கள் யாரும் இல்லை என்பதனால் மிகவும் பொறுமையான முறையில் இலங்கை அணிக்கு ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினார்.

இரண்டு பெரேராக்களினதும் 7 ஆம் விக்கெட்டுக்கான நிதானமான இணைப்பாட்டம் (63) கைகொடுக்க இலங்கை அணி, 40.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றி இலக்கான 144 ஓட்டங்களை அடைந்தது.

இலங்கை அணியை பிரபல்யமான டெஸ்ட் வெற்றி ஒன்றுக்கு வழிநடாத்திய குசல் ஜனித் பெரேரா 28 ஓட்டங்களையும், டில்ருவான் பெரேரா 23 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

மறுமுனையில், இலங்கை அணியை இரண்டாம் இன்னிங்ஸில் தனது வேகத்தின் மூலம் அச்சுறுத்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். ஹோல்டருக்கு இந்த இன்னிங்சுடன் சேர்த்து போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுக்களை கைப்பற்றிய காரணத்திற்காகவும்,  துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட காரணத்திற்காகவும் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதேவேளை, இத்தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஷேன் டௌரிச் தொடரின் ஆட்ட நாயகனுக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.

முன்னணி வீரர்களின் காயங்கள், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அஞ்செலோ மத்தியூஸ் நாடு திரும்பியமை, பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டமை, மழையினால் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் வெற்றி வாய்ப்பு நழுவிப்போனமை போன்ற விடயங்களால் மிகவும் அழுத்தங்களுக்கு உள்ளாகிய நிலையிலேயே சுரங்க லக்மால் தலைமையிலான இலங்கை அணி இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெற்றியடைந்து சாதித்து காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை டெஸ்ட் அணியின் 16வது தலைவராகப் பொறுப்பெடுத்த லக்மால் கன்னிப் போட்டியிலேயே வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தலைவர் லக்மலுடன் சக வேகப்பந்துவீச்சாளர்கள் கசுன் ராஜித, லஹிரு குமார ஆகியோரும் இந்தப் போட்டியில் ஜொலித்திருந்தனர்.



மேற்கிந்திய தீவுகள் உடனான இந்த டெஸ்ட் சுற்றுப் பயணத்தை முடித்திருக்கும் இலங்கை அணி அடுத்த மாதம் தமது சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணியுடன் மோதவுள்ளது.


செவ்வாய், 19 ஜூன், 2018

சர்ச்சைகள் நிரம்பிய 2வது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது #WIvSL

மழையும் சர்ச்சையும் நிறைந்திருந்த இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

நேற்றைய இறுதிநாள் ஆட்டம் மிக விறுவிறுப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காரணமாக 30 ஓவர்கள் இழக்கப்பட்டதனால் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்ட அதேவேளை மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் க்ரெய்க் ப்ரத்வெயிட்டின் மிகப்பொறுமையான துடுப்பாட்டமும் தோல்வியிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளைக் காப்பாற்றியிருந்தது.

93 ஓவர்களில் 296 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் ஆரம்பத்திலேயே இரு விக்கெட்டுக்களை கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் இழந்தாலும், இடையிடையே மேலும் விக்கெட்டுக்களை இழந்தாலும் ஒரு பக்கம் ப்ரத்வெயிட் நிதானமாக ஆடிக்கொண்டிருக்க இடையிடையே குறுக்கிட்ட மழையும் சேர்ந்து 60 ஓவர்களையே பந்துவீச அனுமதித்தது.

மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் போட்டி முடிவுக்கு வந்தது.

இலங்கை அணியின் மீது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக சர்ச்சைகள் இரண்டாம் நாளிலிருந்து தொடர்ந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்தியத் தீவுகள் 47 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணியின் போராட்டம் 342 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தது.
இப்படியான நெருக்கடியான வேளைகளில் சிறப்பாக ஆடிவரும் குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும், டிக்வெல்ல 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஷனன் கப்ரியல் இரண்டாம் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சாளர் ஒருவர் இலங்கை அணிக்கு எதிராக பத்து விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களில் மூன்றாவது மிகச்சிறந்த டெஸ்ட் போட்டிப் பெறுதியும் கப்ரியல் கைப்பற்றிய 13/121 ஆகும்.

இலங்கை அணியின் சார்பாக  கசுன் ராஜித சிறப்பாக பந்துவீசி கவனத்தை .ஈர்த்திருந்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷனன் கப்ரியல் தெரிவானார்.











சனி, 16 ஜூன், 2018

இரண்டே நாளில் ஆப்கனை சுருட்டி அபார வெற்றி பெற்ற இந்தியா !

இந்தியாவை விடத் தம்மிடம் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று கன்னி டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முதல் பேசிய ஆப்கானிஸ்தான் அணியினை துடுப்பாட்டம் மற்றும் துல்லியமான பந்துவீச்சு மூலம் இரண்டே நாட்களில் சுருட்டி எடுத்துள்ளது இந்தியா.

பெங்களூருவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானின் கன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்சாலும் 262 ஓட்டங்களாலும் நேற்று பெற்ற வெற்றியானது இந்தியாவின் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியாக அமைந்துள்ளது.

அத்தோடு ஆசிய அணியொன்று இரண்டு நாட்களுக்குள் டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பமாகவும் இது அமைகிறது.

துடுப்பாட்டம் மூலமாக ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்த இந்தியா இரண்டாவது நாளான நேற்று ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டு இன்னிங்க்ஸையும் 66.3 ஓவர்களில் உருட்டி எடுத்தது.

கடைசி 115 ஆண்டுகளில் ஒரு நாளுக்குள் வீழ்த்தப்பட்ட அதிக விக்கெட்டுக்கள் என்ற புதிய சாதனையும் நேற்றைய நாளில் பதிவாகியுள்ளது.

Most Wickets To Fall In A Day Of Test Cricket

Team 1Team 2WktsDayVenueYear
EnglandAustralia272Lord's1888
AustraliaEngland251Melbourne1902
EnglandAustralia242The Oval1896
IndiaAfghanistan242Bengaluru2018
South AfricaAustralia232Cape Town2011


தவானின் முதல் நாள் அதிரடி சதம் கொடுத்த ஆரம்ப அதிர்ச்சியிலிருந்து இறுதிவரை ஆப்கானிஸ்தான் மீளவேயில்லை.
மதிய போசன இடைவேளைக்கு முதல் சதம் அடித்த முதலாவது இந்தியவீரர் என்ற பெருமையை தவான் பெற்றுக்கொண்டார்.

தவான், விஜய் ஆகியோரின் சதங்களுடன் ஹர்டிக் பாண்டியா 71, K.L.ராகுல் 54 என்று சேர்ந்து 474 ஓட்டங்களைக் குவித்தது இந்தியா.
மிக எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் சுழல் பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை வாரிக் கொடுத்தார்கள்.
ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், மொஹமட் நபி என்று மூவரையுமே இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் விட்டு வைக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் பதிலுக்கு நேற்று ஆட ஆரம்பித்தது.
முதலாம் இன்னிங்சில் 27.5 ஓவர்களில் 109 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.
எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் 25 ஓட்டங்களைக் கூடத் தாண்டவில்லை.
அஷ்வின் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Follow on முறையில் மீண்டும் துடுப்பாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 38.4 ஓவர்கள் மட்டுமே நிலைத்து நின்று 103 ஓட்டங்களை மட்டும் எடுத்தார்கள்.
அதிகபட்சமாக 36 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் ஹஷ்மட் ஷஹிடி எடுத்தார்.
இம்முறை ஜடேஜா 4 விக்கெட்டுக்கள். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்கள்.

சுழற்பந்து பற்றி பெருமை பேசிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சுழலினாலேயே பதில் வழங்கியுள்ளது இந்தியா.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷீக்கார் தவான் தெரிவானார்.


புதன், 13 ஜூன், 2018

நாளை ஆரம்பிக்கிறது சரித்திரபூர்வ டெஸ்ட் ! திடமாகத் தயாராகும் ஆப்கானிஸ்தான், தடுமாறித் தயங்கும் இந்தியா !!

நாளை பெங்களூருவில் ஆரம்பிக்கவுள்ள  சரித்திரபூர்வ கன்னி டெஸ்ட் போட்டிக்கு மிகத் தன்னம்பிக்கையுடன் திடத்துடனும் தயாராகிக்கொண்டிருக்கிறது ஆப்கானிஸ்தான்.

தங்களிடம் உள்ள மிகச்சிறந்த அணியைத் தாம் நாளை ஈடுபடுத்தவுள்ளதாக பயிற்றுவிப்பாளர் பில் சிமன்ஸ் மற்றும் அணித்தலைவர் அஸ்கர் ஸ்டனிக்சாய் ஆகியோர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்கள்.






எனினும் வழமையான டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோலி இல்லாமல் ரஹானேயின் தலைமையில் களமிறங்கும் இந்திய அணிக்கு இறுதி நேரம் வரை ஏராளமான சிக்கல்களும் சந்தேகங்களும்.
அதுவும் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கிற அணியாக இந்தியா உள்ளது.





முதலில் விக்கெட் காப்பாளர் ரிதிமான் சஹாவின் உபாதை. தினேஷ் கார்த்திக் உள்ளே வந்தார்.
அதன் பின்னர் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமியின் உபாதை.
அனுபவமில்லாத புதியவராக நவ்தீப் சைனி உள்ளே அழைக்கப்பட்டுள்ளார்.

இது மட்டுமன்றி ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி யாரென்ற குழப்பம், எத்தனை சுழல்பந்துவீச்சாளர்களோடு விளையாடுவது என்ற குழப்பம், தக்கூருக்கு அறிமுகம் வழங்குவதா ? சகலதுறை வீரராக பாண்டியாவுடன் விளையாடுவதா என்ற குழப்பங்கள்.

வரலாற்றில் முதல் தடவையாக டெஸ்ட் அறிமுகமாகும் ஒரு அணிக்கு எதிராக தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அணி கொஞ்சம் தடுமாற்றத்துடன் களமிறங்கவுள்ளது.


Pakistan vs Scotland 2nd T20 - Live Streaming - பாகிஸ்தான் ரசிகர்கள் பார்த்து ரசிக்க

Pakistan vs Scotland 2nd T20 - Live Streaming - பாகிஸ்தான் ரசிகர்கள்

போட்டியை நேரலையாகப் பார்த்து ரசிக்க



அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மத்தியூஸ் இல்லை !! இலங்கைக்குப் புறப்பட்டார் !!

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் படுதோல்விக்குப் பிறகு அடுத்த போட்டியிலாவது இலங்கை அணி மீண்டெழுமா என்று இலங்கை ரசிகர்கள் அங்கலாய்த்துள்ள நிலையில் முன்னாள் அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் உடனடியாக தொடரின் இடைநடுவில் வெளியேறி இலங்கைக்குத் திரும்புவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.



மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சுற்றுத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் இவர் தனிப்பட்ட காரணத்திற்காக நாடு திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
மத்தியூசின் மனைவி இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்க இருப்பதாகவும் இதன் காரணமாகவே அவர் அவசரமாக நாடு திரும்புவதாகவும் மத்தியூசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக, எதிர்வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலத்தில் தொடர்ச்சியான உடல் உபாதைகள் மற்றும் காயம் காரணமாகவும் மத்தியூஸ் அடிக்கடி அணியிலிருந்து வெளியேறி இருந்ததும், நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட்டில் அவ்வளவு சிறப்பாக ஆடாததும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , கடந்த போட்டியின் போது உபாதைக்கு உள்ளான வேகப்பந்துவீச்சாளர் லஹிரு கமகேவும் இன்று நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுக்குப் பதிலாக சகலதுறை வீரர் டசுன் ஷானக மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா  கிரிக்கட் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்றிரவு மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்பட்டு செல்லவுள்ளனர்.

இலங்கையின் இரண்டாவது டெஸ்ட் அணியில் தனஞ்சய டீ சில்வாவும் சேர்ந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 ஜூன், 2018

Scotland vs Pakistan 1st T20 | Live Streaming HD - போட்டியை நேரலையாகப் பார்த்து ரசிக்க

Scotland vs Pakistan 1st T20 | Live Streaming HD - போட்டியை நேரலையாகப் பார்த்து ரசிக்க


இந்தியாவை விட மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் எம்மிடம் உள்ளார்கள் - ஆப்கன் அணியின் தலைவர் #INDvAFG

 நாளை மறுதினம் பெங்களூருவில் ஆரம்பிக்கவுள்ள சரித்திரபூர்வ கன்னி டெஸ்ட் போட்டியை மிகத் துணிச்சலாக எதிர்கொள்ளத் தாம் தயார் என்று அறிவித்துள்ள ஆப்கானிஸ்தானிய அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டானிக்சாய் இந்திய அணியின் பலம் மற்றும் அனுபவம் பற்றித் தாம் அறிந்திருந்தாலும் இந்தியாவை விட தமது அணியிலே மிகச்  சிறந்த சுழல்பந்து வீச்சாளர்கள் இருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார்.

உலக டெஸ்ட் தரப்படுத்தலில் நான்காம், ஐந்தாம் இடங்களிலுள்ள அஷ்வின், ஜடேஜா ஆகியோரை விட இன்னும் டெஸ்ட் அரங்கில் விளையாடாத, ஆனால் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் மிக முன்னணியில் விளங்குபவரும் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை அள்ளி வருபவருமான ஆப்கன் சுழல் புயல் ரஷீத் கான், இளைய சுழல் பந்துவீச்சு நட்சத்திரம் முஜிபுர் ரஹ்மான், சகலதுறை வீரரும் ஒப் ஸ்பின் பந்துவீச்சாளருமான மொஹமட் நபி, மற்றும் ரஹ்மத் ஷா, ஸாக்கிர் கான் ஆகியோர் ஐவரும் ஐந்துவிதமான அற்புத சுழல்பந்து நுட்பங்களைக் கொண்டவர்கள் என்று நம்பிக்கையோடு ஆப்கன் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.



இது இந்திய விளையாட்டு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சிறு சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலத்தில் ஆச்சரியப்படும் விதத்தில் பெரிய அணிகளை சர்வதேசப் போட்டிகளில் வீழ்த்தி வரும் ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியைப் பரிசளிக்குமா என்பதே மிகப்பெரிய கேள்வி..

இப்போது ஆப்கானிஸ்தான் பெங்களூருவில் மிக மும்முரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.








திங்கள், 11 ஜூன், 2018

பொறுப்பற்ற துடுப்பாட்டம் + பல்லில்லாத பந்து வீச்சு, படுமோசமான தோல்வி கண்ட இலங்கை !!


ஐந்து நாள் வரை இலங்கை அணி போராடியதே பெரிய விஷயம் தான் என்று நினைக்கும் அளவுக்கு மோசமான துடுப்பாட்டத்தை இரண்டு இன்னிங்சிலும் வெளிப்படுத்திய இலங்கை அணி நேற்று
முதலாவது டெஸ்ட் போட்டியில் 226 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

டெஸ்ட் தொடர் ஆரம்பிக்குமுன்னர் இலங்கை அணிக்கே அதிகமாக வெல்கின்ற வாய்ப்பு இருப்பதாக அநேகர் நினைத்திருக்க, ஐந்து நாட்களில் பெரும்பாலான வேளைகளைத் தன் வசப்படுத்தி, ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முதலாம் இன்னிங்சில் மிக மிக மெதுவாக ஆடி 400க்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்து இலங்கை அணியின் பந்துவீச்சாளரையும் களத்தடுப்பு வீரர்களையும் களைப்படைய செய்ததன் மூலம் போட்டியில் ஆதிக்கத்தை தம் வசப்படுத்திக்கொண்டது ஜேசன் ஹோல்டரின் மேற்கிந்தியத் தீவுகள்.

விக்கெட் காப்பாளர் ஷேன் டௌரிச் அற்புதமாக ஆட்டமிழக்காத சதத்தைப் பெற்றார்.
இலங்கை அணி சார்பாக ஓரளவு சிறப்பாகப் பந்து வீசியவர் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார மட்டுமே.
4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
அனுபவம் வாய்ந்த ரங்கன ஹேரத் கூட பெரியளவில் மேற்கிந்தியத் தீவுகளை சோதிக்கவில்லை.

இலங்கையின் துடுப்பாட்டம் மிக மோசமாக அமைந்தது. யாருமே அரைசதம் பெறாமல் 185 ஓட்டங்களுக்குள் சுருண்டது. மேற்கிந்தியத் தீவுகளின் துல்லியமான பந்துவீச்சு உருட்டி எடுத்தது. எனினும் follow on வழங்காமல் மீண்டும் துடுப்பாடியது மேற்கிந்தியத் தீவுகள்.

இலங்கையின் பந்துவீச்சு இரண்டாம் இன்னிங்சில் ஓரளவு முன்னேற்றம் காட்டினாலும் மீண்டும் லஹிரு குமார மட்டுமே அச்சுறுத்தலாகத் தெரிந்தார்.
3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுக்களை சரிந்தாலும் கிரோன் பவல் சிறப்பாக ஆடி 88 ஓட்டங்களை எடுத்தார்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் தமது இரண்டு இன்னிங்க்ஸையும் டிக்ளேயார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

453 என்ற இலக்கு இலங்கை அணிக்கு எப்படியும் மிகப்பெரியது என்பது தெரிந்தே இருந்தது. 140 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கவும் முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.

இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றி முன்னணி துடுப்பாட்ட வீரர் எல்லாம் மோசமான, பொறுப்பற்ற துடுப்பாட்டப் பிரயோகங்களுடன் ஆட்டமிழக்க, அண்மைக்காலத்தில் இப்படியான இக்கட்டான சூழ்நிலைகளில் தன்னுடைய பொறுமையான ஆட்டத்தினால் ரசிகர்களின் நம்பிக்கையை வென்று வரும் குசல் மெண்டிஸ் தன்னுடைய 5வது டெஸ்ட் சதத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும் மெண்டிஸின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து இலங்கை அணியின் கடைசி 7 விக்கெட்டுக்களும் 50 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ரொஸ்டன் சேஸ் இதில் நான்கு விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.

பொறுமையாக ஆடியிருக்கவேண்டிய இலங்கையின் பொறுப்பற்ற துடுப்பாட்டமும், அனுபவத்தன்மையை வெளிப்படுத்தாத இலங்கையின் பந்துவீச்சும் ரசிகர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் சின்னாபின்னப்பட்டுப் போயிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி பாராட்டப்படவேண்டிய ஒன்றே.

கபிரியேல், காமின்ஸ் ஆகியோரின் வேகமும் பிஷூவின் துல்லியமும் கவனிக்கவேண்டியவை.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக விக்கெட் காப்பாளர் டௌரிச் தெரிவானார்.
15 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறு மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட் காப்பாளருக்கு விருது கிடைத்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்செய டீ சில்வா அணிக்குத் திரும்பினால் ஓரளவாவது துடுப்பாட்டம் சீராகுமா என்று இலங்கை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.










கிரிக்கெட் உலகை அதிரவைத்த ஸ்கொட்லாந்து ! முதல் நிலை அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை !!


கிரிக்கெட் உலகில் இப்படியான அதிர்ச்சிகர, தலைகீழ் முடிவுகள் எப்போதாவது தான் அபூர்வமாக நடைபெறுவதுண்டு. இணை அந்தஸ்து (Associate) நாடொன்று ஒருநாள் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அணியை ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் தோல்வியடையச் செய்து ஆச்சரியப்படுத்திய சம்பவம் நேற்று ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க்கில் பதிவாகியது.

அண்மைக்காலத்தில் உலகின் மிகச்சிறந்த ஒருநாள் சர்வதேச அணியாக விளங்கிவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 371 ஓட்டங்களைக் குவித்தபின்னர் தமது மட்டுப்படுத்தப்பட்ட பலம் கொண்ட பந்துவீச்சின் மூலம் 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி வெற்றியீட்டிய ஸ்கொட்லாந்து பாராட்டுக்குரியதே.

சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் கலும் மக்லியோட்டின் அபார அதிரடியுடன் ஸ்கொட்லாந்து தனது அதிகூடிய ஒருநாள் சர்வதேச ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது.
ஒரு இணை அங்கத்துவ நாடு பெற்ற அதிகூடிய ஒருநாள் சர்வதேச ஓட்ட எண்ணிக்கை மட்டுமல்ல, இங்கிலாந்துக்கு எதிராகப் பெறப்பட்ட ஐந்தாவது கூடிய ஓட்ட எண்ணிக்கையுமாகும்.

எனினும் 94 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள், 16 நான்கு ஓட்டங்களுடன் மக்லியோட் ஆட்டமிழக்காமல் பெற்ற 140 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்கொட்லாந்து வீரர் ஒருவர் பெற்ற முதலாவது சத்தமாக இருந்தாலும், மக்லியோட் இதைவிட 4 தடவைகள் அதிகமான ஓட்டப்பெறுதிகளைக் குவித்துள்ளார்.

மக்லியோட் தவிர அணியின் தலைவர் கொயெட்சர், முன்சே ஆகியோரும் அரைச்சதங்களைக் குவித்தனர்.
இத்தனை ஓட்டக் குவிப்பிலும் இங்கிலாந்தின் தலைவர் ஐந்தே பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியிருந்தார்.

372 என்ற சாதனை இலக்கை அடைய இங்கிலாந்தும் விடாமுயற்சியோடு துரத்தலை ஆரம்பித்தது.
முதல் நூறு ஓட்டங்கள் பத்து ஓவர்களுக்குள் பெறப்பட ஜொனி பெயார்ஸ்டோவின் அட்டகாசமான அதிரடி சதம் காரணமாக அமைந்தது.
6 சிக்ஸர்கள், 12 நான்கு ஓட்டங்களோடு 59 பந்துகளில் 105 ஓட்டங்கள்.
பெயார்ஸ்டோ இருக்கும் வரை இங்கிலாந்துக்கு வாய்ப்பிருந்தது.

ஹேல்ஸ், மொயின் அலி, ப்ளங்கெட் ஆகியோரின் பங்களிப்புக்கள் இறுதிக்கட்டம் வரை போராட வாய்ப்பை வழங்கியிருந்தன.

ஏழு பந்துகள் மீதமிருக்க இறுதி விக்கெட் வீழ்த்தப்பட்டது.

ஸ்கொட்லாந்து ரசிகர்களின் ஆரவார மகிழ்ச்சியுடன் சாதனை படைத்தது.

10 அணிகள் பங்குபற்றும் அடுத்த வருட உலகக்கிண்ணத்துக்கான வாய்ப்பை சில மாதங்களுக்கு முன்னர் நடந்த தகுதிகாண் போட்டிகளில் மயிரிழையில் இழந்த ஸ்கொட்லாந்து சர்வதேசக் கிரிக்கெட் பேரவைக்கு தமது இயலுமையை அழுத்தமாக வெளிக்காட்டியுள்ளது.

இனி வரப்போகும் பாகிஸ்தானுக்கு எதிரான T 20 தொடரும், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளோடு இடம்பெறவுள்ள முக்கோண T 20 தொடரும் ஸ்கொட்லாந்தின் எழுச்சியை உணர்த்துவதாக அமையும்.





சனி, 9 ஜூன், 2018

ஆப்கானிஸ்தானின் சரித்திரபூர்வ வெற்றி !! ஒரு ஓட்டத்தினால் White wash !! Afghanistan vs Bangladesh Highlights || 3rd T20

ஆப்கானிஸ்தானின் சரித்திரபூர்வ வெற்றி !!
ஒரு ஓட்டத்தினால் White wash !!
Afghanistan vs Bangladesh Highlights || 3rd T20

மூன்றாவது போட்டியிலும் வென்ற ஆப்கானிஸ்தான் !! இறுதிவரை போராடிய பங்களாதேஷ், மீண்டும் வில்லனான ரஷீத் கான். இறுதி ஓவரின் திக் திக் கணங்கள்..
அத்தனையையும் பார்த்து ரசிக்க முக்கியமான கட்டங்கள்.


வியாழன், 7 ஜூன், 2018

திடீரெனப் பதவி விலகல் அறிவித்தல் ! அதிர்ச்சி தந்த நியூ சீலாந்து பயிற்றுவிப்பாளர் !​


அதிக காலம் நியூஸிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியவர் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் நியூ சீலாந்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன் தனது ஒப்பந்தம் நிறைவடைவதற்கு இன்னும் ஒரு வருடம் எஞ்சியுள்ள நிலையில் திடீரென பதவி விலகியுள்ளார்.

இவர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். வருகின்ற ஜூலை மாதம் முதல் தான் பதவியிலிருந்து நீங்குவதாக இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தார்.

நியூஸிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் தன்னை நிரூபித்துள்ளார். இவருக்கான ஒப்பந்தக்காலம் மேலும் ஒரு வருடம் எஞ்சியிருக்கும் நிலையிலும், உலகக்கிண்ணம் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வருட காலம் அண்மிக்கும் நிலையிலும் இவர் பதவி விலகியுள்ளமை நியூஸிலாந்து ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு மிகப்பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தனது பதவி விலகல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மைக் ஹெசன், கிரிக்கெட்டிலிருந்து சிறிய இடைவேளை எடுக்க விரும்புவதாகவும், தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் நேரத்தை செலவளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆறு வருட ஒப்பந்தத்தில் நியூஸிலாந்து அணியுடன் இணைந்திருந்த மைக் ஹெசன், அவரது நூறு சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பதை கிரிக்கெட் சபை மற்றும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நியூஸிலாந்து அணியை 2015ம் ஆண்டு முதன்முறையாக உலக்ககிண்ண இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அதுமாத்திரமின்றி இறுதியாக தங்களது சொந்த மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் விளையாடிய நியூஸிலாந்து அணி 2 தொடர்களில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது. 8 தொடர்களில் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

மைக் ஹெசனுக்கு மேலுமொரு வருடம் வாய்ப்பு இருக்கும் போதும், நியூஸிலாந்து அணியை இனியும் வழிநடத்தக்கூடிய தகுதி தன்னிடம் இருப்பதாக தெரியவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹெசனின் பயிற்றுவிப்புக் காலத்தில் நியூ சீலாந்து அணி 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியையும் அதேயளவு தோல்விகளையும் கண்டுள்ள அதே நேரம், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 65 வெற்றிகளையும் 46 தோல்விகளையும் , T20 சர்வதேசப் போட்டிகளில் 30 வெற்றிகளையும் 26 தோல்விகளையும் பெற்றிருந்தது.

அண்மையில் நடைபெற்று முடிந்த IPL போட்டிகளில் நேர்முக வர்ணனையாளராகவும் ஹெசன் கடமையாற்றியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.


புதன், 6 ஜூன், 2018

மீண்டும் ரஷீத் + நபி அதிரடி - பங்களாதேஷைப் பந்தாடி சரித்திரம் படைத்த ஆப்கனிஸ்தான் !!

மீண்டும் ரஷீத் கான் + மொஹமட் நபி ஆகியோரின் இணைப்பில் ஆப்கானிஸ்தான் தம்மை விட சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் சிரேஷ்ட அணியான பங்களாதேஷை உருட்டியெடுத்து இரண்டாவது T 20 சர்வதேச போட்டியிலும் வெற்றியீட்டி தொடரைத் தம் வசப்படுத்தியுள்ளது.


இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி , ஆப்கானிஸ்தான் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தமிம் இக்பால் ஒருபக்கம் நிலைத்து நிற்க, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய வீரர்கள் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, தொடர்ச்சியாக ஆட்டமிழந்து திரும்பினர்.

ஆரம்பத்தில் மொஹமட் நபியும் பின்னர் ரஷீத் காணும் தங்கள் சூழலில் பங்களாதேஷை திக்குமுக்காட வைத்திருந்தனர்.

இறுதியாக தமிம் இக்பால் 43 ஓட்டங்களையும் அபு ஹய்டர் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணிசார்பில் சிறப்பாக பந்து வீசிய ரஷீட் கான், 16வது ஓவரில் சகிப் அல் ஹசன், தமிம் இக்பால் மற்றும் மொஷ்டாக் ஹுசைன் ஆகியோரின் விக்கட்டுகளை வீழ்த்தியதுடன், 4 ஓவர்கள் பந்து வீசி 12 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். மறுமுனையில் மொஹமட் நபி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்டத்திற்கான இணைப்பாட்ம் மெதுவாக நகர்ந்தாலும், சிறப்பாக இருந்தது.
மொஹமட் சேஷாட் 24 ஓட்டங்களையும், உஸ்மான் கஹானி 21 ஓட்டங்களையும் பகிர்ந்துக்கொண்டனர்.

தொடர்ந்து களமிறங்கிய சமியுல்லா ஷென்வாரி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படு்த்திக்கொண்டிருக்கையில், அணித்தலைவர் அஸ்கர் ஸ்டனிஸ்காய்  வந்த வேகத்தில் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஷென்வாரி 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் நின்ற மொஹமட் நபி அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் தொடர் வெற்றியை உறுதிசெய்தார்.

பங்களாதேஷ் அணியின் மொஷ்டாக் ஹுசைன் 21 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியுள்ளனர். அதுமாத்திரமின்றி இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் T20  தொடரை கைப்பற்றிய பெருமையையும் ஆப்கானிஸ்தான் அணி பெற்றுக்கொண்டது.

முதற்போட்டியைப் போலவே நேற்றைய போட்டியிலும் சிறப்பாட்டக்காரராக ரஷீத் கான் தெரிவானார்.

மூன்றாவதும் இறுதியான போட்டி நாளை இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஞாயிறு, 3 ஜூன், 2018

இன்னிங்சினால் வெற்றி ! பாகிஸ்தானைப் பழி தீர்த்து தொடரை சமப்படுத்திய இங்கிலாந்து !


மூன்றாம் நாளான இன்றே முடிவுக்கு வந்தது லீட்ஸ் - எட்ஜபாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி.
முதல் நாள் முதல் ஆதிக்கம் செலுத்திவந்த இங்கிலாந்து இன்னிங்சினாலும் 55 ஓட்டங்களினாலும் இந்தப் போட்டியில் வெற்றியைப் பெற்றது.
இதன்மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலையில் முடிவடைந்தது.

174 ஓட்டங்களுக்கு பாகிஸ்தானை முதலாவது இன்னிங்சில் சுருட்டிய இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள், இரண்டாவது இன்னிங்சில் வெறும் 134 ஓட்டங்களுக்கு பாகிஸ்தானின் அனைத்து விக்கெட்டுக்களையும் அள்ளியெடுத்தனர்.
அதுவும் 46 ஓவர்களில்.

இங்கிலாந்து தனது ஒரே இன்னிங்சில் 363 ஓட்டங்களைப் பெற்றது.
IPL இல் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காகத் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியபின்னர் இத்தொடருக்காக மீள அழைக்கப்பட்ட ஜொஸ் பட்லர் கலக்கலாக ஆடி ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்றார்.

இரண்டாம் இன்னிங்சிலும் துடுப்பாட்டத்தில் தடுமாறிய பாகிஸ்தான் அணி சார்பாக இருவர் மட்டுமே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக்கொண்டனர்.
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இமாம் உல் ஹக் 34, இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான உஸ்மான் ஸலாஹுதீன் 33.

ஸ்டூவர்ட் ப்ரோட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் டொம் பெஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

கடந்த போட்டிக்குப் பின்னர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான ப்ரோட் இந்தப் போட்டியின் முதல் நாளுக்குப் பின்னர் மைக்கல் வோன் உட்பட்ட விமர்சனங்களுக்குப் பதில் அளித்தது போல இன்றும் கலக்கியிருந்தார்.

பெஸ் துடுப்பாட்டத்தில் 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பட்லர் தெரிவாகிய அதே நேரம், தொடரின் சிற்ப்பாட்டக்காரராக தொடரில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய மொஹமட் அப்பாஸ் தெரிவாகினார்.

மீண்டும் அணியில் தனஞ்சய டீ சில்வா ! உடனடியாக மேற்கிந்தியத் தீவுகள் பயணமாகிறார்.


தனது தந்தையாரின் படுகொலையை அடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணித்த இலங்கை அணியிலிருந்து விலகிக்கொண்ட இலங்கை அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டீ சில்வா மீண்டும் இலங்கை அணியோடு இணைந்து கொள்ளவுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.

உடனடியாக மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்படும் தனஞ்சய டீ சில்வா நாளை இரவு அளவில் மேற்கிந்தியத் தீவுகள் போய்ச் சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதுள்ள மனநிலையில் அவர் புதன்கிழமை ஆரம்பிக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடுவது சந்தேகம் எனினும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதி.

தந்தையார் கொலையுண்டதை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் இவரை ஓய்வெடுக்க அனுமதித்ததுடன் மனநிலை திடப்பட்ட பின்னர் எந்தவேளையில் விரும்பினாலும் சேர்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அத்துடன் இவருக்குப் பதிலாக அணியில் வேறெந்த வீரரையும் சேர்த்திருக்கவில்லை.

தனஞ்சய அண்மைக்காலத்தில் இலங்கையின் டெஸ்ட் அணியில் மூன்றாம் இடத்தில் சிறப்பாக ஆடி வந்திருக்கிறார்.


சச்சினின் வெறித்தனமான ரசிகருக்கு விருந்து வைத்து அசத்திய மகேந்திர சிங் தோனி !! - அரிய புகைப்படங்களுடன்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுதிர் கௌதம் என்ற பெயர் மிகப் பரிச்சயமானது. சச்சின் டெண்டுல்கரின் வெறித்தனமான ரசிகர்.
சச்சினின் எந்தவொரு போட்டியிலும் இவரை நாம் கண்டிருப்போம்.


அத்துடன் சச்சினின் ஓய்வின் பின்னர் இந்திய அணியின் எந்த ஒரு போட்டியையும் இவர் தவறவிட்டதில்லை. இந்திய அணியின் கொடியையும், சச்சினின் பெயர் மற்றும் இலக்கத்தையும் வரைந்து கொண்டு இந்திய அணிக்கு தனது ஆதரவை வழங்குவார்.

அதுமாத்திரமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாத்திரமின்றி சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடனும் நெருக்கமாக பழகக்கூடியவர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீfரித்து சில நாட்களே ஆகும் நிலையில், CSK தலைவர் தோனி  சுதீர் கௌதமை தன்னுடைய பண்ணை வீட்டுக்கு அழைத்து அவருக்கு பகல் உணவு விருந்து அளித்துள்ளார். தோனியின் குடும்பம் சேர்ந்து கௌதமை வரவேற்றுள்ளது.



இதனை புகைப்படம் எடுத்துள்ள சுதீர் கௌதம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தோனிக்கும், தோனியின் மனைவி ஷாக்ஷிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'Words can't describe the moments spent. Thanks to MS Dhoni and Sakshi,'
என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

- கிரு 

படங்கள் : tupaki.com

சனி, 2 ஜூன், 2018

இரட்டை அரைச் சதங்கள் - பயிற்சிப் போட்டியில் கலக்கிய குசல் ஜனித் ! டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பாரா?


மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று நாள் பயிற்சிப் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி, தலைவர் சந்திமாலின் சதத்துடன்  428 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 272 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி விக்கட்டிழப்பின்றி 135 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டி நிறுத்தப்பட்டது.

முதல் இன்னிங்ஸில் சந்திமால் 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, டிக்வெல்ல 74 ஓட்டங்களையும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்த குசல் ஜனித் பெரேரா 65 ஓட்டங்களையும்  பெற்றனர். மே.தீவுகள் அணிசார்பில் ஹரிகன் 4 விக்கட்டுகளையும், கோர்ன்வேல் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி சார்பில் கெம்பல் 60 ஓட்டங்களையும், பவெல் 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, அகில தனஞ்சய, டில்ருவான் பெரேரா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

முதலாவது டெஸ்ட் அணியில் லஹிரு குமார, டில்ருவான் ஆகியோரின் இடங்கள் உறுதியான நிலையில் அகில தனஞ்செயவின் சிறப்பான பந்துவீச்சு மூன்று சுழற்பந்து வீச்சாளர்களோடு விளையாடலாமா என்ற எண்ணத்தையும் தெரிவாளருக்கு வழங்கலாம்.

முதலாம் இன்னிங்சில் முதல் பந்திலேயே பூஜ்ஜியத்துடன் ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸில்  61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில், இப் பயிற்சிப்போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் பெரேரா 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் திரும்பினார்.
இரண்டு இன்னிங்சிலும் மிகச்சிறப்பாக துடுப்பாடியிருந்தார்.

பின்னர் களம் நுழைந்த ரொஷேன் சில்வா 22 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள போட்டி நிறைவுக்கு வந்தது.

 காயமுற்றுள்ள டிமுத் கருணாரத்னவின் இடத்தை முதல் டெஸ்ட் போட்டியில் குசல் ஜனித்துக்கு வழங்கும் வாய்ப்புள்ளது.

தனஞ்சய டீ சில்வாவின் மூன்றாமிடத்தில் அணித்தலைவர் சந்திமால் ஆடுவார் என்று கருதப்படுகிறது.

மே.தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 6ம் திகதி ட்ரினிடாட்டின், போர்ட் ஒப் ஸ்பெயினில் நடைபெறவுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...