Latest Updates

6/recent/ticker-posts

இரட்டை அரைச் சதங்கள் - பயிற்சிப் போட்டியில் கலக்கிய குசல் ஜனித் ! டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பாரா?


மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று நாள் பயிற்சிப் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி, தலைவர் சந்திமாலின் சதத்துடன்  428 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 272 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி விக்கட்டிழப்பின்றி 135 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டி நிறுத்தப்பட்டது.

முதல் இன்னிங்ஸில் சந்திமால் 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, டிக்வெல்ல 74 ஓட்டங்களையும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்த குசல் ஜனித் பெரேரா 65 ஓட்டங்களையும்  பெற்றனர். மே.தீவுகள் அணிசார்பில் ஹரிகன் 4 விக்கட்டுகளையும், கோர்ன்வேல் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி சார்பில் கெம்பல் 60 ஓட்டங்களையும், பவெல் 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, அகில தனஞ்சய, டில்ருவான் பெரேரா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

முதலாவது டெஸ்ட் அணியில் லஹிரு குமார, டில்ருவான் ஆகியோரின் இடங்கள் உறுதியான நிலையில் அகில தனஞ்செயவின் சிறப்பான பந்துவீச்சு மூன்று சுழற்பந்து வீச்சாளர்களோடு விளையாடலாமா என்ற எண்ணத்தையும் தெரிவாளருக்கு வழங்கலாம்.

முதலாம் இன்னிங்சில் முதல் பந்திலேயே பூஜ்ஜியத்துடன் ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸில்  61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில், இப் பயிற்சிப்போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் பெரேரா 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் திரும்பினார்.
இரண்டு இன்னிங்சிலும் மிகச்சிறப்பாக துடுப்பாடியிருந்தார்.

பின்னர் களம் நுழைந்த ரொஷேன் சில்வா 22 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள போட்டி நிறைவுக்கு வந்தது.

 காயமுற்றுள்ள டிமுத் கருணாரத்னவின் இடத்தை முதல் டெஸ்ட் போட்டியில் குசல் ஜனித்துக்கு வழங்கும் வாய்ப்புள்ளது.

தனஞ்சய டீ சில்வாவின் மூன்றாமிடத்தில் அணித்தலைவர் சந்திமால் ஆடுவார் என்று கருதப்படுகிறது.

மே.தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 6ம் திகதி ட்ரினிடாட்டின், போர்ட் ஒப் ஸ்பெயினில் நடைபெறவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்