கோலியை ஜெயித்த ரோஹித் ஷர்மா, மும்பாய்க்கு முதலாவது வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். #MIvRCB #IPL2018

இந்தியாவின் அடுத்தகட்ட தலைமைகளுக்கிடையிலான மோதலில் ரோஹித் ஷர்மா தனது அணிக்கான முதலாவது வெற்றியையும் நேற்றிரவு பெற்றுக்கொடுத்துள்ளார்.

இரண்டு பக்க அணிகளுக்கும் அணித்தலைவர்களே அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தது சுவாரஸ்யம் என்றால் இருவருமே சதங்களை நெருங்கி வந்து 90களில் முடிந்துபோனது ரசிகர்களுக்கு கவலையளித்ததும் உண்மை தான்.

ரோஹித் ஷர்மா இதுவரை இந்த IPL பருவகாலத்தில் பெறப்பட்ட அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை நேற்று  செய்துகொண்டார்.

மும்பாய் வான்கேடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் 2018 தொடரின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான 14ஆவது லீக் போட்டியில், மும்பாய் இந்தியன்ஸ் அணி, 46 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

தொடர்ச்சியாக முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி கடும் விமர்சனத்திற்கு உள்ளான மும்பாய் இந்தியன்ஸ் அணி, இந்த வெற்றியின் மூலம் தன்மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய மும்பை அணி, ரோஹித் சர்மாவின் அதிரடியின் துணை மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ஓட்டங்களை குவித்தது.

உமேஷ் யாதவின் முதல் ஓவரிலே முதலிரண்டு விக்கெட்டுக்களை ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் இழந்தபோதும் ஈவின் லூயிஸ், ரோஹித் ஷர்மா ஆகியோரின் இணைப்பாட்டம் மூலமாக மும்பாய் உறுதியடைந்ததுடன் வேகமாகவும் ஓட்டங்களைக் குவித்தது.

லூயிஸ் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், தலைவர் ரோஹித் ஷர்மா தனது அதிரடியாட்டத்தைத் தொடர்ந்தார்.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக சர்மா 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 52 பந்துகளில் 5 சிக்ஸர்கள் + 10 நான்கு ஓட்டங்கள். சிக்ஸர் ஒன்றோடு சதத்தைப் பூர்த்தி செய்ய முனைந்தவேளையில் இறுதி ஓவரில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சில் உமேஷ் யாதவ், கொரி ஆண்டசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 214 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் அணியால், ஆரம்ப முதலே தட்டுத் தடுமாறி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.

அணியின் தலைவர் விராட் கோலியைத் தவிர யாராலும் 20 ஓட்டங்களைத் தாண்ட முடியவில்லை.ஏற்கெனவே களத்தடுப்பு நேரம் வீரர்கள் விட்ட தவறுகளினால் கோபப்பட்டு விரக்தியை வெளிப்படுத்தி நின்ற கோலியை தனித்து நின்று போராட விட்டனர் பெங்களூரின் பொறுப்பற்ற ஏனைய துடுப்பாட்ட வீரர்கள்.
விராட் கோலி, ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் குர்ணல் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரோஹித் ஷர்மா தெரிவானார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை