தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 11 ஏப்ரல், 2018

பறந்த புலிக்கொடி, வீசியெறியப்பட்ட செருப்புகள், அடிதடிகள், கைதுகள்.. பெரும் பரபரப்பின் மத்தியில் நடந்த சேப்பாக்கம் IPL போட்டி #CSKvKKR - #IPL2018

காவிரி நீர்ப்பங்கீடு விவகாரம் குறித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை அண்மித்த பகுதியில் பெரும் பரபரப்பு போராட்டங்கள் எதிர்ப்புகள் மத்தியிலேயே சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.

காவிரி வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.




மைதானத்துக்கு வெளியே நடந்த கறுப்புக்கொடி போராட்டத்தில் பலர் மைதானத்துக்குப் போட்டியைப் பார்க்க வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள், குறிப்பாக மஞ்சள் ஆடை அணிந்து வந்த ரசிகர்களை தாக்கிய சம்பவங்களும் பதிவாகின.

போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து மைதானத்தை சுற்றிப் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழக வாழ்வுரிமை கட்சிகள், எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலை சிறுதைகள் கட்சி, ரஜினி மக்கள் மன்றம், நாம் சிறுத்தைகள் கட்சி, கலை இலக்கிய பண்பாட்டு பேரவை போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டன. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இடையிடையே சிலர் போலீசாரோடு மோதியதில் கைதும் ஆகினர்.

பின்னர் மைதானத்தில் இடையிடையே சிற்சில பரபரப்புக்கள், சலசலப்புகள் இடம்பெற்றன.
கடும் பாதுகாப்புக் கெடுபிடிகள் மத்தியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் குறைவாக இருந்த பார்வையாளர் எண்ணிக்கை பின்னர் கணிசமாக அதிகரித்தது.

எனினும் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மைதானத்துக்குள் சிலர் செருப்பை வீசியுள்ளதுடன், புலிக்கொடியையும் ஏந்தினர். இதனையடுத்து சற்று நேரத்திற்கு மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.


இது தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடி என்று பலர் கருதினாலும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் தமது கழகக் கொடியையே ஏந்தியதாகச் சொல்லப்படுகிறது.

வீசிய செருப்புகள் சென்னை வீரர்களுக்கு அருகில் சென்று விழுந்தன. அவை எதற்காக வீசப்பட்டன என்று புரியாமல் தென் ஆபிரிக்க வீரர் ஃபஃப் டூப் ளெசி திகைத்துப் போய் நின்றது இன்னொரு சுவாரஸ்யம்.



எனினும் சென்னையில் வைத்து இவ்வாறு வன்முறை கலந்த போராட்டத்தை நடத்தியதற்கு இன்னொரு தரப்பு இளைஞர்கள் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

காவேரி நீர் விவகாரத்துக்கு இந்திய மத்திய அரசு நியாயமான, நிரந்தரத் தீர்வைத் தரும்வரை IPL போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக போராடும் அமைப்புக்கள் உறுதியாகக் கூறியுள்ளன.

இதனால் சென்னையில் இனியும் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை G.பிரசாத் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...