தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 7 ஜூன், 2018

திடீரெனப் பதவி விலகல் அறிவித்தல் ! அதிர்ச்சி தந்த நியூ சீலாந்து பயிற்றுவிப்பாளர் !​


அதிக காலம் நியூஸிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியவர் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் நியூ சீலாந்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன் தனது ஒப்பந்தம் நிறைவடைவதற்கு இன்னும் ஒரு வருடம் எஞ்சியுள்ள நிலையில் திடீரென பதவி விலகியுள்ளார்.

இவர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். வருகின்ற ஜூலை மாதம் முதல் தான் பதவியிலிருந்து நீங்குவதாக இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தார்.

நியூஸிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் தன்னை நிரூபித்துள்ளார். இவருக்கான ஒப்பந்தக்காலம் மேலும் ஒரு வருடம் எஞ்சியிருக்கும் நிலையிலும், உலகக்கிண்ணம் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வருட காலம் அண்மிக்கும் நிலையிலும் இவர் பதவி விலகியுள்ளமை நியூஸிலாந்து ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு மிகப்பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தனது பதவி விலகல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மைக் ஹெசன், கிரிக்கெட்டிலிருந்து சிறிய இடைவேளை எடுக்க விரும்புவதாகவும், தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் நேரத்தை செலவளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆறு வருட ஒப்பந்தத்தில் நியூஸிலாந்து அணியுடன் இணைந்திருந்த மைக் ஹெசன், அவரது நூறு சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பதை கிரிக்கெட் சபை மற்றும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நியூஸிலாந்து அணியை 2015ம் ஆண்டு முதன்முறையாக உலக்ககிண்ண இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அதுமாத்திரமின்றி இறுதியாக தங்களது சொந்த மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் விளையாடிய நியூஸிலாந்து அணி 2 தொடர்களில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது. 8 தொடர்களில் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

மைக் ஹெசனுக்கு மேலுமொரு வருடம் வாய்ப்பு இருக்கும் போதும், நியூஸிலாந்து அணியை இனியும் வழிநடத்தக்கூடிய தகுதி தன்னிடம் இருப்பதாக தெரியவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹெசனின் பயிற்றுவிப்புக் காலத்தில் நியூ சீலாந்து அணி 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியையும் அதேயளவு தோல்விகளையும் கண்டுள்ள அதே நேரம், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 65 வெற்றிகளையும் 46 தோல்விகளையும் , T20 சர்வதேசப் போட்டிகளில் 30 வெற்றிகளையும் 26 தோல்விகளையும் பெற்றிருந்தது.

அண்மையில் நடைபெற்று முடிந்த IPL போட்டிகளில் நேர்முக வர்ணனையாளராகவும் ஹெசன் கடமையாற்றியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...