Latest Updates

6/recent/ticker-posts

அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மத்தியூஸ் இல்லை !! இலங்கைக்குப் புறப்பட்டார் !!

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் படுதோல்விக்குப் பிறகு அடுத்த போட்டியிலாவது இலங்கை அணி மீண்டெழுமா என்று இலங்கை ரசிகர்கள் அங்கலாய்த்துள்ள நிலையில் முன்னாள் அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் உடனடியாக தொடரின் இடைநடுவில் வெளியேறி இலங்கைக்குத் திரும்புவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.



மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சுற்றுத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் இவர் தனிப்பட்ட காரணத்திற்காக நாடு திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
மத்தியூசின் மனைவி இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்க இருப்பதாகவும் இதன் காரணமாகவே அவர் அவசரமாக நாடு திரும்புவதாகவும் மத்தியூசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக, எதிர்வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலத்தில் தொடர்ச்சியான உடல் உபாதைகள் மற்றும் காயம் காரணமாகவும் மத்தியூஸ் அடிக்கடி அணியிலிருந்து வெளியேறி இருந்ததும், நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட்டில் அவ்வளவு சிறப்பாக ஆடாததும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , கடந்த போட்டியின் போது உபாதைக்கு உள்ளான வேகப்பந்துவீச்சாளர் லஹிரு கமகேவும் இன்று நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுக்குப் பதிலாக சகலதுறை வீரர் டசுன் ஷானக மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா  கிரிக்கட் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்றிரவு மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்பட்டு செல்லவுள்ளனர்.

இலங்கையின் இரண்டாவது டெஸ்ட் அணியில் தனஞ்சய டீ சில்வாவும் சேர்ந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்