தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 11 ஜூன், 2018

கிரிக்கெட் உலகை அதிரவைத்த ஸ்கொட்லாந்து ! முதல் நிலை அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை !!


கிரிக்கெட் உலகில் இப்படியான அதிர்ச்சிகர, தலைகீழ் முடிவுகள் எப்போதாவது தான் அபூர்வமாக நடைபெறுவதுண்டு. இணை அந்தஸ்து (Associate) நாடொன்று ஒருநாள் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அணியை ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் தோல்வியடையச் செய்து ஆச்சரியப்படுத்திய சம்பவம் நேற்று ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க்கில் பதிவாகியது.

அண்மைக்காலத்தில் உலகின் மிகச்சிறந்த ஒருநாள் சர்வதேச அணியாக விளங்கிவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 371 ஓட்டங்களைக் குவித்தபின்னர் தமது மட்டுப்படுத்தப்பட்ட பலம் கொண்ட பந்துவீச்சின் மூலம் 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி வெற்றியீட்டிய ஸ்கொட்லாந்து பாராட்டுக்குரியதே.

சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் கலும் மக்லியோட்டின் அபார அதிரடியுடன் ஸ்கொட்லாந்து தனது அதிகூடிய ஒருநாள் சர்வதேச ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது.
ஒரு இணை அங்கத்துவ நாடு பெற்ற அதிகூடிய ஒருநாள் சர்வதேச ஓட்ட எண்ணிக்கை மட்டுமல்ல, இங்கிலாந்துக்கு எதிராகப் பெறப்பட்ட ஐந்தாவது கூடிய ஓட்ட எண்ணிக்கையுமாகும்.

எனினும் 94 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள், 16 நான்கு ஓட்டங்களுடன் மக்லியோட் ஆட்டமிழக்காமல் பெற்ற 140 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்கொட்லாந்து வீரர் ஒருவர் பெற்ற முதலாவது சத்தமாக இருந்தாலும், மக்லியோட் இதைவிட 4 தடவைகள் அதிகமான ஓட்டப்பெறுதிகளைக் குவித்துள்ளார்.

மக்லியோட் தவிர அணியின் தலைவர் கொயெட்சர், முன்சே ஆகியோரும் அரைச்சதங்களைக் குவித்தனர்.
இத்தனை ஓட்டக் குவிப்பிலும் இங்கிலாந்தின் தலைவர் ஐந்தே பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியிருந்தார்.

372 என்ற சாதனை இலக்கை அடைய இங்கிலாந்தும் விடாமுயற்சியோடு துரத்தலை ஆரம்பித்தது.
முதல் நூறு ஓட்டங்கள் பத்து ஓவர்களுக்குள் பெறப்பட ஜொனி பெயார்ஸ்டோவின் அட்டகாசமான அதிரடி சதம் காரணமாக அமைந்தது.
6 சிக்ஸர்கள், 12 நான்கு ஓட்டங்களோடு 59 பந்துகளில் 105 ஓட்டங்கள்.
பெயார்ஸ்டோ இருக்கும் வரை இங்கிலாந்துக்கு வாய்ப்பிருந்தது.

ஹேல்ஸ், மொயின் அலி, ப்ளங்கெட் ஆகியோரின் பங்களிப்புக்கள் இறுதிக்கட்டம் வரை போராட வாய்ப்பை வழங்கியிருந்தன.

ஏழு பந்துகள் மீதமிருக்க இறுதி விக்கெட் வீழ்த்தப்பட்டது.

ஸ்கொட்லாந்து ரசிகர்களின் ஆரவார மகிழ்ச்சியுடன் சாதனை படைத்தது.

10 அணிகள் பங்குபற்றும் அடுத்த வருட உலகக்கிண்ணத்துக்கான வாய்ப்பை சில மாதங்களுக்கு முன்னர் நடந்த தகுதிகாண் போட்டிகளில் மயிரிழையில் இழந்த ஸ்கொட்லாந்து சர்வதேசக் கிரிக்கெட் பேரவைக்கு தமது இயலுமையை அழுத்தமாக வெளிக்காட்டியுள்ளது.

இனி வரப்போகும் பாகிஸ்தானுக்கு எதிரான T 20 தொடரும், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளோடு இடம்பெறவுள்ள முக்கோண T 20 தொடரும் ஸ்கொட்லாந்தின் எழுச்சியை உணர்த்துவதாக அமையும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...