Latest Updates

6/recent/ticker-posts

தோல்வியின் விளைவு : தலைவர், பயிற்றுவிப்பாளர்கள், தேர்வாளர் அனைவரும் பதவி நீக்கம்.

ஒரு வருடமாகப் பார்த்துப் பார்த்துக் கட்டியெழுப்பப்பட்டஒரு அணி ஒரு தொடரில் அடைந்த இரண்டு மயிரிழையிலான துரதிர்ஷ்டவசமான தோல்விகளால் தன்னுடைய அணியை உருவாக்கி, வழி நடத்திக்கொண்டிருந்த அத்தனை பேரையுமே பலி கொடுத்துள்ளது.

உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெறாத சிம்பாப்வே அணிக்கே இந்த நிலை...

அணித் தலைவர் கிரேம் கிரீமர், தலைமைப் பயிற்றுவிப்பாளர் - முன்னாள் சிம்பாப்வே அணித்தலைவர் ஹெத்ஸ்ட்ரீக், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் - முன்னாள் தென் ஆபிரிக்க சகலதுறை வீரர் லான்ஸ் குளூஸ்னர், பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர், முன்னாள் சிம்பாப்வே வீரர் டக்ளஸ் ஹோண்டோ உட்பட சிம்பாப்வே A அணியின் பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமன்றி தலைமைத் தேர்வாளர் டட்டேண்டா டைபுவும் பதவி விலக்கப்பட்டுள்ளார்கள்.

சொந்த நாட்டிலே நடைபெற்ற உலகக்கிண்ணத் தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் தெரிவாகும் இரண்டு அணிகளில் ஒன்றாக சிம்பாப்வே இருக்கும் என்ற பெரும்எதிர்பார்ப்பு இருந்தது.
முதற்சுற்று அவ்வாறே சிம்பாப்வேக்கு அமைந்தது.
எனினும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் கடைசி இரு போட்டிகளிலும் - மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் துணை அங்கத்துவ அணியான ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றிடம் கண்ட மயிரிழையிலான விளிம்பு நிலைத் தோல்விகள் சிம்பாப்வேயை உலகக்கிண்ணத்துக்குத் தகுதிபெற விடாமல் செய்திருந்தன.

எனினும் கிரீமரின் தலைமையில் அண்மைக்காலமாக சிம்பாப்வே முன்னேற்றம் கண்டு வந்திருந்தது. இலங்கை அணியையும் இலங்கை மண்ணில் வைத்து ஒருநாள் தொடரில் முதன்முறை சரித்திரபூர்வ வெற்றியும் கண்டிருந்தது.

இந்த அதிரடி நீக்கங்களைத் தொடர்ந்து, அண்மையில் ஓய்விலிருந்து மீண்டு விளையாட வந்த முன்னாள் அணித்தலைவர் பிரெண்டன் டெய்லர் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம் என்று சிம்பாப்வே ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.



கருத்துரையிடுக

0 கருத்துகள்