இலங்கை அணியின் வெற்றி தொடருமா? : இன்று பங்களாதேஷுடன் மோதல்! - Nidahas Trophy 2018

இலங்கையில் நடைபெற்று வரும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு இருபதுக்கு-20 தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இலங்கை ஒரு போட்டியில் வெற்றியீட்டியுள்ளதுடன், பங்களாதேஷ் அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.
இலங்கை அணியை பொருத்தவரையில் மோசமான 2017 விடவும், இந்த ஆண்டு சிறப்பாக அமைந்துள்ளது. பங்களாதேஷில் நடைபெற்ற முழுத் தொடரையும் கைப்பற்றியதுடன், இறுதியாக பலம்வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தியுள்ளது.
அதுமாத்திரமின்றி துடுப்பாட்ட டவீரர்களின் பொறுப்பான ஆட்டங்கள் இலங்கை அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. பங்களாதேஷ் தொடரில் குசால் மெண்டிஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.
தற்போது குசல் பெரேரா அணியின் துடுப்பாட்டத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், தசுன் சானக மத்திய வரிசையில் சிறப்பாக ஆடிவருகின்றார்.
பந்து வீச்சை பொருத்தவரையில் சிறப்பான ஆரம்பம் கிடைக்கின்ற போதிலும், இறுதியில் எதிரணிக்கு ஓட்டங்கள் இலகுவாக வழங்கப்படுகிறது. இதானல் பந்து வீச்சு பக்கம் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
பங்களாதேஷ் அணியை பொருத்தவரையில் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவிவருகின்றது. சகிப் அல் ஹசன் இல்லாதது அணிக்கு மிகப்பெறும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அனுபவ வீரர் தமிம் இக்பால் இறுதியாக விளையாடிய 12 இருபதுக்கு-20 போட்டிகளில் அரைச்சதம் கடக்கவில்லை என்பதும் ஒரு பக்கம் அணிக்கு சவாலாக உள்ளது. அணியின் ஒரே நம்பிக்கை சௌமிய சர்கார். இவர் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் மூன்று தடவைகள் 40 ஓட்டங்களை கடந்துள்ளார்.
இவருக்கு அடுத்தப்படியாக முஷ்பிகூர் ரஹீம் மற்றும் மொஹமதுல்லா ஆகியோரின் துடுப்பாட்டம் அவ்வப்போது அணிக்கு ஆறுதல் அளிக்கிறது.
பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். தஷ்கின் அஹமட், முஷ்தபிசூர் ரஹ்மான், ரூபல் ஹுசைன் மற்றும் மெஹிதி ஹாசன் மிராஷ் ஆகியோர் தங்களின் பணிகளை செவ்வனே நிறைவேற்றுகின்றனர்.
இந்தியாவுடன் பெற்ற தோல்விக்கு பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இன்னும் 25 ஓட்டங்கள் அதிக பெறப்பட்டிருந்தால் போட்டி திசை மாறியிருக்கவும் வாய்ப்புகள் இருந்தது.
எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் இரு அணிகளும் தங்களை முழுமையாக தயார் படுத்திக்கொண்டு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணியின் நுவான் பிரதீப்புக்கு பதிலாக லக்மால் அழைக்கப்பட வாய்ப்புள்ளது. இதேவேளை பங்களாதேஷ் அணி மேலதிகமாக துடுப்பாட்ட வீரர் ஒருவரை அணியில் இணைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி : http://tamilnews.com

கருத்துரையிடுக

புதியது பழையவை