தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 11 ஜூன், 2018

பொறுப்பற்ற துடுப்பாட்டம் + பல்லில்லாத பந்து வீச்சு, படுமோசமான தோல்வி கண்ட இலங்கை !!


ஐந்து நாள் வரை இலங்கை அணி போராடியதே பெரிய விஷயம் தான் என்று நினைக்கும் அளவுக்கு மோசமான துடுப்பாட்டத்தை இரண்டு இன்னிங்சிலும் வெளிப்படுத்திய இலங்கை அணி நேற்று
முதலாவது டெஸ்ட் போட்டியில் 226 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

டெஸ்ட் தொடர் ஆரம்பிக்குமுன்னர் இலங்கை அணிக்கே அதிகமாக வெல்கின்ற வாய்ப்பு இருப்பதாக அநேகர் நினைத்திருக்க, ஐந்து நாட்களில் பெரும்பாலான வேளைகளைத் தன் வசப்படுத்தி, ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முதலாம் இன்னிங்சில் மிக மிக மெதுவாக ஆடி 400க்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்து இலங்கை அணியின் பந்துவீச்சாளரையும் களத்தடுப்பு வீரர்களையும் களைப்படைய செய்ததன் மூலம் போட்டியில் ஆதிக்கத்தை தம் வசப்படுத்திக்கொண்டது ஜேசன் ஹோல்டரின் மேற்கிந்தியத் தீவுகள்.

விக்கெட் காப்பாளர் ஷேன் டௌரிச் அற்புதமாக ஆட்டமிழக்காத சதத்தைப் பெற்றார்.
இலங்கை அணி சார்பாக ஓரளவு சிறப்பாகப் பந்து வீசியவர் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார மட்டுமே.
4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
அனுபவம் வாய்ந்த ரங்கன ஹேரத் கூட பெரியளவில் மேற்கிந்தியத் தீவுகளை சோதிக்கவில்லை.

இலங்கையின் துடுப்பாட்டம் மிக மோசமாக அமைந்தது. யாருமே அரைசதம் பெறாமல் 185 ஓட்டங்களுக்குள் சுருண்டது. மேற்கிந்தியத் தீவுகளின் துல்லியமான பந்துவீச்சு உருட்டி எடுத்தது. எனினும் follow on வழங்காமல் மீண்டும் துடுப்பாடியது மேற்கிந்தியத் தீவுகள்.

இலங்கையின் பந்துவீச்சு இரண்டாம் இன்னிங்சில் ஓரளவு முன்னேற்றம் காட்டினாலும் மீண்டும் லஹிரு குமார மட்டுமே அச்சுறுத்தலாகத் தெரிந்தார்.
3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுக்களை சரிந்தாலும் கிரோன் பவல் சிறப்பாக ஆடி 88 ஓட்டங்களை எடுத்தார்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் தமது இரண்டு இன்னிங்க்ஸையும் டிக்ளேயார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

453 என்ற இலக்கு இலங்கை அணிக்கு எப்படியும் மிகப்பெரியது என்பது தெரிந்தே இருந்தது. 140 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கவும் முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.

இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றி முன்னணி துடுப்பாட்ட வீரர் எல்லாம் மோசமான, பொறுப்பற்ற துடுப்பாட்டப் பிரயோகங்களுடன் ஆட்டமிழக்க, அண்மைக்காலத்தில் இப்படியான இக்கட்டான சூழ்நிலைகளில் தன்னுடைய பொறுமையான ஆட்டத்தினால் ரசிகர்களின் நம்பிக்கையை வென்று வரும் குசல் மெண்டிஸ் தன்னுடைய 5வது டெஸ்ட் சதத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும் மெண்டிஸின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து இலங்கை அணியின் கடைசி 7 விக்கெட்டுக்களும் 50 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ரொஸ்டன் சேஸ் இதில் நான்கு விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.

பொறுமையாக ஆடியிருக்கவேண்டிய இலங்கையின் பொறுப்பற்ற துடுப்பாட்டமும், அனுபவத்தன்மையை வெளிப்படுத்தாத இலங்கையின் பந்துவீச்சும் ரசிகர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் சின்னாபின்னப்பட்டுப் போயிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி பாராட்டப்படவேண்டிய ஒன்றே.

கபிரியேல், காமின்ஸ் ஆகியோரின் வேகமும் பிஷூவின் துல்லியமும் கவனிக்கவேண்டியவை.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக விக்கெட் காப்பாளர் டௌரிச் தெரிவானார்.
15 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறு மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட் காப்பாளருக்கு விருது கிடைத்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்செய டீ சில்வா அணிக்குத் திரும்பினால் ஓரளவாவது துடுப்பாட்டம் சீராகுமா என்று இலங்கை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...