சிக்ஸர் மழை பொழிந்த போட்டி ! மீண்டும் ஒரு திரில்லான இறுதி ஓவர் வெற்றி, சென்னைக்கு ! - #CSKvKKR - #IPL2018

இறுதி ஓவர் வரை ஆறவிட்டு ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறவிட்டு போட்டிகளை விறுவிறுப்பாக வென்றெடுப்பதில் அப்படியென்ன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு காதலோ தெரியவில்லை.
பல்வேறு பரபரப்புக்கள் + எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அரசியல் எதிர்ப்புக்களின் மத்தியில் நடந்த நேற்றைய போட்டியில் இறுதிப்பந்துக்கு முந்தைய பந்தில் சென்னை ஒரு அபார வெற்றியைத் தனதாக்கியது.

மொத்தமாக 31 சிக்ஸர்கள் சென்னை, சேப்பாக்கம் அரங்கின் எல்லாத் திசைகளிலும் பறந்த நேற்றைய போட்டியில் இறுதியாக ரவீந்திர ஜடேஜாவின் சிக்சருடன் கூடியிருந்த மைதானம் நிறைந்த ரசிகர்கள் மனம் மகிழும் விதத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை வசப்படுத்திக்கொண்டது.

காவேரி விவகாரத்தால் போட்டி ஆரம்பிக்க முதல் ஏராளமான சர்ச்சைகள் இருந்தாலும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடந்த முதலாவது IPL போட்டிக்கு ரசிகர்கள் மைதானம் நிறைந்தளவுக்கு வந்திருந்தார்கள்.

தோனி நாணய சுழற்சியில் வென்ற பின் முதலில் துடுப்பாட கொல்கத்தாவை அழைத்தார்.

நரைன் சிக்ஸர்கள் இரண்டோடு ஆரம்பித்தார். எனினும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரொபின் உத்தப்பா 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டிருந்தார். 16 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் றன் அவுட் ஆக, தலைவர், சென்னைப் பையன் தினேஷ் கார்த்திக்கும் அசுர பலத்தோடு அடித்து நொறுக்கிய அன்ட்ரே ரசலும் சேர்ந்து அரைச்சத இணைப்பாட்டம் ஒன்றின் மூலமாக அணியைத் திடப்படுத்திக் கொண்டனர்.

89/5 என்ற நிலையிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 200 ஓட்டங்களைத்  தனிப் பெருமை மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி சகலதுறை வீரர்  அன்ட்ரே ரசலுக்கேயுரியது. 11 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் ரசல் வெறுமனே 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.


203 என்ற இலக்கு நோக்கி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட  சென்னை அணி முதலாவது power play க்குள்ளேயே 75 ஓட்டங்களை சேர்த்துக்கொண்டது. ஷேன் வொட்சன் 19 பந்துகளில் 42.
ராயுடு 26 பந்துகளில் 39.
இந்த அற்புதமான ஆரம்பத்தை இடைநடுவே தோனியின் மந்தகதியிலான துடுப்பாட்டம் சற்று பின்வாங்கச் செய்தபோதிலும், நேற்று முதற்தடவையாக மஞ்சள் சீருடையில் களமிறங்கிய இங்கிலாந்தின் சாம் பில்லிங்க்சின் அதிரடியான அரைசதம் போட்டியை மீண்டும் சென்னையின் பக்கம் திருப்பியது.

சாம் பில்லிங்ஸ் - 5 சிக்ஸர்களுடன் 23 பந்துகளில் 56 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

அப்படியிருந்தும் கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த முக்கியமான ஓவரை வீசிய வினய்குமார் வள்ளலாக முதல் பந்தையே நோபோலாக வீச பிராவோ சிக்சருக்கு அனுப்பிவைத்தார்.
கடைசியாக ஜடேஜா இன்னொரு சிக்சருடன் முடித்து வைத்திருந்தார்.

போட்டியின் நாயகனாக பில்லிங்ஸ் தெரிவானார்.

போட்டியின் இடையே காவேரி விவகாரப் போராட்டக்காரர்கள் பாதணிகளை மைதானத்தில் வீசியதும், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதும் கூட சிறு சம்பவங்களாகப் பதிவாகின.


சென்னை G.பிரசாத் 

கருத்துரையிடுக

புதியது பழையவை