Latest Updates

6/recent/ticker-posts

CSK !!! - சென்னை சூப்பர் கிங்ஸ் சர்ச்சைகளும், சாதனைகளும் - #IPL2018 - சிறப்புக் கட்டுரை ​


IPL பருவகாலம் கோலாகலமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் வரவேற்கப்படும் காலகட்டத்தில் Roar Tamil  இடமிருந்து நன்றியுடன் கிரிக்கெட் தமிழ் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்கிறது.

ஒரு நாள் விளையாட்டுப்  போட்டிகளை விட இருபது ஓவர் விளையாட்டு போட்டிகள் பெரும் ரசிகர் பட்டாளத்தைத்  தன்னகத்தே ஈர்த்துவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வருட ஐபிஎல் தமிழர்களுக்கு ஒரு திருவிழா என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாண்டு தடைக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி களத்திற்கு வர உள்ளது. #ThirumbiVanthomnuSollu (திரும்பி வந்துதுட்டோம்னு சொல்லு) என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகி வருகிறது. மீண்டும் மஞ்சள் நிற உடைகளில் டோனி மற்றும் ரைனாவின் படங்களைக்  கண்ட ரசிகனின் விழிகளின் ஓரம் லேசாக ஒரு சொட்டு ஆனந்தக்  கண்ணிர் பூத்திருப்பதை ஒரு CSK ரசிகனாக இருந்தால் மட்டுமே உணர முடியும்.


திரும்பி வந்துட்டோம்னு சொல்லு. ( படம்: twitter)

ஐபிஎல் கலாச்சாரத்தின் துவக்க ஆண்டு 2008. கண்ணைக் கவரும் பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கியது. நடிகர் விஜய் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். முதல் முறை வெளிநாட்டு வீரர்களும் நம் வீரர்களும் ஒரே அணியில் கண்டது ஆச்சர்யம் கலந்த ஒரு உற்சாகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. அப்போதைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக அணில் கும்ப்ளேவும், ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக டோனியும் இருந்த நேரம். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை குறிப்பிடும் வகையில் அரசர்களுக்கான “கிங்ஸ்” என்ற வார்த்தையும், தமிழர்கள் தினசரி பயன்படுத்தும் “சூப்பர்” என்கிற வார்த்தையும் கொண்டு உருவான ஒரு தலைப்பே சென்னை சூப்பர் கிங்ஸ் .


படம்: pinterest

“சென்னை சூப்பர் கிங்ஸ” டோனியைத் தலைவராக ஸ்வீகரித்து கொண்டது. முதல் நான்கு போட்டிகளில் அதிரடி வெற்றியுடன் ஒரு உத்வேகமான தொடக்கத்தைக்  கொடுத்து ரசிகர்கர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது அணி. பரபரப்பாக அனைவரும் அடுத்த வெற்றியை எதிர்ப்பார்கின்ற வேளையில் மேத்தியு ஹைடென் மற்றும் மைக்கேல் ஹஸ்ஸி தங்கள் நாட்டுப்  போட்டிகளில் விளையாட நாடு திரும்பினர். ஐபிஎல் விதிமுறைப்படி அந்தந்த நாட்டு போட்டி வரும் நாட்களில் வீரர்கள் நாடு திரும்ப வேண்டும். இருவரும் இல்லாமல் பார்மில் இருந்த அணி லேசான தடுமாற்றைதை கண்டது. பின் சுதாரித்து ஒரு சில முக்கியமான வெற்றிகளைப்  பெற்று அரை இறுதிக்குத்  தகுதி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், மற்றும் டெல்லி டேர் டெவில்ஸ் உடன் களத்தில் இருந்தது நம் அணி. அரை இறுதியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெற்றி கண்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இறுதிப்  போட்டியில் போராடி வெற்றி வாய்ப்பை இழந்து ரன்னர்ஸ் கோப்பையை கைப்பற்றியது.


முதலாவது IPL  இல் போராடி இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. (படம்: wallpapers-juinction)

2௦௦9 ஆம் ஆண்டு போட்டிகளில் பெருவாரியான ரசிகர்களைத்  தன்பக்கம் ஈர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ். போட்டியின் தொடக்கத்தில் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு போட்டிகளில் மட்டுமே வென்று மோசமான தோல்விகளில்  தொடங்கியது. அதிலிருந்து மீண்டு தன்னுடைய வழக்கமான பாணியில் விளையாட அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றது. ரன் ரேட் விகிதத்தில் அரை இறுதிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் . டெல்லி டேர் டெவில்ஸ், ராயல் சேலன்ஜெர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அரை இறுதியில் விளையாடியது.

ராயல் சேலன்ஜெர்ஸ்அணி சென்னை அணியை டாஸ் வென்று முதலில் பேட் செய்ய அழைத்தது. முதல் பத்து ஓவரில் மிக மோசமான தொடக்கத்தைக்  கொடுத்து 146/5 ரன்களை மட்டுமே இறுதியில் எடுத்த சென்னை அணி, அரை இறுதியிலே ராயல் சேலன்ஜெர்ஸிடம் வெற்றியை எளிதாகப்  பறி கொடுத்தது.


படம்: wallpapers-junction

2௦1௦ ஆம் ஆண்டு ஒரு தோல்வி, ஒரு திரில்லிங் வெற்றி, ஒரு சூப்பர் ஓவர் வெற்றி, என்று ஒரு சாகச தொடக்கத்தை கொடுத்து பின்பு மோசமான மூன்று தோல்விகளைக்  கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். பின்பு சொந்த கிரௌண்டான சென்னையில் நடந்த மூன்று போட்டிகளில் தொடர் வெற்றி கண்டு போட்டியில் தங்களை நிலை நிறுத்தியது. முரளி விஜயின் சிறப்பான சதமும் டோனியின் கேப்டன்’ஸ் க்னாக் என்று சொல்ல கூடிய சாதூர்யமான ஆட்டமும் அவர்களை மீண்டும் அரை இறுதிக்குள் மூன்றாவது முறையாகக்  கொண்டு சேர்த்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணியை அரையிறுதிப்  போட்டியில் வென்று இறுதிப்  போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் .


2010இல் முதலாவது தடவையாக IPL வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியபோது (படம்: hindustantimes)

2011 ஆம் ஆண்டு லீக் போட்டிகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று அதிரடியாக play off சுற்றுக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். தொடர்ந்து இரண்டு முறை ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வெற்றி கண்டு இறுதிக்  கோப்பையை இரண்டாம் முறையாகக்  கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

2௦12 ஆம் ஆண்டு லீக் போட்டிகளில் 16 போட்டிகளில் 8 போட்டிகளில் வென்று ப்ளே ஆப் சுற்றுகளைக்  கடந்து இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை எதிர் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் . மூன்றாவது முறை பட்டதை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்ப்பாத்திருந்தனர். அபாரமான 190 ரன்களை விளாசி கொல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தது சென்னை அணி. மன்வீந்தர் பிஸ்லாவும், ஜேக் கல்லீஷும் தலா 89 மற்றும் 69 ரன்கள் விளாசி அதை தவிடு பொடியாக்கினர். ரன்னர்ஸ் கோப்பையே கிடைத்தது சென்னை அணிக்கு.


(படம்: rapidleaks)

2௦13 ஆம் ஆண்டும் இதே நிலை தான். அபாரமாக ஆடி இறுதிப்  போட்டி வரை வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டெண்டுல்கர்  தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் 148 ஸ்கோரை எதிர்கொண்டு வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

2௦14 ஆம் ஆண்டு லீக் போட்டிகளில் 14போட்டிகளில் 9 இல் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. அரையிறுதிச்  சுற்று வரை வந்து ரன் ரேட் விகிதத்தில் எலிமினேட்டர் கேமில் கிங்க்ஸ் லெவன் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

2015 ஆம் ஆண்டு லீக் போட்டிகளில் 14 போட்டிகளில் 9 இல் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை அணி. ப்ளே ஆப்பில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வெற்றி கண்டு இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கண்டது. 2௦2 என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் இலக்கை எட்ட முடியாமல் 161 ரன்கள் மட்டுமே எடுத்து ரன்னர்ஸ் கோப்பையை மட்டுமே கைப்பற்றியது.

2011 ஆம் ஆண்டு விளையாட்டு வீரர்களை ஏலம் விடுவதில் அவர்களின் வரிசையை மாற்றி அமைத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக லலித் மோடி மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் மீது பலவிதமான சர்ச்சைகள் உருவானது.


சூதாட்டப் புகாரில் தடை பெற்றபோது (படம்: crickettrolls)

2013 ஆம் ஆண்டு குருநாத் மேய்யப்பன், ஸ்ரீனிவாசனின் உறவினரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. பின்பு 2௦15 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற வழக்கில் திடீர் திருப்பமாக இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டிகளில் விளையாட தடை விதித்தது.

அந்த தடை இந்தாண்டு முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சோர்ந்து கிடந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பழைய வீரர்களை தக்க வைக்க அணியும் திட்டமிட்டுள்ளது. எட்டு போட்டிகளில் ஆறு முறை இறுதி போட்டிக்குள் நுழைந்து இரண்டு முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்  இன்றளவிலும் ஐபிஎல் போட்டியில் ஜாம்பவான் என்றால் அது மிகையாகாது. இன்றளவில் “தல” டோனி என்ற பட்டம் கொண்டு டோனியை சென்னையில் ஒருவராகவே மக்கள் கொண்டாடுகின்றனர்.

---------------
தொடர்புடைய, நீங்கள் அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரை :

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பற்றிய விரிவான அலசல் :

கருத்துரையிடுக

0 கருத்துகள்