தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வெள்ளி, 23 மார்ச், 2018

இம்முறையாவது RCBக்கு அதிர்ஷ்டம் கிட்டுமா ? - றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஒரு பார்வை - IPL 2018


இவ்வருட ஐபில் சீசன் 11 வருகின்ற (ஏப்ரல்) மாதம் 7 தேதி ஆரம்பிக்கின்றது. இந்த சீசனில் ஆவது RCB - றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் கிண்ணத்தை கைப்பற்றுமா? என்பது பற்றிய ஓர் அலசல்

பெங்களூர் அணி ஒவ்வொரு முறையும் திறமையான வீரர்களை உள்வாங்கியும் அவ்வீரர்கள் பிரகாசிக்கத் தவறுவதால் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றமுடியாமல் போனது. 
பெரியளவு நிதி வசதி, ரசிகர்களின் பெரும் பலம், மிகப்பெரும் விலையில் வாங்கப்படும் நட்சத்திர வீரர்கள் என்று பல்வேறு அம்சங்கள் இருந்தபோதும் ராசியே இல்லாத அணி இது.
10 தடவையில் மூன்று தடவை இரண்டாமிடத்தைப் பெற்றும் இன்னும் ஒரு தடவை தானும் IPL வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கும் வாய்ப்பு RCBக்குக் கிட்டாதது ஆச்சரியம் தான்.

இந்த ஐபில் சீசனுக்கான ஏலத்தில் பெங்களூர் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளரான டானியல் வெட்டோரி மிக பொறுமையாக இருந்து குறைந்த விலையில் திறமையான வீரர்களை உள்வாங்கியுள்ளார். 

இந்த முறை ஐபில் ஏலத்தில் மிகச் சிறந்த வீரர்களை உள்வாங்கிய அணியாக கிரிக்கெற் ரசிகர்களால் கருதப்பட்டது RCBயே ஆகும். ஏனெனில் மிகச் சிறந்த துடுப்பாட்ட வரிசை, சகலதுறை வரிசை, வேகப்பந்துவீச்சு , சுழற்பந்துவீச்சு என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது.

இந்த ஐபில் சீசனில் விளையாடவுள்ள பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வரிசையை முதலில் பார்த்தால் இவ் அணியில் தான் சர்வதேச T 20  போட்டியில் முதற்தரத் துடுப்பாட்டவீரராக விளங்கும் விராட் கோஹ்லி இருக்கின்றார். இவரே தொடர்ந்தும் இம்முறையும் இவ்வணியின் தலைவராக செயற்படவுள்ளார். அத்துடன்அதிரடிக்குப்  பெயர்போன சர்வதேசவீரர்களான ஏபிடி வில்லியர்ஸ், பிரண்டன் மக்கலம், குயிண்டன் டி கொக், மொயின் அலி , கொலின் டி கிரான்ஹோம்  ஆகியோரும் உள்ளனர். அத்துடன் உள்ளூர் வீரர்களான சர்பிராஸ் கான், பார்தீவ் பட்டேல், மந்தீப் சிங், மனன் வோரா ஆகியோர்களும் இவ்வணியில் உள்ளனர். 

எனினும் வழமையாக அதிரடியாடும் கிறிஸ் கெய்லை இம்முறை கழற்றி விட்டது தான் பெரிய ஆச்சரியம். இப்போது பெரிய ஓட்டக் குவிப்பில் இல்லை என்ற காரணமாக இருக்கலாம்.
கெயில் இல்லாத அதிரடி ஆரம்பத்தை வழங்க மக்கலம், டீ கொக் அல்லது கோலி , அதன் பின் டீ வில்லியர்ஸ், சப்ராஸ்கான், மன்தீப் சிங், மொயின் அலி என்று பலமான வரிசை.


மேலும் இவ்வணியில் இம்முறை சகலதுறை வீரர்களுக்கும் பஞ்சமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு வீரர்கள் உள்ளனர். அண்மையில் ஹீரோவான  சுதந்திரக் கிண்ணத்தொடரில் (Nidahas Trophy) கலக்கி தொடர் நாயகன் விருதை வென்ற தமிழக சகலதுறை வீரர் வொஷிங்டன் சுந்தர் இம்முறை இவ்வணிக்காக விளையாடவுள்ளது இவ்வணிக்கு கூடுதல் பலம்.

 அத்துடன் பவன் நெகி, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கொலின் டி கிரான்ஹோம் ஆகியோர் உள்ளனர். இது மேலும் பலம் சேர்க்கும்.
மேலும் இவ்வணியில் இம்முறை தான் மிகச் சிறந்த வேகப்பந்துவரிசை காணப்படுகின்றது. கடந்த சீசன்களில் பெங்களூர் சோபிக்கத் தவறியது வேகப்பந்துவீச்சீலே தான் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் இந்த சீசனுக்கு வேக பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக RCB அணி நிர்வாகம் இந்திய அணியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற அஷிஸ் நேஹ்ரா  நியமிக்கப்பட்டுள்ளார். இது பெங்களூர் அணிக்கு கூடுதல் பலம் ஆகும். 

இவ்வருடத்திற்கான ஐபில் ஏலத்தில் வெட்டோரியும் நேஹ்ராவும் சேர்ந்து மிக கவனமாக சிறந்த வேகபந்துவீச்சாளர்களை அணிக்கு உள்வாங்கியுள்ளார். அந்தவகையில் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர் கோல்டர் நைல், நீயூசீலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிம் செளதி மற்றும் இந்தியா சார்பாக உமேஷ் யாதவ், முகமட் சிராஜ்  ஆகியோரையும் உள்வாங்கியதுடன் சகலதுறைவீர்ர்களான கிறிஸ் வோக்ஸ், கொலின் டி கிரான்ஹோம் ஆகியோரும் மிகச்  சிறப்பான வேக/ மித வேகப்பந்துவீச்சாளர்கள் ஆவார்கள். எனவே இம்முறை பெங்களூர் அணி வேகத்தில் மிரட்டும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.

மேலும் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களும் அணியில் உள்ளனர். சர்வதேச T 20 போட்டியின் பந்துவீச்சுக்கான தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள யுஸ்வேந்திர சஹால் இவ்வணியிலேயே தொடர்ந்தும் விளையாடவுள்ளார். இவருடன் தமிழக வீரரான வொஷிங்டன் சுந்தர் மற்றும் முருகன் அஸ்வின், பவன் நெகி, ஆகியோர்கள் உள்ளார்கள். மேலும் தேவையேற்படும்போது இங்கிலாந்தின் மொயின் அலியும் உள்ளார். 

இவ்வணியில் மிகச் சிறந்த களத்தடுப்பு வீரர்களும் இருக்கின்றனர். குறிப்பாக விராட் கோலி , ஏபிடி வில்லியர்ஸ், பிரண்டன் மக்கலம் போன்றோர்கள் களத்தடுப்பில் சிங்கங்கள் ஆவார்கள். என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எனவே களத்தடுப்பிலும் பலமாகவே உள்ளது.

எனவே ஒரு அணிக்கு தேவையான துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழல் பந்துவீச்சு, களத்தடுப்பு என சகலவரிசைகளையும் இம்முறை பெங்களூர் அணி கச்சிதமாக கொண்டுள்ளது. எப்படி இருப்பினும் இவ்வீரர்கள் மிக சிறப்பாக செயற்படும் விதம் பொறுத்தே இவ்வணியால் கிண்ணத்தை கைப்பற்ற முடியும்.

அதிலும் இன்னும் அடித்து நொறுக்கக்கூடிய ஒப்பீட்டளவில் சிறிய மைதானமான சின்னசுவாமி மைதானத்தைத் தனது சொந்த மைதானமாகக் கொண்டிருந்தும் எப்போதும் திரளும் ரசிகர்கள் பக்க  பலமிருந்தும் இன்னும் வெற்றிக்கான ராசி மட்டும் வந்து சேர்வதாக இல்லையே.
இம்முறையானது நிலை மாறுமா?

-தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

----------
புதிய எழுத்தாளர் தர்ஷனை கிரிக்கெட் தமிழ் வரவேற்கிறது.

* வாசகர்கள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
கருத்துக்கள், பின்னூட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.


4 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...