நேற்றைய ஆட்டம் இந்திய அணிக்கு இழந்த நம்பிக்கையை மீட்டுக் கொடுத்திருக்கும்.
ஷீக்கார் தவான் அடுத்தடுத்த போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்தைப் பெற்றுக்கொள்ள, இலகுவாகத் தனது வெற்றி இலக்கை அடைந்தது இந்தியா.
தவான் அதிரடி துடுப்பாட்ட ஓட்டக்குவிப்பில் இருப்பது இந்தியாவுக்கு மேலும் பலம் சேர்க்கும் விடயம். கோலி, தோனி இல்லாத குறையை நிவர்த்திக்கும். எனினும் ரோஹித் ஷர்மா மீண்டும் போர்முக்குத் திரும்பினால் தான் இந்தியாவினால் ஆதிக்கம் செலுத்தமுடியும்.
முன்னதாக அச்சுறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட பங்களாதேஷின் துடுப்பாட்ட வரிசையைத் துல்லியமான பந்துவீச்சில் மூலமாகக் கட்டுப்படுத்தியது இந்தியாவின் இளைய பந்துவீச்சு வரிசை.
ஷகிப் அல் ஹசன் இல்லாத பங்களாதேஷின் துடுப்பாட்ட வரிசையைத் தூக்கி நிறுத்தவேண்டிய மூன்று சிரேஷ்ட வீரர்களும் (தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம், அணித்தலைவர் மஹ்முதுல்லா) சறுக்கிவிட, பல இலகுவான பிடிகளைத் தவறவிட்டும் கூட இந்தியா தன்னுடைய பிடியை இறுக்கியது.
படம் : espncricinfo.com
இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் விஜய் ஷங்கர் நேற்று தன்னுடைய கன்னி விக்கெட்டாக முஷ்பிக்குரை வீழ்த்தினார். இரண்டு ஓவர்களுக்குப் பின் பங்களாதேஷ் அணித்தலைவரதும் விக்கெட்டும் அவரது ஆனது.
சுரேஷ் ரெய்னா இலகுவான பிடியைத் தவற விடாமல் இருந்தால் இன்னொரு விக்கெட்டும் கிடைத்திருக்கும்.
இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன் என்கிறார் ஷங்கர். சகலதுறை வீரராக அவரது துடுப்பாட்டப் பெறுபேறுகளும் வெளிப்படட்டும்.
ஜெய்தேவ் உனட்கட்டும் சிறப்பாகப் பந்துவீசி மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பங்களாதேஷ் அணி மிகத் தடுமாறிப் பெற்றுக்கொண்ட 139 ஓட்டங்கள் இந்தியாவுக்கு துரத்தியடிப்பதற்கு சிரமமாக இருக்கவில்லை.
தவான் 43 பந்துகளில் 55 ஓட்டங்களை எடுக்க, 8 பந்துகள் மீதமிருக்க வெற்றி இந்தியா வசமானது.
சுதந்திரக் கிண்ணத் தொடரின் அடுத்த போட்டி நாளை இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்த போட்டி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை அணியுடன்.
0 கருத்துகள்