Latest Updates

6/recent/ticker-posts

பொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து சரித்திரபூர்வ தொடர்வெற்றி !


124 ஓவர்கள் நான்காவது இன்னிங்க்சில் துடுப்பாடி தோல்வியொன்றைத் தவிர்த்ததன் மூலமாக, அரிய, சாதனைக்குரிய டெஸ்ட் தொடர் வெற்றியொன்றைத் தனதாக்கியது இன்று நியூசிலாந்து.

ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியை வென்றிருந்த நியூசிலாந்து அணி கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் பின் தங்கியே இருந்தது.

382 என்ற இலக்கு வழங்கப்பட்ட நிலையில் இன்று விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களுடன் ஆரம்பித்தாலும், விரைவாகவே முக்கியமான வீரர்களை இழந்து தடுமாறியது.

தலைவர் வில்லியம்சன் பூஜ்ஜியம், டெய்லர் 13, நிக்கல்ஸ் 13.

எனினும் முதலில் டொம் லேத்தம் - கிராண்ட்ஹொம், பின்னர் கிராண்ட்ஹொம் -  இஷ் சோதி இணைப்பாட்டங்கள் தாக்குப்பிடிக்க முனைந்தாலும், இங்கிலாந்து விடாமல் விக்கெட்டுகளை எடுக்க முயன்றுகொண்டே இருந்தது.
லேத்தம் 200 பந்துகளுக்கு மேல் ஆடி 83 ஓட்டங்களைப் பெற்றார். கிராண்ட்ஹொம் 45.

எனினும் யாருமே நம்பமுடியா வகையில் அடுத்து ஆரம்பித்தது சோதி மற்றும் வக்னர் ஆகிய இரு பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான இணைப்பாட்டப் போராட்டம். 31 ஓவர்கள் பொறுமையாகப் போராடித் தோல்வியிலிருந்து நியூசிலாந்து அணியைக் காப்பாற்றினர்.

வக்னர் 103 பந்துகளை எதிர்கொண்டு 7 ஓட்டங்களை மட்டுமே எடுத்து, போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட வேளையில் ஆட்டமிழந்தார். 

இஷ் சோதி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 168 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த வெற்றி தோல்வியற்ற முடிவையடுத்து இறுதியாக நடைபெற்ற 7 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியாத நியூசிலாந்துக்கு அரிய வெற்றி கிட்டியது.

இங்கிலாந்து அணிக்கோ வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் இன்னும் வெற்றி கிட்டவில்லை.

இந்தப் போட்டியின் நாயகனாக டிம் சவுதியும், தொடரின் சிறந்த வீரராக அவரது வேகப்பந்து கூட்டாளியான டிரெண்ட் போல்ட்டும் தெரிவாகினர்.

இந்தத் தொடர் வெற்றியுடன் இப்போது நியூசிலாந்து டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்துக்கு உயர்ந்துள்ளது.
அவுஸ்திரேலியா தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்வியுடன் நான்காம் இடத்துக்கு வீழ்ந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்